Sunday, March 7, 2010

ஒழுக்கம்-துருப்பிடிக்கும் சமூக குணம்.


உலகம் ஒழுங்காய் இயங்க, நாடு ஒழுக்கமாக இருக்கவேண்டும்
நாடு ஒழுங்காய் இயங்க, குடும்பங்கள் ஒழுக்கமாக இருக்கவேண்டும்
குடும்பங்கள் ஒழுங்காய் இயங்க, தனிமனிதன் ஒழுக்கமாய் இருக்க வேண்டும்
தனிமனிதன் ஒழுக்கமாய் இருக்க, இதயம் தூய்மையாய் இருக்க வேண்டும்.

சீன அறிஞர் கன்பூசியஸ்

சன் குழுமத்தின் சமீபத்திய வெளியீடான " சுவாமிஜி"யின் அந்தரங்க தல வரலாறுதான் செய்தியுலகின் தரவரிசையில் கடந்த சில தினங்களாக முதலிடத்தை தக்கவைத்துள்ளது. பொதுவாக இவர்களது வெளியீடுகள் அனைத்தும் வெளியிடப்படுவதற்கு முன்னர் மிகப்பெரிய அளவில் (போதுமடா சாமி..எனுமளவிற்கு)விளம்பரங்கள் செய்யப்பட்டு, இறுதியில் வெளிவந்த பின்னர் கண்டுகொள்ளாமல் விடப்படும். வழக்கத்திற்கு மாறாக வெளியிடப்பட்ட பின்னர் மிகப்பெரிய அளவிலான பரபரப்பையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது. செய்தியின் நாயகனான சுவாமிஜி விமர்சிக்கப்பட்ட அளவு, அதை வெளியிட்ட சன் டி.வியின் ஒளிபரப்பு முறையும் விமர்சிக்கப்பட்டது.

பெருமளவு பார்வையாளர்களை கொண்ட ஒரு பிரபலமான தொலைக்காட்சியில் பாலியல் குற்றம் தொடர்பான செய்தியை வெளியிட்ட விதம், போலி ஆன்மிகவாதிகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போலல்லாமல் பிற மனிதர்களின் அந்தரங்கத்தின் மீது ஏற்படும் இயல்பான ஆர்வத்தை குறிவைத்து தயாரிக்கப்பட்டதாகவே அமைந்திருந்தது. பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்களும், புகார்களும் தெரிவிக்கப் பட்டதற்கும், அதன் பின்னர் சுவாமிஜியின்மீது கொலைக்குற்றமுட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதற்கும் காரணமாக சன் டிவியின் செய்தி அமைந்தது மட்டுமே சற்று ஆறுதலான நல்ல விளைவு.

செய்தியின் உப(ய) விளைவுகளாக தமிழக மக்களால் முதல் விஷயமாக விவாதிக்கப் பட்ட "யார் அந்த R எழுத்து நடிகை?, முழுக்காட்சிகளும் உள்ளதா? எப்போது கிடைக்கும்? போன்ற கேள்விகள் சமூக குணமாக இருக்க வேண்டிய "ஒழுக்கம்" குறித்தான ஐயங்களை ஏற்படுத்துகிறது. ஒழுக்கம் அல்லது ஒழுக்ககேடு என்பதற்கான சரியான வரைமுறைகளை உருவாக்குவதில் உள்ள பல்வேறு சிக்கல்களினால் ஒழுக்கம் என்பது நமது சமூகத்தில் கண்டும் காணாமலும் விடப்பட்டுள்ளதையே இக்கேள்விகள் உணர்த்துகிறது.

அரசியல்,ஆன்மிகம் போன்ற பொதுவாழ்வில் உள்ளவர்கள் இது போன்ற நெறிதவறிய வாழ்க்கைமுறைகளை மேற்கொண்டு அது பெரும்பாலானவர்களை பாதிக்கும் போதுதான் இது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு பின்னர் அவை மறக்கபடுவதும் சமூகத்தின் இயல்பாகிவிட்டது. இதற்கு முன்னரும் இதுபோன்று மூத்த அரசியல்வாதிகளும் , நாடறிந்த ஆன்மீகவாதிகளும் பாலியல் மற்றும் கொலை வழக்குகளில் ஆதாரத்துடன் சிக்கியிருந்த போதும் அவை மறக்கப்பட்டு/மறக்கடிக்கப்பட்டு அவர்கள் அதே சமூக மரியாதைகளோடு இயங்கிவருவது சகஜமான ஒன்றாகும். உலகின் பலம்வாய்ந்த பதவியில் இருக்கும் ஒரு தேசத்தின் அதிபர் தன் தனிவாழ்வில் செய்த ஒரு தவறுக்காக தன் மனைவியிடம் மட்டுமின்றி தன் நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கோருவது, அமெரிக்கா போன்ற தனிமனித ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் தராத நாடுகளிலும் சமூக ஒழுக்கம் என்பது முக்கியமானதாக கருதப்படுவதற்கு ஆதாரமாக உள்ளது.

துருப்பிடித்த இரும்பினால் காட்டப்படும் வீடு எவ்வாறு உறுதியில்லாமல் இருக்குமோ, அதுபோன்றே துருப்பிடித்த குணங்களால் கட்டமைக்கபடும் சமூகமும் உறுதியற்றதாக இருக்கும் . எல்லாம் ஒழுங்காய் இருக்கும் சமூகத்தில் அரசாங்கங்களோ அல்லது ஆன்மீகமோ தேவைப்படாது. தனிமனிதர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய இந்த சமூகத்தில் ஒழுக்கம் என்பதும் தனிமனிதனிடமிருந்தே துவங்க வேண்டும். ஏனெனில் சுவர்களற்ற படுக்கையறைகளை உருவாக்கி கொண்டிருக்கும் இன்றைய தொழில்நுட்ப சமூகத்தில், ஒழுக்கம் குறித்தும், ஒழுக்க நெரியலமைந்த வாழ்க்கை முறை குறித்தும் கற்றுத்தரப்படுவது அவசியமான ஒன்றாகியுள்ளது. இதற்கு அரசாங்கத்தையோ அல்லது நித்தியானந்தா போன்ற போலி ஆன்மீகவாதிகளையோ நாடிச்செல்லாமல் ஒவ்வொரு தனிமனிதனும் தன் குடும்பத்திலிருந்தே ஒழுக்கத்தை கடைபிடிப்பதும், அடுத்த தலைமுறையினருக்கு அதை சரியாக கற்றுத்தருவதுமே சிறந்த சமூகம் உருவாக உதவும்.


Share/Bookmark

2 comments:

ஜோதிஜி said...

அருமையான புரிந்துணர்வு. நல்வாழ்த்துகள்,

தேவியர் இல்லம் திருப்பூர்

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி ஜோதிஜி

Post a Comment