Sunday, January 24, 2010

கனவில் வந்த சிறகு.

பறவையின் வானம்
சிறகுகளில் துவங்கியது.
வானத்தை வசப்படுத்திய
செம்பழுப்பு சிறகுகள்
உயரங்களின் களைப்பில்
உதிரத் துவங்கியது (ம்)
'அக'த்துள் அடங்கியது
பறவையின் வானம்.


உயிர் பிழைத்தல் வேண்டி
சிறகுகள் பட,படக்க
பயம் வழியும் பார்வையில்
கருணையை வேண்டுகிறது
ஒற்றைப் புறா..
லாவகமாய் தூக்கிச்செல்லும்
பருந்தின் நாசியில்
நிதானமாய் நிரம்புகிறது
பச்சை ரத்தத்தின் வாசம்.


கனவினில் வந்த
பறவையின் இறக்கையிலிருந்து
விழுந்தது சிறகொன்று..
காற்றின் தடங்களில்
மிதந்த ஒற்றைச்சிறகை
கைக்கொள்ள கனவுவெளிகளில்
அலைந்து திரிந்தேன்
சிறகின் மென்மையை
உணரும் முன்னமே
கலைந்து விடிந்தது இரவு
.
Share/Bookmark

Wednesday, January 20, 2010

சட்டம் - கூர் மழுங்கும் ஆயுதம்.

நீண்ட,நெடிய சமூக மற்றும் அரசியல் வரலாற்றினையுடைய இந்தியாவில் "சட்டம்" மற்றும் "நீதி" குறித்து புராண, இதிகாச நூல்கள் மூலமும், பல்வேறு புனைவுக்கதைகளின் வாயிலாகவும் பலதரப்பட்ட சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்ததையும், தவறான நீதி வழங்கியதற்காக தனது ஆட்சியையும், உயிரையும் துறந்த மன்னனின் கதைகளையும், தாய்ப்பசுவின் கண்ணீரை துடைக்க தவறு செய்த தன் மகனையே தேரில் இடறி தண்டித்த அரசனின் "நீதி பரிபாலன"த்தையும் படித்துள்ளோம்.

ஆங்கிலேய ஆட்சி காலத்தில் பின்பற்றப்பட்ட நவீன சட்டமுறைகளும் ஆங்கிலேயர்களின் லாபத்திற்காகவும், இந்தியர்களை அடிமை படுத்துவதற்க்காகவுமே பயன்படுத்த பட்டது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, மக்களாட்சி முறையில் தேர்ந்துடுக்கபட்ட எந்தவொரு அரசும் அரசியலமைப்பு சட்டத்தை அடிப்படையாக கொண்டு நாட்டை நீதியின் வழியிலேயே ஆள்வதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. டாக்டர். அம்பேத்கர் தலைமையில் வரையறுக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தில், ஆள்பவர்களின் தலையீடு இல்லாமல் தன்னிச்சையான பல சிறப்பு அதிகாரங்களை கொண்டு பல்வேறு மட்டங்களில் செயல்படும் இந்திய "நீதித்துறை" சாமானிய மக்களும் சமமான நீதி பெற வேண்டுமென்ற உயரிய நோக்கத்திற்காக அமைக்கப்பட்டது. தனிமனிதர்கள் தங்களது உரிமைகளை பெறுவதில் ஏதேனும் தடைகள் இருப்பின் நீதியின் வாயிலாக அரசாங்கத்தையும் எதிர்க்கும் அளவிற்கு 'கடமை'யுடன் கூடிய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு இந்திய சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் நாடு முழுவதும் சுமார் மூன்று கோடியே பதினோரு லட்சம் வழக்குகள் நிலுவையிலுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் பற்றாக்குறை, ஒருங்கிணைக்கப்படாத நீதிமன்றங்கள், குழப்பமான குற்றப்பிரிவுகள் என பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டு, தேங்கியிருக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க கீழ்க்கண்ட வழிகளையும் பரிந்துரைத்துள்ளது.
1.நீதிபதிகளை அதிகப்படுத்துதல்,காலியாகவுள்ள நீதிமன்ற பணியிடங்களை நிரப்புதல்.
2.சமரசம் போன்ற பிறவழிகளை ஊக்கப்படுத்துதல்.
3.பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழிருக்கும் வழக்குகளை குறைந்த பொதுப்பிரிவுகளின் கீழ் கொண்டுவருதல்.
4.நீதித்துறையை கணினிமயமாக்குதல்.
5.நடைமுறை படுத்துவதற்கு எளிதான புதிய சட்டங்களை இயற்றுதல்.
குற்றங்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான வழிமுறைகளை ஆராயும் அரசு குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கென இருக்கும் வழிகளை கடுமையாக்காமல் மெத்தனமாகவே செயல்படுகிறது.

நாடெங்கும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திய "ருச்சிகா" (தற்)கொலை வழக்கில் இருபது ஆண்டுகளாகியும் சரியான தீர்ப்பு வழங்கப்படாததும், காவல்துறையின் உயர் பதவியிலிருக்கும் ஒருவர் தனது பதவியையும், அதிகாரத்தையும் தவறான வழிகளில் பயன்படுத்தி குற்றத்தை மறைத்து வந்ததும், வழக்கறிஞரான அவரது மனைவி வழக்கை திசைதிருப்ப தவறான சாட்சியங்களை தயார் செய்ததும் நீதித்துறையில் மலிந்துவிட்ட ஊழலுக்கு மோசமான உதாரணமாகும்.

குற்றங்கள் சரியான முறையில் நிரூபிக்கப்பட்டு அதற்கென வழங்கப்படும் தண்டனைகள் கடுமையாக இல்லாததும், குற்றவாளிகள் பல்வேறு வழிகளில் தங்கள் தண்டனைகளிலிருந்து தப்பி சுதந்திரமாக உலவுவதும் மென்மேலும் குற்றங்கள் அதிகமாவதற்கே வழி செய்கிறது. மரணதண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் தவறான வழிகளில் பயன்படுத்த படுகிறது என்ற காரணங்களுக்காக அவற்றை தவிர்க்கும் நீதித்துறையும், மனித உரிமை ஆர்வலர்களும்,, குற்றங்களால் பாதிக்கப்படுவதும் மனித உயிர்களே என்பதால் நீதித்துறையில் லஞ்ச,ஊழல் போன்ற முறைகேடுகள் நடைபெறாமல் தவிர்ப்பதற்காக போராட முன்வரவேண்டும்.

"குற்றங்களுக்கு எதிரான வலிமைமிக்க ஆயுதம் சட்டம்" என்பதை சாமானிய மக்களும் நம்பி சட்டத்தின் வாயிலாகவே தங்கள் உரிமைகளை பெறும்நிலை வரும்போதுதான் சட்டத்தின் வழியில் அமைக்கப்பட்ட "ஜனநாயக"மும் நிலைக்கும்.









Share/Bookmark

Sunday, January 17, 2010

ஜோதிபாசு- சிவப்பு சூரியன்.

முதுபெரும் கம்யூனிஸத் தலைவர் "ஜோதிபாசு" அவர்கள் தனது 95ம் வயதில் காலமானார். புகழ் பெற்ற இந்திய தலைவர்களில் தவிர்க்க முடியாத இடத்தை தக்கவைத்திருந்த இவர் இந்திய இடதுசாரி வரலாற்றின் "சிவப்பு சூரிய"னாக விளங்கினார்.



"சே" அவர்களுக்கென எழுதப்பட்ட இக்கவிதை "ஜோதிபாசு" அவர்களின் சேவைக்கும் பொருந்தும்...

எனக்கொரு சகோதரன் இருந்தான்
நான் உறங்கி கொண்டிருந்தபோது
அவன் மலைகளில் அலைந்தான்
என் வழியில் நான் அவனை நேசித்தேன்,
அவனிடமிருந்து அவன் குரலை பெற்றுக்கொண்டேன்
நீர் போல சுதந்திரமானது அது
சில சமயங்களில்
அவன் நிழலருகில் நான் நடக்கிறேன்
நாங்கள் சந்தித்துகொண்டதே இல்லை
நான் உறங்கிகொண்டிருந்த போது
என் சகோதரன் விழித்திருந்தான்
இரவுக்கு அப்பால் தான் தேர்ந்த நட்சத்திரத்தை
அவன் எனக்கு காட்டுகிறான்
நான் உறங்கும்போதும்...

- யூலியோ கோர்த்தஸர்

Share/Bookmark

Friday, January 8, 2010

சலனமில்லா நிகழ்வு.



காலை நேரங்களில்
உயர் மற்றும் குறை ரத்த அழுத்தக்காரர்களாலும்,
மாலை பொழுதுகளில்
முதிர் மற்றும் விடலை காதலர்களாலும்
பிதுங்கி கொண்டிருந்த
இந்த 'நியான்விளக்கு' பூங்கா.,
உனது முதல் வருகைக்கு பிறகு
மிதக்க துவங்கியிருக்கிறது.
உனது வருகையை
நமது சந்திப்புகளாக்கும்
சாத்தியங்களை தேடி
மிதக்க பழகியிருந்தேன் நானும்,
நியான் விளக்கொளியையும்
மங்கச்செய்யும் உன் ஒளியில்
மரித்து விட்டிருந்ததென் விட்டில்மனம்..

மரிப்பதும்,மிதப்பதும்
(அகச்)சலனங்களுடன் நிகழ..
சலனமில்லாமல் நிகழ்கிறது இக்கவிதை..

Share/Bookmark

Tuesday, January 5, 2010

நினைவுகளின் பிரிகை


நினைவுகளின் நீர்த்துளிகளால்
ஆனது நம் காதல்நதி...!
கட்டற்று, கரைகளற்று
பாயும் நின் நினைவலைகளில்
அடித்து செல்லப்படுகிறது
வேர்களற்ற எனதுயிர்.


உன் நினைவுச்சிதறல்களை
சேகரித்து செய்தேன்
ஒரு 'கலைடாஸ்கோப்'..
சொற்களின் வெப்பத்தில்
இயல்பாய் நிகழ்ந்தது
நினைவுகளின் பிரிகை
நிஜத்தின் நீட்சியாய்
கருப்பு,வெள்ளை பிம்பங்கள்.


முடிந்திருந்த
இந்த வேட்டையிலும்
பலி எனது உயிர்தான்..
தப்பிப்பிழைத்தல்
சாத்தியமாவதேயில்லை,
"வலியது"தான் உன் நினைவுகள்.




Share/Bookmark