Monday, February 1, 2010

அன்பிலானது உலகு - "சில்ட்ரன் ஆப் ஹெவன்"" பசித்திருக்கும் மனிதன் உணவிற்காக ஏங்குவதை காட்டிலும், நிராகரிக்கப்பட்ட அன்பிற்காக குழந்தைகள் ஏங்குவது கொடுமையானது" , குழந்தைகள் மீதான பெரியவர்களின் அக்கறையின்மையையும்,அலட்சியத்தையும் குறித்து அன்னை தெரசா இவ்வாறு வருத்தத்துடன் குறிப்பிட்டார். குழந்தைகள் மீதான "உளவியல் வன்முறைகள்" அதிகரித்து வருவதில் பெரும்பங்கை இன்றைய ஊடகங்கள் வகிக்கின்றன. பொருளாதார தேவைக்கான பெற்றோர்களின் ஓட்டம் ஒருபுறம் குழந்தைகள் காப்பகங்களையும் மறுபுறம் சிறார் குற்றவாளிகளையும் உருவாக்கிவரும் நிலையில், குழந்தைகள் உலகத்தினுள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொலைக்காட்சியும், திரைப்படங்களும் நிகழ்த்தும் தாக்குதல்கள், வன்முறை சார்ந்த ஒரு புதிய உலகத்தை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்துள்ளது.


மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தையுடைய இந்திய திரைப்படங்களில் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் என்பது இன்றும் பொருளாதார ரீதியில் அபாயமான முயற்சியாகவே இருக்கிறது. அரசியல்,மத ரீதியிலான பல்வேறு கட்டுபாடுகளையுடைய ஈரானிலிருந்து 1997 ம் ஆண்டு வெளிவந்த "சில்ட்ரன் ஆப் ஹெவன்" திரைப்படம் உலக திரைப்படங்களுள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இயக்குனர் "மஜீத் மஜிதி"யின் புகழ்பெற்ற திரைப்படமான "சில்ட்ரன் ஆப் ஹெவன்" அன்பிலான உலகை நம் கண் முன்னே உருவாக்குகிறது. பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய மனிதர்களியிடையே நிகழும் கதைக்களம் முழுக்க அன்பால் நிரம்பியிருப்பது இந்திய திரைப்படங்களில் காணமுடியாத ஒன்று.


சிறுவன் 'அலி' தனது தங்கை 'சாரா'வின் காலணிகளை தைத்து கொண்டுவரும் போது எதேச்சையாக தவறவிட்டு விடுகிறான். குடும்பத்தின் வறுமை காரணமாக புது காலணிகள் வாங்க இயலாத நிலையில் சாராவும் தனது அண்ணனின் காலணிகளையே பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது.(முஸ்லீம் நாடான ஈரானில் பெண்களுக்கான பள்ளி காலை நேரங்களிலும், ஆண்களுக்கான பள்ளி மதிய நேரத்திலும் செயல்படுகிறது) சிறுவன் அலியும், சிறுமி சாரவும் பல்வேறு இடர்களை சந்திக்கும் நிலையிலும் சக மனிதர்களின் மீதான அன்பை வெளிப்படுத்தும் காட்சிகள் படம் நெடுகிலும் திரைக்கதை வழியாக சித்தரிக்கபட்டிருக்கும்.

1 . சிறுமி சாரா, தன் அண்ணன் தவறுதலாக தனது காலணிகளை தொலைக்கும் போது பெற்றோர்களிடம் அதை தெரிவிக்காமல் தன் அண்ணனின் காலணிகளையே தானும் பயன்படுத்த ஒப்புகொள்வாள். இதற்காக தினமும் பள்ளியிலிருந்து மூச்சிரைக்க ஓடி வந்து காத்திருக்கும் அண்ணனிடம் காலணிகளை தருவாள்.

2 . சிறுவன் அலி, தனக்கு பரிசாக கிடைத்த பேனாவை தங்கைக்கு பரிசாக தருவான்.

3 . தொலைந்து போன காலணிகளை அதே பள்ளியில் படிக்கும் வேறொரு சிறுமி அணிந்திருப்பதை அறியும் சாரவும், அலியும் காலணிகளை திரும்ப பெறுவதற்காக அச்சிறுமியை பின் தொடர்ந்து செல்வார்கள், அங்கு சிறுமியின் ஏழ்மையான நிலையைக்கண்டு திரும்ப கேட்காமல் திரும்பி விடுவார்கள்.

4 .தினமும் தாமதமாக பள்ளிக்கு வரும் 'அலி'யை தண்டிக்கும் தலைமை ஆசிரியரிடம் தனது மாணவனை மன்னிக்கும்படி கேட்பார் அலியின் வகுப்பாசிரியர்.

5 . தனது நண்பரிடமிருந்து பெற்ற தோட்டவேலை கருவிகளை எடுத்துகொண்டு அலியின் அப்பா வேலை தேடி நகரத்திற்கு மகன் அலியுடன் வருவார். எங்குமே வேலை கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் இருவரையும் அழைத்து வேலை தருவதுடன் ,அதிகமான கூலியையும் தந்து உதவுவார்கள் ஒரு பணக்கார சிறுவனும் அவனது தாத்தாவும்.

6 . வறுமையான நிலையிலும் பக்கத்துக்கு வீட்டிலிருக்கும் முதியவர்களுக்கு அலியின் அம்மா உணவு பதார்த்தங்களை தருவார். அதை பெற்றுக்கொள்ளும் முதியவர் சிறுவன் அலிக்கு தன்னிடமிருந்த பட்டாணிகளை தருவார்.

7 . பள்ளிகளியடையே நடைபெறும் ஓட்டபந்தையத்தில் மூன்றாம் பரிசாக காலணிகள் தரப்படுவதை அறிந்து அலி, தான் அதில் கலந்துகொண்டு மூன்றாம் பரிசை பெற்று புதிய காலணிகளை உனக்கு தருகிறேன் என்று தங்கையிடம் கூறுவான். பந்தயம் நடக்கும்போது உணர்ச்சியின் உந்துதலில் வேகமாக ஓடி முதலிடத்தை பிடித்தபின்னர், அனைவரும் பாராட்டும் நிலையிலும் மூன்றாம் பரிசான காலனியை பெற முடியாததை நினைத்து அழுவான்.
காலணிகளை சுற்றி நகரும் கதைக்களத்தில் தனது காலணிகளை பறிகொடுத்த பின்னர், சிறுமி சாராவின் பார்வை தன்னை சுற்றியிருப்பவர்களின் காலணிகளை சுற்றியே இருக்கும்., படம் துவங்கி சில நிமிடங்களில் படத்தை பார்த்துகொண்டிருக்கும் நாமும் நம்மை அறியாமலே கதாபத்திரங்களின் முகங்களை தவிர்த்துவிட்டு அவர்களின் காலணிகளை கவனிக்க துவங்கிவிடுவோம்.

சிறுவர்களின் இயல்பான தேர்ந்த நடிப்பும், மனதை நெருடும் எளிமையான இசையும் "மஜீத் மஜிதி''யின் தேர்ந்த இயக்கமும் இணைந்து திரையில் நிகழ்த்தும் அற்புதங்களினால் "அன்பிலான புதிய உலகு" ஒன்று நம் கண்முன்னே உருவாகிறது. நிஜத்திலும் இம்மாதிரியான அன்புலகை ஏற்படுத்த முடியாதா என்று பார்வையாளர்களை ஏங்க வைப்பதுதான் இத்திரைப்படத்தின் வெற்றி.
இப்படத்தை "YOU TUBE" தளத்தில் காண இங்கு சொடுக்கவும்.


Share/Bookmark

3 comments:

த‌மிழ் said...

நன்றி அரசு..

குழந்தையை குழந்தையாகவே நமக்கு காட்டி நம்மை நம் குழந்தை பருவத்திற்கு கொண்டு செல்லும் படம் இது..

முடிவில் அலி வெற்றி பெற்றதுக்கு அழும் காட்சியைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அழுது விடுகிறேன்..

ARAVINTH said...

படம் பார்த்து எழுதியதை
படித்து பார்த்து (பார்த்து) ரசித்தேன்

நாகராஜசோழன் எம்ஏ said...

:-)

Post a Comment