Wednesday, December 16, 2009

ஒரு விளம்பரம்ம்ம்ம்..."மாற்றம் என்பது ஒன்றுதான் மாறாதது" , இது இன்றைய வியாபார உலகின் மிக முக்கியமான துறையான விளம்பர துறைக்கும் பொருந்தும். ஒலி- ஒளி ஊடகங்களின் கட்டற்ற வளர்ச்சியின் பயனாய் கிளர்த்தெழுந்த விளம்பரத்துறை இன்று நவீன தொழில் நுட்பங்களால் மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் வருகைக்கு பின் ஒவ்வொரு நிறுவனமும் சந்தையில் தங்களது இடத்தை தொடர்ந்து தக்கவைத்து கொள்ள பல்வேறு வகையான விளம்பர உத்திகளை கையாளுகின்றன. சில மணித்துளிகளே ஓடக்கூடிய விளம்பர படங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவிடும் நிலை இன்று சகஜமான ஒன்றாகும்.

தமிழகத்தில் விளம்பர துறையின் வளர்ச்சி சற்று வித்தியாசமான விதத்தில் முன்னேறி வருகிறது. பாலித்தீன் மூலக்கூறுகளை கொண்டு உற்பத்தி செய்யப்படும் " நெகிழ் துணி" எனப்படும் ஃபிளக்ஸ் பேனர்களில் செய்யப்படும் விளம்பரங்கள் கடந்த நான்காண்டுகளில் அபரிதமான, அபாயகர வளர்ச்சியை அடைந்துள்ளது. இவ்வகை விளம்பரங்கள் அறிமுகமான ஆரம்ப காலங்களில் அதிகசெலவு பிடிக்கும் எனும் காரணத்தினால் பெரும் நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தன.

சுவர் விளம்பரங்கள், வால் போஸ்டர்கள், மற்றும் கட்-அவுட்கள் என்று விளம்பரங்களில் பல பரிமாணங்களை கடந்து வந்த அரசியல் கட்சிகளின் பார்வை "ஃபிளக்ஸ் பேனர்"களின் பக்கம் திரும்பியது. பயன்பாடும், தேவையும் அதிகரிக்க,அதிகரிக்க இன்று அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் அளவிற்கு செலவு குறைவான ஒரு விளம்பர சாதனமாக ஃபிளக்ஸ் பேனர்கள் மாறியுள்ள நிலையில் வியாபார, தொழில் நிறுவனங்களுக்கு நிகராக தனிமனித விளம்பரங்களும் அதிகரித்துள்ளது.

தங்களது அபிமான தலைவர்களை வாழ்த்தியும், போற்றியும் துதிபாடுவதற்கு தற்போது மிகச்சிறந்த ஊடகமாக ஃபிளக்ஸ் பேனர்கள் திகழ்கிறது. தமிழகத்தின் தென் பகுதிகளில் துவங்கிய இந்த "அரசியல் கலாச்சாரம்" தற்போது தலைநகரம் உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பின்பற்றபடுகிறது.

அரசியல் நிகழ்ச்சிகள், திரைத்துறை நிகழ்வுகள் போன்ற காரணங்களுக்காக விளம்பரம் செய்யப்பட்ட நிலை மாறி தற்போது தனிமனிதர்களின் பிறந்தநாள் வாழ்த்துகளில் துவங்கி சுபகாரியங்கள், துக்க செய்திகள் வரை சகலமும் ஃபிளக்ஸ் பேனர்களின் மூலமே தெரிவிக்கபடுகிறது. பொது இடங்களில் வைக்கப்படும் பேனர்களின் மூலம் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகள் மற்றும் சுகாதார கேடுகளை பற்றிய அக்கறையோ, கவலையோ யாருக்கும் இல்லை ஏனெனில் அனைவருமே ஏதோவொரு சந்தர்ப்பத்தில் ஃபிளக்ஸ் பேனர்களில் தங்களது பெயரும், புகைப்படமும் இடம்பெறுவதை விரும்பும் நிலையே உள்ளது.

1978ல் Andy warhol என்ற ஊடகவியலாளர் விளம்பரங்களின் வளர்ச்சி பற்றி கூறிய புகழ்பெற்ற வாசகமான "In the future, everyone will be famous for atleast fifteen minutes" இதை இன்று உண்மையாக்கியத்தில் முக்கியபங்கு "ஃபிளக்ஸ் பேனர்களை"யே சாரும்.

சுற்றுப்புற சுகாதாரம் மாசுபடுதல், போக்குவரத்து இடையூறுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் "ஃபிளக்ஸ் பேனர்" கலாச்சாரத்தை கட்டுபடுத்த வேண்டிய அரசாங்கமே தங்களது சாதனை(..?)களை மக்களுக்கு சொல்கிறோம் என்ற வழியில் பொது இடங்களிலும், அரசு அலுவலகங்களிலும் பிரம்மாண்டமான பேனர்களை பயன்படுதுகின்றனர்.
( ஆளும் கட்சியை பற்றி சொல்லவே தேவையில்லை. சமீபத்தில் திருப்பூருக்கு வருகை புரிந்த 'சின்ன அண்ணனை' போற்றியும், பாராட்டியும் ஃபிளக்ஸ் பேனர்கள் வைக்க ஆன செலவு கிட்டதட்ட ஐம்பது லகரங்களை தாண்டும்)

டிஸ்கி : எனக்கெல்லாம் இரண்டுநாள் யாருடைய முகமும் ஞாபகத்தில் இல்லை,, யார பார்த்தாலும் அண்ணனுடைய முகம்தான் கண்ணுக்கு தெரிஞ்சது. அவ்வளோ பேனர்...என்னது பெரியண்ணனை பத்தி ஒண்ணுமே சொல்லலையா....அத அப்படியே லூசுல விடுங்கப்பா..
Share/Bookmark

2 comments:

த‌மிழ் said...

// "In the future, everyone will be famous for atleast fifteen minutes" //

true..

உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்

Post a Comment