Tuesday, August 4, 2009

''பலவீனத்தின் சாயல்''

"இந்த நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு'', இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள மன்மோகன் சிங், தனது முதல் பாராளுமன்ற உரையில் இவ்வாறு கூறியபோது, காங்., உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் மேசையை தட்டி ஆரவாரம் செய்தனர்."பலவீனமான பிரதமர்' என்ற எதிர்க்கட்சிகளின் தாக்குதல், கூட்டணி கட்சிகளின் நெருக்கடி போன்ற தடைகளையும் மீறி நாட்டின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள காங்., இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்க சரியான பாதையில் இட்டுச்செல்லுமா?
வெளியுறவு கொள்கைகளில் தொடர்ந்து பல்வேறு பின்னடைவுகளை சந்தித்து வரும் மத்திய அரசு, உலக அரங்கில் இந்தியாவின் இடத்தை உறுதிப்படுத்த பல்வேறு தடைகளை எதிர்நோக்கி உள்ளது. நீண்ட காலமாக இந்தியாவின் நிரந்தர தலைவலியாக இருந்து வரும் பாகிஸ்தான் பிரச்னையில், இந்தியா தனது உறுதியான நிலைப்பாட்டை இன்னும் எடுக்காத நிலையில், நீர் சறுக்கு விளையாட்டுக்கு புகழ் பெற்ற நகரான "ஷார்ம்-யெல்-செய்க்'ல் நடந்த அணிசேரா நாடுகளின் மாநாட்டில் இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் மிகப்பெரும் சறுக்கலை எதிர்கொண்டது.
பாக்., பிரதமர் கிலானி, மன்மோகன்சிங் உடனான சந்திப்பின் போது, "பலுசிஸ்தான்' பிரதேசத்தில் இந்தியாவின் தலையீடு குறித்தும், இந்திய உளவுத்துறையின் நடவடிக்கைகள் குறித்தும் தனது கண்டனத்தை தெரிவித்து மன்மோகனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார். இந்தியா-பாக்., இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் இடம்பெற்றிருந்த 'மிதமான போக்கு' இந்திய எதிர்க்கட்சிகளிடமும், அரசியல் வல்லுனர்களிடமும் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தி, பாராளுமன்றத்தில் காங்.,கிற்கு மேலும் நெருக்கடியை தந்தது.
பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியாகவும், பல்வேறு பின்னடைவுகளை சந்தித்து வரும் பாகிஸ்தானிடம், இந்தியா தனது உறுதியான நிலையை வெளிப்படுத்த தவறி வருகிறது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீரில், 'ஜிகாத்' கோரிக்கை மூலம் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பயங்கரவாத அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காத இந்திய அரசு, பாகிஸ்தானுடன் தொடர்ந்து 'அபத்தமான பேச்சுவார்த்தைகளையே' விரும்புகிறது.
ஆனால், தனக்கு சிறிதும் தொடர்பில்லாத அண்டை நாடான இலங்கையில் நடந்த, (நடக்கும்) உள்நாட்டு விடுதலைபோராட்டத்தில், சிங்கள இனவாத அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்தது; தனது வெளியுறவு செயலாளர்களை சிங்கள ராணுவத்தின் 'மாதண்ட நாயகர்களாக' வும் ஈடுபடுத்தியது.
"இலங்கையில் நடக்கும் மனித உரிமைமீறல்களை பார்க்கும் போது, போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழர்களுக்கு சரியான நிவாரணத்தை இன்றைய சிங்கள அரசு செய்யும் என்ற நம்பிக்கை இல்லை,'' என்று இலங்கையின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தனது பதவி விலகலின் போது கண்ணீருடன் கூறினார். அதன் பின்னரும், இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா., சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில், சிங்கள இனவாத அரசுக்கு ஆதரவை உறுதிப்படுத்திய இந்தியா தனது 'பேரினவாத முகத்தை' வெளிப்படுத்தியது.
தனது பழைய ராணுவ தளவாடங்களை பாகிஸ்தானில் விற்பதன் மூலம் "கல்லாவை' நிரப்பி வந்த அமெரிக்கா, தனது பார்வையை இந்தியா பக்கம் திருப்பியுள்ளது. இந்தியாவும் ஆமாம் சாமி போடுவதற்கு சீனாவின் அசுர வளர்ச்சி மீது கொண்டுள்ள பயமும் காரணம். இதுவரை இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மறைமுகமாக மேற்கொண்ட சீனா, தற்போது வெளிப்படையாகவே களமிறங்கியுள்ளது. மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடும் வேகத்தில் வளர்ந்து வரும் சீனா, எல்லைப்பிரச்னை உள்ளிட்ட ராஜ்ய ரீதியான தாக்குதல்கள் மட்டுமின்றி, பொருளாதார யுத்தம் மற்றும் மென்பொருள் யுத்தம் போன்றவற்றையும் இந்தியா மீது திணித்து வருகிறது.
'மேட் இன் சைனா' என்ற ஒற்றை வாக்கியம், இந்திய நுகர்வோர் சந்தையின் பெரும்பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளுக்கு நிதிஉதவி, கட்டமைப்பு வசதி மற்றும் ராணுவ உதவிகள் மூலம் இந்தியாவின் அண்டைநாடுகளில் தனது கால்களை அழுத்தமாக ஊன்றியுள்ள சீனா, இந்தியாவின் முக்கிய பகுதிகள் தன் கண்காணிப்புக்குள் இருப்பதை உறுதி செய்துள்ளது.
ஆசியாவின் முக்கிய கடல் பிரதேசமான இலங்கையை தன் 'சொல் பேச்சு கேட்கும் பிள்ளை'யாக மாற்றி, தென் இந்தியாவில் உள்ள நீர்மின் உற்பத்தி நிலையங்கள், அணு உலைகள் மற்றும் ஆயுத தொழிற்சாலைகளை தனது கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது.
நமது ராணுவவீரர்களை இழந்து நம்மால் சுதந்திரம் பெற்ற வங்கதேசம் அவ்வப்போது எல்லை பிரச்னை செய்து வருகிறது; தென்கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் சுடப்படுகின்றனர்; போதாக்குறைக்கு பாக்.,கும் தன் பங்குக்கு இந்திய மீனவர்களை கைது செய்கிறது; பல்வேறு நாடுகளிலும் இந்திய வம்சா வளியினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இவைகளில் கவனம் செலுத்தாத தற்போதைய மத்திய அரசு, தனது வெளியுறவுக் கொள்கைகளை அடகு வைத்து விட்டு, தேவையற்ற பிரச்னைகளில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது.
உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு, உணவு உற்பத்தியிலும், ராணுவ ரீதியிலும் தன்னிறைவு பெற்ற நாடு; வீழ்ந்து வரும் உலக பொருளாதார சூழலிலும் சீரான வளர்ச்சி விகிதத்தை கொண்டுள்ள நாடு போன்ற பல்வேறு சிறப்புகளை பின்புலமாக கொண்டு உலக அரங்கில் தனது உறுதியான நிலைப்பாட்டை எதிரொலிக்க தவறு வரும் இந்தியா, தனது முதுகெலும்பு இல்லாத வெளியுறவு கொள்கைகளால் தேசத்தை தலை குனிய வைத்துள்ளது.
Share/Bookmark

1 comments:

Maheswaran K said...

Nanbane! Unadhu ezhuthukkalin veeriyam koodi varukiradu!

Vaazhthukkal!

Post a Comment