Friday, September 23, 2016

திதி – வாழ்வெனும் பேரலைக.சீ.சிவக்குமாரின் சிறுகதை ஒன்றுண்டு , தசாப்தங்களாக சிதைந்த நிலையிலேயே வாழ்ந்துவரும் வீட்டை புதுப்பிக்க போராடும் விவசாயி ஒருவரின் கதை . கூரையை மட்டும் மாற்றுவதற்கான யோசனையில் துவங்கி , சந்திக்கும் ஒவ்வொரு உறவினர்களும் சொல்லும் அபிப்ராயங்களையும் கேட்கும்படி நேர்ந்து , யோசனைகளுக்கு ஈடாக கடனும் அதிகரித்து ஒரு கட்டத்தில் வீட்டின் மராமத்துப் பணியினை முடிக்க எதையும் செய்யும் சூழலுக்கு மாறுவார் அந்த விவசாயி . வீட்டை புதுப்பிப்பதற்கான முதல் விதையைப்போட்ட உறவினரின் கூற்றுப்படி ‘’எதவாது ஒரு வழில ஆரம்பிச்சுடுப்பா , அப்பறம் அது தானா நடக்கும்’’ எனும்படியே இறுதியில் ஓரளவு திருப்தியுடனும் , நிறைய கடனுடனும் வீட்டின் பணி முடியும் . இயற்கை உட்பட எல்லோராலும் கைவிடப்பட்ட இன்றைய விவசாயிகளில் பெரும்பாலோரின் வாழ்க்கை இப்படித்தான் . இதேபோன்றதொரு சூழலில் வாழும் மனிதர்களின் கதைதான் ’’திதி’’

கிராமத்தில் தன் கண்ணில் படுவோரையெல்லாம் வசைபாடிக் கொண்டேயிருக்கும் செஞ்சுரிகவுடாவின் மரணத்தில் திரைப்படம் துவங்குகிறது . மகன் கடப்பாவின் பொறுப்பற்ற வாழ்க்கை முறையால் இறந்தவரின் இறுதிக்காரியங்களை பேரன் தம்மண்ணா முன்னின்று நடத்துகிறார் , அத்துடன் நீர்த்தார்கடனான திதி செலுத்த பதினோராம் நாள் குறிக்கப்படுகிறது . அடக்கம் முடிந்த கையோடு உறவினர்களின் ஆலோசனைப்படி தாத்தாவின் பூர்வீக நிலத்தை தனது பெயருக்கு மாற்றிக்கொள்ள முடிவு செய்யும் தம்மண்ணா , அதற்கு கடப்பாவின் ஒத்துழைப்பு கிடைக்காததால் அருகிலிருக்கும் நகரில் தொழிலதிபர் ஒருவரை உதவிக்கு நாடுகிறார் . சட்டப்பூர்வமான வாரிசு சிக்கல்களை சரி செய்யும் பட்சத்தில் தான் நிலத்தை வாங்கிக்கொள்வதாக கூறும் தொழிலதிபரிடம் ஒரு அசாதாரண சூழலில் தாத்தாவிற்கு முன்னரே தன் தந்தையும் இறந்துவிட்டதாக கூறிவிட , இருவரது இறப்புச்சான்றுகளையும் தரவேண்டிய சிக்கலில் சிக்குகிறார் . உயிருடனிருக்கும் தன் தந்தைக்கு இறப்புச்சான்றிதழைப் பெற அதிகாரி/தரகர் ஒருவரிடம் சென்று பெரிய தொகையை கொடுத்து ஏற்பாடு செய்கிறார் . தந்தையை கொஞ்ச காலத்திற்கேனும் யார் கண்ணிலும் படாமால் மறைத்து வைக்கும் உத்திரவாதத்துடன் இறப்புச்சான்றைப் பெற்று நில விற்பனையை உறுதிசெய்கிறார் .

இடையில் திதிக்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கிறது , சோதிடரின் ஆணைப்படி அடம்பரமாக திதியை நடத்த , நிலத்தை விற்றால் வரப்போகும் பணத்தில் திருப்பி அடைத்துவிடலாம் எனும் நம்பிக்கையில் உள்ளூரில் சாராயம் விற்கும் பெண்மணியிடம் பெரியதொகையை கடனாக வாங்கி அதில் ஒரு பகுதியை தந்தை கடப்பாவிடம் கொடுத்து கட்டாயமாக தேசாந்திரம் செல்லுமாறு அனுப்பிவைக்கிறார் .இதனூடே தன் நண்பர்களுடன் மணல்திருட்டு , சட்டவிரோதமாக மரம் வெட்டுதல் எனத்திரியும் அபி , ஆடுமேய்த்துக்கொண்டு நாடோடிகளாய் பக்கத்து கிராமத்திற்கு வந்து தங்கியிருக்கும் குழுவிலிருக்கு இளம்பெண் காவேரியை காதலிப்பதாய் பின் தொடர்ந்து கொண்டேயிருக்கிறான் .காவேரியும் தடுமாற்றத்துடன் அபியைத் தவிர்க்கிறாள் . தேசாந்திரம் கிளம்பிய கடப்பா தனது வழக்கப்படி பக்கத்து ஊரில் இறங்கி குடித்துவிட்டு எங்கும் செல்ல விரும்பாதவராய் ஆடு மேய்க்கும் கூட்டத்துடன் நட்பாகி அவர்களுடனேயே தங்கிவிடுகிறார் . திதி விருந்திற்கு ஆடு வாங்க தன் தந்தை கொடுத்த பணத்தை நண்பர்களுடன் குடித்து போதையில் மொத்த பணத்தையும் இழக்கும் அபி , தான் காதலிக்கும் காவேரியின் ஆட்டு மந்தையிலிருந்தே ஆடுகளைத்திருடி விருந்துக்கென வெட்டிவிடுகிறான் .திருடு போன இடத்தில் இனி வாழமுடியாதென முடிவுசெய்யும் குழு அவ்வூரிலிருந்து வெளியேற கடப்பாவின் ஊரின் வழியே கிளம்புகிறார்கள் கடப்பாவும் மறைந்து உடன் கிளம்புகிறார் . விருந்துக்கான சமையல் ஒருபுறம் நடக்க , திதிசடங்குகள் பெரியவரை அடக்கம் செய்த இடத்தில் நடந்துகொண்டிருக்கிறது இதற்கிடையில் நிலத்தை வாங்கும் தொழிலதிபர் இடத்தை பார்வையிட தன் நண்பர்களுடன் அங்கு வர , அவ்வழியே வரும் நாடோடி குழுவிலிருக்கும் கடப்பாவை பார்க்கும்படி நேர்கிறது . தம்மை ஏமாற்றி நிலத்தை விற்க முயன்ற தம்மண்ணாவிடம் சண்டையிட்டு இறப்புச்சான்று முதலிய ஆவணங்களை வீசியெறிந்துவிட்டு தொழிலதிபர் கிளம்ப , தனக்கு இனி பணம் வராது என முடிவு செய்யும் கடன் கொடுத்த பெண் ஊரார் முன்னிலையில் தம்மண்ணாவின் சட்டையை பிடித்து ரகளையை செய்கிறாள் தனது முயற்சிகளெல்லாம் பாழான கோபத்தில் தம்மண்ணா , தந்தை கடப்பாவிடம் தகராறு செய்வதுடன் படம் முடிகிறது .

(படத்தின் மொத்தக் கதையையும் தெரிந்துகொண்டாலும் படம் பார்ப்பதின் மூலம் பெறும் திரைநுகரின்பத்திற்கு குறைவேதும் இருக்காது) 

லூசியா’விற்கு பிறகு நான் பார்க்கும் இரண்டாவது கன்னடசினிமா திதி .கன்னடத்தில் வெளியாகியிருந்தாலும் இத்திரைப்படத்தின் கதையும் , கதை மாந்தர்களின் வாழ்க்கையும் மொத்த இந்திய கிராமங்களுக்குமானது . மிகக்குறைந்த செலவில் எடுக்கப்பட்டு , தொழில்முறை நடிகர்கள் அல்லாமல் அசல் மனிதர்களே நடித்துள்ள இப்படத்தில் நடிப்பு, காட்சியமைப்பு ,வசனங்கள் என அனைத்துமே மிகக்கச்சிதமாக அமைந்து இப்படத்தை உலகசினிமா தரத்திற்கு உயர்த்தியுள்ளது
இனம், மொழி மாநிலம் என எதன் பொருட்டு பிரிந்து நின்றாலும் எளிய மனிதர்களின் வாழ்வில் அலைகழிப்புக்களும் , வாழ்வியல் சிக்கலகளும் எல்லாருக்கும் பொதுவானதுதான் . வாழ்வெனும் பேரலையில் சிக்கிக்கொண்டு அலை போகும் திசையிலேயே வாழ்ந்து , கையறு நிலையில் எதைப்பிடித்தாவது கரை சேரப் போராடிக்கொண்டே இருப்பதுதான் இந்திய தம்மண்ணாக்களுக்கு (இப்போதைக்கேனும்) விதிக்கப்பட்டது .


பி.கு : திதி திரைப்படத்தில் சிறந்த நடிப்பு ,அட்டகாசமான கதாபாத்திரங்கள் ,காட்சிகள், இயல்பான வசனங்கள் என சிலாகிக்க பல தருணங்கள் உண்டு .இதுவே பெரிய மாத்திரையாகி விட்டதால் அதற்கு அடுத்ததாக ஒரு தனி பதிவு . 

Share/Bookmark