Monday, November 30, 2009

மற்றுமொரு காதல்கதை.(1)

எல்லா காதல்களையும் போலலல்லாமல் இந்த காதல் ஒரு அரைவேக்காட்டு காலையில் துவங்கியது.(அதிகாலைங்க..)

வேலை நிமித்தமாக திடீரென 'பெங்களூரு' செல்லவேண்டிய நிர்பந்தம், இரயிலில் முன்பதிவு செய்யாததால் பேருந்தில் செல்வது என முடிவுசெய்தேன். பேருந்து பயணத் துணையாக ஏதோவொரு நண்பரை அழைத்து செல்ல முடிவுசெய்தவுடன் 'டக்' கென நினைவில் வந்தது, எங்கள் நண்பர் குழாமின் ' காதல்நாயகன்' ( நம்ம கதை நாயகன்) வந்தாரையெல்லாம் வாழ வைக்கும் திருப்பூரில் எந்த வேலையும் இல்லாமல் இருப்பதுதான் இவரது வேலையே.( காதலிப்பதும் பகுதிநேர வேலைதான்)

அவரது முந்தைய காதல்கதையை சுருக்கமாக கூறுவது அவரைப்பற்றியும் அறிந்துகொள்ள உதவும். (பிளாஷ்பேக் பொறுத்தருள்க)

பாஸ்போர்ட் அலுவலகத் தேவைக்கென ஆவணங்களை நகலெடுக்க நண்பர்கள் நான்கைந்து பேராக ஜெராக்ஸ் ஒன்றிற்கு சென்றிருந்தோம், சற்று கூட்டமாக இருந்தததால் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த இளம்பெண்ணை தனித்தனியாக ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தோம். தனது வேலைகளை முடித்தவுடன் எங்கள் பக்கமாக பார்வையை திருப்பி 'நம்ம' நாயகனிடமிருந்த ஆவணங்களை நகல் எடுப்பதற்காக வாங்கினாள். பின்பு எல்லோரும் தத்தம் ஆவணங்களை நகல் எடுத்துக்கொண்டு கடையிலிருந்து வெளியேறினோம். பேச்சு அந்த இளம்பெண்ணை பற்றி திரும்பியது உடனே ஒருவித பரவச நிலையிலிருந்த நமது நண்பன் கனவு கலைந்தவனாய், எங்களை நோக்கி " அந்த பெண்ணை பற்றி பேசாதீங்க" என்றான்.
ஏண்டா மாப்பு, உங்களுக்கு ஏதாவது சொந்தமாடா..? என்று கேட்ட என்னைநோக்கி சற்று கோபத்துடன்,
"இனி சொந்தம் ஆக போரவடா,, என்னை அந்த பொண்ணு லவ் பண்ணுதுன்னு நினைக்கிறேன்" என்றான்.
டேய் ..என்னடா சொல்றே..? எப்படிடா?
"எல்லோரும்தானே ஜெராக்ஸ் எடுக்க நின்னுட்டு இருந்தோம், ஆனா எனக்குத்தானே முதல்ல எடுத்து கொடுத்துச்சு..அதுவும் சிரிச்சிகிட்டே." என்றான் (காதல் வயப்படுவது "பயபுள்ளைக்கு" அவ்ளோ ஈசி..)

தன் வாழ்நாளில் அதிகம் பயன்படுத்தாத சில சொற்களை இந்தமாதிரியான சமயங்களில் பயன்படுத்துவது அவனது பழக்கம்.

" சீக்கிரம் செட்டில் ஆகணும்டா..ஃபாரின்ல ஏதாவது சான்ஸ் கிடைச்சா நல்லாருக்கும்" என்றவாறே பாஸ்போர்ட் விண்ணப்பத்தை வெறித்து பார்த்தான்.
" அதா மாப்புளை எல்லோருக்கும் சேர்த்து காசு கொடுத்தானா? எப்படியோ நல்லா இருந்தா சரிடா"
"பொண்ண பார்த்தா நம்ம சைடு மாதிரி இல்லேடா. ஆனா அதுவும் ஒரு மாதிரிதா சிரிச்சது." என்று ஆளாளுக்கு தங்களது உடுக்கையை அடிக்க துவங்கினர்.
அடுத்து அவன் வாழ்வில் வந்த சில தினங்கள் "நகலெடுத்த பொழுதுகளாகவே" கழிந்தது. அவன் வீட்டிலும், ஏனைய நண்பர்கள் வீடுகளிலும் காணப்பட்ட நகலெடுக்கும் வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தி தனது இதயத்தின் நகலை தேடத் துவங்கினான்.
நகலெடுக்கும் சேவையில் தன்னை முழுமையாக அர்பணித்திருந்த ஒரு வாரத்திற்கு பிறகு, காதல் பரிணாமத்தின் அடுத்த வளர்ச்சியான கவிதை கட்டத்தை எட்டியிருந்தான்.
பொன்னிற மாலை ஒன்றில் தனது இதயத்தின் காதலையெல்லாம் வெள்ளைத்தாளுக்கு இடம்மாற்றி கவிதை என்ற படிம வஸ்துவை தயார் செய்திருந்தான். கவிதைதாளுக்கு கொஞ்சமாகவும், தனக்கு சற்று அதிகமாகவும்.(?.) அலங்காரம் செய்துகொண்டு " நகலகம்" நோக்கிய தனது வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை துவங்கினான்.
நகலகத்தில் , கடையின் உரிமையாளர் இல்லாதிருப்பது, தனக்கு கிடைக்கும் வரத்தின் ஒரு பகுதியாகவே நினைத்து தனக்குள் சிறிது காலமாக பதுங்கியிருந்த வெட்கத்தை வெளிக்கொணர்ந்து (இவ்வாறு வெளிக்கொணர்வது அனேகமாக இது நான்காவது முறை) தனது இதயத்தின் நகலை தனது உயிரின் நகலிடம்,

" படிச்சு பாருங்க..." என்றபடியே தந்தான்.

" ஆறு மணிக்கு கரண்ட் போயிடும்,, எத்தனை காப்பி வேணும்,, சீக்கிரம் சொல்லுங்க" என்று கேட்டு நண்பனின் கரண்டை சட்டென கட் செய்தாள்.

காதல் துவங்குவதை விட வேகமாக முடிந்துவிடும் என்ற உண்மையை எப்போதும் நினைவில் கொண்டிருக்கும் நமது நாயகன் அடுத்து வந்த சில பொன்னிற மாலைகளை, பொன்னிற பானம் கொண்டு (பீர்) மறக்க முயன்று கொண்டிருந்தான்.

பெங்களூரு செல்லும் எனது திட்டத்தை கூறியதும், தனது முந்தய காதலின் (..?) தோல்வியிலிருந்து முழுமையாக வெளிவந்தார்..(அதாங்க., தாடிய 'சேவ்' செய்துட்டார்)

லோக்கல்லையே படையல போடுற நம்மாளு, அவுட் ஸ்டேசன்னா பொங்க வைச்சு கிடாயே வெட்டுவானே...

அடுத்த பதிவில்...."பெண்களூரு"

Share/Bookmark

8 comments:

த‌மிழ் said...

அது ஏன் பிரேம்ஜியின் போட்டோ ??

திருநாவுக்கரசு பழனிசாமி said...

தமிழ்,, அவர்தாங்க "கண்ணு, மண்ணு தெரியாம காதலிப்போர் சங்க தலைவர்"..

நிகழ்காலத்தில்... said...

நண்பருக்கு வணக்கமும், வாழ்த்துகளும்..

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி நண்பரே..

சி.பி.செந்தில்குமார் said...

>>( காதலிப்பதும் பகுதிநேர வேலைதான்)

அடப்பாவி

சி.பி.செந்தில்குமார் said...

>>படிச்சு பாருங்க..." என்றபடியே தந்தான்.

" ஆறு மணிக்கு கரண்ட் போயிடும்,, எத்தனை காப்பி வேணும்,, சீக்கிரம் சொல்லுங்க" என்று கேட்டு நண்பனின் கரண்டை சட்டென கட் செய்தாள்.

ஹா ஹா பல்பு பல்பு

niramilla sinthanai said...

நண்பனைப் பற்றிய பதிவாக இது இல்லை.தனது அனுபவத்தை நண்பன் கதாபாத்திரத்தின் மேல் ஏற்றி சொல்லும் 'உவமேய அணி"க் கதையாக இருக்கிறதே.ஆனால் சொன்ன விதம் நாராக இருக்கிறது அரசு.

niramilla sinthanai said...

நன்றாக என்பது நாராக என தவறாக டைப்பிடப்பட்டது

Post a Comment