Tuesday, December 8, 2009

அமிதாப் - துருவ நட்சத்திரம்.இந்தி(ய) திரை ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட " பா" திரைப்படம் சில தினங்களுக்கு முன் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இயக்குனர் 'பால்கி'யின் இரண்டாவது படமான இத்திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பால்கி'யின் தேர்ந்த இயக்கம், பி.சி .ஸ்ரீ ராமின் சர்வதேச தரத்திலான ஒளிப்பதிவு மற்றும் இளையராஜாவின் இனிமையான இசை என அனைத்து காரணங்களையும் விட படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணியாக விளங்குவது "அமிதாப்" .எனும் "உன்னத கலைஞன்".


"Progeria" எனும் மரபுசார் நோய் தாக்கப்பட்ட 13 வயது பள்ளி மாணவனாக நடித்திருக்கும் அமிதாப் , இளம் தலைமுறை நடிகர்களும் ஏற்க தயங்கும் கடினமான இப்பாத்திரத்தில் தனது மாறுபட்ட நடிப்பு மற்றும் தனித்துவமான 'உடல்மொழி' "னால் அனைவரையும் ஆச்சர்யபட வைத்துள்ளார்.


"பிக்-பி" என அனைவராலும் அழைக்கப்படும் அமிதாப் கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக தனது இடத்தை தொடர்ந்து தக்கவைத்துள்ளார். 1969 ல் "சாத் இந்துஸ்தானி " படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமாகி அடுத்தடுத்த தனது அதிரடியான நடிப்பினால் பல்வேறு வெற்றிகளை குவித்த இவர் "திவார்" மற்றும் " சோலே " திரைப்படங்களின் மாபெரும் வெற்றியின் மூலம் "சூப்பர்ஸ்டார் " அந்தஸ்தை பிடித்தார்.


திரையில், சமூக அநீதிகளுக்கெதிரான கோபம் கொண்ட இளைஞனாக தன்னை நிலை நிறுத்திய அமிதாப் 1984ல் தனது நெருங்கிய நண்பரான ராஜீவின் ஆதரவுடன் அரசியலில் நுழைந்தார். தனது சொந்த தொகுதியான "அலகாபாத்"லிருந்து பாராளமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோதும் ஊழல் குற்றசாட்டுகள் காரணமாக தனது பதவியை உதறினார். பின்பு நீதிமன்றம் ஊழல் குற்றசாட்டுகளில் அமிதாபிற்கு தொடர்பில்லை என்று கூறியபோதும் அரசியலிலிருந்து விலகியே இருந்தார்.


அரசியலில் பெற்ற சரிவுகள் திரை வாழ்கையிலும் தொடர்ந்தது. தனது சொந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய அமிதாப், தொடர் தோல்விகளினால் தொண்ணுறுகளின் இறுதியில் கடுமையான பொருளாதார சிக்கல்களை சந்தித்தார்.


திரைத்துறையில் இருந்து சற்று விலகியிருந்த அமிதாப்,, தொலைக்காட்சியில் "கான் பனேகா கரோர்பதி" நிகழ்ச்சியின் மூலம் தனது இரண்டாவது வெற்றிப்பயணத்தை துவக்கினார். இந்தியாவின் மிகப்பெரும் வெற்றிபெற்ற தொடராக கருதப்படும் இந்த தொடர் மீண்டும் அமிதாப்பை 'ஸ்டார்' அந்தஸ்திற்கு கொண்டு சென்றது. மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கிய அமிதாப், தனது கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார்.


மொஹாபதின், கபி குஷி கபி கம், காக்கி மற்றும் ப்ளாக் போன்ற படங்களின் மாபெரும் வெற்றி வணிகரீதியாக மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் பெரும் புகழை ஈட்டித்தந்தது. அமீர்,ஷாருக் மற்றும் சல்மான் கான்களின் ஆதிக்கம் இளம் தலைமுறை நடிகர்களின் வரவு என இன்றைய இந்தி திரையுலகிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தும் அமிதாப், விளம்பரப்படங்களிலும் தனது முதலிடத்தை தொடர்கிறார்.


இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டார், வெற்றிகரமான தொலைகாட்சி தொகுப்பாளர், பின்னணி குரல் கலைஞன், திரையுலகின் அதிக வர்த்தக மதிப்புடைய குடும்பத்தின் தலைவன் என பல்வேறு வெற்றிகரமான முகங்களையுடைய "அமிதாப்" இன்றைய திரை நட்சத்திரங்களில் தனித்து மின்னும் " துருவ நட்சத்திர" மாக விளங்குகிறார்.
Share/Bookmark

0 comments:

Post a Comment