Saturday, December 25, 2010

சாம்பல் காளான்கள்கனவிலிருந்து மீண்டு நனவிற்கும்
நனவிலிருந்து நழுவி கனவிற்குமாக
ஊசலாடுகிறது இருப்பு.

மெய் வருத்தும்
நனவின் வெப்பக்கீற்றுகள்
உயிர் பொசுக்கி அஸ்தமிக்கிறது,
கனவின் பெருங்கடலுக்கப்பால்

பெருங்கடலின் ஆழத்தில்
வெம்மையை அழித்த குளுமையும்,
ஆர்ப்பரிப்பை அடக்கிய அமைதியும்
விரவி..சேகரிக்கின்றன
உயிரின் கருஞ்சாம்பலை

விடியல்கள் பொய்த்த கனவின்
ஆழ் சேற்றில் புதைந்த
நனவின் விதைப்பிண்டங்கள்,
முளைத்து, துளிர்க்கின்றன
கருஞ்சாம்பல் காளான்களாக

மரணித்தலையும், ஜனித்தலையும்
இரு கயிறுகளாக்கி
காளான்கள் சூழ் மரமொன்றில்
ஊசலாடுகிறது இருப்பு

Share/Bookmark

Sunday, December 19, 2010

முத்தக்கதை 3ரோஜாக்கள் பிடிக்குமென்றாய்
பறித்துக் கொண்டேயிரு,
என் இதழ்களில்..

குழந்தையை போன்றது
உன் முத்தங்கள்,
தடுமாறித்,தடுமாறி விழுகின்றன.

அழுத்தக்காரிதான் நீ..
முதல் பார்வையில் நினைத்தது,
முதல் முத்தத்தில் உறுதியானது.

வழி தவறிய குழந்தையாய்
காற்றில் அலைகின்றன,
நீ நிராகரித்த என் முத்தங்கள்.

இறகால் வருடும் என் முத்தங்கள்
தோற்கின்றன, அலகால்
கொத்தும் உன் முத்தங்களிடம்..

தோல் எரிக்கும் அதிகாலைப்
பனிக்குளிர் முத்தங்கள் நீ தர,
எரிந்து தீர்க்கிறது என் காமம்.


Share/Bookmark

Wednesday, December 15, 2010

காத்திருப்பு


பெரும் வனப்பிரவாகத்தில்
சிக்குண்டு, அடித்து செல்லப்படும்
சிறு நீர்ப் பாம்பென..சுழன்று
தவிக்கிறது காலம்.

அகங்காரத்துடன் முன்னோக்கி
செல்லும் வெள்ளத்தின் சுழிவுகள்
ஆர்பரிக்கின்றன காலத்தை
கைக்கொண்ட இறுமாப்பில்..

ஆர்பரித்த அலையொன்றில்
எறியப்பட்டு நதிப்பாறையில்
ஒதுங்கிய காலம்,,
இரையென வெள்ளத்தை
விழுங்கிடும் ஆசுவாசத்துடன்
காத்திருக்கத் துவங்கியது
கோடையை நோக்கி..


Share/Bookmark

Friday, December 3, 2010

நினைவுப் பள்ளங்கள்மழை இப்போது நின்றுவிட்டது

உருவங்கள் பல கொண்டலையும்
பெரு மேகங்கள், உருவமில்லா
காற்றில் கரைந்து, பெரு மழையாய்
கொட்டித் தீர்த்து ஓய்ந்துள்ளது.
களிமண் காடாய் மனம்
ஊறிக்கிடக்கிறது நினைவுகளில்,

மழைக்காக ஏங்கிய நாட்கள்
தன்னை மெல்ல,மெல்ல
அஸ்தமித்து கொண்டு,
புதிய ஒளிக்கீற்றுகளை
வெயில் விடியல்காளாய்
நினைவுகளில் பாய்ச்சுகிறது.

வெம்மையில் தன்னை இழக்கும்
ஈரம்.. மற்றுமொருமுறை
விட்டுச் செல்கிறது, மனதை
வறண்ட கனவுகளாய்..

களிமண் காடாய் ஊறிக்கிடந்த
மனம் வெடிக்கத்துவங்குகிறது
நினைவுப் பள்ளங்களாய்.


Share/Bookmark

Wednesday, November 24, 2010

ஆம், எனது உலகம் முன்பு போல் இல்லைஎனது உலகம் முன்பு போல் இல்லை..

நீ என்னுடன் பேசத் துவங்கிய பிறகு
மழையால் நிரம்பத் துவங்கிய என்னுலகம்,
மண்ணின் வாசனையாலும்
மழைநேரத்து வண்ணங்களாலும்
மழையை வரவேற்று கூத்தாடும்
வண்ண மயிலின் மகிழ்ச்சியாலும்
நிரம்பி வழிகிறது

முன்பு,
தனிமையில் மேற்கொள்ளும்
இலக்கற்ற பயணங்களுக்கு
வழித்துணையாக முடியாத
நீண்ட இரவுகளின் புழுக்கமும்
இணையைப்பிரிந்த தவளைகளின்
"கொல்லொலி"யுமே வாய்த்தது

இன்றோ,,
நிலவும், மழையும் சேர்ந்து
பொழியும் குளுமையுடன்
ஏகாந்தமாய்ப் பாடிச்செல்லும்
இரவுப்பறவைகளின் கீதங்களும்
நிஜங்களாக மாறத்துடிக்கும்
உன் பிரிய நினைவுகளும்
வழித்துணையாய் வாய்க்கிறது

ஆம், எனது உலகம் முன்பு போல் இல்லை

Share/Bookmark

Monday, November 22, 2010

முகமற்ற நினைவுகள்


அடர் மனிதக் கானகத்தில்
திசைகளை தொலைத்து,
திக்கற்று அலைகிறது
என் நினைவுகள்..

அடர் மௌனம் கொண்டு
முகத்தை மறைத்திருக்கும்
நீ, வேர்களாக மறைத்து
கொள்கிறாய் மனதை

வேர்களும் பூக்கும்
என்ற நம்பிக்கையில்
தொலைந்த தன் முகத்தைத் தேடி
கானகமெங்கும் அலைகின்றது
முகமற்ற என் நினைவுகள்..


Share/Bookmark

Tuesday, November 16, 2010

திறக்காத கதவுகள்மறைத்து வைக்கப்பட்ட
உன் புகைப்படத்துடன்
சேர்த்தே மறைத்து வைக்கப்பட்டது
என் பிரியங்களின் சில கதவுகள்..

வீட்டை சுத்தப்படுத் வரும்
பண்டிகைக்காலங்கள் ஒவ்வொன்றிலும்
மனம் பதைபதைக்கிறது
முன்பு மனைவியை எண்ணியும்
இப்போது பிள்ளைகளிடமும்

திறக்கப்பாடாத கதவுகளுக்குள்
பாழடைந்து போயிருக்கும்
என் பிரியங்களுக்கும் வரலாம்
ஏதேனும் ஒரு பண்டிகை,
அதற்குள் தெரிந்து கொள்ள வேண்டும்
அவர்களுக்குள்ளும் திறக்காத கதவுகள்
ஏதேனும் உண்டா என்று..


Share/Bookmark

Saturday, November 13, 2010

பூதத்தலைவி


அள்ளி ஏந்திய கைகளுக்குள்
தேங்காத மழை,
சுழிந்து ஓடுகிறது மகாநதியாய்

மனங்கொண்டு கடந்தாலும்
நீள்கிறது பூமி,
முடிவிலாப் பாதையென

முத்தங்கள் கொண்டு தணித்தாலும்
காதல் நெருப்பாய்,
பற்றியெரிகிறது மோகம்

இறுக்கிப்பிடித்த கைகளிலிருந்தும்
நழுவுகிறது காற்று,
நிறுத்தவியலா காலமென

இமைகள் மூடிப் பிடித்தாலும்
வசப்படாத வானம்,
விரிகிறது பெரும் காட்சியென

என் உதிரங் கொண்டு பூசித்தாலும்
சினந்தணியா நீ ,,
ஆட்கொள்கிறாய் மகா ஜனனியாய்...


Share/Bookmark

Wednesday, November 10, 2010

முத்தக்கதை 2


கன்னங்களில் தேங்கும்
என் முத்தங்கள் ததும்புகின்றன
உன் இதழ்களில்

கண்மூடித் தனமானவைதான்
என் முத்தங்கள்
கண் மூடியேனும் பெற்றுக்கொள்

பறத்தலின் சாத்தியங்கள்
சிறகுகளில் மட்டுமில்லை
உன் முத்தங்களிலும்தான்

வீழ்த்தும் போதும்
வீழ்த்தப்படும் போதும்
முத்தங்களே துணை

பொறுமையின் மேகங்களுடைத்து
பொழிந்ததுன் முத்தங்கள்
குளிர்ந்ததென் பூமி

முத்தங்களின் மோனத் தவத்தில்
கணங்கள் உறைகின்றது
காதல் உருகுகிறது
Share/Bookmark

Thursday, October 14, 2010

மூழ்காத பிரியங்கள்ஓடும் நதியில் நிழலுதிர்த்து,
வீசுங்காற்றில் சுகந்தபரப்பும்
செண்பகமரத்து பூ நீ..

நடைபாதை சிறுவர்கள்
எறிந்து விளையாடும்
படித்துறை கூழாங்கல் நான்,

மாயச் சிறுவனொருவன்
உனை நோக்கி, எனை வீசியதில்
ஆற்றில் உதிர்ந்த நீ,
ஏகாந்த உலாச்செல்வாதாய் எண்ணி
துணைக்கு எனை அழைத்தாய்..

சென்று சேருமிடம்
உப்புக்கடலென்பதை
அறியாமல் உலாச்செல்லும்,
மூழ்காதவுனை பின் தொடர
ஆற்றில் இறங்கிய நான்
மெது,மெதுவாய்
மூழ்கத்துவங்கினேன்
பிரியங்களை வெளியேற்றியபடி..Share/Bookmark

Sunday, October 10, 2010

நிலையாமை


அகாலமாய் மரணித்த
சிறுவனின் தலைமாட்டில்
வைக்கப்படுகின்றன
சில ஊதுபத்திகள்..

நாளை மீதான நம்பிக்கைகள்
கொடுங்கனவாய் மாறி,
இன்றை சிதைக்கின்றன..

புகைந்துதிரும்
பத்தியின் மணம்
அறையெங்கும் வியாபிக்கிறது
நிலையாமையின்
மௌன சாட்சியாய்.
Share/Bookmark

Friday, October 8, 2010

காலச்சமர்நகர மறுக்கின்றன,
சங்கிலியால் கட்டப்பட்ட
என் நாட்கள்...

பிணைக்கப்பட்ட கால்களுடன்
தடுமாறி விழும் என் நாட்களை
காயப்படுத்திய படியே
முன்னோக்கி நகர எத்தனிக்கிறது
நினைவுகள்,

நாட்களுக்கும்,
நினைவுகளுக்குமான
இச்சமரில், தோற்று வீழும்
தன்னில் சிறு துளியான
என் நாட்களைப் பற்றிய
கவலைகள் ஏதுமின்றி
கடந்து செல்கிறது காலம்.
Share/Bookmark

Sunday, September 19, 2010

பீப்ளி லைவ் - இந்தியாவின் முகம்இந்தியா சுதந்திரமடைந்த பிறகு நாட்டின் சமூக, பொருளாதரத்தை பாதித்த அல்லது கட்டமைத்த காரணிகளுள் முக்கியமானவை பசுமைப்புரட்சியும், உலகமயமாக்கலும். இவ்விரு நிகழ்வுகளையும் ஆதரித்தும், எதிர்த்தும் பல்வேறு விவாதங்கள் இன்றுவரை நடைபெற்று வருவது ஒருபுறமிருக்க, தனி மனிதர்களது வாழ்க்கைச்சூழலில் இவ்விரு நிகழ்வுகளும் நிகழ்த்திய மாற்றங்கள் தனிமனித வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதாக இல்லையென்பது பெரும்பான்மையான சமூக ஆய்வுகளின் முடிவாக உள்ளது. இந்தியா சுதந்திர காற்றை சுவாசிக்கத்துவங்கி இரு தலைமுறைகள் கடந்தபின்னரும் பஞ்சம் மற்றும் பசியினால் தற்கொலைகள் அதிகரிப்பது, அரசின் கிடங்குகளில் பல்லாயிரக்கணக்கான டன் உணவு தானியங்கள் கையிருப்பாக வைக்கப்பட்டு வீணடிக்கப்படுவதும், அதே உணவு தானியங்களின் விலை சந்தையில் பன் மடங்கு லாபத்துடன் விற்பனை செய்யப்படுவது என எதிர்மறையான சமூகச் சூழலே நிலவுகிறது. ஜனநாயக ரீதியில் கட்டமைக்கப்பட்ட ஒரு சமூகத்தில் எதிர்மறையான நிகழ்வுகளை மட்டுப்படுத்தி சமநிலையாக சமூகமும், அரசும் இயங்க முக்கிய பங்காற்றுவதில் ஊடகங்களின் பங்கு முக்கியமானதாகும்.

உலகமயமாக்கல் நிகழ்த்திய மாற்றங்களில் குறிப்பிடத்தக்க அல்லது அபாயகரமான மாற்றம் என்பதற்கு சரியான உதாரணமாக, ஒரு காலத்தில் சேவை சார் துறையாக இருந்த ஊடகத்துறை இன்று பெரும் லாபமீட்டும் தொழில்துறையாக மாறியதை குறிப்பிடலாம். தொழிலில் நிலைத்திருப்பதும், லாபமீட்டுவதும் கடும் போட்டிகளுக்குள்ளான நிலையில் தங்களின் தனித்தன்மைகளை இழந்திருக்கும் இன்றைய ஊடகத்துறையின் செயல்பாடுகள் தனிமனிதர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிப்பதாகவே உள்ளது. ஜனநாயகத்தை தாங்கி நிற்கும் தூண்களில் முக்கியமானதாக கருதப்படும் ஊடகங்களின் இன்றைய போக்கு சமூக மேம்பாட்டை நோக்கியதாக இல்லாத நிலையில், முற்றிலும் பொழுதுபோக்கு ஊடகமாக மாறிவிட்ட திரைப்படங்களில் அவ்வப்போது சில நல்ல முயற்சிகள் அரிதாக நடைபெறுவதுண்டு. சமீபத்தில் நடிகர் அமீர்கான் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் அனுஷா ரிஷ்வி இயக்கத்தில் வெளியான "பீப்ளி-(லைவ்)" என்ற திரைப்படம் நாட்டின் முதுகெலும்பு எனப்படும் விவசாயம் மற்றும் விவசாயிகளின் நிலைமையை அப்பட்டமாக படம்பிடித்து காட்டுவதோடு அரசியல் மற்றும் ஊடகங்களின் போலித்தனங்களையும் தோலுரித்து காட்டுகிறது.


வறுமை மற்றும் பஞ்சத்தின் கோரப்பிடியிலிருக்கும் விவசாய சகோதரர்களான நத்தா, புதியா இருவருக்கும் அரசாங்கத்தின் மூலமாக புதிதாக ஒரு சிக்கல் நேருகிறது, அது தங்களின் பரம்பரை நிலத்தை அடமானமாக வைத்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத நிலையில் கடனுக்கான பிணைய நிலத்தை ஏலம் விடப்போவதாக வரும் அறிவிப்பு. கடனையும் திருப்பிச் செலுத்தவும் இயலாமல், பரம்பரை நிலத்தை இழக்க விரும்பாத இருவரும் உள்ளூர் செல்வந்தரும், அரசியல்வாதியுமான நபரிடம் உதவிக்கென வருகிறார்கள். நடைபெறவிருக்கும் தேர்தல் பணிகளில் மும்முரமாக இருக்கும் அரசியல்வாதி இருவரையும் ஏளனமாக பேசுவதோடு, தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் குடும்பத்திற்கு அரசு இழப்பீட்டு தொகையாக ஒரு லட்ச ரூபாய் வழங்குகிறது என்ற தகவலை கூறி அரசாங்கத்தை அணுகுமாறு கூறுகிறார்.தங்கள் நிலத்தை தக்க வைத்துக்கொள்ள வேறு வழி இல்லாத நிலையில் சகோதரர்கள் இருவரும் கலந்துபேசி தங்களுள் ஒருவர் தற்கொலை செய்து கொள்வது எனவும், மற்றவர் கிடைக்கும் இழப்பீட்டு தொகையில் நிலத்தையும் மீட்டு குடும்பத்தை காப்பது என முடிவு செய்கின்றனர்.

இழப்பீட்டு தொகை வழங்கும் திட்டம் செயல்படுவதை வேறு சிலரிடமும் உறுதி செய்த பின்னர் 'நத்தா' தற்கொலை செய்வது கொள்வது என தீர்மானிக்கின்றனர். இத்தகவலை எதேச்சையாக அறிந்துகொள்ளும் உள்ளூர் தினசரியில் நிருபராக பணிபுரியும் 'ராகேஷ்' தனது தொடர்பிலிருக்கும் பிரபலமான செய்தி தொலைகாட்சி நிருபரிடம் அத்தகவலை தெரிவிக்கிறான்."டி.ஆர்.பி" என்னும் மாயக்குதிரையின் மூலம் முன்னணியில் பயணிக்க விரும்பும் தொலைக்காட்சி நிறுவனத்தினர் "கிடைத்தற்கரிய" இச்செய்தியை நேரடி ஒளிபரப்பு செய்வதாக களமிறங்க, தேசமெங்கும் ஊடகங்களால் பரபரப்பு ஏற்படுத்தப்படுகிறது. வழக்கம் போல இறுதியில் விழித்துக்கொள்ளும் அரசு, நடைபெறவிருக்கும் தேர்தல் வெற்றியை மனதில் கொண்டு 'நத்தா' தற்கொலை செய்துகொள்ளாமல் காக்க ஒருபுறம் நடவடிக்கைகள் எடுக்க, இதே தற்கொலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஆளும் கட்சியை தோற்கடிக்க சதி செய்யும் எதிர்க்கட்சி என விரிவடையும் கதைக்களத்தில் அரசியல் கட்சிகளின் தகிடுதத்தங்கள், ஊடகங்களின் குயுக்திகள் மற்றும் நத்தா குடும்பத்தினரின் அறியாமை என கலவையாய் காட்சிகள் அரங்கேற இறுதியில் 'நத்தா' கிராமத்தை விட்டு வெளியேறி நகரத்தில் கட்டிடக்கூலியாய் மாறுவதுடன் படம் நிறைவடைகிறது. நத்தாவின் தற்கொலை முடிவு மற்றும் அதன் நீட்சியாக சமூகம் சந்திக்கும் அபத்தங்கள் என ஒருபுறம் நிகழ, அதே கிராமத்தில் மற்றொரு ஏழை விவசாயி, அரசை நம்பி பயனில்லாத நிலையில் தனக்கான கிணறு ஒன்றை தனியாளாக வெட்டத்துவங்கி பாதியிலேயே மரணமடைகிறார். இச்சம்பவத்தை அரசோ, ஊடகங்களோ ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் துவங்கிய தாரளமயமாக்கல் எனும் பொருளா
தார மறுசீரமைப்புகள், இன்றைய விவசாயிகள் மீதும், சிறு தொழில் முனைவோர்கள் மீதும் ஏற்கனவே பல்முனைத்தாக்குதலை நடத்தும் சூழ்நிலையில் அவர்களை காக்கும் பொறுப்புடைய அரசு 'உலக பொருளாதார தேக்கம்' என்ற போலியான திரையினால் சமூக அவலங்களை மறைக்கும் பணியையே தொடர்ந்து செய்கிறது. இலவச திட்டங்களின் மூலம் உழைக்கும் வர்க்கத்தினரை சோம்பேறிகளாக்குவது, செயல்படுத்த சாத்தியமில்லாத திட்டங்களை அறிவித்து தேர்தல் நேர நற்பெயரை ஏற்படுத்திக்கொள்வது, கட்சிகள் தங்களுக்குள் ஒப்பந்தங்கள் செய்துகொண்டு இரட்டைவேடமிடுவது என நிகழ்கால அரசியலையும், செய்திகளை முந்தித் தந்து தங்களை முன்னணியில் நிறுத்திக்கொள்ள எத்தகைய அபத்தங்களையும் செய்வது, குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியுடன் தங்கள் உறவை பலப்படுத்திக் கொண்டு அவர்களுக்கு சாதகமாக செய்திகள் வெளியிட்டு அதன் மூலம் ஆதாயம் பெறுவது என இன்றைய ஊடகங்களின் தான்தோன்றித்தனமான போக்கையும் எளிமையான நகைச்சுவை கலந்த வசனங்களின் வாயிலாக சாடியுள்ளது "பீப்ளி-லைவ்"

வட இந்திய கிராமம் ஒன்றை களமாகக் கொண்டு நிகழும் கதையானாலும் பெரும்பாலான இந்திய கிராமங்களை பிரதிபலிப்பதாக இருப்பது கதைப்போக்கின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. படத்தின் வசனங்கள் உயிர் நாடியாக இருந்து படத்தை உயிர்ப்புடன் நகர்த்துகிறது. நடிப்பு , இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்து தொழில்நுட்ப பிரிவுகளும் மிகச்சிறப்பாகவும், எதார்த்தமாகவும் அமைந்துள்ளது படத்தின் முக்கிய பலமாகும். சமகால இந்தியத் திரைப்படங்களில் தனிக்குரலாக எழுந்து சமூக அவலங்களை ஓங்கி ஒலித்துள்ள பீப்ளி-லைவ், பகட்டுகள், சாயப்பூச்சுகள் இல்லாத அசலான இந்திய முகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி.
Share/Bookmark

Thursday, September 16, 2010

விடாது கருப்பு...

தனியார் தொலைக்காட்சிகளில் வெற்றிகரமாக ஓடிய "விடாது கருப்பு" தொடருக்கும் இக்கதைக்கும் ஒரே தலைப்பு என்பதைத்தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை...ஆனால் அத்தொடர் நாடகத்தில் நடித்த அல்லது மேய்ந்த (குதிரை மன்னிக்க வேண்டுகிறேன்) வெள்ளைக்குதிரைக்கும், இக்கதையின் நாயகருக்கும் ஒரு ஒற்றுமையுண்டு. இருவரை கண்டுமே ஊரில் அனைவரும் பயப்படுவதுதான். "மேய்ந்த" என்ற சொல்லைப் பொறுத்தவரையும் இருவருக்கும் பொருத்தமானதுதான். 'கருப்பு' என்றழைக்கப்படும் கருப்புசாமியும் பல நேரங்களில் தன்னிலை மறந்து மேய்ந்து கொண்டிருப்பதாக ஊரில் பலரும் குறிப்பிடுவதுண்டு.

தனது சினிமா வாழ்வின்(..?) நீண்டகால வைரியான சூப்பர் ஸ்டாரின் தத்துவ கணக்கின்படி, வாழ்வின் ஏழாம் எட்டுகளில் இருக்கும் கருப்பு, தன் வாழ்வின் சில காலங்களை சினிமாவுக்கென அர்பணித்திருந்த வரலாறு அவர் தற்போது வாழ்ந்து வரும் 'மேட்டுக்கடை' தவிர அருகிலிருக்கும் பல்லடம் டவுன் வரையிலும் பரவியிருந்தது. அந்நாட்களில் பல்லடத்திற்கு மேற்கே இருக்கும் சூலூரிலிருந்து சென்று திருமால் பெருமை, கந்தன் கருணை முதலிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற துவங்கியிருந்த நடிகர் சிவக்குமார், ஏதோவொரு தருக்கங்களின் படி நமது கருப்பிற்கு தூரத்து உறவினர்..தைப்பூச காலங்களில் சூலூர், பாப்பம்பட்டி போன்ற ஊர்களிலிருந்து பழனிக்கு செல்லும் பக்தசாரிகள் மேட்டுக்கடை, குண்டடம் மார்க்கமாக செல்வது வழக்கம், அவ்வாறான ஒரு பயணத்தில் மேற்படி நடிகரின் பக்கத்துக்கு வீட்டுக்காரருடன் பழனி வரை பக்தி மார்க்கமாக சென்று வந்ததிலிருந்து துவங்கிய அன்னாரின் சினிமா வாழ்க்கை, அதற்கு இரண்டு வருடங்களுக்கு பிறகு சினிமாவில் சேர "மெட்ராஸ்" செல்ல முடிவு செய்து திருப்பூரிலிருந்து திருட்டு ரயிலேறி, ஊத்துக்குளி ரயில்வே காவல் நிலையத்தில் இரண்டு இரவுகளை கழித்துவிட்டு மேட்டுக்கடைக்கே திரும்பி வந்ததுடன் முடிவுக்குவந்தது. கருப்புசாமி 'முழுக்கால்சட்டை' அணிந்ததும், தலைநகர் நோக்கி பிரயாணப்பட்டதும் அதுவே முதலும்,கடைசியும். அதன் பிறகு ஒரு கோணத்தில் தனது நிறத்தையும்,சாயலையும் கொண்டிருந்த ரஜினிகாந்த் திரையுலகில் புகுந்து புகழ் பெற்றதும், தனது இடத்தையே பிடித்து விட்டதாக எண்ணி விரோதம் பாராட்ட துவங்கியது தனிக்கதை.

காலமும், காவல்துறையும் இணைந்து, தான் சினிமாவுக்கு ஆற்றவிருந்த சேவைகளை தடுத்ததால் கடுப்புற்ற கருப்பு சிறிது காலம் தனது சேவைகளை தோட்டத்திலிருந்த கால்நடைகளுக்கு ஆற்றிக்கொண்டிருந்தார். உச்சியிலிருந்து சூரியன் காய்ந்துகொண்டிருந்த ஒரு மதிய வேளையில் மாடுகளுக்கு "அன்னாங்கால்" போட்டு மேயவிட்டுவிட்டு புளிய மரத்தடியில் படுத்திருந்த கருப்பு, மேட்டுக்கடையின் சமூக மாற்றங்குறித்து சிந்தித்து ஒரு முடிவினை எடுத்ததன் வாயிலாக அரசியலினுள் புகுந்தார். ஐந்தறிவுள்ள ஜீவன்களை அன்னங்காலிட்டு திறமையாய் மேய்த்த கருப்பிற்கு, ஆறறிவுடைய மனிதர்களை மேய்ப்பது அவ்வளவு எளிதாய் பிடிபடவில்லை, அரசியலிற்கு வந்த ஒரே வருடத்தில் கருப்பின் வீட்டுக்கொடியில் நான்கைந்து கட்சிகளின் கரைவேட்டிகள் காய்ந்து கிழிந்தது. மேடைகளில் பேசுபவர்களுக்கு சோடா உடைத்து தருமளவிற்கு வளர்வதற்குள் அந்த கட்சியிலிருந்து வெளியேறிவிடும் கருப்புவிற்கு கட்சி மேடைகளில் முழங்குவதற்கான வாய்ப்பு கடைசி வரை கிடைக்காமலே அரசியலை விட்டு அடுத்த ஒரு வருடத்தில் வெளியேற வேண்டியிருந்தது.

முடிவிலா மாயங்களை நிகழ்த்தவல்ல 'விதி' சிலசமயங்களில் ஒரே நிகழ்விற்கு இரு மாறுபட்ட விளைவுகளை ஏற்படுத்தி அறிவியல் விதிகளுக்கும் தனக்குமுள்ள வேறுபாட்டினை உணர்த்திக் கொண்டேயிருக்கும். கருப்புவின் வாழ்விலும் தனது மாயத்தை நிகழ்த்திய விதி, தமிழகத்தின் இருபெரும் தொழில் துறைகளான சினிமாவிற்கும், அரசியலிற்கும் கிடைக்கவிருந்த ஒரு மாணிக்கத்தை தடுத்து தமிழக கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் ஒன்றைக் குறைத்தது, அதே விதி அறுநூற்றி சொச்சம் வாக்காளர்களையுடைய மேட்டுக்கடையின் அந்தரங்களிலும் தனது மாயங்களை நிகழ்த்தியது. சொற்ப காலமேயாயினும் சினிமாவிலும், அரசியலிலும் தான் பெற்ற ஞானங்களை 'மேட்டுக்கடை' வாழ் மக்களின் அன்றாட வாழ்க்கையினுள் திணிக்க ஆரம்பித்த 'கருப்பு' சில வருடங்களிலேயே அனைவரும் தெறித்து ஓடினாலும் விடாமல் பயமுறுத்தும் "விடாது கருப்பு"வாக மாறினார்.

பங்காளித்தகராறு, வாய்க்கா,வரப்புச்சண்டை மற்றும் காரணங்களின்றியும், அற்ப காரணங்களுக்காகவும் தோன்றும் பிரச்சனைகளை தீர்த்து வைக்க கருப்பு மேற்கொள்ளும் வழிமுறைகள், தகராறுகளை காட்டிலும் சுவாரசியமாக இருக்கும். மேற்படி தகராறுகளை, அவை எங்கு துவங்கியிருந்தாலும் இறுதியாக அது முடிவது மேடுக்கடையை அடுத்த காளியா பாளையத்திலுள்ள "மூலை வெட்டான்" கடையில்தான். (அந்நாட்களில், குடிமக்களின் தாகம் தீர்க்க அறிமுகமாகியிருந்த பாக்கெட் சாராயத்தை விற்க, போட்டியில்லாமல் ஏலமெடுத்த ராசு, சாராயப் பாக்கெட்டின் மூலை நுனியை வெட்டித்தரும் லாவகத்தினால் 'மூலை வெட்டன் ' என அடையாளப்படுத்தபட்டார்) தகராறுகளில் சம்பந்தப்பட்ட இரு தரப்பாரும் தங்களின் சிரம்,கரம் முதலியவற்றிற்கு சேதமில்லாமல் தகராறுகளை தீர்த்துக்கொண்டு மன சாந்தியுடன் "தாக சாந்தி"யும் பெற்றுச்செல்வது வழக்கம். மேற்படி பஞ்சாயத்துக்களில் வாதி,பிரதிவாதிகள் ஏகத்துக்கும் எகிறும்போது நிதானித்து பைசல் பேசும் கருப்பு, தகராறுகள் முடிந்து அனைவரும் சமாதானத்தையும், சாராயத்தையும் நாடிய சில நிமிடங்களிலேயே தனது ரூபங்களை வெளிக்காட்டத் துவங்குவார். அத்தருணங்களில் வெளிப்படும் கருப்புவின் ரகளையான ரூபங்களை கண்ணுற்ற எவரும் சில வருடங்களாவது எவரிடமும் வம்பு வளர்க்க முயலார்களாவர். இறுதியில் இரவு 'மறுதண்ணி'க்கென சில சாராயப் பாக்கெட்டுகளையும், மாமிச பட்சணங்களையும் பார்சல் செய்து கிளம்புவதுடன் அன்றைய தகராறுகளையும் பைசல் செய்வார்.

மூலை வெட்டாங்கடையில் துவங்கிய கருப்புவின் சமூகப்பணி அடுத்தடுத்த அரசாங்களின் போதைக் கொள்கைகளுக்கேற்ப பரிணாம வளர்ச்சியடைந்து இன்றைய "டாஸ்மாக்"வரையிலும் தொடர்கிறது. காளியா பாளையத்தில் 'மூலை வெட்டாங்கடை' தள்ளாடாமல் முழுவீச்சில் ஓடிக்கொண்டிருந்த காலத்தில் துவக்கப்பள்ளிக்கு செல்லத் துவங்கியிருந்த சக்திவேல், தனது மாமாவான 'மூலைவெட்டு ராசு'வைக் காண வரும்போதெல்லாம் அங்கு நீதி பரிபாலித்துக் கொண்டிருக்கும் கருப்புவின் பிரதாபங்களைக் கண்டு சற்று மிரள்வதுண்டு. இன்று திருப்பூரிலும், கேரளாவிலும் கந்துக்கடை லைன் போடுமளவு வளர்ந்துவிட்ட பின்னரும் காளியா பாளையம் அரசு மது அங்காடியின் அருகில் ஏதோவொரு கடை பெஞ்சில் அமர்ந்திருக்கும் கருப்புவை காண நேரும்போதும் அதே மிரட்சியின் உந்துதலால் கண்டும்,காணமல் நழுவுவதுண்டு. 'எல்லோருக்கும் ஒருநாள் விடியும்' என்பதான நன்னம்பிக்கை மொழி விதியின் மாய விளையாட்டால் வேறுவிதமாக விடிவதுமுண்டு. அத்தகைய ஒரு விடியல் சக்திவேலுக்கு அவன் திருமணம் முடிந்த பத்தாம் நாள் வந்தது.

பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளை எழுதி முடித்த கையோடு விடுமுறைக்கு வந்த தனது அத்தைமகள் கனகாவை கடிமணம் புரிந்திருந்த சக்திவேல், பத்து நாட்களுக்கு பிறகு யூரியா வாங்க காளியா பாளயத்திலுள்ள சொசைட்டிக்கு வர, சொசைட்டி திண்ணையில் தன் சகாக்களுடனிருந்த 'கருப்பு'வினால் அன்றைய விடியல் சக்திவேலுக்கு இரண்டாம் முறையாக கீழ்க்கண்டவாறு விடிந்தது..

அட சத்தி, என்ன புது மாப்ளே.. இந்நேரத்துக்கு சொசைட்டி பக்கம்..?

பத்து நாளாயிருச்சுங்க மாமா..இன்னு புது மாப்ளையா இருக்க முடியுமா..யூரியா வாங்கலானு வந்தங்க..!

அதுஞ் சரித்தே..வெள்ளாமைய பாத்தாதானே வெளுத்த துணி கட்டமுடியும்..அது செரி இப்டி சொல்லாம,கொள்ளாம கலியாணம் பண்ணிட்டேயே மாப்ளே, உங்க மாமா ராசு கலியாணத்துக்கு ஒரு மாசம் கூடவே வேலை பாத்தமப்பா..நீ என்னடான்னா ஒரு வா விருந்துகூட போடாம உட்டுட்டியே,,அத்த புள்ளைய கட்டறதுக்கு இவ்ளோ அவசரமா?

இல்லைங்க மாமா..நான் பத்தாவதோட படிக்கறத உட்டுட்டேன், புள்ள காலேஜ் கிலேஜ் போய் படிச்சா அப்பறம் புள்ளைய கட்டி கொடுக்கலேன்ன என்ன பண்றதுன்னு..கூட இருக்கறவனுக உசுப்பேத்தி உட்டுட்டாங்க..செரி உங்களுக்கு விருந்துதான சீக்கிரமா போட்றலாம் உடுங்க.!

சம்சாரம் படிச்சிருந்தா உனக்கும் நல்லதுதான, கந்துக்கணக்கு வழக்கையெல்லா பாத்துக்குமல்ல..ஆனது ஆயிப்போச்சு, மணி நாலாயிடுச்சு..வா இன்னைக்கே ஒரு பார்ட்டிய போட்ருவோம்

இல்லங்க மாமா..இப்போ போனாத்தா..பொழுது இறங்கறதுக்குள்ள பாதி காட்டுக்காவது யூரியா வைக்கமுடியுங்க..இன்னொருணா பார்ட்டிய வச்சுக்கலாங்க மாமா..

அட என்ன மாப்ள..தங்கமாட்ட புள்ளைய கொடுத்துருக்கோம், நீ என்னடானா யூரியா வைக்கோனு, தண்ணி கட்டோனுன்னு சொல்லிடிருக்க..வாப்பா அரைமணி நேரத்தில போய்டலாம்.. என்றபடி தன் சகாக்களுடன், சக்திவேலையும் விடாப்பிடியாக அருகிலிருந்த அரசு மதுபானக் அங்காடியினுள் அழைத்து சென்ற கருப்பு அனைவருக்கும் வேண்டியதை ஆர்டர் செய்துவிட்டு வசதியான ஒரு டேபிளில் அமர்ந்து, சக்தியையும் அருகிலேயே அமர்த்திக்கொண்டார். மிதமான முதலிரண்டு சுற்றுக்களில் சக்தியின் சிறு வயது சமாச்சாரங்களையும்,சமார்த்தியத்தையும் தன் சகாக்களிடம் கூறி பெருமைப்படுத்தி, யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொண்டது புத்திசாலித்தனமான காரியமென்றும் பாராட்டிக் கொண்டிருந்தார். சுற்று அதிகமாக,அதிகமாக கருப்புவின் தொனியும் மாறத்துவங்கியது..

மாப்ளே..நீயும் லைட்டா சாப்டு மாப்பள..

இந்நேரத்துக்கு வேணாங்க மாமா..கனகு சத்தம்போடும்..!

அட இந்த கந்துக்காரனுகளே இப்படிதானப்பா..எல்லாத்துக்கும் கணக்கு பாத்துட்டு..குடியப்பா காசு நாந்தாறேன்..

அதுக்கில்லீங்க மாமா..பொழுதோட கனக கூட்டீடு அத்தையூருக்கு போகனும் அதான்..நீங்க சாப்பிடுங்க

அது சேரி..இப்போ எல்லாரும் ராசியாய்டீங்க..மாமியாரூட்டுக்கு போலாம்..ஆனாலும் நீ பண்ணினது தப்புதானப்பா..!

என்னங்க மாமா..?

இந்த காலத்துல புள்ளைக படிக்கறது முக்கியமப்பா..பன்னண்டாவது படிக்கற புள்ளைய கட்டிகிட்டே அதுக்கு குடும்பம்னா என்ன தெரியும்..அட அதவுடு மாப்ளே..நீ பாட்டுக்கு ஓரம்பரைக்கு வந்த புள்ளைய, கூட்டீடு போய் தாலிய கட்டி கூட்டியாந்துட்டே, உங்கூட்ல இன்னொரு வயசுப்பையன் உந்தம்பி இருக்கான்..நாளைக்கு வயசுப்புள்ளைகள யாரு உங்கூட்டுக்கு அனுப்புவாங்க..கேரளா போய் லைன் போட்டா மட்டும் பத்தாதப்பா..கொஞ்சம் ரோசனை வேணுமப்பா.. எனத்துவங்கிய கருப்புவின் வாதம், பிரதிவாதியின் இடையூறு இல்லாமலே பல சுற்றுக்களையும் தாண்டி தொடர்ந்தது. வீட்ல கூட இப்படி கேள்வி கேக்கலையே என எண்ணிய சத்தி உடனடியாக எப்படியாவது கருப்புவிடமிருந்து தப்பிவிட யோசனை செய்து..

மாமா, மணி அஞ்சரை ஆயிடுச்சுங்க..போலாங்க..!

புது மாப்ளை உனக்கு பல சோலி இருக்குமாப்பா..நீ கெளம்பு, எங்களுக்கென்ன இந்நேரத்துக்கு போய் என்னத்த கட்ட போறோம்..சரி போறதுதான்போற கணக்க குடுத்துட்டு போய்டப்பா.. நாம சாவகாசமா இன்னொருநா பேசிக்கலாம், மாப்ள அப்படியே இன்னொரு 'கால் படி'க்கு சேத்தி கொடுத்துட்டு போய்டு..பொழுதோடைக்கி வேணும்.!

சரிங்க மாமா.. என்று பில்லை கொடுத்துவிட்டு வெளியேறிய சக்திவேல் மனதிற்குள் நினைத்தான்.." இங்க குடிச்சதே பாதி யூரியா மூட்டைய முழுங்கிடுச்சு..இதுல பார்சல் வேறயா..இன்னைக்கு கருப்பு மாமன்பொழுது நம்ம மேல விடுஞ்சிடுச்சு..சரி இந்த மட்லும் விட்டாரே..போதுஞ்சாமி..

சாமி, பூதமெல்லாம் ஒண்ணுமில்ல என அதுநாள் வரை நாத்திகம் பேசிக்கொண்டிருந்த சக்திவேலுக்கு ஒன்று மட்டும் தெளிவாய் புரிந்தது..

காத்து "கருப்பு"களுக்கு அஞ்சாமல் காலந்தள்ளுவதென்பது கொஞ்சம் கஷ்டம்தான்...
Share/Bookmark

Thursday, September 9, 2010

ஆகு பெயர்- (இறுதிப்பாகம்)

"கற்றலினால் ஆன பயன், கற்றல் வழி வாழ்தல்" இது எழுதுபவர்களுக்கும் பொருந்தக்கூடிய ஒன்று. எழுத்தாளர்களுக்கு தங்களின் எழுத்து வழி வாழ்தல் சாத்தியபடாவிடினும் வாழ்க்கையையோ அல்லது வாழ்வின் ஒரு பகுதியையோ எழுதுவது என்பது சாத்தியப்படும் ஒன்றாகும், அதிலும் ஆரம்ப நிலை எழுத்தாளர்களுக்கு தங்களது வாழ்வின் ஒரு பகுதியையோ அல்லது தங்கள் அறிந்த அல்லது பழகும் நபர்களின் வாழ்க்கையையோ எழுதுவது சிறந்த பயிற்சியாக இருக்கும் என்பது எனது புரிதல். சம்பந்தப்பட்டவர்களின் மனம் நோகாத அளவு உண்மை சம்பவங்களுடன் சரியான விகிதத்தில் கற்பனையையும் கலந்து எழுதும்போது படைப்பு வாழ்க்கையைவிட சுவாரசியமாக அமைகிறது. இதில் சரியான விகிதம் என்பது அவரவர் வித்தையைப் பொறுத்தது, ஆயினும் சித்திரத்தைப் போல எழுத்தும் நாள்பட, நாள்பட பிடிபடும். நிற்க...

இத்தளத்தில் தொடர் கதையாக எழுதப்பட்ட" ஆகுபெயர் " பத்து பாகங்கள் முடிந்த நிலையில் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்னும் அறிவிப்பிற்கான முன் அனுமதியே முதல் பத்தி. இத்தளத்தில் எழுதும் உரிமையை ஏகபோகமாக நான் ஒருவனே பெற்றிருக்கும்போதும் இணையம், திரட்டிகள் என பொது வெளியில் வாசிக்கப்படும் போது எழுதப்பட்ட கதைகளில், அது எவ்வளவுதான் உண்மைக்கு புறம்பில்லாத வகையில் இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் அதை படிக்கும் போது சிறிதளவேனும் அவர்களின் மனம் நோகுமெனில் எழுதுவதை நிறுத்துவது என்பது தவிர்க்கவியலாததாக ஆகிறது.

சிறிய அளவே ஆயினும், பத்துபாகங்கள் கதையை தொடர்ந்து படித்த வாசகர்களுக்கு கதையின் போக்கு குறித்து ஓரளவு யூகிக்கும் தருணம் கதையில் வந்துவிட்டாலும், இன்னும் நான்கைந்து பாகங்களில் முடிவடையும் கதைக்கு ஓரளவேனும் சரியான முடிவை சிறு பத்தியிலாவது எழுதுவதுதான் சரி என்ற எண்ணத்தில் கீழ்க்கண்ட பகுதி பதிவிடப்படுகிறது. மீள்பதிவான இது ஓரளவு ஆகுபெயர் கதையை சரியான விதத்தில் முடிவுறச்செய்யும் என நம்புகிறேன். ஆயினும் "ஆகுபெயர் " என்ற தலைப்பை நியாயப்படுத்த இயலாமைக்கு வருந்துகிறேன்...கதை நடந்த காலத்திற்கு சில வருடங்கள் கழிந்து கதையின் நாயகன் ரகுவின் வாழ்க்கையில் ஒரு நாளின் நினைவுகள் அவனது பார்வையிலேயே இனி..


கிட்டத்தட்ட ஏழெட்டு மாதங்களுக்கு மேலாகிறது இதுபோல நள்ளிரவில் குறுந்தகவல் வந்து.

இரவு மணி பதினொன்றை தாண்டியிருக்கும், உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன், மனைவிக்கு முன்னரே படுக்கையில் இடம்பிடித்திருந்த கைப்பேசி, சிறு சத்தத்துடன் " 1 message received " என ஒளிர்ந்தது. விடிந்தால் பிறந்தநாள் எனவே எவரிடமாவதிருந்து வாழ்த்து வந்திருக்கும். வயது அதிகமாக, அதிகமாக பிறந்தநாளுக்கான வாழ்த்துக்களை எதிர்கொள்ளும் போது நினைவின் ஆழத்தில் சிறு அச்சம் நீர்க் குமிழிகளென தோன்றி கண நேரத்தில் மறைந்து விடுகின்றன. அத்தகையதொரு நினைவுக்குமிழி திடீரென தோன்றி நினைவுகளை பின்னோக்கி கொண்டு சென்றது.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் கைப்பேசி பயன்படுத்த துவங்கிய போது, புத்தாண்டுக்கு முந்தய இரவிலும், என் பிறந்தநாளின் முந்தய இரவிலும் ஒன்றோ இரண்டோ வாழ்த்து தகவல்கள் வரும், அதிலும் பிறந்த நாளுக்கென வரும் வாழ்த்துக்கள் பெரும்பாலும் சுய அறிவிப்பினால் பெறப்பட்ட வாழ்த்துகளாகவே இருக்கும். அதன் பிறகான குறுந்தகவல் யுகமாகிவிட்ட சமீப ஆண்டுகளில் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குவதை போன்றே குறுந்தகவலுக்கும் நேரம் ஒதுக்குவது முக்கியமாகிவிட்டது. நண்பர்களிடமிருந்தான இலவச அறிவுரைகள், மொக்கைகள் மற்றும் நமக்கு சம்பந்தமே இல்லாத கடன்காரர்களிடமிருந்து வரும் கடனாளியாக்குவதற்கான ஆலோசனைகள் என பலவகை குறுந்தகவல்களை எதிர்கொள்ள/சகித்துக்கொள்ள பழகியிருந்த ஒரு காலத்தில்தான் காதலையும் சந்திக்க நேர்ந்தது.

பெண்களோ,ஆண்களோ தம் எதிர் பாலினருடனான உறவில் நட்பு என்ற புரியாத சமன்பாட்டிற்கு விடை தேட எவ்வளவுதான் முயன்றாலும், அச்சமன்பாட்டை கூட்டி,கழித்து, பெருக்கி காதல் என்ற விடையை கொண்டுவருவதில் 'குறுந்தகவல்கள்' முக்கிய பங்காற்றுகின்றன. இதை தெரிந்தோ, தெரியாமலோ அறியாமல் விட்டிருந்த நான் உன்னையும், நீ என்னையும் நமது குறுந்தகவல்களின் மூலம் பின்தொடர துவங்கிய பிறகு வேறு எந்த விசயங்களும் பெறாத முக்கியத்துவத்தை குறுந்தகவல்கள் பெற்றது. அதிலும் இரண்டாண்டுகளுக்கு முன் இதே போன்றதொரு நள்ளிரவில் நீ அனுப்பிய பிறந்தநாள் வாழ்த்து வெறும் வாழ்த்தாக மட்டுமல்லாமல் நட்பு வெள்ளத்தை கடந்து காதல் கரையை நாம் அடைந்ததற்கான பாலமாகவும் இருந்தது.

நமது காதல் நாட்களின் முதல் நாளான அந்த பிறந்தநாளில் உனது கட்டளை மற்றும் அறிவுறுத்தலின் படி நான் தனியாகவும், நீ தனியாக உன் தோழியுடனும் "அய்யன் கோவிலு"க்கு சென்றிருந்தோம். இருவருமே உள்ளூர் என்பதால் இதற்கு முன்பு பல முறை பொது இடங்களில் இருவரும் சந்தித்திருந்த போதும் இதுவரை உணராத ஒரு அச்சத்தையும், படபடப்பையும் இருவருமே அன்று உணர்ந்தோம். எனது பெயருடன், உனது தந்தையின் பெயருக்கும் சேர்த்து அர்ச்சனை செய்துவிட்டு "இன்னைக்கு தான் எங்க அப்பாவுக்கும் பிறந்தநாள்" என்று நீ கூறியதற்கு " அப்போ ரெண்டு பேருக்கும் ஒத்துபோயிடும்னு நினைக்கிறேன்" என்று நான் கூறிய போது, சிறு அச்சம் கலந்த சிரிப்பை உதிர்த்துவிட்டு விடைபெற்றாய்.

அதன் பிறகான ஓராண்டு கால காதல் நாட்களில் எனது ஒவ்வொரு சூரிய உதயத்தையும் உனது குறுந்தகவல்களே கொண்டுவந்தது. எனது தினசரி வாழ்வில் தொழில் தவிர்த்த ஏனைய பெரும்பாலான நிகழ்வுகள் உன் தகவல்களின் அடிப்படையிலேயே நிகழ்ந்தது. அதிலும் பிறர் இருக்கும் பொது இடங்களில் பேசுவதற்கு அதிக வாய்ப்பில்லாத தருணங்களில் குறுந்தகவல்களின் வாயிலாக நீ அனுப்பும் செய்திகளும், சிறு சிறு கட்டளைகளும் எனது வாழ்வில் பல மென் வன்முறைகளை நிகழ்த்தியது. அடிக்கடி சந்திதுக்கொள்ளவும், பேசவும் முடியாத நமக்கு குறுந்தகவல்களே அன்பை உறுதியாய் பிணைக்கும் கயிறாக இருந்தது.

கல்லூரி படிப்பின் இறுதியாண்டில் நீ இருந்த போது , உன் தந்தை நமது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் ஒரு குறுந்தகவல் வழியாகத்தான் என்னிடம் சொன்னாய், சில நாட்களுக்கு பிறகு, திடீரென ஒருநாள் "வீட்டில் பிரச்சனை, என் தம்பி உங்களுடன் பேசுவான். இனி குறுந்தகவல் எதுவும் அனுப்ப வேண்டாம்" என்று ஒரு குரூர தகவலையும் அனுப்பினாய். உன் தம்பியின் வழியாகவும், என் பெற்றோர்கள் வழியாகவும் பலமுறை உன் வீட்டில் பேசிய பின்பும், பொருத்தமில்லாத ஏதேதோ காரணங்களை காட்டி மறுத்து விட்ட உன் தந்தையையும், குடும்பத்தையும் தவிர்த்து விட்டு நாம் இணைவதற்கான வேறு எந்த வழியையும் தேர்ந்தெடுக்க விரும்பாத நாம், காதலில் இருந்து விலகிவிடுவதென முடிவு செய்தததும் இதே குறுந்தகவல்களின் வழியாகத்தான்.

நமக்குள் எல்லாவித தகவல் பரிமாற்றங்களும் நின்று போயிருந்த காலகட்டத்தில் சென்ற வருட பிறந்தநாள் வந்து போனது, ஏதோவொரு புரியாத உணர்வினால் உந்தப்பட்டு தனியாக "அய்யன் கோவிலு"க்கு சென்று கோவிலுக்குள் செல்லாமல் திரும்பி வந்தேன். பிறகு மூன்று மாதங்கள் கழித்து உன் தந்தையிடம், நம்மை குறித்து பேசாததற்கு மன்னிப்பு கேட்டும் " sorry pa , i was hopeless... am sorry " என்று ஒரு குறுந்தகவல் அனுப்பியிருந்தாய்.

முன்பெல்லாம் நான் எதாவது தவறு செய்துவிட்டு உன்னிடம் sorry கேட்டால், நமக்குள் எதற்கு மன்னிப்பு என்று உனக்கு கோபம் வந்துவிடும். உனது கடைசி குறுந்தகவலுக்கு பதில் அனுப்ப முடிவுசெய்து, நீ அடிக்கடி குறிப்பிடும் ஒரு வரியை டைப் செய்து அனுப்பாமல் DRAFT ல் சேமித்து வைத்துவிட்டேன். உனது எண், மற்றும் சேமித்து வைக்கப்பட்ட அனைத்து குறுந்தகவல்களையும் உன் திருமணத்திற்கு பிறகு அழித்து விட்டாலும் உனது கடைசி குறுந்தகவலையும், நான் அனுப்பாத அந்த பதிலையும் மட்டும் சேமித்து வைத்துள்ளதை நினைத்து கொண்டேன். கடந்த கால நினைவுகளின் அழுத்தத்தில் தோன்றிய நினைவுக்குமிழிகள் சட்டென மறைய, சகஜ நிலைக்கு திரும்பி கைப்பேசியை எடுத்து குறுந்தகவலை திறந்தேன்.

" MANYMORE HAPPY RETURNS OF THE DAY" hw u? pls forgot and forgiv me for the past one year...sorry. if u had time pls go 'ayyan kovil' என்று இருந்தது. அடுத்தடுத்து நண்பர்களிடமிருந்து வாழ்த்துகள் வந்து கொண்டேயிருந்தாலும் எந்த வாழ்த்தையும் பெற்றுக்கொள்ள இயலாத ஒரு மனநிலையை இந்த ஒரு குறுந்தகவல் ஏற்படுத்திவிட, முன்பொருமுறை உனக்கு அனுப்பாமல் விட்ட குறுந்தகவலை மீண்டுமொருமுறை படித்து பார்த்துவிட்டு கைப்பேசியை அணைத்தேன்..அது "love means never say you are sorry".
Share/Bookmark

Monday, September 6, 2010

வழித்துணைஇலக்கில்லாமல் தனிமையில்
துவங்கும் பயணங்கள்
இலக்கில்லாமல் நீள்கின்றன...

முடிவிலா பாதைகளில்
முன்னோக்கிச் செல்லுகின்ற
தருணமொன்றில்,
மனம் மட்டும் பின்னோக்கி
நினைவுகளினூடே நகர,
துணைக்கு பின்னோக்கி
நகரத் துவங்கியது
ஒற்றைப் புளியமரம்.

முன்னோக்கிச் செல்லும் பாதை
பின்னோக்கி செல்வதாய்படும் மன(ர)ம்
முன்னோக்கியும்
பின்னோக்கியும்
முடிவிலா பயணங்கள்
Share/Bookmark

Tuesday, August 31, 2010

சொற்கள் இடறும் வனம்


உயிர் வறண்டு,
சொற்கள் புரையேறும்
நள்ளிரவொன்றில் துவங்கினேன்
ஒரு கவிதையை..

மேகங்களை இழந்த வானமாய்
நினைவுகளை இழந்து
விக்கித் தவித்தேன், ஒரு
பெரு மழையை நோக்கி..

நினைவுகளாய் திரள்வதும்,
பெருமழையாய் பொழிவதும்
காலத்தின் வழி இருக்க,
பனிக்குடமுடைக்கும்
குளிர்காற்றை வேண்டி
தாகத்துடன் தஞ்சமடைந்தேன்
சொற்கள் இடறும் வனமொன்றிடம்.
Share/Bookmark

Friday, August 20, 2010

கடவுளர் உற்பத்திக்கூடம்
முதன்முதலில் இங்கு வந்தது
தாத்தாவின் கைபிடித்து..
சிறு தெய்வங்களை புறந்தள்ளி
ஆரியக்கடவுளர் முன்னின்று
ஓங்கி உலகளக்க,
திருஷ்டியிலிருந்து காக்கும்
பூத கணங்களில் துவங்கி,
முச்செல்வங்களருளும்
கடவுளர்கள் அனைவரும்
மத பேதங்களின்றி
உருவாவது இங்குதான்..

அப்பாவின் காலத்தில்
ரட்சிக்கும் பணிக்கென
திராவிடக்கடவுள்களே
அதிகம் படைக்கப்பட்டனர்

என் காலத்திலோ
கடவுளர்களை பின்தள்ளி
மக்களை ரட்சித்தனர்,
சில அவதாரக் கடவுளர்கள்..

ஆரியமும், திராவிடமும்
ஒருபுறமிருந்து உலகை ரட்சிக்க,
தலைமுறைகள் பல கண்ட
" கந்தன் பிரேம் ஒர்க்ஸ்" ல்
எல்லாக் காலங்களிலும்
தவறாமல் படைக்கப்படுகிறது
'என்னைப் பார் யோகம் வரும் '
வாசகம் தாங்கிய கழுதையின் படம்.
Share/Bookmark

Monday, August 9, 2010

பால்யத்தின் வண்ணம்
பால்ய வயதுகளில் தொலைத்த
சில வண்ணத்துப்பூச்சிகளைத் தேடி
நகராத மலையொன்றில்,
நகர்ந்திறங்கும் மாலையில்
அலைந்து திரிந்தேன்.

மாலை நேரத்து
இறங்கு வெயிலோடு சில
மழைத்துளிகளும் சேர்ந்திறங்கின.

வெயிலை சுவாசித்து
களைத்திருந்த நாசிகளுக்குள்
செம்புழுதியின் வாசம் நிரம்பியது.

பால்யத்தின் வாசத்தை
உணர்த்திய மழைத்துளிகள்
தன் வண்ணங்களை
வில்களாக்கி காற்றில் நிறுத்தியது

காற்றில் பறக்கும்
சிறு,சிறு வானவில்களைத்
தேடி அலைந்த என் மீது
பறக்காத பெரும்
வண்ணத்துப்பூச்சியொன்று,
தன் வண்ணங்களை
மழையாய் பொழிந்தது,
வண்ணங்களில் நனைந்து
நெகிழ்ந்திருந்த என்னருகில்
பறந்து வந்தமர்ந்தது
வண்ணத்துப்பூச்சியொன்று...
அது,
பால்யத்தில் நான் பிடித்து
மீண்டும் பறக்கவிட்ட
வண்ணத்துப்பூச்சியொன்றின்
சாயலில் இருந்தது.
Share/Bookmark

Saturday, August 7, 2010

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன்?

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
திருநாவுக்கரசு பழனிச்சாமி

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
திருநாவுக்கரசு எனது பெயர். பழனிச்சாமி அப்பாவின் பெயர்.

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
வலைப்பதிவு உலகிற்குள் வந்தது வாசிப்புத் தளத்தை விரிவுபடுத்தும் நோக்குடன்தான். அளவிட இயலா தமிழ் வலையுலகில் நானும் ஒரு சிறு அணுவாய் இருப்பது மகிழ்ச்சிதான். திரு தி,ஜ.ர அவர்கள் எழுதத் தயங்குபவர்களுக்கு ஊக்கமளித்து ஒருமுறை இவ்வாறு கூறினார்," எழுதுவது நீந்துகிற மாதிரி, தண்ணீர் வெதவெதக்கிறதா, சில்லிட்டிருக்கிறதா என்று விரலை விட்டு ஆழம் பார்த்துக் கொண்டிருந்தால், பார்த்து கொண்டேயிருக்க வேண்டியதுதான் குதி, குதித்துவிடு "

4 ) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
திரட்டிகளில் இணைத்ததைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை. எனது தற்போதைய அறிவின் தரத்திற்கு எழுதிக்கொண்டிருக்கிறேன். தரம் என்பது எதேச்சையான விபத்தாக நிகழாது என்பதில் எப்போதும் உறுதியாக இருப்பேன். நாளடைவில் படைப்புகள் தரமாகும் போது பிரபலமாவதும் நடக்கும்.,(போதுமான உழைப்பை மாற்றாகப் பெறாமல் பிரபல்யமோ, பாராட்டுக்களோ கிடைக்காது)

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
உண்டு..எழுதுபவர்களின் சொந்த அனுபவங்கள் கலக்காமல் எந்த படைப்பும் உருவாவதில்லை, அதிலும் புதிதாக எழுதுபவர்கள் தங்களின் சொந்த அனுபவங்களை கருவாகக் கொண்டு எழுதும்போது சற்று சுலபமாக இருக்கும் என்பது எனது கருத்து. சொந்த அனுபவங்களுடன், எந்த அளவு கற்பனையை கலந்து சுவாரசியமாய் எழுதுவது என்பது வித்தை பிடிபட,பிடிபட சுலபமாகும்.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
கண்டிப்பாய் பொழுது போக்க அல்ல. கிடைக்கும் ஓய்வு நேரத்தை அதிகமாக படிப்பதற்கே உபயோகப்படுத்துகிறேன். வாசிப்பின் நீட்சியாய் சிறிது எழுதுகிறேன். பதிவின் மூலம் சம்பாதிக்கும் எண்ணம் இல்லை.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
தமிழில் மட்டும் ஒன்றே ஒன்று. திருச்சொல்

8)மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
சில சமயங்களில் நன்றாக எழுதும் அனைவர் மீதும் பொறாமை ஏற்படும். குறிப்பிடும்படியான கோபம் இதுவரை வரவில்லை.( எழுத்தாளர்களின் முக்கியமான குணக்கேடுகள் புழுங்கலும், சுயநலமும் போலும் - லா.ச. ரா) எழுத்தாளர்களுக்கும், பதிவர்களுக்கும் வேற்றுமை இல்லை என்றே எண்ணுகிறேன்.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாரட்டைப் பற்றி..
முதல் பாராட்டு, பதிவுலகிற்கு வருவதற்கு முன்னரேயிருந்த நண்பர்கள் முதல் பதிவிற்கு பின்னூட்டங்களிட்டு வாழ்த்தினர். குறிப்பாய் நான் எழுதுவதை பதிவேற்றும் முன்னரே படித்து விமர்சித்தும், பாராட்டியும் ஊக்குவித்து வரும் நண்பர் "சக்திவேலு"க்கு அன்பும், நன்றியும்.

10)கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
எதையும் எளிதில் விட்டுவிடாமல் பிடிவாதமாய் செய்து பார்க்கும் குணமுடைய இளைஞன். சமூக அளவுகோலின் படியான வெற்றிக்கும், சுயத்தின் வெற்றிக்கும் இடையே உள்ள இடைவெளியின் தூரத்தைக் குறைக்க முயல்கிறேன்.

இத் தொடர்பதிவிற்கு அழைத்த நண்பர் 'அன்பேசிவம்' முரளிக்கு அன்பும்,நன்றியும்...
இப்பதிவை தொடர அழைப்பது சக்திவேல் " பாற்கடல்"
Share/Bookmark

Friday, July 30, 2010

நீ, நினைவுகள், கண்ணீர்..


உன் பெயரை
தலைப்பாகக் கொண்டு
எழுதத் துவங்கிய கவிதை
தலைப்புடன் நின்றுவிட்டது,
அதற்கு மேல் அதை
ஒன்றும் செய்ய முடியவில்லை..
பனியுறைந்த சன்னல் கண்ணாடியில்
தெரிவதெல்லாம் பனியில் மங்கிய
பிம்பங்களாக தெரிவதைப் போல..


என்னவென்று புரியாமல்
எதற்கென்று தெரியாமல்
கண்ணில் பட்டதையெல்லாம்

வாரிச்சுருட்டி சுமந்து திரியும்

பைத்தியக்காரனைப் போல்,

அலைந்து திரிகிறேன்

உன் நினைவுகளைச் சுமந்து..நொறுங்கிய இதயத்தின்
குருதிச் சிதறல்களில்
சிவந்து, உலர்கிறது
கண்ணாடித் துளிகளென
சிதறிய கண்ணீர்..
Share/Bookmark

Wednesday, July 28, 2010

நீ, முத்தம், மழை..வறண்டிருக்கும்
நதியொன்றின் கரையில்
நீருக்கலையும் என் வேர்களுக்கு
ஊழிப்பெருக்காய் நீ..


எனது முத்தங்களின்
மோகக்குளிரை
தாங்காமல் நீ
என்னிடமே
சரணடையும் போது,
தரத் துவங்குகிறேன்

கத,கதப்பான முத்தங்களை...


பெருங்குரலெடுத்து அலறும்
என் காமம்
காற்றின் காதுகளை
தீண்டும் போதெல்லாம்,
வெடித்துப் பொழிகிறதுன் மேகம்.


Share/Bookmark

Monday, July 26, 2010

இழப்பு


உன்னை காதலித்து
நான் தோற்றதில்,
உனக்கு ஈடு செய்யவியலா
இழப்பொன்றும் நேரவில்லை
என்னை இழந்ததை தவிர,
எனக்கும் இழப்பொன்றும்
பெரிதில்லை
என்னை இழந்ததை தவிர
Share/Bookmark

Friday, July 23, 2010

ஆகு பெயர் -( பாகம்-10)

வாயு வேக, மனோ வேகங்கள் பயணியின் வாகனத்திற்கு பிடிபடாத சில சமயங்களில், பாதையின் தூரம் என்பது பயணியின் மனதால் கடக்கப்பட வேண்டியதாகி விடுகிறது. பொதுவாகவே சராசரி வேகத்திற்கு சற்று அதிகமாகவே செல்லும் நான், ஸ்வாதி கிளம்பிச் சென்று பத்து நிமிடங்கள் கடந்துவிட்டதால் வழக்கத்தை விட வேகமாக பைக்கை செலுத்தினேன். நகரின் எல்லையிலிருந்து இருபது நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ள அய்யன் கோவிலை அடைய கணங்களை யுகங்களாய் கடந்து கொண்டிருந்தேன், தாமதத்தின் வெம்மையை பொறுக்காத என் மனது, தனக்கான இலக்கு பயணத்தின் இடையில் இருப்பதை உணராமல், என்னிலிருந்து வெளியேறி காற்றின் பாதையில் எனக்கு முன்னரே கோவிலை அடைந்து, அங்கு இன்னும் வராத தன் இலக்கை தேடிக்கொண்டிருந்தது.

மனதை விட சற்று குறைவான வேகத்தில் இயங்கிய நானும், எனது பைக்கும் கோவிலுக்கு ஒரு கிலோமீட்டருக்கு முன்னர் ஸ்வாதியை சந்தித்தோம், எனக்கு எடுத்திருந்த சட்டையின் வண்ணத்திலேயே சுடிதார் அணிந்திருந்தாள். தாமதமாக வந்ததால் கோபத்திலிருப்பாள் என்ற சிறு பயத்துடன் அவர்களது பைக்கை நெருங்கினேன்..

ஹாய்..ஸாரி கொஞ்சம் லேட்டாகிடுச்சு.! திடீரென என் குரலைக்கேட்டு திரும்பிய ஸ்வாதியும், அவளது தோழியும் ஆச்சர்யம் கலந்த புன்னகையொன்றை உதிர்த்தனர். கிசுகிசுப்பான குரலில் தோழியிடம் என்னை அறிமுகப்படுத்திவிட்டு,

'ஸாரி'ன்னு எங்காவது ஒரு குரல் கேட்டா, உடனே முடிவு பண்ணிடலாம் அது நீங்கதான்னு..அப்படித்தானே?

லேட் ஆயிடுச்சே, கோவிச்சிட்டு பேசலேன்ன, அதா ஸாரி கேட்டேன்..!

எனக்கு கோபமில்ல..என் ஃபிரண்டுதான் கோவிச்சுட்டா, இந்த ஸாரிய அவளுக்கு தந்துடறேன்..

அய்யோ,,சாமீ எனக்கு கோபமெல்லாம் ஒண்ணுமில்ல, உங்க சண்டைய நீங்களே போட்டுக்குங்க, என்னை இழுக்காதீங்க..! என்று கூறிவிட்டு புன்னகைத்தாள் ஸ்வாதியின் தோழி

சரி,சரி சண்டையையும், சமாதானத்தையும் நாங்களே பாத்துக்குறோம் நீ வண்டிய கவனமா ஓட்டும்மா..! என்று தோழியை எச்சரித்துவிட்டு என்னை நோக்கி..

ஆமா எங்க ஸ்வீட்டெல்லாம் ஒன்னும் வாங்காம சும்மா வந்திருக்கீங்க, அதுவும் லேட்டா..!

எங்க அக்காகிட்டயிருந்து தப்பிச்சு வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சு..அந்த டென்சன்ல அவசர,அவசரமா வந்துட்டேன், ப்ரேம்கிட்ட கூட நல்ல பேசல..சட்டை நல்லாயிருக்கு, தேங்க்ஸ்..ஆமா கரெக்ட் சைசுல எப்படி எடுத்தீங்க?

என் தம்பி உங்க 'ஹைட்'டுதானே, அவனோட சட்டை சைஸ பாத்துட்டு போய்தான் வாங்கினோம்..அவன் இந்த மாதிரி டிசைன்லதான் சட்டை போடுவான்..ம்ம் உங்களுக்கும் நல்லத்தான் இருக்கு..

புன்னகையுடன் இடைமறித்த தோழி, நல்ல மட்டுமா இருக்கு, மேட்சிங்காவும்தான் இருக்கு, ரெண்டு பேரும் ஒரே கலர்ல டிரஸ்'..ம் எப்படியோ எனக்கு "டபுள் ட்ரீட்" வேணும் இப்போவே சொல்லிட்டேன்.

"டபுள் ட்ரீட்"டா..? ஒன்னு என் பிறந்தநாளுக்கு..இன்னொன்னு எதுக்குங்க?

இன்னொன்னா..? ஸ்வாதி சொன்னாலே..நீங்க ரெண்டு பேரும்ம்ம்..சரி விடுங்க எனக்கு ஒரு ட்ரீட்டே போதும்

இல்லல்ல, ஸ்வாதி என்ன சொன்னான்னு சொல்லுங்க..நான் எவ்ளோ ட்ரீட் வேணுன்னாலும் வைக்கிறேன்.!

நான் அப்பவே சந்தேகப்பட்டேன்..என்னடா எது சொன்னாலும் ஓவரா விளக்கி சொல்லணும் போலிருக்கேன்னு, ஆனா இப்போ புரியுது நீங்க வேணும்னே புரியாத மாதிரி கேள்வி கேட்கறீங்க..ஸோ கம்முன்னு கோவிலுக்கு வாங்க, பேசிட்டே பைக் ஓட்ட வேண்டாம்.!

ஹ,ஹா,, சரி நீங்க முன்னாடி போங்க..நான் பின்னாடியே ஸ்லோவா வரேன்.!

கோவிலை அடைந்ததும் தோன்றியது, இன்னும் கொஞ்சம் தொலைவில் கோவில் இருந்திருக்கலாம் அல்லது சரியான நேரத்திற்கு புறப்பட்டு முழுப்பயணத்தையும் ஸ்வாதியுடனே கடந்திருக்கலாம் என்று. தாமதமாக கிளம்பி தனியாக வந்தது சற்று வருத்தமளித்தாலும் இனி வாழ்க்கைப்பயணம் உட்பட அனைத்து பயணங்களிலும் ஸ்வாதியும் உடன் வருவாள் என்ற எண்ணமும் சட்டென தோன்றி முகத்தில் மலர்ச்சியை தோற்றுவித்தது. காதல் தோல்வியடையாமல் திருமணத்தில் முடிவதற்கு நண்பர்கள் உதவுகிறார்களோ இல்லையோ காதல் துவங்கவும், வளரவும் கண்டிப்பாக உதவுவது நண்பர்களே..ஸ்வாதியின் தோழியும் இதை அறிந்திருக்கக்கூடும், கோவிலுக்குள் சென்று பிரகாரத்தை சுற்றும் போது எங்கள் இருவரிடமிருந்தும் சற்று தள்ளியே ஆனால் பார்வையின் தொலைவிலேயே நடந்து வந்தாள். நான் ஸ்வாதிக்கு இணையாக சிறிது இடைவெளி விட்டு, முகத்தில் புன்சிரிப்புடன் நடந்தேன்..அவளும் மெல்லிய வெட்கம் கலந்த புன்னகையுடன் எனை நோக்கி..

ஏன் சிரிச்சிட்டே வர்றீங்க?

இல்ல, உன்னை மாதிரியே, உன் ஃபிரண்டும் பயங்கரமான ஆளா இருக்காங்களே..அத நினைச்சு சிரிச்சேன்..

அவ்வளவு பயங்கரமாவா இருக்கோம்..அப்ப இவ்ளோ நாளா நான் அழகா இருக்கேன்னு சொன்னது பொய்யா?

அய்யோ..அத சொல்லல, எந்த விசயத்தையும் முழுசா சொல்ல மாட்டேங்கறீங்களே அதனால சொன்னேன், இனி பேசும்போது கொஞ்சம் கவனமாதான் பேசணும் போல.!

ஹும்...சரி வாங்க... என்றபடியே பூஜைக்குரிய சாமான்களையும், இரண்டு அர்ச்சனை சீட்டுக்களையும் வாங்கினாள். பொதுவாக நண்பர்களுடன் எப்போதாவது கோவிலுக்கு செல்லும் போது, கோவில்களில் வழக்கமாக கடைபிடிக்கும் எந்த சம்பிரதாயங்களையும் கடைபிடிக்காமல் பெயரளவிற்கு சுற்றிவிட்டு வந்துவிடுவதால், ஸ்வாதி செய்வதையெல்லாம் ஆச்சர்யத்துடன் கவனித்து, அவளுடனேயே சென்றேன். எந்தக் கடவுளை முதலில் கும்பிடுவது என்பதில் துவங்கி திருநீறு வைத்துக்கொள்ளும் முறை வரைக்கும் ஒவ்வொன்றாய் சொல்லி, நான் சாமி கும்பிடுவதை கண்காணித்து கொண்டே இருந்தாள்.சன்னிதானத்திற்குள் சென்றதும் அர்ச்சனை சீட்டுக்களை கொடுத்து அவளின் தந்தையின் பெயர்,ராசி,நட்சத்திரம் முதலியவற்றை அர்ச்சகரிடம் கூறிவிட்டு என்னை நோக்கி...

உங்க ராசி, நட்சத்திரத்தையும் சொல்லுங்க..!

நீ இப்போ உங்க அப்பாவுக்கு சொன்ன அதேதான் என்னோடதும்..!

ஆச்சர்யம் கலந்த புன்னகையுடன் என் பெயருக்கும், அவளின் தந்தையின் பெயருக்கும் அர்ச்சனை செய்ய சொன்னாள்,, தரிசனம் முடிந்ததும் கோவிலின் வெளிமண்டபத்திற்கு மூவரும் வந்தோம்,,

கொஞ்சநேரம் உட்காந்துட்டு கிளம்புவோம்

எனக்கு இன்னைக்கு பிறந்தநாள் ஒ.கே , எதுக்கு உங்க அப்பா பெயருக்கு அர்ச்சனை.?

ஏன் சும்மா பண்ணக்கூடாதா..? எங்கப்பாவுக்கும் இன்னைக்குதான் பிறந்தநாள்..!

ஹேய்..உண்மையாவா.? ராசி, நட்சத்திரந்தான் ஒன்னுன்னு பார்த்தா..பிறந்தநாளும் ஒன்னுதானா.அப்போ எனக்கும், அவருக்கும் நல்லா ஒத்துப்போயிடும் இல்லையா?

ம்ம்..ஒத்துப்போயிட்டா நல்லதுதான்..அதான் எனக்கு பயமாயிருக்கு .... என்றவளின் முகம் திடீரென இறுகி, கண்களில் நீர் தளும்பியது.தொடரும்...ஆகு பெயர் -( பாகம்-9 )
.
Share/Bookmark

Tuesday, July 13, 2010

ஆகு பெயர் -(பாகம்-9 )

மகிழ்ச்சி, உற்சாகம், சந்தோஷம், நிம்மதி என மனிதனுக்கு என்னென்ன நேர்மறையான உணர்வுகள் ஏற்படுமோ அனைத்தும் ஒருங்கே என் மனதில் தோன்ற, ஸ்வாதியிடமிருந்து வந்த குறுஞ்செய்தியை மீண்டும்,மீண்டும் படித்து பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு மனிதனின் வாழ்வை தொடர்ந்து முன்னோக்கி செலுத்துவதில் முக்கிய பங்காற்றுவது அவன் பெரும் அங்கீகாரங்களே ஆகும், அதுவும் தனது அன்பிற்கான அங்கீகாரத்தை பெறுவது மிக முக்கியமானதாகும். அத்தகையதொரு அங்கீகாரத்தை நீண்ட அகப்போராட்டதிற்கு பிறகு பெற்றாகிவிட்டது, இதுவரை பெற்ற பிறந்தநாள் பரிசுகளில் மிகச்சிறந்த பரிசு ஸ்வாதியின் அன்பை பெற்றதுதான் என தோன்றியது. மணி பண்ணிரெண்டை தாண்டியும் நண்பர்களிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்துகள் குறுஞ்செய்திகளாக வந்து கொண்டிருந்தது. அனைவருக்கும் நன்றியை பதிலாக அனுப்பிவிட்டு, பிரேமிற்கும் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு உறங்க முயற்சி செய்யத்துவங்கினேன்.

இதுவரையில்லாத அளவு மிக நீண்டதாகவும், இன்பமானதாகவும் அமைந்த நேற்றைய இரவு, மெல்ல,மெல்ல நகர்ந்து புதிய திசையை நோக்கி பயணிக்கும் எனது நாட்களின் முதல் விடியலை கொண்டு வந்தது. பெரும்பாலும் பணிச்சுமைகளினால் நாடு இரவில் உறங்கச்சென்று, காலையில் தாமதமாக எழும் வழக்கமுடைய எனக்கு இன்றைய விடியல் வழக்கத்தைவிட விரைவாகவே வந்திருந்தது, ஒரு சிறிய உறக்கத்தின் கால இடைவெளியில் வாழ்க்கையே வண்ணமயமாகிய மகிழ்ச்சி எனது ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலித்தது.

கல்லூரி காலத்திலிருந்தே ஆடைகள் உட்பட நான் உபயோகப்படுத்தும் அனைத்து பொருட்களையும் நானே வாங்கிக்கொண்டாலும், பிறந்தநாளில் மட்டும் அப்பாவும்,அம்மாவும் வாங்கி வைத்திருக்கும் ஆடைகளையே அணிவது வழக்கம், அக்காவின் திருமணத்திற்கு பிறகான கடைசி மூன்று பிறந்தநாட்களிலும் இவ்வழக்கம் மாமா எடுத்துவரும் ஆடைகளுக்காக மாறியிருந்தது. இவ்வருடமும் ஒரு வாரத்திற்கு முன்பே அக்காவும்,மாமாவும் விடுமுறைக்காக இங்கு வரும்போது புதுத்துணிகளுடன் வந்துவிட்டனர்.ஸ்வாதி எனக்காக முதன்முதலாய் வாங்கியிருக்கும் சட்டைக்காக வழக்கத்தை மாற்றுவதா? வேண்டாமா? என்ற குழப்பத்திலேயே கிளம்பினேன், மாமா எடுத்து வந்த ஆடையை அணியாததைக் கண்ட அக்கா,

என்னது பழைய துணியையே போட்டிருக்கே?உன்னோட பிறந்தநாளையே மறந்துட்டயா?

மறக்கல..பிரேம், துணியெடுத்து வச்சிருக்கேன் கடைக்கு வாடா'ன்னு போன். அப்படியே அங்கிருந்து கோவிலுக்கு போறோம்.

அதிசியமாயிருக்கு கோவிலுக்கெல்லாம் போறேன்னு சொல்ற..அதுசரி துணி எடுத்தா வீட்டுக்கு கொண்டுவரமாட்டான..கல்யாணம் பண்ணினதுக்கப்புறம் ஆளையே பாக்கமுடியல..நல்லாயிருக்கானா?

ம்ம்..நல்லாயிருக்கான், அவனுந்தான் கோவிலுக்கு வர்றான்.!

பிரேம் கோவிலுக்கு வர்றானா.?அப்பவே நினைச்சேன் நீ பொய் சொல்றியோன்னு..அவன் எப்போ கோவிலுக்கு போனான்,கல்யாணத்தையே கருப்பு சட்டைய போட்டுகிட்டுதான் பண்ணினான்..ஒரு நாலஞ்சு மாசமாவே ஒரு மாதிரிதான் சுத்திட்டு இருக்கியாமே..உண்மையை சொல்லு...

அது..சும்மா என் கூட வர்றான், சாமி கும்பிட வர்றல..!

அப்படியா,சாமி கும்பிடாட்டி பரவால்ல,,பூஜையாவது பண்ண சொல்லு,ஹ,ஹா...எப்படியோ, நல்ல சமாளிக்க பழகிட்டே!

அதெல்லாம் ஒன்னும் இல்ல.!

நம்மை விட புத்திசாலிகளிடம் பேசும்போது 'எச்சரிக்கை'யாகவும், முட்டாள்களிடம் பேசும்போது 'அதிக எச்சரிக்கை'யாகவும் பேசுவது நல்லது, என்னை விட அக்கா புத்திசாலி என்பதால் சிறிது எச்சரிக்கையாக பேசியிருந்தாலே போதும், ஆனால் தேவையில்லாமல் உளறி மாட்டிக்கொண்டாயிற்று இனி என்ன காரணம் சொல்லி சமாளிக்க முயன்றாலும் அக்காவை நம்பவைக்க முடியாது என்று தோன்றியது. மேலும் எப்படியும் அப்பாவிடம் இவ்விசயத்தை சொல்ல அக்காவின் உதவியைத்தான் நாட வேண்டும், எனவே இப்போது சொல்வதும் ஒருவகையில் நல்லதுதான் என முடிவு செய்து ஸ்வாதியை பற்றியும், எங்கள் காதலை பற்றியும் சுருக்கமாக கூறினேன்.

ஓகோ,அப்போ சார் ஜோடியாத்தான் கோவிலுக்கு போறீங்க..ஆமா லவ் பண்றதுக்கெல்லாம் உனக்கு நேரமிருக்கா?

ம்..அவ கூடத்தான் போறேன்..ஆனா தனித்தனி பைக்ல, எனக்கு டைம் ஆகிடுச்சு, நா கிளம்பறேன்.!

பொண்ண பத்தி சொன்ன ஒ.கே..யாரோட பொண்ணு, வீடு எங்க? இதெல்லமாவது சொல்லிட்டு போடா!

கோவிலுக்கு போயிட்டு வந்து எல்லா விபரமும் சொல்றேன்..இப்போதைக்கு யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்.

சரி,சரி பார்த்து, கவனமா போயிட்டு வா..

எப்படியோ அக்காவிடமிருந்து தப்பி பிரேமின் ஃபிரவுசிங் சென்டரை அடையும் போது மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது. காதலில் முதல் நாளே தாமதமான பட,படப்பில் உள்ளே நுழைந்த என்னை அதே பட,படப்புடன் பிரேம் எதிர்கொண்டான்,

டேய், உனக்கெல்லாம் ஒரு பொண்ணு சட்டை எடுத்து கொடுத்து, கோவிலுக்கு வரச்சொன்னா, அதுக்கு கூட லேட்டாதான் வருவியா?

வீட்ல, அக்கா ஒரு சின்ன விசாரணைக் கமிசனே வச்சிட்டா, அதான் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு, சரி சட்டை எங்கே?

சட்டை இருக்கட்டும் ,நா ஒன்னு அத தின்னுட மாட்டேன் இந்தா..ஆமா,,உன் மொபைல் என்னாச்சு, போன் பண்ணினா லைனே போகலையாமே?

அப்போதுதான் கைப்பேசியை எடுத்து பார்த்தேன், சார்ஜ் இல்லாமல் தற்காலிகமாக இறந்திருந்தது. கிட்டத்தட்ட எனது சுவாசமும் சில நொடிகள் நின்று மீண்டும் இயங்கியது. இவ்வளவு கவனக்குறைவாக இதுவரை இருந்ததில்லை,

சார்ஜ் இல்லாம ஆஃப் ஆகியிருக்குடா, கவனிக்கல..

சரி விடு, உள்ளே போய் சட்டைய மாத்திட்டு கோவிலுக்கு கிளம்பு, ஸ்வாதியும், இன்னொரு பொண்ணும் இங்க வந்து மெதுவா போயிட்டு இருக்கோம், நீ வந்ததும் நேர 'அய்யன் கோவிலு'க்கு வரச் சொல்லிடுங்க'ன்னு சொல்லிட்டு இப்போதான் போறாங்க, நீ கிளம்பு !

பத்து நிமிஷம் கூட காத்திருக்க கூடாதா..? என்று மனதில் எண்ணிக்கொண்டே அருகிலிருந்த காலி கேபினுக்குள் நுழைந்து சட்டையை மாற்றினேன். மிகச்சரியாக எனக்கு பொருந்தியது,மேலும் நான் வழக்கமாய் வாங்கும் சட்டையின் விலையில் மூன்று சட்டை விலைகளை ஒன்றாக,இந்த ஒரே சட்டை கொண்டிருந்தது.

டேய், நான் கிளம்பறேன்..திரும்பி வரும்போது இங்க வர்றேன்..!

அட, சட்டை கலக்கலா இருக்கு, இதுக்கே தனியா ஒரு பார்ட்டி வச்சிடு.. பிரேம் சட்டை பற்றி புகழ்ந்து கூறியதை கூட நின்று கேட்காகமல் வேக,வேகமாய் பைக்கை எடுத்துக்கொண்டு அய்யன் கோவிலை நோக்கி விரைந்தேன்..


தொடரும்...ஆகு பெயர் (பாகம்-8 )
Share/Bookmark

Tuesday, July 6, 2010

ஞாபக நட்சத்திரங்கள்எல்லைகளற்ற கனவுவெளியில்
அலைந்து கொண்டிருந்த
எனக்குள்ளிருந்து,
கசியத் துவங்கியது
உதிரமென ஓடிக்கொண்டிருந்த
உன் ஞாபகத் துளிகள்...

உதிர்ந்த ஒவ்வொரு துளியும்
கனன்று மின்னத்துவங்கியது
நட்சத்திரங்களாய்..!
கனவு வெளியெங்கும்
நட்சத்திரங்கள்..!
நட்சத்திரங்கள்..!
நட்சத்திரங்கள்..!

சிதறிப்போன உன் ஞாபகங்களை
மின்னிக் கொண்டிருக்கும்
நட்சத்திரங்களுள் தேடித்தேடி
உதிரத்தை இழந்த நான்
அணைந்து, வீழ்ந்து, நொறுங்கினேன்
எரிகல்லாய்...

Share/Bookmark

Saturday, June 26, 2010

ஆகு பெயர் (பாகம்-8 )

பொதுவாக இன்பமோ, துன்பமோ எளிதில் உணர்ச்சிகளை வெளிக்காட்டி விடும் சுபாவமுடைய நான், ஸ்வாதி என்னிடமிருந்து விடை பெற்று சென்றவுடன் எல்லாவித உணர்வுகளும் கலந்து ஒரு குழப்பமான உணர்வு மனம் முழுவதும் நிரம்பியிருக்க, எதையும் உடனடியாக வெளிப்படுத்த இயலாமல் பிரேமுக்காக காத்திருந்தேன். சிறிது நேரத்தில் பிரேம் மட்டும் தனியாக வந்தான்.

என்னடா..தனியா வர்றே லதா எங்க?

நான் தனியா வர்றது இருக்கட்டும், எங்க உன் ஆளு, எல்லாம் ஓ. கே ஆயிடுச்சா?

பாதி கிணறு தாண்டியாச்சுன்னு நினைக்கிறேன், என்னை புடிச்சிருக்குன்னு சொல்லிட்டா, ஆனா லவ் பண்றேன்னு சொல்லலடா..!

என்னடா கால்கிணறு, அரைக்கிணறுன்னு சொல்லிட்டிருக்க..! இதெல்லாம் ஒரே மூச்சில தாண்டிடனும்,, என்றவனிடம் நாங்களிருவரும் பேசிக்கொண்டதை சுருக்கமாக கூறினேன்.

சரிடா கிளம்பட்டுமா? பாப்போம், நைட்டு போன் பண்ணி என்ன சொல்றான்னு..!

அதா புடிச்சிருக்குன்னு சொல்லிட்டாள்ல..போய் நிம்மதியா வேலையப்பாரு..நாளைக்கு உன் பர்த்டே வேற..எங்காவது கோவிலுக்குதான் கூப்பிடுவா, போயிட்டு சந்தோசமா வா, எல்லாத்துக்கும் சேர்த்து பெரிய பார்ட்டியா போட்டுடுவோம்.

அதுக்கென்ன வச்சிடுவோம்.. என்று புன்னகையுடன் பிரேமிடமிருந்து விடைபெற்றேன்.

புன்னகையுடன் விடைபெற்ற போதும் மனம் முழுவதும் ஒரு வித இறுக்கம் பரவியிருப்பதை அன்றைய நாளின் இறுதிவரை உணர முடிந்தது. எந்த வேலையிலும் கவனம் செலுத்த இயலாமால் அலைகழித்து கொண்டிருக்கும் அவளது நினைவுகளுடன் வழக்கத்திற்கு சற்று முன்னதாகவே படுக்கையில் விழுந்தேன். நினைவு தெரிந்த நாள் முதலாக அறிந்திருந்த காதல் கதைகள், காதலர்கள், காதல் வெற்றிகள், தோல்விகள் என காதலை சுற்றியே மனம் உழன்றது, மேலும் பல்வேறு காரணங்களினால் காதலில் தோல்வியுற்றவர்களின் முகங்களும், அவர்களின் இப்போதைய வாழ்க்கைச்சூழலும் கண் முன் வந்து பயமுறுத்தி கொண்டேயிருந்தன. வேட்டை நாயென துரத்தும் அவளது நினைவுகளுக்கும், நத்தையென நகரும் காலத்திற்கும் இடையில் சிக்கி தவித்து கொண்டிருந்தேன்.

கண்களும், மனதும் களைத்து போய் உறக்கத்தின் மடியில் விழுந்திருந்த என் உடல், செவிகளை மட்டும் சிறிது இயக்கத்தில் வைத்திருந்தது. விஸ்வநாதனிலிருந்து, ஹேரிஸ் ஜெயராஜ் வரையிலான இசைஞர்களின் காதல் சோக கீதங்களை கனவுவெளிகளில் கேட்டலைந்து கொண்டிருந்த எனக்கு குறிப்பிட்ட ஒரு பாடல் திரும்ப,திரும்ப மறு ஒலிபரப்பாகிக் கொண்டேயிருந்தது

" உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்"... திடீரென நினைவு வந்து கைப்பேசியை பார்த்தேன்..ஸ்வாதியிடமிருந்து போன்,

ஹலோ ஸ்வாதி..!

ம்...தூங்கியாச்சா? இவ்வளவு தரம் போன் அடிச்சும் எடுக்கல, அதுவும் நான் கூப்பிட்டு.!

ஸாரி ஸ்வாதி, என்னமோ ஒரு யோசனையில இருந்தேன், அப்படியே லைட்ட தூங்கிட்டேன். ஸாரி சொல்லுங்க என்ன இந்நேரத்துக்கு?

ஏன் இந்நேரத்துக்கு கூப்பிட கூடாதா?,,நைட் போன் பண்றேன்னு சொல்லியிருந்தேனே மறந்துட்டீங்களா ? ஆமா புக்ஸ் படிப்பீங்களா?

மறக்கல..படிப்பேன் ஏன் கேட்கறீங்க?

இல்ல நான் நிறைய படிப்பேன், அதான் உங்களுக்கு படிக்கிறது புடிக்குமான்னு தெரிஞ்சுக்க கேட்டேன்,,சரி "love story " படிச்சிருக்கீங்களா?

ம்ம்...காலேஜ் டைம்ல படிச்சிருக்கேன், அத படிச்சிட்டு உடனடியா ஏதோவொரு பொண்ண லவ் பண்ணிடனும்னெல்லாம் சுத்தியிருக்கேன்.

பொண்ணு கிடைச்சு,,லவ் பண்ணுணீங்களா?

இல்ல, அப்போ உன்னை பாக்கலியே..! அதுவுமில்லாம அந்த கதையில முடிவு சோகமா இருக்குமில்ல அதனால பயந்து அந்த ஐடியாவ விட்டுட்டேன்..ஆமா எதுக்கு அந்த புக்க பத்தி கேட்கறே?

ஹா, ஹா...நல்ல பேசறீங்க..அந்த கதைல முக்கியமான ஒரு லைன் வருமே அது என்ன ?

முக்கியமான லைனா..???ம்ம்..ரெண்டு பேரும் ஹனிமூன் போயிருக்கும் போது ஹோட்டல் விசிட்டர்ஸ் புக்ல ஹீரோ எழுதுவானே அந்த லைனா?

கடவுளே..இந்த பையனுக்கு நல்ல புத்திய தந்திடுப்பா..ஹா,ஹா இது மட்டும்தான் நியாபகம் இருக்கா?

ஸாரி,ஸாரி நீயே சொல்லிடு!

எதுக்கெடுத்தாலும் ஸாரி, ஸாரி'ன்னு சொல்லுங்க.." love means never say u r sorry " இத மட்டும் மறந்துடுங்க..!

ச்ஸ் அந்த லைனா.? அந்த ஒரு லைன்தான கதையே ஸாரி மறந்துட்டேன்..இப்போ எதுக்கு அத சொல்றே?

மறுபடியும் ஸாரியா..கடவுளே, எதுக்குன்ன,,இனி நீங்க என்கிட்டே எதுக்கும் ஸாரி கேட்க கூடாது..புரியுதா?

அவளுடன் பேச துவங்கியதிலிருந்து என் மனதின் ஊற்றிலிருந்து சிறு,சிறு துளிகளென கசியத் துவங்கிய மகிழ்ச்சி, அவள் கடைசியாக சொன்ன வார்த்தைகளின் அதிர்வினால்,திடீரென வெள்ளமென பெருகி என்னையே மூழ்கடித்தது. காதல் வெள்ளத்தில் மூச்சடைத்து மூழ்குவது மகிழ்ச்சிதானெனினும், மகிழ்ச்சியின் வெள்ளத்தை அதிகரிக்க செய்யும் பொருட்டு அவள் பேசியதன் அர்த்தம் புரியாதது போல் பேச்சை தொடர்ந்தேன்.

புரியற மாதிரிதான் இருக்கு..ஆனா நீயே புரியற மாதிரி சொல்லிடு..!

இந்நேரத்துக்கு விளக்கிட்டு இருக்க முடியாது..நாளைக்கு உங்க பிறந்தநாள் தானே அந்த புக்க கிப்டா தரேன், படிச்சு புரிஞ்சுக்குங்க..

ஒ.கே,,ஒ.கே..கோபப்படாதே நாளைக்கு எங்கயோ போகனுன்னையே எங்க?

ம்ம்..முதல்ல "பிறந்தநாள் வாழ்த்துக்கள்" ஆமா கோவிலுக்கெல்லாம் போவீங்களா?

அப்பாடா இப்போவாவது சொன்னயே..தேங்க்ஸ், நானா போக மாட்டேன், ஃபிரண்ட்ஸ் கூட எப்போவாவது போவேன்.

சரி, நாளைக்கு நானும், என் ஃபிரண்டும் அய்யன் கோவிலுக்கு போறோம்..நீங்க?

இது என்ன கேள்வி,,கண்டிப்பா வர்றேன்..அய்யன் கோவிலுக்கு பாம்பு கடிச்சாதானே போகணும்..இப்போ எதுக்கு ?

லூசு மாதிரி பேசாதீங்க..அதுக்கு மட்டும்தான் அங்க போகனுன்னு யாரு சொன்னா? நான் அடிக்கடி போவேன், நாளைக்கு எங்க வீட்லயும் ஒரு விசேஷம்னு சொன்னேனில்ல..

அப்போ என் பிறந்தநாளுக்காக இல்ல..நீங்க போறீங்க, நான் சும்மா கூட வர்றேன் அவ்வளவுதானே ?

அப்போ நீங்க வர வேண்டாம்..பை

ஸாரி, ஸாரி சும்மா கேட்டேன்..ஸாரி

முதல்ல ஸாரி கேட்கறத விடுங்க,அப்புறம் இனி இந்த மாதிரி பேசாதீங்க, டைம் ஓவரா ஆகிடுச்சு நான் தூங்கனும் ..சொல்றத கேளுங்க,

சரி சொல்லுங்க மேடம்..!

காலைல குளிச்சி, ரெடியாகி ஒன்பது மணிக்கு லதாக்கா ஃபிரவுசிங் சென்டருக்கு வந்துடுங்க, அங்க புது ஷர்ட் கொடுத்திருக்கேன், அதை போட்டுட்டு எங்க காலேஜ் தாண்டி லெப்ட் சைட்ல ஒரு பெரிய வீடு இருக்கும் அங்க நான் இருப்பேன், லேட் பண்ணாம வந்துடுங்க, காலைல மெசேஜ் பண்றேன்..ஒ.கே ?

ஹா..ஷர்ட் எப்போ எடுத்தீங்க..ஒரே சர்ப்ஃரைசா இருக்கு?

ஈவ்னிங்தா நானும்,என் ஃபிரண்டும் போய் எடுத்து ஃபிரவுசிங் சென்டர்ல கொடுத்தோம் .

பிரேம் இருந்தானா? ஒன்னும் சொல்லலையா?

இருந்தாங்க, லதாக்காகிட்ட சொல்லி சிரிச்சாங்க, அப்பறம் நீங்க ரொம்ப நல்ல பையன், தைரியமா லவ் பண்ணலான்னு சொன்னார்

அதுக்கு, நீ என்ன சொன்ன ?

நான் என்னமோ சொன்னேன் அத விடுங்க, காலைல லேட் பண்ணிடாதீங்க !

ஸ்வாதி..ரெண்டு பேரும் என் பைக்குல போறமா?

அதெல்லாம் இல்ல, நீங்க தனியா வாங்க, நானும் என் ஃபிரண்டும் என் பைக்ல வர்றோம் ..இப்போ தூங்குங்க !

ம்ம் ..ஒ.கே இனி எங்க தூங்கறது..ஒ.கே குட் நைட் !

ஹா,ஹா குட் நைட் ! பை !

அவளிடமிருந்து போன் வருவதை எப்படி ஊகிக்க முடியாதோ, அவ்வாறே பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென பேச்சை முடித்து எப்போது கட் செய்வாள் என்பதையும் ஊகிக்க முடிவதில்லை. இருந்தாலும் இம்முறை சற்று அதிக நேரம் பேசிவிட்டாள். இருவரும் நேரில் பேசியதையும், இப்போது போனில் பேசியதையும் திரும்ப,திரும்ப அசைபோட்டதில் ஒன்று தெளிவாய் புரிந்தது. " அவளும் என்னை காதலிக்க துவங்கிவிட்டாள்". இதை உறுதிசெய்வது போல் கைப்பேசி ஒலித்தது..மெசேஜ் ,,ஸ்வாதியிடமிருந்து..

I decided to cross the bridge, which s separate us..soon i wil be ur side,
& manymore happy returns of the day..தொடரும்...


ஆகுபெயர் (பாகம்-7 )
Share/Bookmark

Tuesday, June 15, 2010

ஆகு பெயர்- (பாகம்-7)

கிட்டத்தட்ட ஏழெட்டு ஆண்டுகளாக பிரேமிடமிருந்து எத்தனையோ எழுத்து ,சொற்கள், வாக்கியங்கள் மற்றும் வரிகள் போன்றவற்றை கேட்டிருந்தாலும் சற்றுமுன் எனக்கு மட்டுமே கேட்குமளவிற்கு கிசு,கிசுத்த " டேய்..உன் ஆளு வந்தாச்சுடா"..என்ற சிறு வரி இதுவரை கேட்டதிலேயே மிக இனிமையானதாக தோன்றியது. இதுவரை நான் மட்டுமே நம்பிவந்த என் காதலை, எனக்கு பிறகு ஏற்றுக்கொண்ட முதல் ஆறறிவு ஜீவன் பிரேம்தான்.(என் காதலை முதன்முதலில் பொறுமையாக கேட்டு அதை அப்படியே ஏற்றுக்கொண்டது எங்கள் வீட்டு பூனைக்குட்டிதான், என் காதல்கதையை கேட்டுவிட்டு சிநேகத்துடன் "மியாவ்" என்ற மறுமொழியையும் தந்தது.) வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே வந்த ஸ்வாதி, பிரேம் அமர வேண்டிய இடத்தில் என்னை பார்த்ததும் சிறிது தடுமாறி பிரேமை நோக்கி..

லதாக்கா இல்லைங்களா?

இன்னும் வரலையே..லதாவை பாக்கத்தான் வந்தீங்களா?

இல்லயில்ல..ஃப்ரவ்ஸ் பண்ணனும்

இரண்டாவது கேபின் ஃப்ரீதான்..யூஸ் பண்ணுங்க.! என்றபடி என்னை பார்த்து புன்னகைத்தான்.

பட,படப்புடன் கூடிய குழப்பமான பார்வையொன்றை என் மீது வீசிவிட்டு சட்டென கேபினுக்குள் சென்று அமர்ந்து கொண்டாள். நானும் கேபினுக்குள்ளேயே சென்று பேசுவதா?வேண்டாமா? என்ற குழப்பத்தில் தவித்து கொண்டிருந்தேன். சூழ்நிலையின் அழுத்தத்தை உணர்ந்து கொண்ட பிரேம்..'டேய் நான் வரும்போது சாப்பிடல..வீட்ல போய் சாப்டுட்டு லதாவையும் கூட்டிட்டு வரேன்'. ஒரு அரை மணிநேரம் கடையை பாத்துக்கடா..என்று ஸ்வாதிக்கும் கேட்கும்படி கூறி அர்த்தத்துடன் சிரித்து கிளம்பினான். "இவ்ளோ நல்லவனாடா நீ" என்று மனதிற்குள் பிரேமை பாராடியவாறே அவளது எண்ணிற்கு " THEN ..? என்று ஒரு மெசேஜ் அனுப்பினேன்.

நான் மட்டும் தனியாக அமர்ந்திருப்பதை அறிந்து கொண்ட ஸ்வாதி, வெளியே வந்து காத்திருப்பவர்களுக்காக போடப்பட்டிருக்கும் நாற்காலி ஒன்றில் எனக்கு சற்று தள்ளி அமர்ந்து சிறு கோபம் கலந்த புன்னகையை உதிர்த்தாள். அப்பொழுதுதான் அவளை நன்றாக பார்த்தேன்...மயில் கழுத்தின் வர்ணத்தில் சுடிதார், அதே வண்ணக்கல் பதித்த கம்மல், சிறு செயின், கோவிலுக்கு சென்று வந்ததன் அடையாளமாய் நெற்றியில் விபூதியும், குங்குமம், சுடிதாருக்கு ஏற்ற வண்ணத்திலேயே கைக்கடிகாரம் மற்றும் கைப்பை என அவளது ஆடை,அணிகளிலும், முகத் தோற்றத்திலும் பொருளாதார செழுமையின் பிம்பம் படிந்திருந்தது. இவற்றையும் தாண்டி உதிர்ந்த அவளின் ஒற்றைப் புன்னகை, என் மன அறை முழுவதும் சுகந்தத்தை நிரப்பி லயிக்கச் செய்தது.

இங்க என்ன பண்றீங்க?

நீங்கதானே நேர்ல பேசணும், எங்க காலேஜ் பக்கத்துல இருக்கிற ஃபிரவுசிங் சென்டருக்கு வாங்கன்னு சொன்னீங்க..!

கடவுளே, இங்கன்னா இந்த 'கேஷ் டேபிள்'ள எதுக்கு உட்காந்திருக்கீங்க? ஏதோவொரு கேபின்ல வெயிட் பண்ண வேண்டியதுதானே?

ஓ..அதச்சொல்றீங்களா, ஒரு சின்ன சர்ப்ரைஸ்தான்...முதல்லயே சொல்லாததுக்கு மன்னிச்சிடுங்க, இது என் ஃபிரண்டோட கடைதாங்க.!

கடவுளே..அப்ப லதாக்காவுக்கும் இது தெரியுமா? எப்படியோ என்ன சிக்க வச்சுட்டீங்க..அவங்க என்ன தப்பா நினைக்க போறாங்க..!

நொடிக்கொருதரம் கடவுள கூப்பிடாதீங்க, இதுல தப்பா நினைக்கறதுக்கு என்ன இருக்கு..நாம பேசத்தானே இங்க வந்திருக்கோம்..?

அது அவங்களுக்கு தெரியுமா? இவ்வளவு நாள் தனியா வருவேன், இப்ப இங்க வந்து ஒரு பையனோட பேசிக்கிட்டிருந்தா என்ன நினைப்பாங்க ?

ஒன்னும் தப்பா நினைக்க மாட்டா., லதாவும் என் கூட படிச்சவதான், நாங்க ரெண்டு,மூணு ஃ பிரண்ட்ஸ் சேர்ந்துதான் லதா-பிரேம் கல்யாணத்தையே நடத்தி வச்சோம். அதுவுமில்லாம இந்த ஒரு வருஷ கதைய லதாகிட்ட சொல்லியாச்சு!

எந்தக்கதை...? இன்னும் யார்,யார்கிட்ட அந்த கதைய சொல்லியிருக்கீங்க?

எந்தக் கதையா..பாட்டி வடை சுட்டாங்களே அந்தக்கதை.!

ஹ..உங்க பாட்டியா? எங்க பாட்டியா?

நல்லவேளை..பாட்டி சுட்டது பருப்பு வடையா ? உளுந்து வடையான்னு கேட்கலயே அது போதும்..ஆமா என்ன பேசணும் அதச் சொல்லுங்க

நான்தான் போன்லயே சொல்லிருக்கேன் 'வாங்க' 'போங்க'னு சொல்ல வேண்டாம்னு,

எனக்கும் ஆசைதான் உங்கள 'வாடி' 'போடி'னு கூப்பிடனுன்னு..ஆனா அதுக்கு நான் நினைச்சது நடக்கணுமே!

நாம நினைக்கிறதெல்லாம் நடந்தா நல்லதுதான்..ஆனா அது கஷ்டம், அதுவும் நீங்க நினைக்கிறது ரொம்ப கஷ்டம்

ஏற்கனவே ஒருதரம் இதப்பத்தி பேசியிருக்கோம்..நான் நினைக்கிறதை நீங்களும் நினைச்சா சுலபமா நடக்கும்..வேற என்ன பிரச்சனை?

ரகு..நான் தெளிவாவே சொல்றேன், நீங்களோ, நானோ நினைக்கிறது முக்கியமில்ல, நம்ம வீட்ல நினைக்கனும்..உங்க வீட்ல எப்படியோ, ஆனா எங்க வீட்ல வாய்ப்பேயில்ல, அதுவும் அப்பா இதப்பத்தியெல்லாம் நினைக்கவே மாட்டார்..!

உங்க அப்பா இதப்பத்தி என்ன கனவிலா தெரிஞ்சிக்குவார்..நீதான் சொல்லணும், அதுக்கு முன்னால என்கிட்டே சொல்லணும்.

எங்க அப்பாகிட்டயா.? அதுசரி உங்ககிட்ட என்ன சொல்லணும்?

என்னவோ நானும் இருபத்தியொரு வருஷம் வெயிட் பண்றேன்னு மெசேஜ் அனுப்பினே,அதுக்கு என்ன அர்த்தம்?

உங்க மெசேஜ்க்கு என்ன அர்த்தமோ? அதுதான் என்னோட மேசெஜ்க்கும் அர்த்தம்.!

நான் உங்களுக்காகத்தான், சாரி,சாரி..உனக்காகத்தான்,, உன் பதிலுக்காகதான் வெயிட் பண்றேன்..நீ?

ம்ம்ம்..உண்மையா சொல்லனுன்னா, ஏதோவொரு விதத்துல உங்கள பிடிக்கறதாலதான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்..ஆனா
என்ன சொல்றதுன்னுதான் தெரியல..

இதுவே போதும் வேற எதுவும் சொல்ல வேண்டாம், என்ன பிரச்சனை வந்தாலும் வரும்போது பாத்துக்கலாம்..இதே சந்தோசத்தில ஒரு விஷயம் சொல்லட்டுமா.? நாளைக்குதான் என் பிறந்தநாள் போன்லயாவது பேசலாமா?

உண்மையாவா..நாளைக்கு எங்க வீட்லயும் ஒரு விசேஷம், ஈவ்னிங் போன் பண்றேன்..இப்போ டைம் ஆகிடுச்சு..கிளம்பறேன்

ஒன்னும் சொல்லாம கிளம்பினா என்ன அர்த்தம்.!

அதா போன் பண்றேன்னு சொன்னேனில்ல,,அப்போ சொல்றேன்..நாளைக்கு நாம ஒரு இடத்துக்கு போகணும் நைட்டு சொல்றேன்..பை என்றபடி கிளம்பினாள்.


தொடரும்...


ஆகு பெயர்-6
Share/Bookmark

Wednesday, June 9, 2010

ஆகு பெயர் -(பாகம்-6 )

துன்பியல் அல்லது வருத்தமளிக்கும் சம்பவங்கள் மட்டும் நம் மனதில் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்துவதில்லை.,சில சமயம் எதிர்பாராத சில மகிழ்ச்சியான தகவல்களும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிடும். பிரேம் அவளைப் பற்றி கூறிய தகவல்களும் அவ்வாறானவையே.

அவளது வீட்டை கடந்துதான் தினமும் என் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறேன். பிரதான சாலையிலிருந்து பிரிந்து எங்கள் வீடு இருக்கும் பகுதிக்கு செல்லும் துணைச் சாலையில் அமைந்துள்ள அவளது வீடுதான் அந்தப்பகுதியில் பெரியதும், அழகானதும் ஆகும். அதிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் என் வீடு உள்ளது. ஒரு சிறிய பூங்காவினுள் அமைந்துள்ளதை போன்ற தோற்றமளிக்கும் அவ்வீட்டை திரும்பி பார்க்காமல் எவரும் கடக்கவியலாது. அதை விட ஆச்சர்யபடுத்தும் தகவல், அவளது தம்பியும் எனக்கு ஏற்கனவே பழக்கமானவன்தான் என்பதுதான். எங்கள் பகுதியிலிருக்கும் பள்ளி மைதானம்தான் காலை வேளைகளில் பல்வேறு வயதினரும் உடற்பயிற்சிக்காக கூடும் பொது இடமாகும். ஒரு குறிப்பிட்ட வயதிலிருக்கும் நபர்கள், அந்தந்த சம வயதையுடைய நபர்களுடன் குழுக்களாக இணைந்து விளையாடவது வழக்கம். அத்தகைய குழுக்களில் எங்கள் வயதையடுத்த குழுவில் முக்கியமான உறுப்பினர் அவளது தம்பி. மைதானம் தவிர்த்த பொது இடங்களில் சந்திக்கும் போது புன்னகையை மட்டுமே பரிமாறி கொள்ளுமளவிற்கே பழக்கமானவன் எனினும் மூன்று ஆண்டுகளாக அறிமுகமுள்ளவன். இத்தகவல்கள் இனிய ஆச்சர்யத்தை ஏற்படுத்திய போதும் தொழிலிலும், பொருளாதாரத்திலும் நடுத்தர வர்க்கத்திலிருந்து, முன்னேற போராடிக்கொண்டிருக்கும், எனக்கு அவளது மேல்தர வர்க்க பொருளாதார நிலை சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவளைப் பற்றிய தகவல்கள் என் எண்ணத்தில் பல கிளைகளாக பிரிந்து, கனவு வெளியெங்கும் ஆராற்றிக் கொண்டிருக்க மனதின் வேர்கள் மட்டும் கற்பாறைகளுக்கிடையே நீரென மறைந்திருக்கும் அவளது நினைவுகளை நோக்கியே சென்று கொண்டிருந்தது. நீண்டு கொண்டிருக்கும் நினைவுகளுடன் பயணித்து சனிக்கிழமையை அடைந்தேன்.

காலை பத்து மணிக்குதான் பிரேமின் ஃபிரவுசிங் சென்டருக்கு வரச் சொல்லியிருக்கிறாள், ஆனாலும் நான் ஒன்பது மணிக்கே வந்துவிட்டேன். அப்போதுதான் கடையை நீக்கியிருந்தான், என்னை பார்த்ததும் ஆச்சர்யத்துடன்,,

என்னடா மாப்ள..இந் நேரத்துக்கே "புது மாப்பிள்ளை" மாதிரி ரெடியாகி வந்துட்டே?

இல்லடா..பத்து மணிக்கு இங்க வர்றேன்னு சொல்லியிருக்கா.அதுதான் கொஞ்ச நேரத்திலேயே வந்தா, இங்க நீ இருப்பயா? இல்ல உன் வொய்ஃப் இருப்பாங்களான்னு பாத்துக்களான்னு வந்தேன்..இன்னைக்கு நீதான இருப்ப?

அதுக்கில்லடா..நீ பொறுப்பா இந்நேரத்துக்கு வருவேன்னு தெரிஞ்சிருந்தா உன்கிட்டே சாவிய கொடுத்து கடைய நீக்கச் சொல்லியிருப்பனே..அதுசரி நீ வந்துட்டே, அந்த பொண்ணு கண்டிப்பாவந்துடுமா?

என்னடா..இப்படி திடீர்னு குண்ட தூக்கி போடுறே?

குண்டையும் தூக்குல, ஒல்லியையும் தூக்குல..எதுக்கும் ஒரு போன் பண்ணி கேட்டுடு..என்று குழப்பிவிட்டு அவனது வேலைகளை பார்க்க துவங்கினான்.

காத்திருப்பதா? அல்லது ஒரு போன் செய்து கேட்டு விடுவதா? என்ற குழப்பத்துடனையே எதற்கும் ஒரு 'மெசேஜ்' அனுப்பி கேட்டுவிடுவது என்று முடிவுசெய்து " I AM WAITING LAST TWENTY SIX YEARS FOR THIS MARVELOUS MEETING ....NOW AM AT THE SPOT " என்று மெசேஜ் அனுப்பினேன். கிட்டதட்ட ஆறு யுகங்களை கடந்து தனிமையின் பாலையில் முன்னேறிக்கொண்டிருந்த போது அவளிடமிருந்து " AM ALSO WAITNG FOR TWENTY ONE YEARS..SO U MAY CONTINUED UR WAITING FOR NEXT TEN MINUTES.,I WILL BE THERE ON TIME " பதில் மெசேஜ் வந்தது. ஒருவித ஆசுவாசத்துடன் அதை படித்து முடிக்கையில் கடிகார முட்கள் இரண்டும் இணைந்து ஆறு நிமிடங்களை கடந்து, காத்திருத்தலின் போதான காலத்தின் நீட்சியை உணர்த்தியது.

விடுமுறை தினமான அன்று ஃபிரவுசிங் சென்டர் வழக்கத்தை விட சற்று 'பிஸி'யாகவே இருந்தது. பதினைந்திற்கும் மேற்பட்ட கணிப்பொறிகள் இருப்பதால், அவள் வருகைக்காக ஒன்றிரண்டை காலியாகவே பிரேம் வைத்திருந்தான். "நட்பு காதலுக்காற்றும் சேவை"யில் ஒரு பகுதியாக தனது மேசையும் எனக்கு ஈந்திருந்ததால் அதில் அமர்ந்திருந்த நான் அதிலிருந்த பத்திரிகை ஒன்றில் அவளது பெயரை வித,விதமான வடிவங்களில் எழுதிப்பார்த்து நேரத்தை கடந்து கொண்டிருந்தேன்..

"காதலின் கடிகாரத்தில்,
காலம் சிறிய முள்ளின் வேகத்தில் நகர,
காத்திருப்பவரின் இதயம்
நொடி முள்ளின் வேகத்தில் துடிக்கிறது"...என்று கவிதை போன்றதொரு வஸ்துவையும் கிறுக்கியிருந்ததை பார்த்த பிரேம்,

டேய்..மாப்ள என்னடா கடிகாரத்துல இவ்வளவு விசயமிருக்கா? இல்ல காதலல்ல விசயமிருக்கா?

உனக்கு தெரியாத காதலா? என்னமோ டைம் பாஸ் பண்றதுக்கு கிறுகீட்டு இருக்கேன் நீ வேற...

உன் பிசினெஸ் இருக்கிற பிஸியில, டைம பாஸ் பண்றது ஓவரா இல்லையா?அதுவும் சனிக்கிழமை காலைல..? என என்னை நட்பின் இள வெப்பத்தில் கேலிசெய்து கொண்டிருந்த போதே, திடீரென அறைக்குள் குளுமை பரவத்துவங்கியது.. பிரேம் என்னிடம் கிசு,கிசுத்தான்,

" டேய்..உன் ஆளு வந்தாச்சுடா..!


தொடரும்...
Share/Bookmark

Sunday, May 30, 2010

ஆகு பெயர் (பாகம்-5 )

ஹலோ..ஸ்வாதி..!

ஹலோ, ஃபோன் அட்டென் பண்ணினதும் ஸ்வாதி'னு சொல்றீங்களே எப்படி தெரியும் ஸ்வாதிதான் பேசுவான்னு? எந்த போன் வந்தாலும் இப்படிதான் என்பேர சொல்லிட்டு இருக்கீங்களா..காதல் மன்னன் படத்துல வர்ற மாதிரி..!

ஹா..இதுகூட நல்லாத்தான் இருக்கு..இனி ட்ரை பண்ணலாம்.,என்ன கொஞ்சம் பிரச்சனை வரும் அதான் கொஞ்சம் யோசிக்கணும்

அப்போ ஏதாவது விசயத்துல பிரச்சனைன்னா அத அப்படியே விட்டுடுவீங்க அப்படித்தானே?

ஐயோ..அப்படியெல்லாம் விட முடியுமா? நல்ல விசயத்த கண்டிப்பா விட மாட்டேன்.

பாக்கலாம்..அது சரி இப்போ எங்க இருக்கீங்க?

ஃபிரண்ட் கூட ஒரு வேலையா வந்தேன். என்ன சொல்லுங்க..அன்னைக்கு கடைசியா போன் பண்ணினப்போ கோவிச்சிட்டு கட் பண்ணீட்டீங்க, இனி போன் பண்ணுவீங்களோ, மாட்டீங்களோனு பயந்துட்டு இருந்தேன். நல்லவேளை நீங்களே போன் பண்ணீட்டீங்க..

கோபமெல்லாம் ஒண்ணுமில்ல..சரி, எங்க காலேஜ் பக்கத்துல இருக்கிற ஃபிரவுசிங் சென்டர் தெரியுமா?

தெரியும் சொல்லுங்க.,எதுக்கு கேட்கறீங்க?

ஒண்ணுமில்லை, வர்ற சனிக்கிழமை நான் அங்க வருவேன், ஃப்ரீயா இருந்தா நீங்களும் வாங்க கொஞ்சம் நேர்ல பேசணும்.

நேர்லயா... நான் இப்போ அந்த ஃபிரவுசிங் சென்டர் பக்கத்துலதான் இருக்கேன்

இப்போ வேண்டாம். சனிக்கிழமை காலைல பத்து மணிக்கு வந்துடுங்க நானும் வந்துடுவேன். ஓ.கே இப்போ கட் பண்றேன்.

சற்றும் எதிர்பாராத நேரத்தில் போன் செய்து சிறிது நேரம் நன்றாக பேசுவதும், திடீரென எதிர்பாராத நேரத்தில் போனை 'கட்' செய்து விடுவதும் வாடிக்கையாகிவிட்டதால் இம்முறை கட் செய்தவுடன் சிறிதாக சிரித்துக்கொண்டேன்.

உனக்கு பைத்தியம் புடிச்சிருக்கு சரிதான், அதுக்காக இப்படி தனியா சிரிக்கணுமா?

இப்ப புடிச்சிருக்கிறதெல்லாம் பைத்தியமில்லை, இனிதான் பைத்தியம் அதிகமாக போகுதுன்னு நினைக்கிறேன், வர்ற சனிக்கிழமை நேர்ல பாக்கலான்னு வரச் சொல்றா..அதுவும் இங்க உன்னோட கடைக்கு..!

நீ பேசும்போதே தெரிஞ்சிடுச்சு, இங்க வரச் சொல்றான்ன அடிக்கடி இங்க வந்து போற பொண்ணத்தான் இருக்கணும், லதாவுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும், அதுசரி ஃபிரவுசிங் சென்டர் என்னோட ஃபிரண்டு"து தான்னு சொல்ல வேண்டியதுதானே?

அவளே இது யாருக்கும் தெரிய வேண்டான்னு சொல்லியிருக்கா, இதுல ஃபிரவுசிங் சென்டர் நடத்தறது என்னோட க்ளோஸ் ஃபிரண்டு'ன்னு சொன்ன இங்க மீட் பண்ணவேண்டாம்னு சொல்லிடுவா..

அதான பார்த்தேன், இந்த மாதிரி விசயத்துலதான் பயங்கர விவரமா இருப்பீங்களே..சரி வரட்டும் பாப்போம். நேர்ல பேசும் போதாவது தெளிவா ஒரு முடிவுக்கு வர்ற மாதிரி பேசுடா..சும்மா இப்படியே இழுத்துகிட்டு இருக்காதே..ஆமா அந்த பொண்ணு என்ன வண்டியில காலேஜ்க்கு வரும்?

என்ன பேசறதுன்னே புரியல, இதுல தெளிவா எங்க பேசறது..அவ ப்ளாக் கலர் அக்டிவா'ல வருவா..எதுக்குடா?

இங்க வர்றதுனால லதாவுக்கு பழக்கமான பொண்ணாத்தான் இருக்கும், லதா வீட்லயிருந்து வந்ததும் யாரு, என்னனு விசாரிச்சு பார்ப்போம்.

சரிடா..நான் கிளம்பறேன், நைட்டு போன்ல கூப்பிடறேன் பேசுவோம்.. என்று கூறிவிட்டு பிரேமிடமிருந்து விடை பெற்றேன்.

எதேச்சையாக பிரேமை பார்க்கச் சென்றது..நாங்களிருவரும் அவளைப்பற்றி பேசிக் கொண்டிருக்கும்போதே அவள் போன் செய்தது..பிரேமின் ஃபிரவுசிங் சென்டருக்கே நேரில் சந்திக்க வரச்சொன்னது என அடுத்தடுத்து நிகழ்பவை எல்லாமே, சில நாட்களாக வருந்திக் கொண்டிருந்த எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதே உற்சாகத்தில் அடுத்து வரும் இரு தினங்களையும் கடந்து விடுவது என்ற முடிவுடன் எனது பணிகளில் மூழ்கினேன்.
இரவு பதினொரு மணிக்கு பிரேமிடமிருந்து போன் வந்தது, அனேகமாக அவன் மனைவியிடம் விசாரித்திருப்பான் என்ற ஆர்வத்துடன் போனை எடுத்தேன்.

சொல்லுடா பிரேம்.என்னடா இந்நேரத்துக்கு போன் பண்ணியிருக்கறே?

ஏண்டா தூங்கிட்டயா.?

நான் தூங்கலடா..நீ பேமிலி மேனாச்சே அதுனாலதான் கேட்டேன்.

ஓ.. பேமிலி மேனெல்லாம் நைட்டு போன் பேசக்கூடாதா..அப்போ சரி நான் வேணா காலைல கூப்பிடறேன்

அதுக்கில்லடா..சும்மாதான் கேட்டேன், ஒ.கே விசயத்த சொல்லு

அப்போ நீ என்னோட போன எதிர்பாக்கல..அப்படித்தானே?

ஐயோ சாமி..உன்னோட போன எதிர்பாத்துட்டுதா இருந்தேன் , போதுமா? இப்போ சொல்லு

முடிந்தவரை என்னுடைய பொறுமையை சோதித்து விளையாடிவிட்டு,, தன் மனைவியிடம் விசாரித்து விட்டதாகவும், அவளுக்கு நன்றாக தெரிந்த பெண் தானென்றும் , அவளது வீடு,குடும்பம் போன்ற அனைத்து விசயங்களையும் கூறினான். அவளது விபரங்களை கேட்ட எனக்கு ஆச்சர்யமாகவும் அதே சமயம் சற்று அதிர்ச்சியாகவும் இருந்தது.


தொடரும்..


ஆகு பெயர் - 4
Share/Bookmark

Friday, May 21, 2010

ஆகு பெயர் (பாகம்-4)


நன்றாக பேசிக்கொண்டிருந்தவள் திடீரென இணைப்பை துண்டித்து விட்டதால், அடுத்து அவளுக்கு போன் செய்வதா,வேண்டாமா என்ற குழப்பத்தில் அடுத்த இரண்டு நாட்களும் தவித்து கொண்டிருந்தேன். "சுயம் இழத்தல்" இதுதான் காதலிக்க துவங்கவும், காதலில் வெற்றி பெறுவதற்கும் மூல காரணியாக இருக்கக் கூடியது. கடந்த எட்டு மாதங்களாக என்னை அறியாமலே சிறிது,சிறிதாக என்னை இழந்து கொண்டிருந்ததாலோ என்னவோ, தூரத்தில் நின்று பார்க்க கூடிய அளவில் ஒருதலையாய் நீண்டு கொண்டிருக்கும் 'எனது' காதலை, இருவருக்குமான "எங்கள்" காதலாக மாற்றுவதற்குரிய பாதையில் என்னை பின் தொடர்ந்து வரத் துவங்கியிருந்த அவள், சில வாரங்களாக போன் செய்து பேசுவதும், அவ்வப்போது குறுந்தகவல்கள் அனுப்புவதும் என சற்று உற்சாகமான மனநிலையை தந்திருந்தாள். ஆனால் கடைசியாக அவளுடன் நடந்த உரையாடல் எங்களுக்கிடையேயான தூரத்தை அதிகப்படுத்தியது போல் அமைந்துவிட்டாலும், இடையிடையே அவள் பேசிய சில சொற்கள், காதல் பாதையில் என்னுடன் இணைந்து வருவதற்கான சாத்தியங்கள் இன்னும் இருப்பதையும் உணர்த்தியது.

பொதுவாக எனது குடும்பம், தொழில் போன்ற தனிவாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்கு யாரிடமும் பெரிதாக விவாதித்து ஆலோசனைகளை பெற்றதில்லை. மிகப்பெரிய நட்பு வட்டத்தை கொண்டிருந்தாலும், தகவல் என்ற அடிப்படையில் நெருங்கிய நண்பர்களிடம் பிரச்சனைகளை தெரிவிப்பதோடு சரி. நம்மிடம் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் உடனடியாக தெரிந்துகொள்வது நமது குடும்பத்தினரும், நண்பர்களும்தான், அவ்வகையில் சில நெருங்கிய நண்பர்கள் என்னிடம் ஏற்பட்டிருந்த மாற்றத்தை உணர்ந்திருந்தாலும் யாரும் அது குறித்து எதுவும் கேட்கவில்லை. ஆனால் இப்போதுள்ள மன அழுத்தத்தில் எவரிடமாவது என் காதல் பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று தோன்றியது.

காதல் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது என்ற விசயத்தில், நான் இதுவரை கேட்பவனாகவே இருந்துள்ளேன். பல நண்பர்கள் தங்கள் அனுபவங்களையும், புலம்பல்களையும் என்னிடம் சொல்லியதுண்டு. அவர்களில் முக்கியமான நண்பன் பிரேம்..எங்கள் நண்பர் குழாமின் காதல் மன்னன், கல்லூரி நாட்களிலிருந்தே காதலித்து, பல போராட்டங்களை தாண்டி காதலித்த பெண்ணையே, நண்பர்களின் உதவியுடன் திருமணம் செய்துகொண்டவன். அதுவுமில்லாமல் என்னவள் படிக்கும் கல்லூரிக்கு அருகிலேய சொந்தமாக ' ஃபிரவுசிங் சென்டர் ' வைத்திருப்பவன். இவ்வளவு நாட்களாக எனக்கும், அவளுக்குமிடையே மட்டும் நடந்து கொண்டிருக்கும் கண்ணாமூச்சி விளையாட்டை பிரேமிடம் பகிர்வது என முடிவு செய்து அவனது கடைக்குசென்றேன்.

மாப்ள..வாடா,வாடா எங்க இந்த பக்கம் காத்து அடிக்குது..! பிரேமின் வரவேற்பில் வழக்கத்திற்கு மாறான துள்ளல் தெறித்தது.

என்னடா நாங்கெல்லாம் உன்னை பார்க்க வரக்கூடாதா..? என்றேன் சிரித்தபடியே

யாரு சொன்னா வரக்கூடாதுன்னு..ஆனா அடிக்கடி இந்த ஏரியாவுக்கு வந்துட்டு இங்க வாராமலே போய்டறே, இன்னைக்கு அதிசயமா கடைக்கு வந்துட்டே..அதுவும் இந்த நேரத்தில, வழக்கமா காலைல காலேஜ் டைம்லதான வருவே அதான் கேட்டேன்.

இல்லடா மாப்ள, இங்க வரலானுதான் நினைப்பேன், ஆனா உன் வொய்ஃப் இருப்பாங்க அத அப்படியே போய்டறது..என்று சமாளித்தேன்.

அதனால என்னடா,அவளும் உனக்கு ஃபிரண்டுதானே...சரி அதவிடு., என்ன விஷயம்,..ஆமா என்ன அடிக்கடி காலேஜ் பக்கமாவே 'குட்டி போட்ட பூனையாட்டம்' சுத்திகிட்டு இருக்கியாமே என்ன விசேசம்..லதா கூட நாலஞ்சு தரம் உன்ன பாத்தேன்னு சொன்னா.!

"அஹா அந்த பொண்ணு போன்ல நம்மள திட்டினது சரிதான்..கொஞ்சமில்லை,,ரொம்பத்தான் ஓவரா பண்ணியிருக்கோம்" என்று மனதிற்குள் நினைத்துகொண்டு இனி வெளிப்படையாக சொல்லிவிடுவது நல்லது என் முடிவு செய்து அவளை முதன்முதலில் பார்த்ததில் தொடங்கி கடைசியாக தொலைபேசியில் பேசியது வரை ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தேன்.

அப்போ, கடைசியா ஸாருக்கும் லவ்வு வந்துடுச்சு. அது சரி லவ் பண்ணுனதுதான் பண்ணின ஒரு ரெண்டு,மூணு வருசத்துக்கு முன்னாடி பண்ணியிருக்க கூடாதா..கல்யாண வயசுல எதுக்குடா லவ்வு?

அடப்பாவி லவ் பண்றதே கல்யாணம் பண்ணதாண்ட..நீயே இப்படி சொன்னா எப்பிடிடா..?

உன்ன லவ் பண்ண வேண்டான்னு சொல்லலடா, உங்க வீட்டுல உனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பாத்துட்டு இருக்காங்க, இதுல இன்னும் அந்த பொண்ணுக்கு உன்ன புடிச்சிருக்கா,இல்லையான்னு தெரியாதுன்னு சொல்ற,,"இப்படி தலையும் தெரியாம, வாலும் தெரியாம லூசு" மாதிரி பண்ணினா.. இது எங்க போய் முடியும்?

டேய் நீ ரொம்ப லேட்டுடா ..ஏற்கனவே அவ என்ன லூசுன்னு சொல்லிட்டா..இப்போ நீ வேற அதையே சொல்ற, எனக்கே சந்தேகமாயிருக்கு பைத்தியமாயிட்டேனோ என்னவோ..

உனக்கு புடிச்சிருக்கிறது வெறும் பைத்தியம் இல்லடா..காதல் பைத்தியம்.

பேசிக்கொண்டிருந்த போதே எனது கைப்பேசி "உன் பேர் சொல்ல ஆசைதான்" என்ற பாடலை ஒலித்தது. பர,பரப்பாகிய நான்,
'மாப்ள அவதாண்டா போன் பண்றா' என்றேன்.

எப்படிடா ஃபோன பாக்கெட்ல இருந்து எடுக்காமையே அவதான்னு சொல்ற..!

இந்த பாட்ட அவளுக்கு மட்டுந்தான் ரிங்டோன செட் பண்ணியிருக்கேன்..

அதுக்குள்ளே தனி ரிங்டோனா..ஒ.கே , ஒ.கே ரெண்டாவது தரம் போன் அடிக்குது, சீக்கிரம் அட்டென் பண்ணி தெளிவா பேசு.. என்று பிரேம் அவசரப்படுத்தினான்.
ஆகு பெயர் 1 2 3
Share/Bookmark

Tuesday, May 4, 2010

ஆகு பெயர் (பாகம் - 3)காத்திருத்தல் நம் வாழ்வில் பல தருணங்களில் நிகழ்கின்ற ஒரு நிகழ்வுதானெனினும், சில தருணங்களில் காத்திருப்பதென்பது நம்மை குறித்து நமக்கே தெரியாத பல ரகசியங்களை வெளிக்கொணர்ந்து விடுகிறது. அவளாக போன் செய்து பெயரையும், கைப்பேசி எண்ணையும் தெரிவித்துவிட்டு , நீங்களாக போன் செய்ய கூடாது என்று கண்டிப்பாக கூறியிருக்கும் போது, ஏதேவொரு உந்துதலில் குறுந்தகவல் ஒன்றை அனுப்பிவிட்ட போதும், அதற்கான பதிலை எதிர்நோக்கி காத்திருக்கும் போதுதான் தெரிந்தது, என் பொறுமையின் தூரம் எவ்வளவு குறுகியது என்று.

காதல் வயப்படும் வரை, எதற்காகவும் 'காத்திருத்தல்', "உறவுகளை பேணுதல்" போன்றவை என்னை பொறுத்தவரை மிகச்சிறியதொரு வட்டமாகவே இருந்து வந்திருக்கிறது. இதுபோன்ற எந்தவொரு வட்டங்களுக்குள்ளும் இருக்க விரும்பாத நான் இப்போது "காதல்" எனும் எல்லைகளற்ற வட்டத்திற்குள் நானாகவே நுழைந்து, பிடித்தமான ஒரு இதயத்தின் கண பரிமாணங்களை அறிய முயன்று கொண்டிருக்கிறேன். இந்த ஆரம்ப முயற்சிகளின் பலனாக அவளது கைப்பேசி எண்ணும், பெயரையும் அறிந்த பின்பு மனது மேலும் உற்சாகமடைந்து, காதல் பயணத்தின் வேகத்தை அதிகரித்தது. கடந்த சில மாதங்களாக கண்ணுக்கு புலப்படாத மனச்சுழல் ஒன்றில் சிக்கி மூழ்கிக்கொண்டிருந்த நிலை மாறி சற்றே நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

அன்றைய தினமும், அடுத்த இரு தினங்களிலும் பல்வேறு பணிச்சுமைகளின் மத்தியிலும் முதன்முதலாக அனுப்பிய குறுந்தகவலுக்கு ஏதேனும் பதில் வருமா என்று அடிக்கடி கைப்பேசியை பார்த்துக்கொண்டிருந்தேன். புதிதாக பதிந்த அவளது கைப்பேசி எண்ணையும் காரணங்களின்றி அடிக்கடி பார்த்து கொண்டேன். காதல்வயப்படும் எல்லோரிடமும் நிகழும் ரசாயன, பௌதீக மாற்றங்கள் எனக்குள்ளும் நிகழத் துவங்கியது. எளிதில் உணர்ச்சிவயப்படும் சுபாவமுடைய என்னை, அவளது காதலும், காதல் சார் நிகழ்வுகளும் சிறிது,சிறிதாக ஆக்கிரமித்து இதுவரையில் என் தனி வாழ்வில் இடம்பிடித்திருந்த விருப்பங்கள், ரசனைகளின் பட்டியலை மெல்ல,மெல்ல மாற்றத்துவங்கியது.

முன்பின் அறிமுகமில்லாத ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட நேரும்போது அவளை பற்றிய மற்ற தகவல்களை அறிந்து கொள்வதைக் காட்டிலும் அவளது பெயரை அறிந்துகொள்வதில் ஏற்படும் மகிழ்ச்சி பிரத்யேகமானது. பல மாதங்களாக பல்வேறு முயற்சிகள் செய்து கண்டறிய முடியாத அவளது பெயரை, அவளே சொல்லி அறிந்து கொண்ட பின்னர், அவள் மீதிருக்கும் அன்பு அவளது பெயர் மீதும் ஏற்பட்டுவிட்டது. புதிதாக தன் பெயரை எழுதிப்பழகிய குழந்தை, கிடைத்த இடங்களிலெல்லாம் தன் பெயரை கிறுக்கி வைப்பதை போல், அடிக்கடி அவளது பெயரை கிடைத்த இடங்களிலெல்லாம் யாரும் அறியாத வண்ணம் எழுதி பார்த்துக்கொண்டேன். அதிகாலை பனி படர்ந்திருக்கும் சன்னல் கண்ணாடி துவங்கி, நிறுத்தி வைக்கபட்டிருக்கும் தூசு படிந்த கார் கண்ணாடி வரை சகல இடங்களிலும் அவளது பெயரை காதல் சின்னமாக வரைந்தேன். எனக்கு தெரிந்த பெண்பாற் பெயர்கள் அனைத்தும் "ஸ்வாதி"யாகவே மாறி விட்டிருந்தது. அடுத்து வந்த சில தினங்கள் பல்வேறு நட்சத்திரங்களில் வந்த போதும் 'ஸ்வாதி' நட்சத்திரத்திலான என் தினம் நான்கு நாட்கள் கழித்து வந்தது.

பூமியில் அடர்ந்திறங்கும் வெயில் தன் வெம்மையை, நிலவிடம் இழக்க துவங்கும் ஒரு அந்திப்பொழுதில் அவளிடமிருந்து என் கைப்பேசிக்கு அழைப்பு வந்தது.

ஹலோ...

ஹலோ, சொல்லுங்க ஸ்வாதி.!

அட ..இன்னும் என் பெயர மறக்காம இருக்கீங்களே..

என்ன காமெடி பண்ணறீங்களா? உங்க பேர மறக்கிறதா..இந்த நாலு நாளா உங்க பேர என்னென்ன பண்ணிருக்கிறேன் தெரியுமா?

ஹா..உங்க வீட்டு ரேசன் கார்டுல என் பேரையும் சேத்துடீங்களா..?

அதுமட்டுந்தாங்க இன்னும் செய்யல..

கடவுளே..வேற என்ன பண்ணுனீங்க, லூசு மாதிரி ஏதாவது செஞ்சு இந்த விஷயம் யாருக்காவது தெரிஞ்சிடப்போகுது!

என்னங்க திடீர்னு என்ன லூசுன்னு சொல்லிடீங்க..!

சாரி,சாரி..அதுக்கில்ல இப்படி நினைச்சதெல்லாம் பண்றீங்களே, உங்க வீட்ல தெரிஞ்சா ஒன்னும் பிரச்சனை இல்லையா?

ஹலோ. உங்களுக்கு யார் சொன்னா,நான் நினைச்சதெல்லாம் பண்றேன்னு..நான் ஒன்னே,ஒண்ணுதான் நினைச்சேன், அதமட்டுந்தா பண்ணிட்டு இருக்கேன்..அது எங்க வீட்டுக்கு தெரியும்,ஆமா அது உங்களுக்கு என்னனு தெரியுமா?

எனக்கு தெரியாமதான் இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கேனா?

உங்களுக்கு என்ன தெரியும்?

நல்லா பேசறீங்க..முதல்ல என்னை வாங்க,போங்க'னு கூப்பிடாதீங்க வா,போ'ன்னே சொல்லுங்க

ஒ.கே..வா 'ன்னு மட்டும் சொல்லுவேன்..உன்னை "போ" ன்னு எப்போவும் சொல்ல மாட்டேன். அதுசரி நான் நினைச்சதை நீயும் நினைச்சயா?இல்லையா ?

இந்த விசயத்துல, நான் நினைச்சு எந்த காரியமும் நடக்க போறதில்லை..ஸோ நீங்களும் எதுவும் தேவையில்லாம நினைக்காதீங்க

பின்ன எதுக்கு எனக்கு போன் பண்ணி பேசிட்டு இருக்க?

தேவையில்லாம எதுவும் கற்பனை பண்ண வேண்டாம்னு சொல்லத்தான் போன் பண்ணினேன். சொல்லியாச்சு..கட் பண்றேன். என்றபடி திடீரென இணைப்பை துண்டித்துவிட்டாள்.

எல்லைகளற்று நீண்டு கொண்டிருக்கும் காதல் சாலையின் துவக்கம் பெரும்பாலும் நிழல் தரும் மரங்களாலும், அத்தகைய மரங்கள் உதிர்க்கும் பூக்களாலுமே அமைய பெற்றிருக்கும். கண்ணில் படுவதெல்லாம் காதலை வாழ்த்தி வரவேற்கும் வரவேற்பு வளையங்களாகவே காட்சியளிக்கும் பாதையில் ஆரம்ப தடைகளை தாண்டி காதல் பயணத்தை துவங்கியிருந்த எனக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. தன் வெப்ப கரங்களால் உலகையே சுழற்றிக் கொண்டிருக்கும் சூரியன், மாலை நேரத்து நிலவிடம் தன்னை இழப்பது போல் நானும் என்னை இழக்க துவங்கியிருந்தேன்.


ஆகு பெயர் (பாகம்-1 )

ஆகு பெயர் (பாகம்-2 )
Share/Bookmark