Monday, November 30, 2009

மற்றுமொரு காதல்கதை.(1)

எல்லா காதல்களையும் போலலல்லாமல் இந்த காதல் ஒரு அரைவேக்காட்டு காலையில் துவங்கியது.(அதிகாலைங்க..)

வேலை நிமித்தமாக திடீரென 'பெங்களூரு' செல்லவேண்டிய நிர்பந்தம், இரயிலில் முன்பதிவு செய்யாததால் பேருந்தில் செல்வது என முடிவுசெய்தேன். பேருந்து பயணத் துணையாக ஏதோவொரு நண்பரை அழைத்து செல்ல முடிவுசெய்தவுடன் 'டக்' கென நினைவில் வந்தது, எங்கள் நண்பர் குழாமின் ' காதல்நாயகன்' ( நம்ம கதை நாயகன்) வந்தாரையெல்லாம் வாழ வைக்கும் திருப்பூரில் எந்த வேலையும் இல்லாமல் இருப்பதுதான் இவரது வேலையே.( காதலிப்பதும் பகுதிநேர வேலைதான்)

அவரது முந்தைய காதல்கதையை சுருக்கமாக கூறுவது அவரைப்பற்றியும் அறிந்துகொள்ள உதவும். (பிளாஷ்பேக் பொறுத்தருள்க)

பாஸ்போர்ட் அலுவலகத் தேவைக்கென ஆவணங்களை நகலெடுக்க நண்பர்கள் நான்கைந்து பேராக ஜெராக்ஸ் ஒன்றிற்கு சென்றிருந்தோம், சற்று கூட்டமாக இருந்தததால் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த இளம்பெண்ணை தனித்தனியாக ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தோம். தனது வேலைகளை முடித்தவுடன் எங்கள் பக்கமாக பார்வையை திருப்பி 'நம்ம' நாயகனிடமிருந்த ஆவணங்களை நகல் எடுப்பதற்காக வாங்கினாள். பின்பு எல்லோரும் தத்தம் ஆவணங்களை நகல் எடுத்துக்கொண்டு கடையிலிருந்து வெளியேறினோம். பேச்சு அந்த இளம்பெண்ணை பற்றி திரும்பியது உடனே ஒருவித பரவச நிலையிலிருந்த நமது நண்பன் கனவு கலைந்தவனாய், எங்களை நோக்கி " அந்த பெண்ணை பற்றி பேசாதீங்க" என்றான்.
ஏண்டா மாப்பு, உங்களுக்கு ஏதாவது சொந்தமாடா..? என்று கேட்ட என்னைநோக்கி சற்று கோபத்துடன்,
"இனி சொந்தம் ஆக போரவடா,, என்னை அந்த பொண்ணு லவ் பண்ணுதுன்னு நினைக்கிறேன்" என்றான்.
டேய் ..என்னடா சொல்றே..? எப்படிடா?
"எல்லோரும்தானே ஜெராக்ஸ் எடுக்க நின்னுட்டு இருந்தோம், ஆனா எனக்குத்தானே முதல்ல எடுத்து கொடுத்துச்சு..அதுவும் சிரிச்சிகிட்டே." என்றான் (காதல் வயப்படுவது "பயபுள்ளைக்கு" அவ்ளோ ஈசி..)

தன் வாழ்நாளில் அதிகம் பயன்படுத்தாத சில சொற்களை இந்தமாதிரியான சமயங்களில் பயன்படுத்துவது அவனது பழக்கம்.

" சீக்கிரம் செட்டில் ஆகணும்டா..ஃபாரின்ல ஏதாவது சான்ஸ் கிடைச்சா நல்லாருக்கும்" என்றவாறே பாஸ்போர்ட் விண்ணப்பத்தை வெறித்து பார்த்தான்.
" அதா மாப்புளை எல்லோருக்கும் சேர்த்து காசு கொடுத்தானா? எப்படியோ நல்லா இருந்தா சரிடா"
"பொண்ண பார்த்தா நம்ம சைடு மாதிரி இல்லேடா. ஆனா அதுவும் ஒரு மாதிரிதா சிரிச்சது." என்று ஆளாளுக்கு தங்களது உடுக்கையை அடிக்க துவங்கினர்.
அடுத்து அவன் வாழ்வில் வந்த சில தினங்கள் "நகலெடுத்த பொழுதுகளாகவே" கழிந்தது. அவன் வீட்டிலும், ஏனைய நண்பர்கள் வீடுகளிலும் காணப்பட்ட நகலெடுக்கும் வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தி தனது இதயத்தின் நகலை தேடத் துவங்கினான்.
நகலெடுக்கும் சேவையில் தன்னை முழுமையாக அர்பணித்திருந்த ஒரு வாரத்திற்கு பிறகு, காதல் பரிணாமத்தின் அடுத்த வளர்ச்சியான கவிதை கட்டத்தை எட்டியிருந்தான்.
பொன்னிற மாலை ஒன்றில் தனது இதயத்தின் காதலையெல்லாம் வெள்ளைத்தாளுக்கு இடம்மாற்றி கவிதை என்ற படிம வஸ்துவை தயார் செய்திருந்தான். கவிதைதாளுக்கு கொஞ்சமாகவும், தனக்கு சற்று அதிகமாகவும்.(?.) அலங்காரம் செய்துகொண்டு " நகலகம்" நோக்கிய தனது வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை துவங்கினான்.
நகலகத்தில் , கடையின் உரிமையாளர் இல்லாதிருப்பது, தனக்கு கிடைக்கும் வரத்தின் ஒரு பகுதியாகவே நினைத்து தனக்குள் சிறிது காலமாக பதுங்கியிருந்த வெட்கத்தை வெளிக்கொணர்ந்து (இவ்வாறு வெளிக்கொணர்வது அனேகமாக இது நான்காவது முறை) தனது இதயத்தின் நகலை தனது உயிரின் நகலிடம்,

" படிச்சு பாருங்க..." என்றபடியே தந்தான்.

" ஆறு மணிக்கு கரண்ட் போயிடும்,, எத்தனை காப்பி வேணும்,, சீக்கிரம் சொல்லுங்க" என்று கேட்டு நண்பனின் கரண்டை சட்டென கட் செய்தாள்.

காதல் துவங்குவதை விட வேகமாக முடிந்துவிடும் என்ற உண்மையை எப்போதும் நினைவில் கொண்டிருக்கும் நமது நாயகன் அடுத்து வந்த சில பொன்னிற மாலைகளை, பொன்னிற பானம் கொண்டு (பீர்) மறக்க முயன்று கொண்டிருந்தான்.

பெங்களூரு செல்லும் எனது திட்டத்தை கூறியதும், தனது முந்தய காதலின் (..?) தோல்வியிலிருந்து முழுமையாக வெளிவந்தார்..(அதாங்க., தாடிய 'சேவ்' செய்துட்டார்)

லோக்கல்லையே படையல போடுற நம்மாளு, அவுட் ஸ்டேசன்னா பொங்க வைச்சு கிடாயே வெட்டுவானே...

அடுத்த பதிவில்...."பெண்களூரு"

Share/Bookmark

Thursday, November 26, 2009

காஷ்மீர் - எம் .ஜே .அக்பர்.
எல்லாம் வல்ல இறைவன் எப்போதும் புதிரானவன். சொர்க்கங்களை படைப்பதும், அவற்றை ஓயாத துன்பத்தில் ஆழ்த்துவதும் 'ஆதாம்-ஏவாள்' காலந்தொட்டே இறைவனுக்கு வழக்கமான ஒன்றாகும். பூலோக சொர்க்கமாக விளங்கும் "காஷ்மீர்" ஓயாத அரசியல் பிரச்சனைகளாலும், தீவிரவாத தாக்குதல்களாலும் தனது பெருமைகளையும்,பொலிவையும் இழந்து "இழந்த சொர்க்கத்தின்" நீட்சியாக இன்று திகழ்கிறது.

பனி உறைந்த ஏரிகளாலும், பசுமை கொஞ்சும் பள்ளத்தாக்குகளாலும் சூழப்பட்டு சொர்க்கத்தின் பிரதியாக திகழும் காஷ்மீரை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் ஆவலில் அதைப்பற்றிய புத்தகங்களை தேடியபோது, நண்பர் ஒருவரின் ஆலோசனையின் படி படித்த புத்தகம் திரு.எம். ஜே. அக்பரின் " KASHMIR..Behind the Vale "

இந்தப் புத்தகம் புராணகாலம் முதல் இன்றுவரை காஷ்மீரின் உண்மையான வரலாற்றையும் ,இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகான வரலாற்று சிக்கல்களையும் தெளிவாக விவரிக்கிறது. காஷ்மீர் பிரச்சனை என்பது இந்தியர்களை பொருத்தமட்டில் வெறும் அயலுரவுப்பிரச்சனை மட்டுமன்று, இது இந்து, முஸ்லீம் போன்ற மதங்களையும் கடந்து இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட ஒரு சிக்கலாகவே பார்க்கப்படுகிறது.

இந்துசமய ராஜபுத்திர சிற்றரசர்களால் ஆளப்பட்டு வந்த காஷ்மீர் பள்ளத்தாக்குகளை முகலாயப்பேரரசர் அக்பர் அழகினில் மயங்கி தனது ஆட்சியின் கீழ் இணைத்தது முதல் ஒருங்கிணைந்த இந்தியாவின் முக்கியமான பகுதியாக விளங்கும் காஷ்மீரின், நவீன வரலாறு இரத்தம் கொண்டே எழுதப்பட்டுள்ளது. இந்துசமய மன்னர்களாலும், முகலாய பேரரசர்களாலும் காஷ்மீர் மாறி,மாறி ஆட்சி செய்யப்பட்ட போதும் சரி, பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு இந்தியாவுடன் இணைந்த பிறகும் சரி, காஷ்மீர் யுத்த பூமியாகவே திகழ்கிறது.

1947இல் முதலாவது காஷ்மீர் போருக்கு பிறகு காஷ்மீர் பிரதேசங்களிலும், இந்தியாவின் பிறபகுதிகளிலும் நடைபெறும் அனைத்து தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் மூலகாரணமாக இருப்பது காஷ்மீர் பிரச்சனையே ஆகும். காஷ்மீரின் முழுமையான வரலாற்றையும் , அங்கு தற்போது நிலவிவரும் தீவிரவாத பிரச்சனைகளுக்கு பின்புலமாக அரசியலும் , மதமும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நடுநிலையுடன் இப்புத்தகத்தின் வாயிலாக அறியமுடியும்.

உண்மையான வரலாற்றின் சுவடுகளை தெரிந்து கொள்வதுதான் எதிர்கால சமூகத்தை "அறிவார்ந்தசமூகமாக" கட்டமைக்க சிறந்தவழி என்று தொடர்ந்து தனது படைப்புகள் மூலம் வெளிப்படுத்திவரும் எழுத்தாளர் திரு.எம்.ஜே.அக்பர் அவர்கள் இந்தியாவின் முக்கியமான அரசியல் எழுத்தாளர் ஆவார். இவரது பிற புகழ்பெற்ற நூல்கள் " Nehru-The making of India ',Riot after Riot, The shade of swords" போன்றவைகளாகும். வரலாற்று சம்பவங்களை தனது இயல்பான எழுத்துநடையில் எழுதிவரும் திரு.அக்பரின் இந்நூலை படிப்பது காஷ்மீர் குறித்து முழுவதுமாக அறிந்துகொள்ள மட்டுமல்லாமல் அவரது சமீபத்திய நூல்களை படிக்க ஒரு துவக்கமாகவும் அமையும்.
Share/Bookmark

Saturday, November 14, 2009

சென்னையில் இருதினங்கள்.

கடந்த மூன்று நாட்கள் தற்காலிக சென்னைவாசம். மாநகரையே புரட்டிப்போடிருந்த மழை சற்று ஓய்ந்திருந்து. இடையூறுகள் எதுவுமின்றி எனது பணிகளை முடிக்க முடிந்தது. எனினும் மழையின் பாதிப்புகள் நான் எதிர்பாத்திருந்ததை விட சற்று அதிகம்தான்.


சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் புயல்,மழை போன்ற பாதிப்புகளிலிருந்து மீண்டு விரைவில் சகஜமான வாழ்க்கை முறைக்கு திரும்ப பழகிவிடுகின்றனர்.
பெசன்ட்நகர் கடற்கரை அருகே இரவு நேர உணவு கடைக்காரரிடம் மழை பற்றி கேட்டேன்.
"நல்லா மழை அடிக்கட்டும் சார். வருசம் பூரா தண்ணி பிரச்சனையாவது தீரும்" என்றார். "தேவை"தான் மனிதவாழ்க்கையை தொடர்ந்து செலுத்துகிறது".


கடந்த பத்துவருடங்களில் சென்னை நகரில், உணவகங்களின் வளர்ச்சி பிறதுறைகளின் வளர்ச்சிக்கு சற்றும் குறையாமல் இயல்பாக நிகழ்ந்துள்ளது.
பன்னாட்டு உணவு நிறுவனங்கள் ஒருபுறம், பழைமையான உணவுமுறைகளை மீள் ஆக்கம் செய்யும் நவீன உணவகங்கள் மறுபுறம் என, கலவையான வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.

" There is no sincerer love than the love of food".


இந்தியாவின் முன்னனி கார் உற்பத்தி நிறுவனத்தில் அரை லட்சத்திற்கும் அதிகமான மாதசம்பளம் பெரும் நெருங்கிய தோழருடன் பேசிக்கொண்டிருந்தேன்,
சாத்தியமில்லாத இலக்குகளை விரட்டும் பணியின் சலிப்புகளும், மேலதிகாரிகளை சமாளிக்கும் சங்கடங்களும் நாளுக்குநாள் அதிகரித்து வருவது குறித்து வருந்தினார்.
"You are getting paid for telling lies..And superiors getting paid for asking questions and acceptinng ur lies".


புகழ்பெற்ற மருத்துவ நிபுணர் பத்மஸ்ரீ K.V.திருவேங்கடம் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எண்பது வயதை கடந்து இன்றும் தன் பணியின் மீது காட்டும் அக்கறையும், ஆர்வமும் அனைவரும் கற்க வேண்டிய ஒன்று. மருத்துவத்துறையில் அவர் பெற்றிருக்கும் புகழும், பாராட்டுக்களும் அவரின் எளிமையான அணுகுமுறையை சற்றும் பாதிக்காமல் தொடர்வது ஆச்சிரியமான ஒன்று.
"To give a real service you must add something which cant be brought or measured with money,And that is sincerity and integrity".


Share/Bookmark

Friday, November 6, 2009

சச்சின் : சாதனைகளின் நாயகன்.
"கிரிக்கெட் ஒரு மதமாக போற்றப்படும் நாட்டில் சச்சின்தான் கடவுள்" பேரி ரிச்சர்ட்ஸ்.(முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்)


1989ஆம் ஆண்டு நவ 15ம் நாள் துவங்கிய "சச்சின் எனும் ரன் இயந்திரம்" இருபது ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் தனது தேசத்திற்கு தன் பணியை பழுதில்லாமல் செய்துவருகிறது.


மும்பையில் ஒரு மத்தியதர குடும்பத்தில் பிறந்து தனது கடின உழைப்பினாலும், தனித்திறமிக்க ஆட்டத்தினாலும் நூறுகோடி பேரை மக்கள்தொகையாக கொண்ட ஒரு நாட்டின் "ஆதர்ச நாயகனாக" திகழும் சச்சினுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் இது இருபதாவது ஆண்டு..


இந்தியாவின் மக்கள்தொகை எவ்வளவோ,அதே அளவு தனக்கு ரசிகர்களை கொண்டிருக்கும் சச்சின், இந்தியா தவிர்த்து பிற நாட்டு ரசிகர்களிடமும், கிரிக்கெட் வல்லுநர்களிடமும் மாறாத அபிமானத்தை பெற்றுள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு மைல்கற்களை கடந்துள்ள சச்சின் உலக அளவிலான சாதனைப்பட்டியலில் ஐம்பதிற்கும் அதிகமான சாதனைகளில் தனது பெயரை பதித்துள்ளார். இதில் தனிநபர் சாதனைகளே அதிகமாகும்.(அதிக சாதனைகளை செய்ததே ஒரு சாதனை)


சச்சினின் சாதனைகள் பற்றிய விபரங்கள் ஒரு நீண்ட பதிவாக போடுமளவுக்கு இருக்கிறது.


சச்சினின் சாதனைகள் பற்றிய விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.


தனது கடின உழைப்பின் மூலம் உலககிரிக்கெட் அரங்கில் தனக்கென தனி சிம்மாசனம் அமைத்து ரசிகர்களின் மனதில் முடிசூட மன்னனாக விளங்கும் சச்சினின் சாதனைகள் மேலும் தொடர வாழ்த்துவோம்.


Share/Bookmark