Tuesday, February 16, 2010

பாசக்கார தலைவர்.
தமிழக திரைப்பட தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனைகள் வழங்கியதற்கு தமிழக முதல்வருக்கு கடந்த வாரம் நடந்த பாராட்டு விழாவில் திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் (உற்சாகத்துடன்/அச்சத்துடன்) கலந்து கொண்டனர். பொதுவாக வாரத்துக்கு ஒருமுறை இதுபோன்ற ஏதாவது விழா நடத்தி முதல்வருக்கு பாராட்டு தெரிவிப்பதும், அதை அவர் உவந்து ஏற்றுக்கொள்வதும் (இப்படி தொடர்ந்து விருதுகளை பெரும் மனநிலை என்ன ஃ போபியா வகையில் வருகிறதென்று யாரவது "மதன்"னிடம் கேட்டு சொல்லுங்கள்) வழக்கமான ஒரு கூத்தாக இருந்தாலும், இந்த கூத்து சற்று வித்தியாசமான அலைவரிசையில் நிகழ்ந்தது.

இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு புதிதாக 'நிகழ்ச்சிநிரல்' தயாரிக்கும் சிரமத்தை தராமல் வழக்கம் போல தமிழகத்தை சேர்ந்த அனைத்து வயோதிக(?),வாலிப நட்சத்திரங்களும், மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைங்கர்களும் (கலைஞர் என்ற பெயரை இங்கு மறந்துவிடுங்கள்) அதற்கும் முத்தாய்ப்பாக வடக்கிலிருந்து 'அமிதாப்' போன்றோரும் திரண்டு (திரட்டி) தங்களின் நன்றியையும், பாசத்தையும் தலைவருக்கு பறைசாற்றினர்.

பாராட்டு தெரிவிப்பதற்கென்றே ஒரு தனி வாரியம் அமைக்கபட்டால் அதில் நிரந்திர உறுப்பினர்களாக தங்களை இணைத்து கொள்ளுமளவிற்கு பாச மழையை சில நடிகர்கள் பொழிந்து கொண்டிருந்த அந்த(மழை) மாலை வேளையை, தனது சில நிமிட பேச்சின் மூலம், நெருங்கிக்கொண்டிருக்கும் மே மாத வெப்பத்தை சற்று முன்னதாகவே அரங்கினுள் கொண்டுவந்தார் அஜித். பொதுவாக ஒருசில விழாக்களில் மட்டும் கலந்துகொண்டு, குறைவாகவே பேசி ஒதுங்கிவிடும் அஜித்திடமிருந்து, இப்படி காட்டமான பேச்சு வெளிப்படும் என்று அவரது ரசிகர்களே எதிர்பாத்திருக்க மாட்டார்கள்.

திரைத்துறை மற்றும் பொது விழாக்களில் பிரபல நட்சத்திரங்களை கலந்து கொள்ள கட்டாயபடுத்துவதில் துவங்கி, திரை நட்சத்திரங்களை அரசியல்வாதிகள் அடிக்கடி சீண்டுவது வரை, தனது பேச்சில் கண்டித்த அஜித்திற்கு அனைத்து நடிகர்களும் தங்களது ஆதரவை பெரும் கரவொலியின் முலம் தெரிவித்தனர். இத்தகைய சீண்டல்களால் அதிகமாக பாதிக்கப்பட்ட சூப்பர்ஸ்டார் தனது இருக்கையிலிருந்து (முதல்வருக்கு பக்கத்து இருக்கை) எழுந்து கைதட்டி தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

திரைத்துறையினரை, அரசியல்வாதிகள் வம்பிற்கிழுப்பதும், அதற்கு நடிகர்கள் தங்களின் திரைப்படங்களின் வாயிலாக 'முத்திரை வசன'ங்களில் பதிலளிப்பதும் சகஜமாக நடந்து வந்தாலும், கிட்டத்தட்ட அரசு விழா போன்றே நடத்தப்பட்ட முதல்வரின் பாராட்டு விழாவில் அஜித் இவ்வாறு பேசியது பலருக்கு ஆச்சர்யத்தை தந்தாலும், விழாவில் கலந்துகொண்ட ஆளும் கட்சியை சேர்ந்த நடிகர்களுக்கும், அரசியல் நடிகர்களுக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியது அடுத்து அவர்கள் பேசும்போது வெளிப்பட்டது.

அஜித்தின் இந்த பேச்சை பெரும்பான்மையான ஊடகங்கள் முதன்மை படுத்தியே செய்தி வெளியிட்டிருந்தாலும், கலைஞர் தொலைக்காட்சியில் இனி அஜித் இருட்டடிப்பு செய்யபடுவார் என்பது இப்போதே தெரிந்துவிட்டது. கடந்த சில தினங்களாக ஒளிபரப்படும் இந்நிகழ்ச்சிக்கான முன் அறிவிப்பு விளம்பரத்தில் கலந்து கொண்டோருக்கான பெயர்பட்டியலில் 'அஜித்'தின் பெயர் இடம்பெறவில்லை. அமிதாப்பில் துவங்கி சூர்யா வரை அனைவரது பெயரும், புகைப்படமும் இடம்பெறும் இவ்விளம்பரத்தில், முக்கிய நிகழ்வான அஜித்தின் பகுதி தவிர்க்கப்பட்டது. முழு நிகழ்ச்சியின் போதும் அஜித்தின் பகுதி வெட்டி எறியப்படும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

கடந்த பல வருடங்களுக்கு முன் அப்போதைய முதல்வர் கலந்துகொண்ட ஒரு விழாவில் சூப்பர்ஸ்டார் இதேபோன்று அரசை விமர்சனம் செய்து பேசியது அவரது திரை வாழ்விலும், தனி வாழ்விலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. அப்போது பிரபலமாக இருந்த அரசு தொலைக்காட்சியில் ரஜினி தொடர்ந்து புறக்கணிக்கபட்டார். ஒளியும், ஒலியும் நிகழ்ச்சியில் ரஜினியின் பாடல்களை ஒளிபரப்புமாறு கேட்டு பல ஊர்களில் கண்டன ஆர்பாட்டங்களே நடைபெற்றது.
இது போன்றதொரு அரசியல் நாடக வாய்ப்பை அஜித்தே விரும்பாத போதும், அவர் தன் பேச்சில் குறிப்பிட்டதை போல் அரசியல்வாதிகள் ஏற்படுத்தாமல் ஓயமாட்டார்கள். எப்படியோ தளபதி மற்றும் இளைய தளபதிகள் கையாளுவதை போன்று, தங்கள் ரசிகர்களை உசுப்பேத்தும் உத்தியை "தல"யும் செய்யமாட்டார் என்றே நம்புவோம்.


Share/Bookmark

5 comments:

தமிழினி said...

================================================
உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க தமிழ்10 திரட்டியுடன் இணையுங்கள் .இதில்
enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஓட்டளிப்புப் பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

================================================

sollarasan said...

//இதுபோன்ற ஏதாவது விழா நடத்தி முதல்வருக்கு பாராட்டு தெரிவிப்பதும், அதை அவர் உவந்து ஏற்றுக்கொள்வதும் //

தி.மு.க அனுதாபிகளுக்கும் இது நெருடலாகதான் இருக்கிறது.

நல்ல‌ப‌திவு.

V.A.S.SANGAR said...

கொஞ்சம் பிந்தி விட்டிர்கள்

ARAVINTH said...

இதை பொதுமக்கள் உணரும் வரை இவர்கள் காட்டில் மழைதான்.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

//தி.மு.க அனுதாபிகளுக்கும் இது நெருடலாகதான் இருக்கிறது.//
உண்மைதான் சொல்லரசு. நன்றி...

//கொஞ்சம் பிந்தி விட்டிர்கள்//
வருகைக்கு நன்றி சங்கர். கலைஞர் தொலைக்காட்ச்சியில்
நிகழ்ச்சியின் அறிவிப்பு விளம்பரத்தை பார்த்த பின்புதான் எழுத தோன்றியது.

//இதை பொதுமக்கள் உணரும் வரை இவர்கள் காட்டில் மழைதான்//
அரவிந்த்,, எப்படியோ மழை பெய்தால் சரிதான்.

Post a Comment