Thursday, December 31, 2009

நாளை மற்றுமொரு நன்னாளே..
புத்தாண்டு என்றதும் நினைவுக்கு வரும் பல விசயங்களில் முக்கியமானது "நாட்காட்டி".

ஆதி காலந்தொட்டே "காலத்தை கணக்கிடுதல்" என்பது பல்வேறு முறைகளில் செய்யப்பட்ட போதும் தற்போது நாம் பயன்படுத்தும் "கிரிகோரியன்" காலண்டர்கள்(GRIGORIAN METHOD) நடைமுறைக்கு வந்த பின்புதான் உலகம் முழுவதும் ஒரு ஒழுங்கான நடைமுறையில் இயங்கத்துவங்கியது.

சிறுவயதில் காலண்டர் ஒரு ஆச்சர்யமான ஒரு பொருள்.. வீட்டிலிருக்கும் எல்லா பெரியவர்களும் அடிக்கடி பல்வேறு காரணங்களுக்காக காலண்டரை எடுத்து பார்க்கும் போதெல்லாம் நாமும் பெரியவராகும் போது தான் அடிக்கடி அதை பயன்படுத்த முடியும் என்றெல்லாம் நினைத்ததுண்டு. காலண்டர்களில் அச்சிடபட்டிருக்கும் விதவிதமான கடவுள்களின் படங்களையும், வருடம் முழுவதும் "மாறா புன்னகையுடன்" சிரித்துக்கொண்டிருக்கும் குழந்தைகளின் படங்களையும் பார்த்து ரசிப்பதே அந்தவயதுகளில் காலண்டரின் முக்கிய பயனாக இருந்தது. அந்த நாட்களில் என் வீட்டின் பக்கத்திலிருந்த 'ராகவன் மளிகை'க்கு டிசம்பர் மாத துவக்கத்திலிருந்தே விற்பனைக்கென தனி காலண்டர்களும், பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் இலவச காலண்டர்களும் வரத்துவங்கிவிடும்.(ராகவனின் அப்பா இலவச காலண்டர்களை புத்தாண்டிற்கு மறுதினம்தான் கண்ணில் காட்டுவார்) "சித்ரா காலண்டர்" "அம்பிகா" போன்ற புகழ் பெற்றிருந்த காலண்டர்கள் பல்வேறு வடிவமைப்புகளில் விற்பனைக்கு வரும், பெரும்பாலான காலண்டர்களில் விதவிதமான "முருகன் சிரித்து"க்கொண்டிருப்பார்.

கடிகாரத்தில் நேரத்தை சரியாக பார்த்து பழகுவதும், காலண்டரை முழுமையாக பயன்படுத்த துவங்குவதும் பள்ளிநாட்களின் சுவாரஸ்யமான காலகட்டங்களாகும். வீட்டிற்க்கு புதிதாக காலண்டர் வந்ததும் பார்க்கும் முதல் காரியம் அந்த வருடத்தின் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வராத அரசு விடுமுறை நாட்களை கணக்கிடுவதாகதான் இருக்கும். ஆரம்ப பள்ளிப்பருவத்தில் துவங்கிய இந்த பழக்கம் பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை இருந்தது.

தொண்ணூறுகளுக்கு பிறகான சமூக மாற்றத்தின் எதிரொலி காலண்டர்களிலும் பிரதிபலித்தது. தனியார் பலரும் தங்கள் தொழில் மற்றும் நிறுவன விளம்பரங்களுக்கென காலண்டர்களை பயன்படுத்த துவங்கியதும் காலண்டர்களின் முகமும், பயன்பாடுகளும் மாறத்துவங்கியது. அரசியல் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும் "அழகு முருகனையும்", புன்னகை குழந்தைகளையும் இடம்மாற்றம் செய்தனர். வாஸ்து சாஸ்திரம், எண் கணிதம் மற்றும் தினப்பலன் என ஜோசியத்தின் எல்லா பிரிவுகளும் காலண்டரில் இடம்பிடித்தது. கடிகாரம் மற்றும் காலண்டரின் வேலைகளை இன்று பெரும்பாலும் 'கை தொலைப்பேசிகள்' செய்து விடுவதால் இவற்றை பயன்படுத்தும் தேவையும் குறைந்துவிட்டது.

நாளை மீதான நம்பிக்கைகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் காலண்டர்களுக்கு முக்கியபங்கு உள்ளது, அன்பு, கோபம்.ஏமாற்றம், நம்பிக்கை என வாழ்க்கையின் அனைத்து தருணங்களும் தேதி காகிதங்களுக்குள் புதைத்து வைக்கபட்டிருக்கிறது, ஒவ்வொரு வருடமும் புதிய காலண்டரை புரட்டும் போது கடந்த வருடங்களின் இனிமையான மற்றும் ஏமாற்றமான கணங்கள் நினைவினில் பளிச்சிடும். ஒவ்வொரு காகிதமும் தன்னை இழந்து ஒரு புதிய நாளை கொண்டுவருகிறது. கடந்து போன தோல்விகளுக்கான ஆறுதலும், வரப்போகும் வெற்றிகளுக்கான கொண்டாட்டங்களும் கண்டிப்பாக அடுத்து வரப்போகும் நாட்களில் இருக்கும்.


"The future will be better tomorrow. WISH U HAPPY NEW YEAR TO ALL..


Share/Bookmark

Thursday, December 24, 2009

டிசம்பர் ஏமாற்றங்கள்.

திரை ரசிகர்களால் ஆவலுடன் ( ?)எதிர்பார்க்கப்பட்ட 'வேட்டைக்காரன்' திருப்பூரில் மட்டும் ஒன்பது திரையரங்குகளில் திரையிடப்பட்டது. நண்பர்களுடன் படம் பார்த்தேன். தனது முந்தைய படங்களை 'இளைய தளபதி' பார்த்திருக்க மாட்டார் என நினைக்கிறேன். அடுத்த முறை இயக்குனர்களிடம் கதை கேட்கும் போது தனது ரசிகர்களை மனதில் வைத்துக்கொண்டு கதை கேட்டால் ரசிகர்களுக்கும் நல்லது,, தளபதிக்கும் நல்லது. படத்தை கூட பொறுத்து கொள்(ல)ளலாம். ஆனால் டி.வி'யில் டிரைலரை,,, முடியலடா சாமி...
Why should people go out and pay money to see bad films,when they can stay at home and see the bad t.v programs for nothing?

வழக்கம்போல இந்த இடைத்தேர்தலிலும் ஆளும் கட்சியே வெற்றி பெற்றது. ஆளும் கட்சியினர், எதிர்கட்சியிலிருக்கும் உறுப்பினர்களை பணம் கொடுத்து தங்கள் பக்கம் இழுப்பதை தடுக்க கட்சி மாறினால் பதவி பறிக்கப்படும் சட்டத்தை கொண்டு வந்தனர். இப்போது "இடைத்தேர்தல்" என்ற பெயரில் மக்களுக்கு பணம் தந்து உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்து கொள்கின்றனர். எப்படியோ வாக்காளர்களின் "மதிப்பு" அதிகரித்துவிட்டது. ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் வந்துவிட்டது, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதற்கான 'துருப்புச்சீட்டு' மீண்டும் "சிபு சோரன்" கையில்.. பேரங்களும் இனிதே துவங்கியிருக்கும்... வாழ்க ஜன(பண)நாயகம்.
"Democracy is a awlful way to run a country, But this is the best system we have.."

உலகமெங்கும் சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் பல்வேறு வழிகளில் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டுவரும் நிலையில், கோபன்ஹேகன் நகரில் நடந்து முடிந்த 15ஆவது சுற்றுப்புறச்சூழல் மாறுபாடுகள் குறித்த மாநாடு பல்வேறு விவாதங்களுக்கு பின்னரும் எந்தவித நல்லமுடிவுகளும் எட்டபடாமலே முடிந்தது. அனைத்து நாடுகளும் இப்பிரச்சனையை பொருளாதார நோக்குடனே அணுகுவது ஒருமித்தகருத்து ஏற்படுவதை தாமதபடுத்துகிறது. சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்களின் நீண்டநாள் கோரிக்கையான சுற்றுப்புறச்சூழல் பற்றிய விழிப்புணர்வினை கல்வித்திட்டங்களில் இணைப்பதன் தேவை அதிகரித்துள்ளது.
Climate change is such a huge issue that it requires strong, concerted, consistent and enduring action by governments.

மத்திய அரசு, ஆந்திரமாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு "தெலுங்கானா" மாநிலம் அமைக்கப்படும் என் அறிவித்ததை தொடர்ந்து சற்று தணிந்திருந்த போராட்டங்கள் அரசின் பின்வாங்கலை தொடர்ந்து மீண்டும் துவங்கியுள்ளது. தனி தெலுங்கானாவை ஆதரிப்போர், எதிர்ப்போர் என இரு பிரிவினரும் வித்தியாசமின்றி அரசின் சொத்துகளை சூறையாடல், வன்முறை போராட்டங்கள் போன்ற செயல்களில் ஈடுபட்டு மாநிலத்தையே முடக்கியுள்ளனர். மகாத்மாவின் கொள்கைகளையே காற்றில் பறக்கவிட்ட இன்றைய அரசியல்வாதிகள், வல்லபாய் படேலின் "ஒருங்கிணைந்த பாரதத்தை" யா விட்டுவைப்பார்கள்., எப்படியோ நஷ்டம் மக்களுக்குத்தான்
"The ignorance of one leader in democracy, impairs the security of all people".
Share/Bookmark

Sunday, December 20, 2009

ஒரு எல்.கே.ஜி மாணவனின் நாட்குறிப்பு.

பெயர்:- அர்ஜுன் (செல்லப்பெயர் 'பப்லு')
வகுப்பு:- எல்.கே. ஜி
விருப்பம்:- விளையாடுவது
விருப்பம்:- சாப்ட் வேர் என்ஜினியர் (அம்மாவுக்கு)
விருப்பம்:- டாக்டர் (அப்பாவுக்கு)

நேரம்: காலை ஐந்து மணி.
அம்மா:- பப்லு சீக்கிரம் எழுந்திரிச்சு ரெடியாகு 'யோகா கிளாசுக்கு நேரமாச்சு... பப்லு:- சுத்த போர்..யோகா கிளாஸ் வேண்டாம்மா..
அம்மா:- டெய்லி யோகா செஞ்சாதான் மைன்ட் ரிலாக்ஸா டென்ஷன் இல்லாம இருக்கும்..
பப்லு:- அப்ப நீயும், அப்பாவும் போங்க...நா வரல...
அம்மா:- யோகா கிளாஸ்க்கு போகலேனா பூச்சாண்டிகிட்ட புடிச்சு கொடுத்துடுவேன்..க்விக்..
பப்லு:-............??...

காலை எட்டு மணி.
அம்மா:- பப்லு கெல்லாக்ஸ்(kelloggs) சீக்கிரமா சாப்பிட்டு முடி.. ஹிந்தி ட்யுசனுக்கு டயமாச்சு, மாஸ்டர் வந்துடுவார்.
பப்லு:- அந்த மாஸ்டர் எனக்கு புடிக்கல .. கெல்லாக்ஸ் நல்லாவே இல்ல,, நா இந்தி படிக்க மாட்டேன்..போ..!
அம்மா:- பப்லு.. குறும்பு பண்ணினா பூச்சாண்டிகிட்ட புடிச்சு கொடுத்துடுவேன்..ஃபீ கீப் கொயட் ! டூ வாட் ஐ சே..!
பப்லு:- .................???.....

காலை:- ஒன்பது மணி.
அம்மா:- பப்லு ஸ்கூல் பஸ் வந்தாச்சு, கிளம்பு ..லஞ்ச் மீதி வைக்காம சாப்பிடனும்...ஓ.கே.
பப்லு:- அம்மா "பிரட்" லஞ்ச் டைம்ல நல்லாவே இல்லை.. எனக்கு நூடுல்ஸ் வேணும்..அப்போ தான் ஸ்கூலுக்கு போவேன்.
அம்மா:- அடம் புடிக்காம ஸ்கூலுக்கு போ பப்லு..இல்லைனா, பூச்சாண்டிகிட்ட புடிச்சு கொடுத்துடுவேன்..
பப்லு:- ...............????......
காலை ஒன்பதரை மணியிலிருந்து மாலை நான்கு மணி வரை ஸ்கூல்ல ஆறு சப்ஜெக்ட்..ஆறு டீச்சர்கள் கதற, கதற மனப்பாடம்..(இதுல தூங்கவும் தனியா கொஞ்ச நேரம்)

மாலை: ஐந்து மணி
அம்மா:- பப்லு மியூசிக் கிளாஸ் போகணும்..இன்னும் என்ன விளையாட்டு? பப்லு:- நா கொஞ்சநேரம் விளையாடிட்டு போறேன்மா...
அம்மா:- சன் டேஸ்ல மட்டும்தா விளையாட போகணும், இப்போ மியூசிக் கிளாஸ்க்கு போகணும் இல்ல பூச்சாண்டிகிட்ட புடிச்சு கொடுத்துடுவேன்.... பப்லு:-...........????.......

மாலை:- ஏழு மணி.
அம்மா:- பப்லு 'ஹோம்வொர்க்' செய்யாம டி.வி'ல என்ன பாத்துட்டு இருக்கே?

பப்லு:- கார்டூன் பாத்துட்டு, ஹோம்வொர்க் செய்றேன்..நாளைக்கு சன்டே லீவுதானே?
அம்மா:- நாளைக்கு 'பிரெஞ்ச் கிளாஸ்', ஸ்விம்மிங் கிளாஸ் எல்லாம் இருக்கு.. பப்லு:- நோ.. ம்மா..சண்டே விளையாட போய்டுவேன்.
அம்மா:- இப்படியே அடம் புடிச்சிட்டே இருந்தா உன்ன பூச்சாண்டிகிட்ட புடிச்சு கொடுத்துடுவேன்..
பப்லு:-..........???..........

இரவு:- ஒன்பது மணி.
அம்மா:- பப்லு..சாப்பிடாம..உட்காந்துடே தூங்கிட்டு இருக்கே...சாப்பிடு
பப்லு:- எனக்கு தூக்கம் வருது..சாப்பாடு வேண்டாம்..
அம்மா:- சாப்பிடாம தூங்குனா..இப்போ பாரு பூச்சாண்டிகிட்ட புடிச்சு கொடுக்கிறேன்..!
பப்லு:- ஐயோ...அம்மா..என்னை "பூச்சாண்டிகிட்டையே புடிச்சு கொடுத்திடு"..நான் வீட்ல இருக்கல..நான் பூச்சாண்டிகிட்டயே போய்டுறேன்... அம்மா:- ...........????........
Share/Bookmark

Wednesday, December 16, 2009

ஒரு விளம்பரம்ம்ம்ம்..."மாற்றம் என்பது ஒன்றுதான் மாறாதது" , இது இன்றைய வியாபார உலகின் மிக முக்கியமான துறையான விளம்பர துறைக்கும் பொருந்தும். ஒலி- ஒளி ஊடகங்களின் கட்டற்ற வளர்ச்சியின் பயனாய் கிளர்த்தெழுந்த விளம்பரத்துறை இன்று நவீன தொழில் நுட்பங்களால் மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் வருகைக்கு பின் ஒவ்வொரு நிறுவனமும் சந்தையில் தங்களது இடத்தை தொடர்ந்து தக்கவைத்து கொள்ள பல்வேறு வகையான விளம்பர உத்திகளை கையாளுகின்றன. சில மணித்துளிகளே ஓடக்கூடிய விளம்பர படங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவிடும் நிலை இன்று சகஜமான ஒன்றாகும்.

தமிழகத்தில் விளம்பர துறையின் வளர்ச்சி சற்று வித்தியாசமான விதத்தில் முன்னேறி வருகிறது. பாலித்தீன் மூலக்கூறுகளை கொண்டு உற்பத்தி செய்யப்படும் " நெகிழ் துணி" எனப்படும் ஃபிளக்ஸ் பேனர்களில் செய்யப்படும் விளம்பரங்கள் கடந்த நான்காண்டுகளில் அபரிதமான, அபாயகர வளர்ச்சியை அடைந்துள்ளது. இவ்வகை விளம்பரங்கள் அறிமுகமான ஆரம்ப காலங்களில் அதிகசெலவு பிடிக்கும் எனும் காரணத்தினால் பெரும் நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தன.

சுவர் விளம்பரங்கள், வால் போஸ்டர்கள், மற்றும் கட்-அவுட்கள் என்று விளம்பரங்களில் பல பரிமாணங்களை கடந்து வந்த அரசியல் கட்சிகளின் பார்வை "ஃபிளக்ஸ் பேனர்"களின் பக்கம் திரும்பியது. பயன்பாடும், தேவையும் அதிகரிக்க,அதிகரிக்க இன்று அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் அளவிற்கு செலவு குறைவான ஒரு விளம்பர சாதனமாக ஃபிளக்ஸ் பேனர்கள் மாறியுள்ள நிலையில் வியாபார, தொழில் நிறுவனங்களுக்கு நிகராக தனிமனித விளம்பரங்களும் அதிகரித்துள்ளது.

தங்களது அபிமான தலைவர்களை வாழ்த்தியும், போற்றியும் துதிபாடுவதற்கு தற்போது மிகச்சிறந்த ஊடகமாக ஃபிளக்ஸ் பேனர்கள் திகழ்கிறது. தமிழகத்தின் தென் பகுதிகளில் துவங்கிய இந்த "அரசியல் கலாச்சாரம்" தற்போது தலைநகரம் உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பின்பற்றபடுகிறது.

அரசியல் நிகழ்ச்சிகள், திரைத்துறை நிகழ்வுகள் போன்ற காரணங்களுக்காக விளம்பரம் செய்யப்பட்ட நிலை மாறி தற்போது தனிமனிதர்களின் பிறந்தநாள் வாழ்த்துகளில் துவங்கி சுபகாரியங்கள், துக்க செய்திகள் வரை சகலமும் ஃபிளக்ஸ் பேனர்களின் மூலமே தெரிவிக்கபடுகிறது. பொது இடங்களில் வைக்கப்படும் பேனர்களின் மூலம் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகள் மற்றும் சுகாதார கேடுகளை பற்றிய அக்கறையோ, கவலையோ யாருக்கும் இல்லை ஏனெனில் அனைவருமே ஏதோவொரு சந்தர்ப்பத்தில் ஃபிளக்ஸ் பேனர்களில் தங்களது பெயரும், புகைப்படமும் இடம்பெறுவதை விரும்பும் நிலையே உள்ளது.

1978ல் Andy warhol என்ற ஊடகவியலாளர் விளம்பரங்களின் வளர்ச்சி பற்றி கூறிய புகழ்பெற்ற வாசகமான "In the future, everyone will be famous for atleast fifteen minutes" இதை இன்று உண்மையாக்கியத்தில் முக்கியபங்கு "ஃபிளக்ஸ் பேனர்களை"யே சாரும்.

சுற்றுப்புற சுகாதாரம் மாசுபடுதல், போக்குவரத்து இடையூறுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் "ஃபிளக்ஸ் பேனர்" கலாச்சாரத்தை கட்டுபடுத்த வேண்டிய அரசாங்கமே தங்களது சாதனை(..?)களை மக்களுக்கு சொல்கிறோம் என்ற வழியில் பொது இடங்களிலும், அரசு அலுவலகங்களிலும் பிரம்மாண்டமான பேனர்களை பயன்படுதுகின்றனர்.
( ஆளும் கட்சியை பற்றி சொல்லவே தேவையில்லை. சமீபத்தில் திருப்பூருக்கு வருகை புரிந்த 'சின்ன அண்ணனை' போற்றியும், பாராட்டியும் ஃபிளக்ஸ் பேனர்கள் வைக்க ஆன செலவு கிட்டதட்ட ஐம்பது லகரங்களை தாண்டும்)

டிஸ்கி : எனக்கெல்லாம் இரண்டுநாள் யாருடைய முகமும் ஞாபகத்தில் இல்லை,, யார பார்த்தாலும் அண்ணனுடைய முகம்தான் கண்ணுக்கு தெரிஞ்சது. அவ்வளோ பேனர்...என்னது பெரியண்ணனை பத்தி ஒண்ணுமே சொல்லலையா....அத அப்படியே லூசுல விடுங்கப்பா..
Share/Bookmark

Tuesday, December 8, 2009

அமிதாப் - துருவ நட்சத்திரம்.இந்தி(ய) திரை ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட " பா" திரைப்படம் சில தினங்களுக்கு முன் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இயக்குனர் 'பால்கி'யின் இரண்டாவது படமான இத்திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பால்கி'யின் தேர்ந்த இயக்கம், பி.சி .ஸ்ரீ ராமின் சர்வதேச தரத்திலான ஒளிப்பதிவு மற்றும் இளையராஜாவின் இனிமையான இசை என அனைத்து காரணங்களையும் விட படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணியாக விளங்குவது "அமிதாப்" .எனும் "உன்னத கலைஞன்".


"Progeria" எனும் மரபுசார் நோய் தாக்கப்பட்ட 13 வயது பள்ளி மாணவனாக நடித்திருக்கும் அமிதாப் , இளம் தலைமுறை நடிகர்களும் ஏற்க தயங்கும் கடினமான இப்பாத்திரத்தில் தனது மாறுபட்ட நடிப்பு மற்றும் தனித்துவமான 'உடல்மொழி' "னால் அனைவரையும் ஆச்சர்யபட வைத்துள்ளார்.


"பிக்-பி" என அனைவராலும் அழைக்கப்படும் அமிதாப் கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக தனது இடத்தை தொடர்ந்து தக்கவைத்துள்ளார். 1969 ல் "சாத் இந்துஸ்தானி " படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமாகி அடுத்தடுத்த தனது அதிரடியான நடிப்பினால் பல்வேறு வெற்றிகளை குவித்த இவர் "திவார்" மற்றும் " சோலே " திரைப்படங்களின் மாபெரும் வெற்றியின் மூலம் "சூப்பர்ஸ்டார் " அந்தஸ்தை பிடித்தார்.


திரையில், சமூக அநீதிகளுக்கெதிரான கோபம் கொண்ட இளைஞனாக தன்னை நிலை நிறுத்திய அமிதாப் 1984ல் தனது நெருங்கிய நண்பரான ராஜீவின் ஆதரவுடன் அரசியலில் நுழைந்தார். தனது சொந்த தொகுதியான "அலகாபாத்"லிருந்து பாராளமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோதும் ஊழல் குற்றசாட்டுகள் காரணமாக தனது பதவியை உதறினார். பின்பு நீதிமன்றம் ஊழல் குற்றசாட்டுகளில் அமிதாபிற்கு தொடர்பில்லை என்று கூறியபோதும் அரசியலிலிருந்து விலகியே இருந்தார்.


அரசியலில் பெற்ற சரிவுகள் திரை வாழ்கையிலும் தொடர்ந்தது. தனது சொந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய அமிதாப், தொடர் தோல்விகளினால் தொண்ணுறுகளின் இறுதியில் கடுமையான பொருளாதார சிக்கல்களை சந்தித்தார்.


திரைத்துறையில் இருந்து சற்று விலகியிருந்த அமிதாப்,, தொலைக்காட்சியில் "கான் பனேகா கரோர்பதி" நிகழ்ச்சியின் மூலம் தனது இரண்டாவது வெற்றிப்பயணத்தை துவக்கினார். இந்தியாவின் மிகப்பெரும் வெற்றிபெற்ற தொடராக கருதப்படும் இந்த தொடர் மீண்டும் அமிதாப்பை 'ஸ்டார்' அந்தஸ்திற்கு கொண்டு சென்றது. மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கிய அமிதாப், தனது கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார்.


மொஹாபதின், கபி குஷி கபி கம், காக்கி மற்றும் ப்ளாக் போன்ற படங்களின் மாபெரும் வெற்றி வணிகரீதியாக மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் பெரும் புகழை ஈட்டித்தந்தது. அமீர்,ஷாருக் மற்றும் சல்மான் கான்களின் ஆதிக்கம் இளம் தலைமுறை நடிகர்களின் வரவு என இன்றைய இந்தி திரையுலகிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தும் அமிதாப், விளம்பரப்படங்களிலும் தனது முதலிடத்தை தொடர்கிறார்.


இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டார், வெற்றிகரமான தொலைகாட்சி தொகுப்பாளர், பின்னணி குரல் கலைஞன், திரையுலகின் அதிக வர்த்தக மதிப்புடைய குடும்பத்தின் தலைவன் என பல்வேறு வெற்றிகரமான முகங்களையுடைய "அமிதாப்" இன்றைய திரை நட்சத்திரங்களில் தனித்து மின்னும் " துருவ நட்சத்திர" மாக விளங்குகிறார்.
Share/Bookmark