Thursday, October 8, 2009

கேள்விக்குறி

கடந்த இருதினங்களில் ஊடகங்களில் கண்ட இரு வெவ்வேறு செய்திகள் நமது சமூகம் பின்பற்றிவரும் பல்வேறு பழக்க, வழக்கங்களுக்கு சரியான காரணங்களும் அவற்றிற்கான வழிமுறைகளும் சரியாக கற்றுத்தரப்படவில்லை என்பதை தெளிவாக உணர்த்தியது....அந்த செய்திகள்..
1.தனியார் தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய "பலியிடுதல்" பற்றிய விவாதம்...
2. நாளிதழ் ஒன்றில் கண்ட "இறைச்சி" பதப்படுத்தும் தொழிற்சாலையின் விளம்பரச்செய்தி..(இறைச்சி பதப்படுத்தும் தொழிலில் ஆண்டுக்கு 'ஆயிரம்கோடி' வர்த்தகத்தை நோக்கிசெல்லும் நிறுவனம்)
மனிதர்கள் உணவுத்தேவைக்காக விலங்குகளைத்தான் முதன்முதலில் பயன்படுத்ததுவங்கினர். வேளாண்முறைகள் கண்டறியப்பட்ட பின்புதான் உணவுப்பழக்கங்களில் சைவம், அசைவம் என்று பாகுபாடு தோன்றியது. நாகரிகம் சற்று முன்னேறி மனிதர்கள் இனக்குழுக்களாக பிரிந்து வாழ துவங்கியதிலிருந்து, தங்களை பிறரிடமிருந்து தனித்து காட்டுவதற்கென தனியான இறைவழிபாடுமுறைகள், கலாச்சாரங்கள் போன்றவற்றை ஏற்படுத்திக்கொண்டபோதும் உணவுத்தேவையாய் இருந்து "பலியிடுதல்" என்னும் வழக்கமாக மாறி.., நாகரீகமும்,அறிவியலும் பெருமளவு வளர்ந்துவிட்ட இந்நாட்களிலும் தொடர்ந்துவருகிறது..
நாகரீகம் சற்று மேம்பட்டிருந்த இடைக்காலத்தில் சமண,பௌத்த சமயங்கள் 'புலால் மறுப்பை' தங்களது முக்கிய கோட்பாடாக கொண்டிருந்தபோதிலும் ஆரியர்கள் மற்றும் முகலாயர்களின் வருகைக்கு பின் அசைவம் இந்தியர்களின் உணவுப்பழக்கத்தில் முக்கியமான இடத்தை பெற்றுவிட்டது.
மனிதவாழ்வின் அனைத்து நிலைகளையும் அறிவியல் ஆட்கொண்டுவிட்ட இன்றைய நவீன இந்தியாவிலும் உணவுத்தேவையின் ஒரு பிரிவான "அசைவ உணவு" என்பது "பலியிடுதல்" என்ற பெயராலேயே பெரும்பாலும் கற்பிக்கப்படுகிறது.
ஆதிகாலம் முதல் இன்றைய நவீனகாலம் வரை சக மனிதர்களை ஏமாற்றவும், அடக்கியாளவும் அவர்கள் பின்பற்றும் அல்லது நம்பும் கோட்பாடுகளையும், நம்பிக்கைகளையும் பயன்படுத்துவது எளிதான செயலாக உள்ளது. மூடநம்பிக்கைகளின் உச்சமாக மனிதர்களையே பலியிடும் "நரபலி" செய்திகளை இன்றும் கண்டுவருகிறோம். உணவு பழக்கங்கள் மட்டுமின்றி தற்போது நமது சமூகத்தில் நடைமுறையில் இருந்துவரும் பல வழக்கங்களுக்கு சரியான காரணங்கள் கற்பிக்கபடாததால், அவற்றைப் பயன்படுத்தி மூடநம்பிக்கைகளை வளர்ப்பதுடன் அவற்றை அரசியல்,வியாபாரம் மற்றும் வன்முறை போன்ற தேவைகளுக்கு பயன்படுத்துவது அதிகமாகியுள்ளது.
ஒரு மனிதன் மேம்பட்ட நிலையை நோக்கிசெல்லும்போது தனது சமூகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் அடிப்படையான பழக்க,வழக்கங்களின் உண்மையான காரணத்தையும், அவசியத்தையும் அறிந்து பின்பற்றுவது அல்லது காலமாற்றத்திற்கு ஏற்ப அவற்றை கைவிடுவதும் அவர்களுக்கு மட்டுமின்றி எதிர்கால சந்ததியினருக்கும் நன்மையை தரும். இல்லையெனில் கேள்விகளில் துவங்கவேண்டிய "சமூகமேம்பாடு" கேள்விக்குறிகளில் முடிவடைந்துவிடும்.
Share/Bookmark

Sunday, October 4, 2009

''பேராண்மை''- புதியகளம்.

இயக்குனர் திரு.ஜனநாதன் இயக்கத்தில் "இயற்கை", "ஈ" படங்களை தொடர்ந்து மூன்றாவதாக விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் "பேராண்மை".
தனது முந்தைய இரு திரைப்படங்களிலும் மாறுபட்ட கதைக்களங்களை தேர்ந்தெடுத்து வெற்றிகண்ட ஜனநாதன் தனது புதியபடைப்பிலும் தமிழ்த்திரைக்கு புதிதான ஒரு கதைக்களத்தை அமைத்துள்ளார்.
'ஜெயம்ரவி' நடித்துள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் அடர்ந்த வனப்பிரதேசங்களில் நடத்தப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு வெற்றிபெற்றுள்ள நிலையில் திரைப்படத்தின் விளம்பரங்களும் எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளது.
' ஒரு நாட்டை ஆக்கிரமிப்பு செய்வதற்கும்,அடிமை படுத்துவதற்கும் உள்ள பல்வேறு வழிகளில் அந்நாட்டின் இயற்கை வளங்களை கைப்பற்றுவதையும் ஒரு வழியாக கொண்டு செயல்படும் அந்நிய சக்திகளுடன் போராடும் ஒரு இளைஞனின் கதை' என்று குறிப்பிட்டுள்ளார் இயக்குனர்.
தனது முந்தைய படைப்பான "ஈ"யில் வளர்ந்த நாடுகளின் மருத்துவ குற்றங்களை சமூக அக்கறையுடன் அம்பலப்படுத்திய திரு.ஜனநாதன் தனது "பேராண்மை' திரைப்படத்தில் உலகம் தற்போது எதிர்நோக்கியுள்ள சுற்றுப்புறச்சூழல் பாதிப்புகளையும்,,வளர்ந்தநாடுகளின்.,வளரும்நாடுகள் மீதான சுற்றுப்புசூழல் சார்ந்த மறைமுக தாக்குதல்களையும் கதைக்களமாக அமைத்துள்ளார்.
. இந்தியாவில்மட்டுமேகிடைக்கக்கூடியபல்வேறு தாவரவகைகளுக்கும்,
மருத்துவ குணங்களையுடைய அரியவகை மூலிகைகள் பலவற்றிற்கும் மேலைநாடுகள் சர்வதேச சட்டங்களை கொண்டு "காப்புரிமை" பெற்றுவரும் நிலையையும்,சர்வதேச நாடுகளிடமிருந்து பெறப்படும் கடனுதவிகளுக்கு ஏற்ப தனது நாட்டின் விவசாயக்கொள்கைகளையே மாற்றியமைத்துகொள்ளும் இன்றைய அரசியல் சூழலுக்கு எதிரான தனது கருத்துக்களையும் இயக்குனர் தனது "பேராண்மை" திரைப்படத்தின் வாயிலாக சாடியிருப்பார் என்றே நம்புவோம்.

Share/Bookmark

Friday, October 2, 2009

"காப்பி அண்ட் பேஸ்ட்"

"கண்டதை தின்பவன் குண்டனாவான்..கண்டதை படிப்பவன் பண்டிதனாவான்" இந்த பழமொழிக்கு தகுந்தபடி டீக்கடைல பஜ்ஜி மடித்து தர்ற பேப்பரக்கூட ஒருதரம் படித்துவிட்டுதான் கசக்கிபோடுவேன்.
பண்டிதனா ஆவமோ?இல்லையோ? மற்ற நண்பர்களிடம் அதை பகிர்ந்துகொள்ளலாம் என்பதற்குத்தான் இந்த "காப்பி அண்ட் பேஸ்ட்" ..
கவிஞர்,கதாசிரியர் மற்றும் இயக்குனர் என்ற பன்முகத்திறமை கொண்ட திரு.இளையபாரதி அவர்களின் "பட்டினப்பாலை" கவிதைதொகுப்பில் ஒரு கவிதை..
அதீத கற்பனை,அழகியலான மொழிநடையில் அமையும் கவிதைகள்தான் சிறப்பாக அமையும் என்றல்லாமல் "எளிமையான உண்மை" இருக்கும் கவிதைகளும் சிறப்பாக இருக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இக்கவிதை.

மீன் குஞ்சுகளை
விரட்டிக்கொண்டிருந்தது
உறுமீன்,
கடல் தன்னுடையதென்று..
உறுமீனின் உறுமலுக்கு பயந்து நடந்தன
மீன்குஞ்சுகள்.
ஒரு வலை விழுந்தது கடலின் கர்ப்பத்தில்
வலையின் இடைவெளியில் தப்பின
மீன்குஞ்சுகள்.
வலைக்குள் துடித்தது உறுமீன்.
வாரம் சிலகழித்து
வளர்ந்த குஞ்சொன்று
சொல்ல ஆரம்பித்திருக்கிறது
கடல் என்னுடையதென்று..
Share/Bookmark