Thursday, March 25, 2010

1 message receivedகிட்டத்தட்ட ஏழெட்டு மாதங்களுக்கு மேலாகிறது இதுபோல நள்ளிரவில் குறுந்தகவல் வந்து.

இரவு மணி பதினொன்றை தாண்டியிருக்கும், உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன், மனைவிக்கு முன்னரே படுக்கையில் இடம்பிடித்திருந்த கைப்பேசி, சிறு சத்தத்துடன்
" 1 message received " என ஒளிர்ந்தது. விடிந்தால் பிறந்தநாள் எனவே எவரிடமாவதிருந்து வாழ்த்து வந்திருக்கும். வயது அதிகமாக, அதிகமாக பிறந்தநாளுக்கான வாழ்த்துக்களை எதிர்கொள்ளும் போது நினைவின் ஆழத்தில் சிறு அச்சம் நீர்க் குமிழிகளென தோன்றி கண நேரத்தில் மறைந்து விடுகின்றன. அத்தகையதொரு நினைவுக்குமிழி திடீரென தோன்றி நினைவுகளை பின்னோக்கி கொண்டு சென்றது.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் கைப்பேசி பயன்படுத்த துவங்கிய போது, புத்தாண்டுக்கு முந்தய இரவிலும், என் பிறந்தநாளின் முந்தய இரவிலும் ஒன்றோ இரண்டோ வாழ்த்து தகவல்கள் வரும், அதிலும் பிறந்த நாளுக்கென வரும் வாழ்த்துக்கள் பெரும்பாலும் சுய அறிவிப்பினால் பெறப்பட்ட வாழ்த்துகளாகவே இருக்கும். அதன் பிறகான குறுந்தகவல் யுகமாகிவிட்ட சமீப ஆண்டுகளில் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குவதை போன்றே குறுந்தகவலுக்கும் நேரம் ஒதுக்குவது முக்கியமாகிவிட்டது. நண்பர்களிடமிருந்தான இலவச அறிவுரைகள், மொக்கைகள் மற்றும் நமக்கு சம்பந்தமே இல்லாத கடன்காரர்களிடமிருந்து வரும் கடனாளியாக்குவதற்கான ஆலோசனைகள் என பலவகை குறுந்தகவல்களை எதிர்கொள்ள/சகித்துக்கொள்ள பழகியிருந்த ஒரு காலத்தில்தான் உன் காதலையும் சந்திக்க நேர்ந்தது.

பெண்களோ,ஆண்களோ தம் எதிர் பாலினருடனான உறவில் நட்பு என்ற புரியாத சமன்பாட்டிற்கு விடை தேட எவ்வளவுதான் முயன்றாலும், அச்சமன்பாட்டை கூட்டி,கழித்து, பெருக்கி காதல் என்ற விடையை கொண்டுவருவதில் 'குறுந்தகவல்கள்' முக்கிய பங்காற்றுகின்றன. இதை தெரிந்தோ, தெரியாமலோ அறியாமல் விட்டிருந்த நான் உன்னையும், நீ என்னையும் நமது குறுந்தகவல்களின் மூலம் பின்தொடர துவங்கிய பிறகு வேறு எந்த விசயங்களும் பெறாத முக்கியத்துவத்தை குறுந்தகவல்கள் பெற்றது. அதிலும் இரண்டாண்டுகளுக்கு முன் இதே போன்றதொரு நள்ளிரவில் நீ அனுப்பிய பிறந்தநாள் வாழ்த்து வெறும் வாழ்த்தாக மட்டுமல்லாமல் நட்பு வெள்ளத்தை கடந்து காதல் கரையை நாம் அடைந்ததற்கான பாலமாகவும் இருந்தது.

நமது காதல் நாட்களின் முதல் நாளான அந்த பிறந்தநாளில் உனது கட்டளை மற்றும் அறிவுறுத்தலின் படி நான் தனியாகவும், நீ தனியாக உன் தோழியுடனும் "அய்யன் கோவிலு"க்கு சென்றிருந்தோம். இருவருமே உள்ளூர் என்பதால் இதற்கு முன்பு பல முறை பொது இடங்களில் இருவரும் சந்தித்திருந்த போதும் இதுவரை உணராத ஒரு அச்சத்தையும், படபடப்பையும் இருவருமே அன்று உணர்ந்தோம். எனது பெயருடன், உனது தந்தையின் பெயருக்கும் சேர்த்து அர்ச்சனை செய்துவிட்டு "இன்னைக்கு தான் எங்க அப்பாவுக்கும் பிறந்தநாள்" என்று நீ கூறியதற்கு " அப்போ ரெண்டு பேருக்கும் ஒத்துபோயிடும்னு நினைக்கிறேன்" என்று நான் கூறிய போது, சிறு அச்சம் கலந்த சிரிப்பை உதிர்த்துவிட்டு விடைபெற்றாய்.

அதன் பிறகான ஓராண்டு கால காதல் நாட்களில் எனது ஒவ்வொரு சூரிய உதயத்தையும் உனது குறுந்தகவல்களே கொண்டுவந்தது. எனது தினசரி வாழ்வில் தொழில் தவிர்த்த ஏனைய பெரும்பாலான நிகழ்வுகள் உன் தகவல்களின் அடிப்படையிலேயே நிகழ்ந்தது. அதிலும் பிறர் இருக்கும் பொது இடங்களில் பேசுவதற்கு அதிக வாய்ப்பில்லாத தருணங்களில் குறுந்தகவல்களின் வாயிலாக நீ அனுப்பும் செய்திகளும், சிறு சிறு கட்டளைகளும் எனது வாழ்வில் பல மென் வன்முறைகளை நிகழ்த்தியது. அடிக்கடி சந்திதுக்கொள்ளவும், பேசவும் முடியாத நமக்கு குறுந்தகவல்களே அன்பை உறுதியாய் பிணைக்கும் கயிறாக இருந்தது.

கல்லூரி படிப்பின் இறுதியாண்டில் இருந்த உனக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்படுவதையும் ஒரு குறுந்தகவல் வழியாகத்தான் என்னிடம் சொன்னாய், சில நாட்களுக்கு பிறகு, திடீரென ஒருநாள் "வீட்டில் பிரச்சனை, என் தம்பி உங்களுடன் பேசுவான். இனி குறுந்தகவல் எதுவும் அனுப்ப வேண்டாம்" என்று ஒரு குரூர தகவலையும் அனுப்பினாய். உன் தம்பியின் வழியாகவும், என் பெற்றோர்கள் வழியாகவும் பலமுறை உன் வீட்டில் பேசிய பின்பும், பொருத்தமில்லாத ஏதேதோ காரணங்களை காட்டி மறுத்து விட்ட உன் தந்தையையும், குடும்பத்தையும் தவிர்த்து விட்டு நாம் இணைவதற்கான வேறு எந்த வழியையும் தேர்ந்தெடுக்க விரும்பாத நாம், காதலில் இருந்து விலகிவிடுவதென முடிவு செய்தததும் இதே குறுந்தகவல்களின் வழியாகத்தான்.

நமக்குள் எல்லாவித தகவல் பரிமாற்றங்களும் நின்று போயிருந்த காலகட்டத்தில் சென்ற வருட பிறந்தநாள் வந்து போனது, ஏதோவொரு புரியாத உணர்வினால் உந்தப்பட்டு தனியாக "அய்யன் கோவிலு"க்கு சென்று கோவிலுக்குள் செல்லாமல் திரும்பி வந்தேன். பிறகு மூன்று மாதங்கள் கழித்து உனக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டதையும், உன் தந்தையிடம், நம்மை குறித்து பேசாததற்கு மன்னிப்பு கேட்டும்
" sorry pa , i was hopeless... am sorry " என்று ஒரு குறுந்தகவல் அனுப்பியிருந்தாய்.

முன்பெல்லாம் நான் எதாவது தவறு செய்துவிட்டு உன்னிடம் sorry கேட்டால், நமக்குள் எதற்கு மன்னிப்பு என்று உனக்கு கோபம் வந்துவிடும். உனது கடைசி குறுந்தகவலுக்கு பதில் அனுப்ப முடிவுசெய்து, நீ அடிக்கடி குறிப்பிடும் ஒரு வரியை டைப் செய்து அனுப்பாமல் DRAFT ல் சேமித்து வைத்துவிட்டேன். உனது எண், மற்றும் சேமித்து வைக்கப்பட்ட அனைத்து குறுந்தகவல்களையும் உன் திருமணத்திற்கு பிறகு அழித்து விட்டாலும் உனது கடைசி குறுந்தகவலையும், நான் அனுப்பாத அந்த பதிலையும் மட்டும் சேமித்து வைத்துள்ளதை நினைத்து கொண்டேன். கடந்த கால நினைவுகளின் அழுத்தத்தில் தோன்றிய நினைவுக்குமிழிகள் சட்டென மறைய, சகஜ நிலைக்கு திரும்பி கைப்பேசியை எடுத்து குறுந்தகவலை திறந்தேன்.

" MANYMORE HAPPY RETURNS OF THE DAY" hw u? pls forgot and forgiv me for the past one year...sorry. if u had time pls go 'ayyan kovil' என்று இருந்தது. அடுத்தடுத்து நண்பர்களிடமிருந்து வாழ்த்துகள் வந்து கொண்டேயிருந்தாலும் எந்த வாழ்த்தையும் பெற்றுக்கொள்ள இயலாத ஒரு மனநிலையை இந்த ஒரு குறுந்தகவல் ஏற்படுத்திவிட, முன்பொருமுறை உனக்கு அனுப்பாமல் விட்ட குறுந்தகவலை மீண்டுமொருமுறை படித்து பார்த்துவிட்டு கைப்பேசியை அணைத்தேன்..அது " love means never say you are sorry".


Share/Bookmark

4 comments:

Gracy said...

reality strikes...wishes for a very good life1

தமிழ் said...

தாமதமாக வாழ்த்து சொல்லி விட்டேனே என்று வருந்தி இங்கு வந்தால்,

//எந்த வாழ்த்தையும் பெற்றுக் கொள்ள இயலாத மன நிலையை// ..கனக்கிறது திரு.

மீளுங்கள்..

திருநாவுக்கரசு பழனிசாமி said...

Thanks Gracy..
Thanks Tamizh..

Dhileepan said...

கன நேரத்தில் மனதை கனமாக்கிவிட்ட பதிவு.

Post a Comment