Monday, September 7, 2009

மருதாணி.

மரங்கள்,செடிகளுடனான எனது தொடர்பு குழந்தைப்பருவத்திலிருந்தே துவங்கியது. எனினும் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு இப்போது வசித்துவரும் இந்த வீட்டிற்கு வந்தபின்பு அதிகமாகியது.அம்மாவின் விருப்பத்திற்கேற்ப கட்டப்பட்ட இந்த வீட்டில் செடிகள் வைப்பதற்கென்று அதிக இடம் விடப்பட்டது.
பள்ளி பருவத்திலிருந்த நானும்,அக்காவும் அருகிலிருந்த எல்லோர் வீடுகளிலுமிருந்து பல்வேறு செடிகளை கொண்டுவந்து அம்மாவிடம் தருவோம். விவசாய குடும்பதிலிருந்து வந்த அம்மாவிற்கு அவற்றை நடுவதும், பராமரிப்பதுவும் எளிதாக இருந்தது; ஆர்வமுடன் எங்களுக்கும் அவற்றை கற்றுத்தந்தார்.ஓரிரு ஆண்டுகளிலேயே வீட்டை சுற்றிலும் சிறிய தோட்டமாகவே மாறியிருந்தது..
வீட்டிலிருந்த பல்வேறு செடி, மரங்களிலும் வீட்டின் இடதுபின்புறமாக வைக்க பட்டிருந்த "மருதாணிச்செடி" எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருந்தது. எனது பாட்டியின் தோட்டத்திலிருந்து கொண்டுவந்து நடப்பட்ட அந்த மருதாணிச்செடி சிலவருடங்களிலேயே நன்கு வளர்ந்திருந்தது..
தனது பிறந்த வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்ததால்,அம்மாவுக்கு மருதாணிச்செடியின் மீது தனி அக்கறையும்,பெருமையும் இருந்தது. புதிதாக வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு மருதாணி இலைகளை பறித்து தருவதுடன், அது கொண்டுவந்து நடப்பட்ட சிறுகதையையும் கூறுவார்.
வாரவிடுமுறை நாட்களில் அக்காவின் தோழிகள் அனைவரும் சிறுமரமாகிவிட்டிருந்த மருதாணிமரத்தில் கூடி, இலைகளை பறித்து, அரைத்து ஒருவருக்கொருவர் இட்டுக்கொள்வதும் வாடிக்கையாகிவிட்டிருந்தது. மேல்நிலைவகுப்பிற்கு மாறியிருந்ததால் எனது பள்ளிதோழிகளும் மருதாணி இலைகளுக்கென வீட்டிற்கு வரத்துவங்கினர். (எனது தோழிகள் மீது அம்மாவிற்கு தனி அக்கறையுண்டு)
சமையலில் பிரசித்தி பெற்றிருந்த அம்மாவின் கைவண்ணம் மருதாணி அரைக்கும் பக்குவத்திலும் தேறியிருந்தது. மருதாணி இலையுடன் பாக்கு, புளி, தயிர் மற்றும் எலுமிச்சைசாறு முதலியவற்றை சரியான விகிதத்தில் கலந்து அரைக்கும் பணிகள் அம்மாவின் மேற்பார்வையில் நடக்கும் காட்சிகள், இன்றும் அழியாத சித்திரங்களாக மனதில் பதிந்துள்ளது.
கல்லூரி படிப்புக்கென அக்காவும், நானும் வெளியூர்களுக்கு சென்றுவிட்ட பின் மருதாணி மரத்துடனான அம்மாவின் உறவு மேலும் வலுவடைந்திருந்தது. தனது அன்றாட வீட்டு வேலைகளான துணிதுவைத்தல், பாத்திரங்களை தேய்த்தல் போன்றவற்றை மருதாணிமரத்தை சுற்றியே அமைத்துக்கொண்டார்.
மாலை ஓய்வுநேரங்களில் அண்டைவீட்டு தோழிகளுடன் பேசுவதும் மரத்தினடியில்தான் இருக்கும். அக்காவிற்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பின் வீட்டை விஸ்தரிப்பதற்க்காக சிலமரங்களை வெட்டிய போதும் மருதாணிமரத்தை வெட்ட அனுமதிக்கவில்லை.
இலையுதிர்காலங்களில் தனது இலைகளை வாசலெங்கும் உதிர்த்தும், வசந்தகாலங்களில் தனது இளமஞ்சள் நிற பூக்களின் மூலம் வீட்டிற்கு தனி வசீகரத்தை தந்தும்,,அம்மாவின் முக்கியதோழியாக மருதாணிமரம் ஆகிவிட்டிருந்தது...
.
அக்காவிற்கு திருமணம் முடிந்து மாமாவீட்டிற்கு சென்றுவிட்டபின்பு மருதாணியின் தேவையும் குறைந்துவிட்டது. நான்கு வயதுடைய அக்காவின் பெண்ணும் விடுமுறையில் எங்கள் வீட்டிற்கு வரும்போது மரத்தடியில் விளையாடுவதோடு சரி. இரண்டுநாட்களுக்கு முன்பு அம்மா மருதாணி அரைத்துக்கொண்டிருந்தார்.
யாருக்கும்மா மருதாணி அரைச்சிட்டு இருக்கீங்க?
பாப்பாவுக்குதா ஏன்?
அவ எங்கம்மா ஒரு மணிநேரம் ஒரே இடத்திலிருந்து வைச்சுக்குவாளா..?
பொண்ணுகளுக்கு புடிக்காத மருதாணியா..அதெல்லாம் வைசுக்குவா... என்று பேசிக்கொண்டிருந்தபோது பக்கத்துவீட்டு குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த பாப்பா உள்ளே வந்தாள்..
என்ன அம்முச்சி இது?
இதுதா மருதாணி வா வைச்சுவிடரேன் ...என்றாள் அம்மா..
ஐயோ..அம்முச்சி இது மெஹந்தி இல்ல,,எங்கம்மா மெஹந்தி கோன்ல வைச்சிருக்காங்க...என்றபடி விளையாட ஓடிவிட்டாள்...
அம்மா ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல் என்னைப்பார்த்து அர்த்தத்துடன் சிரித்தாள்.
அம்மாவின் இதழ்களில் மருதாணியின் வண்ணம் புன்னகையாக சிவந்திருந்தது..
Share/Bookmark

1 comments:

த‌மிழ் said...

பள்ளி விடுமுறையில் பாட்டி வீட்டிற்குச் சென்று திரும்பும் போதெல்லாம், என் நகரத்துத் தோழிகளிடம் மருதாணிச் சிவப்பேறிய என் கைகளைப் பெருமையுடன் காட்டி மகிழ்ந்தது நினைவுக்கு வருகின்றன..

Post a Comment