Wednesday, March 31, 2010

நீங்கெல்லாம் எப்படா திருந்துவீங்க...?


ரசிகர்களை விட விமர்சகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட இளையதளபதியின் அடுத்த படமான "சுறா" படத்தின் பாடல்கள் வெளிவந்துவிட்டது. விமர்சகர்களை ஏமாற்றாமல் படத்தின் பாடல்களும் "வழக்கமான பாணி"யிலேயே உள்ளது. பல பாடல்கள் "தமிழ்ப்பட"த்தின் பாடல்களுக்கு போட்டியாக(..?) உள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள பாடலில் ஒரு வரி
"இவனை தீண்ட நினைத்தால்,...இரும்புக்கையால் அழிப்பான்... இருளைப் போக்க இவனே , விளக்கை போல் வருவான்.. தர்மம் காக்க என்றும் தன்னைத் தானே தருவான்.. அதர்மம் அழிக்க இவனே ஆயுதமாகிடுவான்"..
எப்படியோ மறுபடியும் ஒரு அடிமை சிக்கிடுச்சு...
There are more bad musicians than there is bad music.


இந்திய மாநிலங்களில் அதிக சாலை விபத்துக்கள் நிகழும் பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது என தமிழக போக்குவரத்துறை அமைச்சர் கே.என்.நேரு சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருந்தார். இதேபோன்றதொரு சந்திப்பில் தமிழக முதல்வர் "மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் சாலைகளின் தரம் நன்றாக உள்ளது, இதனாலேய சாலை விபத்துக்கள் அதிகரிக்கின்றன " என்று விபத்துகள் குறித்து கூறியிருந்தார். எல்லா பிரச்சனைகளுக்கும் முதல்வர் கருத்து சொல்லலாம் அதுக்காக இப்படியா..?
It is dangerous to be right when the government is wrong.


வழக்கம் போல "பென்னாகரம்" இடைத்தேர்தலிலும் ஆளும்கட்சியே வெற்றிபெற்றது. இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து எதிர்கட்சிகளே ஒரு முடிவிற்கு வந்துவிடும் இன்றைய சூழலிலும் பலர் தங்களது வேலைகளை ஒதுக்கிவைத்து விட்டு தொலைக்காட்சிகள் முன்பும், இணையங்கள் முன்பும் தவமிருக்கின்றனர். இடைத்தேர்தல் நடைபெறும் ஊரில் உள்ள வாக்காளர்கள் அனைத்து கட்சியினாராலும் 'கவனிக்க'படுவதையும் தாண்டி இம்முறை வெளியூர்களில் வசித்த 'பென்னாகரம்' தொகுதி வாக்காளர்கள் அந்தந்த ஊர்களிலேயே 'கவனித்து' சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மக்களும் பல கெடுபிடிகளையும் மீறி 84 சதவீத வாக்குகளை தந்து தங்கள் ஜனநாயக கடமையைஆற்றினர்.
Democracy is the recurrent suspicion that more than half of the people are right more than half of the time.


ஐதராபாத் நகரில் இரு தினங்களுக்கு முன் கொடிக்கம்பம் நடுவதில் இரு குழுக்களுக்குள் ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்துள்ளது. கலவரக்காரர்களால் அரசின் பல்வேறு சொத்துக்கள் சூறையாடப்பட்டதை தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் முழுமையாக கலவரம் கட்டுபடுத்தபடாமல் பல்வேறு பகுதிகளுக்கும் பரவிவருகிறது.
எளிமையாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் அரசியல்வாதிகளின் தலையீடு மற்றும் தவறான வழிகாட்டுதலால் பெரும் கலவரமாக்கபட்டுள்ளது.
“The cause of violence is not ignorance. It is self-interest. Only reverance can restrain violence - reverance for human life and the environment.”Share/Bookmark

Thursday, March 25, 2010

1 message receivedகிட்டத்தட்ட ஏழெட்டு மாதங்களுக்கு மேலாகிறது இதுபோல நள்ளிரவில் குறுந்தகவல் வந்து.

இரவு மணி பதினொன்றை தாண்டியிருக்கும், உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன், மனைவிக்கு முன்னரே படுக்கையில் இடம்பிடித்திருந்த கைப்பேசி, சிறு சத்தத்துடன்
" 1 message received " என ஒளிர்ந்தது. விடிந்தால் பிறந்தநாள் எனவே எவரிடமாவதிருந்து வாழ்த்து வந்திருக்கும். வயது அதிகமாக, அதிகமாக பிறந்தநாளுக்கான வாழ்த்துக்களை எதிர்கொள்ளும் போது நினைவின் ஆழத்தில் சிறு அச்சம் நீர்க் குமிழிகளென தோன்றி கண நேரத்தில் மறைந்து விடுகின்றன. அத்தகையதொரு நினைவுக்குமிழி திடீரென தோன்றி நினைவுகளை பின்னோக்கி கொண்டு சென்றது.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் கைப்பேசி பயன்படுத்த துவங்கிய போது, புத்தாண்டுக்கு முந்தய இரவிலும், என் பிறந்தநாளின் முந்தய இரவிலும் ஒன்றோ இரண்டோ வாழ்த்து தகவல்கள் வரும், அதிலும் பிறந்த நாளுக்கென வரும் வாழ்த்துக்கள் பெரும்பாலும் சுய அறிவிப்பினால் பெறப்பட்ட வாழ்த்துகளாகவே இருக்கும். அதன் பிறகான குறுந்தகவல் யுகமாகிவிட்ட சமீப ஆண்டுகளில் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குவதை போன்றே குறுந்தகவலுக்கும் நேரம் ஒதுக்குவது முக்கியமாகிவிட்டது. நண்பர்களிடமிருந்தான இலவச அறிவுரைகள், மொக்கைகள் மற்றும் நமக்கு சம்பந்தமே இல்லாத கடன்காரர்களிடமிருந்து வரும் கடனாளியாக்குவதற்கான ஆலோசனைகள் என பலவகை குறுந்தகவல்களை எதிர்கொள்ள/சகித்துக்கொள்ள பழகியிருந்த ஒரு காலத்தில்தான் உன் காதலையும் சந்திக்க நேர்ந்தது.

பெண்களோ,ஆண்களோ தம் எதிர் பாலினருடனான உறவில் நட்பு என்ற புரியாத சமன்பாட்டிற்கு விடை தேட எவ்வளவுதான் முயன்றாலும், அச்சமன்பாட்டை கூட்டி,கழித்து, பெருக்கி காதல் என்ற விடையை கொண்டுவருவதில் 'குறுந்தகவல்கள்' முக்கிய பங்காற்றுகின்றன. இதை தெரிந்தோ, தெரியாமலோ அறியாமல் விட்டிருந்த நான் உன்னையும், நீ என்னையும் நமது குறுந்தகவல்களின் மூலம் பின்தொடர துவங்கிய பிறகு வேறு எந்த விசயங்களும் பெறாத முக்கியத்துவத்தை குறுந்தகவல்கள் பெற்றது. அதிலும் இரண்டாண்டுகளுக்கு முன் இதே போன்றதொரு நள்ளிரவில் நீ அனுப்பிய பிறந்தநாள் வாழ்த்து வெறும் வாழ்த்தாக மட்டுமல்லாமல் நட்பு வெள்ளத்தை கடந்து காதல் கரையை நாம் அடைந்ததற்கான பாலமாகவும் இருந்தது.

நமது காதல் நாட்களின் முதல் நாளான அந்த பிறந்தநாளில் உனது கட்டளை மற்றும் அறிவுறுத்தலின் படி நான் தனியாகவும், நீ தனியாக உன் தோழியுடனும் "அய்யன் கோவிலு"க்கு சென்றிருந்தோம். இருவருமே உள்ளூர் என்பதால் இதற்கு முன்பு பல முறை பொது இடங்களில் இருவரும் சந்தித்திருந்த போதும் இதுவரை உணராத ஒரு அச்சத்தையும், படபடப்பையும் இருவருமே அன்று உணர்ந்தோம். எனது பெயருடன், உனது தந்தையின் பெயருக்கும் சேர்த்து அர்ச்சனை செய்துவிட்டு "இன்னைக்கு தான் எங்க அப்பாவுக்கும் பிறந்தநாள்" என்று நீ கூறியதற்கு " அப்போ ரெண்டு பேருக்கும் ஒத்துபோயிடும்னு நினைக்கிறேன்" என்று நான் கூறிய போது, சிறு அச்சம் கலந்த சிரிப்பை உதிர்த்துவிட்டு விடைபெற்றாய்.

அதன் பிறகான ஓராண்டு கால காதல் நாட்களில் எனது ஒவ்வொரு சூரிய உதயத்தையும் உனது குறுந்தகவல்களே கொண்டுவந்தது. எனது தினசரி வாழ்வில் தொழில் தவிர்த்த ஏனைய பெரும்பாலான நிகழ்வுகள் உன் தகவல்களின் அடிப்படையிலேயே நிகழ்ந்தது. அதிலும் பிறர் இருக்கும் பொது இடங்களில் பேசுவதற்கு அதிக வாய்ப்பில்லாத தருணங்களில் குறுந்தகவல்களின் வாயிலாக நீ அனுப்பும் செய்திகளும், சிறு சிறு கட்டளைகளும் எனது வாழ்வில் பல மென் வன்முறைகளை நிகழ்த்தியது. அடிக்கடி சந்திதுக்கொள்ளவும், பேசவும் முடியாத நமக்கு குறுந்தகவல்களே அன்பை உறுதியாய் பிணைக்கும் கயிறாக இருந்தது.

கல்லூரி படிப்பின் இறுதியாண்டில் இருந்த உனக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்படுவதையும் ஒரு குறுந்தகவல் வழியாகத்தான் என்னிடம் சொன்னாய், சில நாட்களுக்கு பிறகு, திடீரென ஒருநாள் "வீட்டில் பிரச்சனை, என் தம்பி உங்களுடன் பேசுவான். இனி குறுந்தகவல் எதுவும் அனுப்ப வேண்டாம்" என்று ஒரு குரூர தகவலையும் அனுப்பினாய். உன் தம்பியின் வழியாகவும், என் பெற்றோர்கள் வழியாகவும் பலமுறை உன் வீட்டில் பேசிய பின்பும், பொருத்தமில்லாத ஏதேதோ காரணங்களை காட்டி மறுத்து விட்ட உன் தந்தையையும், குடும்பத்தையும் தவிர்த்து விட்டு நாம் இணைவதற்கான வேறு எந்த வழியையும் தேர்ந்தெடுக்க விரும்பாத நாம், காதலில் இருந்து விலகிவிடுவதென முடிவு செய்தததும் இதே குறுந்தகவல்களின் வழியாகத்தான்.

நமக்குள் எல்லாவித தகவல் பரிமாற்றங்களும் நின்று போயிருந்த காலகட்டத்தில் சென்ற வருட பிறந்தநாள் வந்து போனது, ஏதோவொரு புரியாத உணர்வினால் உந்தப்பட்டு தனியாக "அய்யன் கோவிலு"க்கு சென்று கோவிலுக்குள் செல்லாமல் திரும்பி வந்தேன். பிறகு மூன்று மாதங்கள் கழித்து உனக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டதையும், உன் தந்தையிடம், நம்மை குறித்து பேசாததற்கு மன்னிப்பு கேட்டும்
" sorry pa , i was hopeless... am sorry " என்று ஒரு குறுந்தகவல் அனுப்பியிருந்தாய்.

முன்பெல்லாம் நான் எதாவது தவறு செய்துவிட்டு உன்னிடம் sorry கேட்டால், நமக்குள் எதற்கு மன்னிப்பு என்று உனக்கு கோபம் வந்துவிடும். உனது கடைசி குறுந்தகவலுக்கு பதில் அனுப்ப முடிவுசெய்து, நீ அடிக்கடி குறிப்பிடும் ஒரு வரியை டைப் செய்து அனுப்பாமல் DRAFT ல் சேமித்து வைத்துவிட்டேன். உனது எண், மற்றும் சேமித்து வைக்கப்பட்ட அனைத்து குறுந்தகவல்களையும் உன் திருமணத்திற்கு பிறகு அழித்து விட்டாலும் உனது கடைசி குறுந்தகவலையும், நான் அனுப்பாத அந்த பதிலையும் மட்டும் சேமித்து வைத்துள்ளதை நினைத்து கொண்டேன். கடந்த கால நினைவுகளின் அழுத்தத்தில் தோன்றிய நினைவுக்குமிழிகள் சட்டென மறைய, சகஜ நிலைக்கு திரும்பி கைப்பேசியை எடுத்து குறுந்தகவலை திறந்தேன்.

" MANYMORE HAPPY RETURNS OF THE DAY" hw u? pls forgot and forgiv me for the past one year...sorry. if u had time pls go 'ayyan kovil' என்று இருந்தது. அடுத்தடுத்து நண்பர்களிடமிருந்து வாழ்த்துகள் வந்து கொண்டேயிருந்தாலும் எந்த வாழ்த்தையும் பெற்றுக்கொள்ள இயலாத ஒரு மனநிலையை இந்த ஒரு குறுந்தகவல் ஏற்படுத்திவிட, முன்பொருமுறை உனக்கு அனுப்பாமல் விட்ட குறுந்தகவலை மீண்டுமொருமுறை படித்து பார்த்துவிட்டு கைப்பேசியை அணைத்தேன்..அது " love means never say you are sorry".


Share/Bookmark

Saturday, March 20, 2010

கடைசி சந்திப்புகண்ணீரின் சிலுவையில்
சொற்களை ஏற்றிவிட்டு
நமக்கிடையே அமர்ந்திருந்தது மௌனம்

உதடுகள் பயனற்று
போயிருந்த இத்தருணத்தில்
மனதிலிருந்து கசியும்
நேசம் வளர்த்த பிரிய சொற்கள்
காற்றில் கலந்து தவிக்கின்றன
குற்றுயிரும், குலையுயிருமாய்...
முன்பொரு முறை
நிழலாய் நம்மை தொடர்ந்திருந்த
மௌனத்தை நம்மிடமிருந்து
உடைத்து, அழித்தது
ஊற்று நீரென பெருகிய
இதே பிரிய சொற்கள்தான்.

காலத்தின் சுழற்சியில்
இது மௌனத்தின் தருணம்
கண்ணீரின் சிலுவையில்
சொற்களை ஏற்றிவிட்டு
நமக்கிடையே அமர்ந்திருந்தது
குரூர மௌனம்.Share/Bookmark

Saturday, March 13, 2010

முடிவுறா கனவுகள்கருப்பு,வெள்ளை நிறத்திலான
முடிவுறா கனவொன்றின்
முடிவினைத் தேடி
அடர் கானகமொன்றில் புகுந்தேன்..

இருள் கொடிகள் படர்ந்திருக்கும்
வானுயர் மரங்கள்,
பச்சையத்தை உதிர்த்துவிட்டு
கருமையை பூசியிருக்கும் சருகுகள்,
இருளை குடித்து,இருளை சுவாசித்து,
இருளை வெளியேற்றும் கானக பட்சிகள்,
இருளின் குளுமையை வனமெங்கும்
இறைத்து திரியும் கருப்புநிலா...

கனவின் பாதையில் உட்புக,உட்புக
கண்களில் உணர்ந்ததெல்லாம்
இருளின் பிம்பங்கள்.

அடர் வனமெங்கும் அறுந்து
சிதறியிருக்கும் நினைவுக் கண்ணிகளை
சேகரித்து கோர்த்து முடிக்கும் முன்,

உதிக்க துவங்கியிருந்தது
வெள்ளைச்சூரியன்.Share/Bookmark

Sunday, March 7, 2010

ஒழுக்கம்-துருப்பிடிக்கும் சமூக குணம்.


உலகம் ஒழுங்காய் இயங்க, நாடு ஒழுக்கமாக இருக்கவேண்டும்
நாடு ஒழுங்காய் இயங்க, குடும்பங்கள் ஒழுக்கமாக இருக்கவேண்டும்
குடும்பங்கள் ஒழுங்காய் இயங்க, தனிமனிதன் ஒழுக்கமாய் இருக்க வேண்டும்
தனிமனிதன் ஒழுக்கமாய் இருக்க, இதயம் தூய்மையாய் இருக்க வேண்டும்.

சீன அறிஞர் கன்பூசியஸ்

சன் குழுமத்தின் சமீபத்திய வெளியீடான " சுவாமிஜி"யின் அந்தரங்க தல வரலாறுதான் செய்தியுலகின் தரவரிசையில் கடந்த சில தினங்களாக முதலிடத்தை தக்கவைத்துள்ளது. பொதுவாக இவர்களது வெளியீடுகள் அனைத்தும் வெளியிடப்படுவதற்கு முன்னர் மிகப்பெரிய அளவில் (போதுமடா சாமி..எனுமளவிற்கு)விளம்பரங்கள் செய்யப்பட்டு, இறுதியில் வெளிவந்த பின்னர் கண்டுகொள்ளாமல் விடப்படும். வழக்கத்திற்கு மாறாக வெளியிடப்பட்ட பின்னர் மிகப்பெரிய அளவிலான பரபரப்பையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது. செய்தியின் நாயகனான சுவாமிஜி விமர்சிக்கப்பட்ட அளவு, அதை வெளியிட்ட சன் டி.வியின் ஒளிபரப்பு முறையும் விமர்சிக்கப்பட்டது.

பெருமளவு பார்வையாளர்களை கொண்ட ஒரு பிரபலமான தொலைக்காட்சியில் பாலியல் குற்றம் தொடர்பான செய்தியை வெளியிட்ட விதம், போலி ஆன்மிகவாதிகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போலல்லாமல் பிற மனிதர்களின் அந்தரங்கத்தின் மீது ஏற்படும் இயல்பான ஆர்வத்தை குறிவைத்து தயாரிக்கப்பட்டதாகவே அமைந்திருந்தது. பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்களும், புகார்களும் தெரிவிக்கப் பட்டதற்கும், அதன் பின்னர் சுவாமிஜியின்மீது கொலைக்குற்றமுட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதற்கும் காரணமாக சன் டிவியின் செய்தி அமைந்தது மட்டுமே சற்று ஆறுதலான நல்ல விளைவு.

செய்தியின் உப(ய) விளைவுகளாக தமிழக மக்களால் முதல் விஷயமாக விவாதிக்கப் பட்ட "யார் அந்த R எழுத்து நடிகை?, முழுக்காட்சிகளும் உள்ளதா? எப்போது கிடைக்கும்? போன்ற கேள்விகள் சமூக குணமாக இருக்க வேண்டிய "ஒழுக்கம்" குறித்தான ஐயங்களை ஏற்படுத்துகிறது. ஒழுக்கம் அல்லது ஒழுக்ககேடு என்பதற்கான சரியான வரைமுறைகளை உருவாக்குவதில் உள்ள பல்வேறு சிக்கல்களினால் ஒழுக்கம் என்பது நமது சமூகத்தில் கண்டும் காணாமலும் விடப்பட்டுள்ளதையே இக்கேள்விகள் உணர்த்துகிறது.

அரசியல்,ஆன்மிகம் போன்ற பொதுவாழ்வில் உள்ளவர்கள் இது போன்ற நெறிதவறிய வாழ்க்கைமுறைகளை மேற்கொண்டு அது பெரும்பாலானவர்களை பாதிக்கும் போதுதான் இது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு பின்னர் அவை மறக்கபடுவதும் சமூகத்தின் இயல்பாகிவிட்டது. இதற்கு முன்னரும் இதுபோன்று மூத்த அரசியல்வாதிகளும் , நாடறிந்த ஆன்மீகவாதிகளும் பாலியல் மற்றும் கொலை வழக்குகளில் ஆதாரத்துடன் சிக்கியிருந்த போதும் அவை மறக்கப்பட்டு/மறக்கடிக்கப்பட்டு அவர்கள் அதே சமூக மரியாதைகளோடு இயங்கிவருவது சகஜமான ஒன்றாகும். உலகின் பலம்வாய்ந்த பதவியில் இருக்கும் ஒரு தேசத்தின் அதிபர் தன் தனிவாழ்வில் செய்த ஒரு தவறுக்காக தன் மனைவியிடம் மட்டுமின்றி தன் நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கோருவது, அமெரிக்கா போன்ற தனிமனித ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் தராத நாடுகளிலும் சமூக ஒழுக்கம் என்பது முக்கியமானதாக கருதப்படுவதற்கு ஆதாரமாக உள்ளது.

துருப்பிடித்த இரும்பினால் காட்டப்படும் வீடு எவ்வாறு உறுதியில்லாமல் இருக்குமோ, அதுபோன்றே துருப்பிடித்த குணங்களால் கட்டமைக்கபடும் சமூகமும் உறுதியற்றதாக இருக்கும் . எல்லாம் ஒழுங்காய் இருக்கும் சமூகத்தில் அரசாங்கங்களோ அல்லது ஆன்மீகமோ தேவைப்படாது. தனிமனிதர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய இந்த சமூகத்தில் ஒழுக்கம் என்பதும் தனிமனிதனிடமிருந்தே துவங்க வேண்டும். ஏனெனில் சுவர்களற்ற படுக்கையறைகளை உருவாக்கி கொண்டிருக்கும் இன்றைய தொழில்நுட்ப சமூகத்தில், ஒழுக்கம் குறித்தும், ஒழுக்க நெரியலமைந்த வாழ்க்கை முறை குறித்தும் கற்றுத்தரப்படுவது அவசியமான ஒன்றாகியுள்ளது. இதற்கு அரசாங்கத்தையோ அல்லது நித்தியானந்தா போன்ற போலி ஆன்மீகவாதிகளையோ நாடிச்செல்லாமல் ஒவ்வொரு தனிமனிதனும் தன் குடும்பத்திலிருந்தே ஒழுக்கத்தை கடைபிடிப்பதும், அடுத்த தலைமுறையினருக்கு அதை சரியாக கற்றுத்தருவதுமே சிறந்த சமூகம் உருவாக உதவும்.


Share/Bookmark

Saturday, March 6, 2010

தொலைந்து போ...என்றாய்


உன் கண்களிலிருந்து வெளியேறி
துவங்கிய என் பிரிவின் பயணம்
ஏழு கடல், ஏழு மலைகளை தாண்டியும்
முடிவுறாமல் தொடர்கிறது...
வழி நெடுகிலும், வலி தொடர
கடந்து வந்த பாதையின் தூரத்தை
மரத்துப் போன கால்களைக் காட்டிலும்
கண்ணீரை தீர்த்து விட்ட
என் கண்களே அறியும்..
மரத்துப் போன கால்களுக்கும்,
வறண்டு போன கண்களுக்கும்
ஏதேதோ சமாதானங்கள் சொல்லியபடி
தொலைந்து கொண்டிருக்கிறது என் சுயம்.!
"தொலைந்து போ" என்ற உன் சொல்லை
எதிரொலித்துக் கொண்டேயிருக்கும் செவிகளையும்
தொலைய மறுக்கும் உன் பிம்பத்தை
பிரதிபலித்து கொண்டேயிருக்கும்
என் பூதக்கண்ணாடி மனதையும் தான்
என்ன செய்வதென்று தெரியவில்லை..Share/Bookmark

Tuesday, March 2, 2010

முடிவிலா பிரியங்கள்


உன்னை எதிர்கொள்வது கடினம்,
அதைவிட கடினம்
உன் புன்னகையில் உதிரும்
பிரியங்களை எதிர்கொள்வது..!

நிறை கொள்ள இயலாமல்
ததும்பி, நுரைத்து வழியும்
பிரியத்தில் சிறிதை எடுத்து
ரகசிய சொற்களாக்கி
குழந்தை ஒன்றிடம் சொல்லி வைத்தேன்
மொழி பழகா அக்குழந்தை, பிரிய சொற்களை
மழலையாக்கி உளறித் திரிந்தது
மழலையின் உளறலில் இரட்டிப்பான
பிரியத்தை எல்லாம் பனித்துகள்களாக்கி
மேகங்களுக்குள் மறைத்து வைத்தேன்
தனிமையின் மோகக் குளிரை
தாங்காத பிரிய மேகங்கள்
மழையாய் பொழிந்து, மனம் நனைத்தது
மனம் நடுங்க பொழிந்த மழையில்
சிறிதை கைகளில் ஏந்தி
தோட்டத்து செடிக்கு நீர் வார்த்தேன்
பிரியங்களில் செழித்த ரோஜாச்செடி
பிரியங்களை எல்லாம்
மொட்டுகளாக்கி பூத்து சிரித்தது
சிரித்த பூக்களில் சிறந்ததை பறித்து
உன்னிடம் தந்தேன்,
நாணத்துடன் பூவை
பெற்றுக்கொண்ட நீ உதிர்த்தாய்,
மற்றுமொரு புன்னகையை...

உன்னை எதிர்கொள்வது கடினம்,
அதைவிட கடினம்
உன் புன்னகையில் உதிரும்
பிரியங்களை எதிர்கொள்வது..!

Share/Bookmark