Saturday, February 27, 2010

இந்தியா அடமானத்திற்கு.(அயலாருக்கு முன்னுரிமை)


சீச்சீ... சிறியர் செய்கை!

இந்த வார்த்தைகளை விட விஷம்தோய்ந்தவை வேறு எதுவும் இருக்க முடியுமா என்பது தெரியவில்லை. இதை விட வேறு வார்த்தைகள் கொண்டு, மத்திய அரசை யாரும் விமர்சிக்க(திட்ட) முடியாது. ஆம்! ஆண்மைத்தனமான தினமணி நாளிதழின் நேற்றைய (27 பிப்.,) தலையங்கம் அப்படித்தான் இருந்தது. நமது கையாலாகாத இந்திய அரசை ஆள்பவர்களின் முகத்திரை மீது காறி உமிழ்ந்திருக்கிறது அந்த தலையங்கம். கூடுதல் வார்த்தைகள் எதுவும் தேவையில்லை என்பதால், அந்த தலையங்கத்தை அப்படியே தருகிறோம் கீழே.

சுதந்திரம் பறிபோகிறது...?

மத்திய அரசு ஏன், எதற்காக இப்படியெல்லாம் நடந்து கொள்கிறது? அப்படி என்னதான் நமது இந்திய அரசுக்கு நிர்பந்தம்? யாருடைய வற்புறுத்தலின் பேரில், யாருடைய நன்மையைக் கருதி இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்து வருகிறது? இதுபோன்ற கேள்விகளை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் எழுப்பியே தீர வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த சிலநாள்களாக நமது அரசின் சில செயல்பாடுகள் மக்களாட்சித் தத்துவத்துக்கும், தனிமனித சுதந்திரத்துக்கும் எதிரானதாக அமைந்திருப்பதை நம்மில் பலர் உணராமல் இருந்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, மிகவும் ரகசியமாக சில உடன்பாடுகள் கையெழுத்திடப்பட இருக்கின்றன. இந்தியாவின் வருங்காலத்தையே பாதிக்கும் இந்த உடன்பாடுகளுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் தரப்பட்டிருப்பது நம்மிடம் இருந்து மூடி மறைக்கப்பட்டிருக்கிறது.
விலைவாசி உயர்வு, நிதி நிலை அறிக்கைகள், இடைத்தேர்தல்கள் என்று அன்றாட அரசியல் நிகழ்வுகளை மட்டுமே மையப்படுத்திச் செயல்படும் நமது எதிர்க்கட்சிகளும் சரி, அவ்வப்போதைய பரபரப்புகளை விலைபேசி, தங்கள் வாடிக்கையாளர்களையும், வாசகர்களையும், தேசத்தை எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்னைகளைப் பற்றிச் சிந்திக்கவே அனுமதிக்காமல் செயல்படும் ஊடகங்களும் சரி, மத்திய அரசின் முடிவுகளால் கேள்விக்குறியாகப் போகும் இந்திய விவசாயிகளின் வருங்காலத்தைப் பற்றி கவலையே இல்லாமல் இருப்பது அதைவிட அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த வாரம் அமெரிக்காவுடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை வெளியில் தெரியாத வண்ணம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. அடுத்த மாதம் கையொப்பமிடப்பட இருக்கும் விவசாயக் கூட்டுறவு மற்றும் உணவுப்பாதுகாப்பு ஒப்பந்தத்தின் படி விவசாய விரிவாக்கத்தில், தனியார்மயத்தை புகுத்துவதும் இந்திய வேளாண்மையில் அமெரிக்க விவசாயப் பன்னாட்டு நிறுவனங்கள் பங்கு பெறுவதும் அனுமதிக்கப்பட இருக்கிறது.

அமெரிக்காவில் விவசாயம் என்பது வியாபாரம், இந்தியாவிலோ விவசாயம் என்பது வாழ்வாதாரம். இந்திய விவசாயி வியாபார நோக்கில் தனதுவயலில் உழுது பயிரிட்டு சாகுபடி செய்வதில்லை. தனது வயிற்றுப் பிழைப்புக்காக, வாழ்வாதாரமாக விவசாயத்தில் ஈடுபடுகிறார்.
இவரது விவசாயம் லாபநோக்கில் நடத்தப்படவில்லை என்பதைக் காரணம் காட்டி, இந்த விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் மொத்தமாக வாங்கி, லாபகரமாக விவசாயம் செய்ய வழிவகுப்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம். மேலும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் உடமையாகி விட்ட நிலங்களில் பயிரிடுவதை யார் தடுக்க முடியும்? இந்திய அமெரிக்க விவசாய அறிவுசார் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் கர்க்கில், மான்சாண்டோ போன்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளை உற்பத்தி செய்யும் அமெரிக்க தனியார் பன்னாட்டு நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்க வழிகோலப்பட்டுள்ளது.

இந்த அமைப்புகளில் இவர்கள் உறுப்பினர்களானால், நேரடியாகவே அரசின்மீது தங்கள் செல்வாக்கைச் செலுத்துவது தவிர்க்க முடியாததாகி விடும். இத்துடன் முடிந்து விட்டது என்று நினைத்து விடாதீர்கள். ஒரு சர்வாதிகார ஆட்சியில் கூட நினைத்துப்பார்க்க முடியாத ஒரு ராட்சத சட்டத்தையும் இந்த பன்னாட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை வினியோகம் செய்யும் நிறுவனங்கள் நமது ஆட்சியாளர்களின் உதவியுடன் நம்மீது திணிக்க இருக்கிறார்கள். உயிரி தொழில்நுட்பவியல் ஒழுங்காற்று ஆணையச் சட்டம் ஒன்றை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? நம்மை விடுங்கள். நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் கவலைப்படுகிறார்கள்? முறையான சாட்சியம் அல்லது விஞ்ஞான ஆய்வின் அடிப்படையில் அல்லாமல் மரபணு மாற்ற விதைகள் போன்ற புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பற்றி தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுவோர் மீது இந்தச் சட்டம் பாயும். இந்தச் சட்டமுன்வரைவின்13(63)வது பிரிவின் படி புதிய அறிமுகங்களுக்கு எதிராக தக்க ஆதாரம் இல்லாமல், பிரசாரம் செய்பவர்கள் குறைந்தது ஆறு மாதம் முதல் ஓராண்டு சிறைத் தண்டனை பெறுவதுடன், இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவார்கள்.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித் தொழில்நுட்பவியில் துறையினரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்தச் சட்டமுன்வரைவின் 27(1) பிரிவின் படி, மரபணு மாற்றப்பட்ட பொருள்களின் ஆராய்ச்சி, அனுமதி போன்ற விஷயங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பார்வைக்கு உள்படுத்தப்படுவது மறுக்கப்படுகிறது.
மேலும், மரபணு தொடர்பாக எந்தவொரு மாநிலத்தின் முடிவையும் நிராகரிக்கும் உரிமை, உயிரித் தொழில்நுட்பவியல் துறையால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவுக்கு இருக்கும் என்கிறது இந்தச் சட்டமுன்வரைவு.
இப்போதல்லவா தெரிகிறது ஏன் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விஷயத்தில் பின்வாங்கினார் என்பதும், தற்காலிகமாக கைவிடப்பட்டது என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தார் என்பதும். இப்போதல்லவா தெரிகிறது பிரதமர் மன்மோகன்சிங் ஏன் மரபணு மாற்றப்பட்ட பொருள்கள் மீதான முடிவு தற்காலிகமானதுதான் என்று அறிவித்தார் என்பது. இந்த ஆட்சியும் அரசும் யாருக்காக நடைபெறுகிறது? இவர்கள் இந்தியாவை என்னதான் செய்யக் கருதுகிறார்கள்? தனிமனித உரிமைக்கு, எதிர்ப்புக்குரல் எழுப்புவதற்கு இந்தியக் குடிமகனுக்கு உரிமை மறுக்கப்படும் அளவுக்கு நமது ஆட்சியாளர்களின் மரபணு மாற்றப்பட்ட அவலநிலையைக் கண்டு, நமது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஒருவருக்குக் கூட எதிர்ப்புக் குரல் எழுப்பத்துணிவில்லையா? இல்லை இவர்களும் விலைபேசப்பட்டனரா?
பாரதியின் பாஞ்சாலி சபதம்தான் நினைவுக்கு வருகிறது. ""கோவில்பூசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல்போலும்... வாயில் காத்து நிற்போர் வீட்டை வைத்து இழத்தல் போலும்...'' சீச்சீ... சிறியர் செய்கை!

நன்றி: தினமணி


Share/Bookmark

Friday, February 26, 2010

முத்தக்கதை


ன்றைப் போல்
ஒன்றிருப்பதில்லை
பூக்களும், முத்தங்களும்..

றிக்க படாமலே
மலர்ந்து, உதிர்கின்றன
நமது முத்தப்பூக்கள்..

ன்னை காட்டிலும்
இம்சையானவை
உன் முத்தங்கள்..

ரவுகளில் ஒளிர்ந்து இம்சிக்கும்
உன் முத்த நட்சத்திரங்கள்
பகல்களில் மறைந்து இம்சிக்கின்றன..

மௌனங்களின் ஆழத்தில்
திறக்காமல் கிடக்கின்றன
முத்தச் சிப்பிகள்..


தூங்க மறுக்கும் விழிகள்
பழகிவிட்டது
முத்தக்கதை கேட்டு..

Share/Bookmark

Tuesday, February 23, 2010

ஆணியே புடுங்க வேண்டாம்...
நமது கிராமப்புறங்களில் வெட்டிவேலை செய்பவர்களை குறித்து கிண்டலடிக்கும் பிரபலமான பழமொழி ஒன்று உண்டு " "கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும்..கிழவிய தூக்கி மனைல வைக்கறேன்னு"...அனேகமா, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் புடுங்கறது எல்லாமே (மக்களுக்கு) தேவையில்லாத ஆணியாகத்தான் இருக்கும். பெரும்பாலான தமிழக அரசியல் தலைவர்கள் மக்கள் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும் தடையாக பல்வேறு பிரச்சனைகள் "குட்டிச்சுவர் " போல மறைதுக் கொண்டிருக்கும்போது அதை தகர்த்து முன்னேற்றத்திற்கான பாதையை சரிசெய்யாமல், அந்த குட்டிச்சுவரில் அடிக்கபட்டிருக்கும் பழைய ஆணிகளை (பு)பிடுங்குவதில் தங்களது வீரத்தை காட்டிக் கொண்டிருக்கின்றனர்.அதிலும் தற்போதைய முதல்வரும், அவருடைய அடிப்பொடிகளும் (புதுசு,புதுசா கிளம்பறாங்கப்பா) தேவையில்லாத ஆணிய பிடுங்குவதில் வடிவேலையே மிஞ்சிவிடுவார்கள் (வடிவேலை வைத்தே "ஒரு" ஆணிய புடுங்கினது தனிக்கதை)

முதலமைச்சர் பதவியில் நீண்டகால அனுபவமுள்ள தமிழின தலைவருக்கு உலக தமிழர்களின் இன்னல்களை தீர்ப்பது என்பது பெரிய காரியாமாகவே இருப்பதில்லை.பல்வேறு வகையான விருதுகளை அடிக்கடி பெறுவதின் மூலமும், தனது உயிருனும் மேலான உடன்பிறப்புகளுக்கு கடிதங்கள் எழுதுவதின் வாயிலாகவும், தனக்கு பிடிக்காதவர்களை சங்கத்தமிழில் வசைபாடுவதன் மூலமும் தமிழரின் துன்பங்கள் யாவற்றையும் ஓய்வில்லாமல் தீர்த்துவருகிறார். செயற்கரும் செயல்கள் பல செய்து களைத்து போய் ஓய்வெடுக்கும் நிகழ்வுகளையும் தமிழர் உயிரை காப்பதற்கே பயன்படுத்துகிறார். மேற்கண்ட உத்திகள் யாவையும் பின்பற்றப்பட்டு அவைகளும் பயனற்று ஏதாகிலும் பிரச்சனைகளை எதிர்கட்சிகளும், ஊடகங்களும் பெரிது படுத்தும்போது அவற்றை தீர்ப்பதற்கு அவர் பயன்படுத்தும் உத்திகள் அரசியல் சாணக்கியதனத்தின் மறைக்கப்பட்ட பக்கங்களாகும்.

பல வருடங்களாக 'வறண்டு' போய் கிடக்கும் பிரச்சனைகளான காவிரி, முல்லைப்பெரியாறு போன்ற அண்டை மாநிலங்களுடனான பிரச்சனைகளாகட்டும், வாழ்வாதாரத்தை தேடி கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களை கண்மூடித்தனமாக கொன்று குவிக்கும் இலங்கை கடற்படையினரையும், போர் விதிமுறைகளை மீறி அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசை கண்டிக்கும் பிரச்சனைகளாகட்டும்,.இதுதவிர எவையெல்லாம் மக்கள் மன்றத்தில் பெரும் விவாதங்களாக துவங்குகிறதோ அப்போதெலாம் அதனை 'ஏறக்கட்டும்' விதமாக உப்பு,சப்பில்லாத பிரச்சனைகளில் நேரடியாக அல்லது தமிழர் நலனுக்கு தங்களது உயிரையும் தர முன்வரும் அடிப்பொடிகளின் வாயிலாக தலையிட்டு ஒன்றுக்கும் உதவாத பிரச்சனைகளை பெரிதுபடுத்தி முக்கியமான பிரச்சனைகளை மறக்கடிக்க செய்வது கைவந்தகலை.

பெரிய அளவிலான எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்கள் ஏதுமின்றி தனது பதவியில் நீடித்திருக்க ஊடகங்கள் வாயிலாக நடத்தப்படும் இதுபோன்ற அட்டைக்கத்தி யுத்தங்களில் களப்பலியாக ஏதோவொரு சுமாரான பிரபலங்கள் மாட்டுவதுண்டு. தலைவரிடம் தங்கள் விசுவாசத்தை காட்டவும் அதன் மூலம் தங்களின் கடந்த கால அயோக்கியத்தனங்களை மக்களிடமிருந்து மறைக்கவும் ஆசைப்பட்டு இந்த அடிப்பொடிகள் செய்யும் அராஜக காமெடிகளுக்கு திரைமறைவிலிருந்து தலைவர் எழுதும் திரைக்கதைகள் சிறிது காலம் மிக பிரபலமாக இருந்து ஊடகங்களுக்கு தீனி போடும்.(திரைக்கதையின் இறுதியில் அடிப்பொடிகளின் ஆணியையே பிடுங்குவதுதான் ஆண்டி கிளைமேக்ஸ்)

நீண்....ட கால அரசியல் அனுபவமுள்ள ஒரு தலைவர் தனது குடும்பத்திற்க்காகவும், பதவிக்காகவும் 'ஜாக்குவார் தங்கம்' போன்ற அட்டைக்கத்திகளை கொண்டு "காய்ந்து போன குதிரைக்கு கொள்ளுக்கு பதில் வைக்கபுல்" என்ற ரீதியில் கடமைகளை செய்வதையும், குறிப்பாக தமிழையும், தமிழ் உணர்வுகளை குறிப்பிட்டு உசுப்பேற்றுவதை இனியாவது நிறுத்தலாம். எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்கன்னு இதுவரைக்கும் தமிழ் மக்களின் மீது அடிக்கப்பட்ட துருப்பிடித்த ஆணிகள் ஒன்றிரண்டையாவது
புடுங்கி எறியலாம்..இல்லைனா....ஆணியே புடுங்க வேண்டாம்...


Share/Bookmark

Thursday, February 18, 2010

பறவைகளின் கதறல்


சந்தத்தை இழந்த
பறவைகளின் சத்தம்
'கையறு' கதறலாகவே இருக்கும்.


ச்சைகிளிகள் தான்
கற்றுத்தந்து மரங்களின் பாஷையை,
மரங்களிடம் பேசும்போதெல்லாம்
செல்லமாய் முறைக்கின்றன
பச்சைக்கிளிகள்.

ல்லவேளை..
மரத்தடியில் அமர்ந்து
கவிதை படித்தேன்,
அர்த்தம் விளங்கா(த)
"ஆகச் சிறந்த கவிதை"க்கு
ஆயிரம் அர்த்தங்கள் சொல்லியது
ஒற்றை 'தேன்சிட்டி'ன் சத்தம்.


Share/Bookmark

Tuesday, February 16, 2010

பாசக்கார தலைவர்.
தமிழக திரைப்பட தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனைகள் வழங்கியதற்கு தமிழக முதல்வருக்கு கடந்த வாரம் நடந்த பாராட்டு விழாவில் திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் (உற்சாகத்துடன்/அச்சத்துடன்) கலந்து கொண்டனர். பொதுவாக வாரத்துக்கு ஒருமுறை இதுபோன்ற ஏதாவது விழா நடத்தி முதல்வருக்கு பாராட்டு தெரிவிப்பதும், அதை அவர் உவந்து ஏற்றுக்கொள்வதும் (இப்படி தொடர்ந்து விருதுகளை பெரும் மனநிலை என்ன ஃ போபியா வகையில் வருகிறதென்று யாரவது "மதன்"னிடம் கேட்டு சொல்லுங்கள்) வழக்கமான ஒரு கூத்தாக இருந்தாலும், இந்த கூத்து சற்று வித்தியாசமான அலைவரிசையில் நிகழ்ந்தது.

இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு புதிதாக 'நிகழ்ச்சிநிரல்' தயாரிக்கும் சிரமத்தை தராமல் வழக்கம் போல தமிழகத்தை சேர்ந்த அனைத்து வயோதிக(?),வாலிப நட்சத்திரங்களும், மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைங்கர்களும் (கலைஞர் என்ற பெயரை இங்கு மறந்துவிடுங்கள்) அதற்கும் முத்தாய்ப்பாக வடக்கிலிருந்து 'அமிதாப்' போன்றோரும் திரண்டு (திரட்டி) தங்களின் நன்றியையும், பாசத்தையும் தலைவருக்கு பறைசாற்றினர்.

பாராட்டு தெரிவிப்பதற்கென்றே ஒரு தனி வாரியம் அமைக்கபட்டால் அதில் நிரந்திர உறுப்பினர்களாக தங்களை இணைத்து கொள்ளுமளவிற்கு பாச மழையை சில நடிகர்கள் பொழிந்து கொண்டிருந்த அந்த(மழை) மாலை வேளையை, தனது சில நிமிட பேச்சின் மூலம், நெருங்கிக்கொண்டிருக்கும் மே மாத வெப்பத்தை சற்று முன்னதாகவே அரங்கினுள் கொண்டுவந்தார் அஜித். பொதுவாக ஒருசில விழாக்களில் மட்டும் கலந்துகொண்டு, குறைவாகவே பேசி ஒதுங்கிவிடும் அஜித்திடமிருந்து, இப்படி காட்டமான பேச்சு வெளிப்படும் என்று அவரது ரசிகர்களே எதிர்பாத்திருக்க மாட்டார்கள்.

திரைத்துறை மற்றும் பொது விழாக்களில் பிரபல நட்சத்திரங்களை கலந்து கொள்ள கட்டாயபடுத்துவதில் துவங்கி, திரை நட்சத்திரங்களை அரசியல்வாதிகள் அடிக்கடி சீண்டுவது வரை, தனது பேச்சில் கண்டித்த அஜித்திற்கு அனைத்து நடிகர்களும் தங்களது ஆதரவை பெரும் கரவொலியின் முலம் தெரிவித்தனர். இத்தகைய சீண்டல்களால் அதிகமாக பாதிக்கப்பட்ட சூப்பர்ஸ்டார் தனது இருக்கையிலிருந்து (முதல்வருக்கு பக்கத்து இருக்கை) எழுந்து கைதட்டி தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

திரைத்துறையினரை, அரசியல்வாதிகள் வம்பிற்கிழுப்பதும், அதற்கு நடிகர்கள் தங்களின் திரைப்படங்களின் வாயிலாக 'முத்திரை வசன'ங்களில் பதிலளிப்பதும் சகஜமாக நடந்து வந்தாலும், கிட்டத்தட்ட அரசு விழா போன்றே நடத்தப்பட்ட முதல்வரின் பாராட்டு விழாவில் அஜித் இவ்வாறு பேசியது பலருக்கு ஆச்சர்யத்தை தந்தாலும், விழாவில் கலந்துகொண்ட ஆளும் கட்சியை சேர்ந்த நடிகர்களுக்கும், அரசியல் நடிகர்களுக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியது அடுத்து அவர்கள் பேசும்போது வெளிப்பட்டது.

அஜித்தின் இந்த பேச்சை பெரும்பான்மையான ஊடகங்கள் முதன்மை படுத்தியே செய்தி வெளியிட்டிருந்தாலும், கலைஞர் தொலைக்காட்சியில் இனி அஜித் இருட்டடிப்பு செய்யபடுவார் என்பது இப்போதே தெரிந்துவிட்டது. கடந்த சில தினங்களாக ஒளிபரப்படும் இந்நிகழ்ச்சிக்கான முன் அறிவிப்பு விளம்பரத்தில் கலந்து கொண்டோருக்கான பெயர்பட்டியலில் 'அஜித்'தின் பெயர் இடம்பெறவில்லை. அமிதாப்பில் துவங்கி சூர்யா வரை அனைவரது பெயரும், புகைப்படமும் இடம்பெறும் இவ்விளம்பரத்தில், முக்கிய நிகழ்வான அஜித்தின் பகுதி தவிர்க்கப்பட்டது. முழு நிகழ்ச்சியின் போதும் அஜித்தின் பகுதி வெட்டி எறியப்படும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

கடந்த பல வருடங்களுக்கு முன் அப்போதைய முதல்வர் கலந்துகொண்ட ஒரு விழாவில் சூப்பர்ஸ்டார் இதேபோன்று அரசை விமர்சனம் செய்து பேசியது அவரது திரை வாழ்விலும், தனி வாழ்விலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. அப்போது பிரபலமாக இருந்த அரசு தொலைக்காட்சியில் ரஜினி தொடர்ந்து புறக்கணிக்கபட்டார். ஒளியும், ஒலியும் நிகழ்ச்சியில் ரஜினியின் பாடல்களை ஒளிபரப்புமாறு கேட்டு பல ஊர்களில் கண்டன ஆர்பாட்டங்களே நடைபெற்றது.
இது போன்றதொரு அரசியல் நாடக வாய்ப்பை அஜித்தே விரும்பாத போதும், அவர் தன் பேச்சில் குறிப்பிட்டதை போல் அரசியல்வாதிகள் ஏற்படுத்தாமல் ஓயமாட்டார்கள். எப்படியோ தளபதி மற்றும் இளைய தளபதிகள் கையாளுவதை போன்று, தங்கள் ரசிகர்களை உசுப்பேத்தும் உத்தியை "தல"யும் செய்யமாட்டார் என்றே நம்புவோம்.


Share/Bookmark

Sunday, February 14, 2010

காதலித்து கெட்டு போ.


இளம் தலைமுறை கவிஞர்களில் முக்கியமானவரான நா. முத்துக்குமார் எழுதிய இந்தக்கவிதை சில ஆண்டுகளுக்கு முன் விகடன் இதழில் வெளிவந்தது. காதல் குறித்தும் காதலர் தினம் குறித்தும் பேசும் போதெல்லாம் என் நினைவுக்கு வருவது இந்த கவிதை.
காதலித்து கெட்டு போ.
அதிகம் பேசு
ஆதி ஆப்பிள் தேடு
மூளை கழற்றி வை
முட்டாளாய் பிறப்பெடு
கடிகாரம் உடை
காத்திருந்து காண்
நாய்க்குட்டி கொஞ்சு
நண்பனாலும் நகர்ந்து செல்
கடிதமெழுத கற்றுக்கொள்
வித,விதமாய் பொய் சொல்
விழி ஆற்றில் விழு
பூப்பறித்து கொடு
மேகமென கலை
மோகம் வளர்த்து மித
மதி கெட்டு மாய்
கவிதைகள் கிறுக்கு
கால்கொலுசில் இசை உணர்
தாடி வளர்த்து தவி
எடை குறைந்து சிதை
உளறல் வரும் குடி
ஊர் எதிர்த்தால் உதய்
ஆராய்ந்து அழிந்து போ
மெல்ல செத்து மீண்டு வா
திகட்ட,திகட்ட காதலி..


Share/Bookmark

Saturday, February 13, 2010

புறாக்கள் மேயும் மைதானம்நாம் வழக்கமாய் சந்திக்கும்
புறாக்கள் மேயும் மைதானத்தில்
இன்று தனியாய் நான்..
சிதறியிருக்கும் தானியங்களினுள்
கலந்திருக்கலாம், சிதறிப்போன
என் இதயமும்..
விரட்ட மனமின்றி அமர்ந்திருந்தேன்,
என்ன செய்வது..?
கொத்தி தின்பவை எல்லாம்
உன் பிரிய புறாக்களாயிற்றே..!

Share/Bookmark

Monday, February 1, 2010

அன்பிலானது உலகு - "சில்ட்ரன் ஆப் ஹெவன்"" பசித்திருக்கும் மனிதன் உணவிற்காக ஏங்குவதை காட்டிலும், நிராகரிக்கப்பட்ட அன்பிற்காக குழந்தைகள் ஏங்குவது கொடுமையானது" , குழந்தைகள் மீதான பெரியவர்களின் அக்கறையின்மையையும்,அலட்சியத்தையும் குறித்து அன்னை தெரசா இவ்வாறு வருத்தத்துடன் குறிப்பிட்டார். குழந்தைகள் மீதான "உளவியல் வன்முறைகள்" அதிகரித்து வருவதில் பெரும்பங்கை இன்றைய ஊடகங்கள் வகிக்கின்றன. பொருளாதார தேவைக்கான பெற்றோர்களின் ஓட்டம் ஒருபுறம் குழந்தைகள் காப்பகங்களையும் மறுபுறம் சிறார் குற்றவாளிகளையும் உருவாக்கிவரும் நிலையில், குழந்தைகள் உலகத்தினுள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொலைக்காட்சியும், திரைப்படங்களும் நிகழ்த்தும் தாக்குதல்கள், வன்முறை சார்ந்த ஒரு புதிய உலகத்தை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்துள்ளது.


மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தையுடைய இந்திய திரைப்படங்களில் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் என்பது இன்றும் பொருளாதார ரீதியில் அபாயமான முயற்சியாகவே இருக்கிறது. அரசியல்,மத ரீதியிலான பல்வேறு கட்டுபாடுகளையுடைய ஈரானிலிருந்து 1997 ம் ஆண்டு வெளிவந்த "சில்ட்ரன் ஆப் ஹெவன்" திரைப்படம் உலக திரைப்படங்களுள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இயக்குனர் "மஜீத் மஜிதி"யின் புகழ்பெற்ற திரைப்படமான "சில்ட்ரன் ஆப் ஹெவன்" அன்பிலான உலகை நம் கண் முன்னே உருவாக்குகிறது. பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய மனிதர்களியிடையே நிகழும் கதைக்களம் முழுக்க அன்பால் நிரம்பியிருப்பது இந்திய திரைப்படங்களில் காணமுடியாத ஒன்று.


சிறுவன் 'அலி' தனது தங்கை 'சாரா'வின் காலணிகளை தைத்து கொண்டுவரும் போது எதேச்சையாக தவறவிட்டு விடுகிறான். குடும்பத்தின் வறுமை காரணமாக புது காலணிகள் வாங்க இயலாத நிலையில் சாராவும் தனது அண்ணனின் காலணிகளையே பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது.(முஸ்லீம் நாடான ஈரானில் பெண்களுக்கான பள்ளி காலை நேரங்களிலும், ஆண்களுக்கான பள்ளி மதிய நேரத்திலும் செயல்படுகிறது) சிறுவன் அலியும், சிறுமி சாரவும் பல்வேறு இடர்களை சந்திக்கும் நிலையிலும் சக மனிதர்களின் மீதான அன்பை வெளிப்படுத்தும் காட்சிகள் படம் நெடுகிலும் திரைக்கதை வழியாக சித்தரிக்கபட்டிருக்கும்.

1 . சிறுமி சாரா, தன் அண்ணன் தவறுதலாக தனது காலணிகளை தொலைக்கும் போது பெற்றோர்களிடம் அதை தெரிவிக்காமல் தன் அண்ணனின் காலணிகளையே தானும் பயன்படுத்த ஒப்புகொள்வாள். இதற்காக தினமும் பள்ளியிலிருந்து மூச்சிரைக்க ஓடி வந்து காத்திருக்கும் அண்ணனிடம் காலணிகளை தருவாள்.

2 . சிறுவன் அலி, தனக்கு பரிசாக கிடைத்த பேனாவை தங்கைக்கு பரிசாக தருவான்.

3 . தொலைந்து போன காலணிகளை அதே பள்ளியில் படிக்கும் வேறொரு சிறுமி அணிந்திருப்பதை அறியும் சாரவும், அலியும் காலணிகளை திரும்ப பெறுவதற்காக அச்சிறுமியை பின் தொடர்ந்து செல்வார்கள், அங்கு சிறுமியின் ஏழ்மையான நிலையைக்கண்டு திரும்ப கேட்காமல் திரும்பி விடுவார்கள்.

4 .தினமும் தாமதமாக பள்ளிக்கு வரும் 'அலி'யை தண்டிக்கும் தலைமை ஆசிரியரிடம் தனது மாணவனை மன்னிக்கும்படி கேட்பார் அலியின் வகுப்பாசிரியர்.

5 . தனது நண்பரிடமிருந்து பெற்ற தோட்டவேலை கருவிகளை எடுத்துகொண்டு அலியின் அப்பா வேலை தேடி நகரத்திற்கு மகன் அலியுடன் வருவார். எங்குமே வேலை கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் இருவரையும் அழைத்து வேலை தருவதுடன் ,அதிகமான கூலியையும் தந்து உதவுவார்கள் ஒரு பணக்கார சிறுவனும் அவனது தாத்தாவும்.

6 . வறுமையான நிலையிலும் பக்கத்துக்கு வீட்டிலிருக்கும் முதியவர்களுக்கு அலியின் அம்மா உணவு பதார்த்தங்களை தருவார். அதை பெற்றுக்கொள்ளும் முதியவர் சிறுவன் அலிக்கு தன்னிடமிருந்த பட்டாணிகளை தருவார்.

7 . பள்ளிகளியடையே நடைபெறும் ஓட்டபந்தையத்தில் மூன்றாம் பரிசாக காலணிகள் தரப்படுவதை அறிந்து அலி, தான் அதில் கலந்துகொண்டு மூன்றாம் பரிசை பெற்று புதிய காலணிகளை உனக்கு தருகிறேன் என்று தங்கையிடம் கூறுவான். பந்தயம் நடக்கும்போது உணர்ச்சியின் உந்துதலில் வேகமாக ஓடி முதலிடத்தை பிடித்தபின்னர், அனைவரும் பாராட்டும் நிலையிலும் மூன்றாம் பரிசான காலனியை பெற முடியாததை நினைத்து அழுவான்.
காலணிகளை சுற்றி நகரும் கதைக்களத்தில் தனது காலணிகளை பறிகொடுத்த பின்னர், சிறுமி சாராவின் பார்வை தன்னை சுற்றியிருப்பவர்களின் காலணிகளை சுற்றியே இருக்கும்., படம் துவங்கி சில நிமிடங்களில் படத்தை பார்த்துகொண்டிருக்கும் நாமும் நம்மை அறியாமலே கதாபத்திரங்களின் முகங்களை தவிர்த்துவிட்டு அவர்களின் காலணிகளை கவனிக்க துவங்கிவிடுவோம்.

சிறுவர்களின் இயல்பான தேர்ந்த நடிப்பும், மனதை நெருடும் எளிமையான இசையும் "மஜீத் மஜிதி''யின் தேர்ந்த இயக்கமும் இணைந்து திரையில் நிகழ்த்தும் அற்புதங்களினால் "அன்பிலான புதிய உலகு" ஒன்று நம் கண்முன்னே உருவாகிறது. நிஜத்திலும் இம்மாதிரியான அன்புலகை ஏற்படுத்த முடியாதா என்று பார்வையாளர்களை ஏங்க வைப்பதுதான் இத்திரைப்படத்தின் வெற்றி.
இப்படத்தை "YOU TUBE" தளத்தில் காண இங்கு சொடுக்கவும்.


Share/Bookmark