Friday, April 23, 2010

ஆகு பெயர் (பாகம் -2 )

தூவானம் ஓய்ந்து வானம் வெளுத்திருந்த அன்றைய மாலையில் எனது கைப்பேசிக்கு மற்றொரு புதிய கைப்பேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. எனது கைப்பேசியில் பதிவு செய்யப்படாத புதிய எண்ணிலிருந்து வரும் அழைப்புகளை பெரும்பாலும் தவிர்த்து விடும் வழக்கமுடைய நான் என் வாழ்வின் பருவ நிலைகளை மாற்றப்போகும் அழைப்பு அது என்று தெரியாமல் வழக்கத்தை மீறினேன்.

ஹலோ..

ஹலோ..ரகு...நான்தான்..! யார்னு தெரியுதா?

சொல்லுங்க "நான்தான்"..இதுதா உங்க பேரா?

ம்..இதுவும் நல்லாதானே இருக்கு..அப்படியே கூப்பிடுங்க..ஆமா டெய்லி காலேஜ் வரைக்கும் வருவீங்க, இன்னைக்கு பாதியிலேயே நின்னுடீங்க, உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்னுதான் மெதுவா போனேன்..

ஆஹா.,எனக்காகத்தான் மெதுவா போறீங்களா..தேங்க்ஸ்ங்க, அத இப்போ சொல்லுங்க, அப்படியே உங்க பேரையும் சொல்லிட்டீங்கனா நல்லாயிருக்கும்..

என்ன ஆனாலும் என் பேர தெரிஞ்சிக்காம விடமாட்டீங்க போலிருக்கே..!

புதுசா ஒருத்தர்கிட்ட பழகும்போது பெயர்தானே முக்கியம்..உங்க அப்பா உங்களுக்கு ஒரு பெயர்தான் வச்சிருப்பார், ஆனா நான் உங்களை பார்த்ததிலிருந்து எவ்வளவு பெயர யோசிச்சிருப்பேன் தெரியுமா?ஆனா உங்களுக்கு எதுவுமே செட் ஆகல..

ஹா..யாருன்னே தெரியாத பொண்ணுக்கெல்லாம் பெயர் வைக்க எதுக்கு இவ்வளவு கஷ்டப்படறீங்க..ஆமா பழக்கமே இல்லாத என்னோட பேர தெரிஞ்சு என்ன பண்ணுவீங்க..உண்மையான காரணத்த சொல்லுங்க..அப்புறம் நான் சொல்றேன்.

ஒ.கே..ரொம்ப நாளா உங்களை பாத்துட்டுதா இருக்கேன், எனக்கு புடிச்சிருக்கு..போதுமா?

எதிர்முனையில் சிறிது நேரம் எந்த பதிலுமில்லை. முன்பின் அறிமுகமில்லாத, ஓரிரு முறை மட்டுமே பேசிய ஒரு பெண்ணிடம் அவசரப்பட்டு பேசி உளறி விட்டோமோ என்ற பயம் திடீரென தோன்றி என்னையும் மௌனமாக்கியது. மனதிற்குள் என்னை நானே திட்டிக்கொண்டு தொலைப்பேசி இணைப்பையும் துண்டிக்க மனமின்றி, வாழ்வில் இதுவரை கண்டிராத கடினமான நொடிகளை மௌனமாய் கடந்துகொண்டிருந்தேன்.

ஹலோ லைன்ல இருக்கீங்களா? இல்லையா?

ம்ம்..இருக்கேன்.,சாரிங்க !

சரி..முதல்ல உங்களை பத்தி சொல்லுங்க..உங்க பேர் ரகு..வேற?

நொடிகளை நீட்டித்து நிமிடங்களாக்காமல் சில நொடிகளிலேயே அவளே, மௌனத்தின் கூட்டை உடைத்து விட்டதால் புதிதாய் இறக்கை முளைத்த பறவை தடுமாறி, தடுமாறி பறக்க துவங்குவதைப் போன்று எனது மற்ற விபரங்களை சிறு பதட்டத்துடன் சொல்லி முடித்தேன்.

சரி, நீங்க சொன்னதெல்லாம் உண்மைதானா?

ஹலோ..இதுலயெல்லாம் யாராவது பொய் சொல்லுவாங்களா..பொண்ணுங்க சேஃப்டியா இருக்கலாம் அதுக்காக இப்படியா?

ஒ.கே, ஒ.கே...இதுதான் என்னோட மொபைல் நம்பர், ஆனா நீங்களா கூப்பிடக்கூடாது. தேவைப்பட்டா நானே போன் பண்ணுவேன், இனிமேல் மார்னிங் டைம்ல என்ன ஃபாலோ பண்ணக் கூடாது. அப்புறம் என்னோட நேம் ஸ்வாதி போதுமா.?

ஸ்வாதி.

சொல்லுங்க

இல்ல, சும்மா கூப்பிட்டு பார்த்தேன். உங்களை விட உங்க நேம் நல்லாயிருக்கு, ஆனா இந்த பேர மட்டும் நான் யோசிக்கவேயில்ல.

சரி அப்புறம் பார்ப்போம்..மறுபடி சொல்றேன், நீங்களா போன் பண்ண கூடாது. பை..! என்றபடி இணைப்பை துண்டித்துவிட்டாள்.


காலையில் குளிர் காற்றென வீசிய சொற்களுடன்,மாலை நேர முன்பனியும் சேர்ந்து மனதின் புழுக்கத்தை முற்றிலுமாக மறையச் செய்தது. நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்தபோதிலும் இப்போது திடீரென ஏதோவொரு வர்ணிக்கவியலா அன்பு கைப்பேசியின் மேல் தோன்ற, கடைசியாக வந்த அவளது எண்ணை கைப்பேசியில் சேமித்தேன். நமக்கு பிரியமானவர்களின் பெயரை உச்சரிக்கும் போதோ, எழுதும் போதோ ஏற்படும் மகிழ்ச்சியை முதன்முறையாக உணர்ந்தேன். புதிதாக காதல் வயப்படுபவர்களுக்கே உரிய குறு,குறுப்பில்

" Since my childhood, i try to count the stars in the sky,
but i couldn't..After reciving ur call,,now i know how many stars,
The no of stars exactly match with ur number...
thanx for giving ur no.

என்ற குறுந்தகவலை அவளது எண்ணிற்கு அனுப்பி விட்டு பதிலாக குறுந்தகவலோ அல்லது குறுந்தகவல் வழியாக "அர்ச்சனை" ஏதோனும் வருமோ என்று காத்திருக்க துவங்கினேன்.

தொடரும்..ஆகு பெயர் (பாகம் -1 )


Share/Bookmark

Tuesday, April 20, 2010

ஆகு பெயர் ( பாகம்-1 )
ஏங்க... இன்னைக்காவது உங்க பேர சொல்றீங்களா..? இல்லையா...?
....!!!!!!!! ? அதே மர்மப் புன்னகை.

அனேகமா இந்த எட்டு மாசத்திலே ஒரு நாளைக்கு ரெண்டு தரம்னாலும் கிட்டத்தட்ட ஐநூறு முறை இதே கேள்வியை உங்ககிட்ட கேட்டிருப்பேன். எப்ப கேட்டாலும் இதே சிரிப்புத்தானா..?

மீண்டும் அதே புன்னகை..சற்று பெரியதாக..!

ஏங்க இப்படி இருக்கீங்க.. ?

எப்படி..?

இவ்ளோ அழகா!.. ஆஹா..நீங்க பேசினாலும் அழகாத்தான் இருக்கீங்க..

ஏன் இப்படி டெய்லீ பின்னாடியே வந்து டிஸ்டர்ப் பண்றீங்க.. என் பெயர் உங்களுக்கு எதுக்கு தெரியனும்..?

பேர தெரிஞ்சிகிட்டு என்ன பண்ணுவோம்..கூப்பிடத்தான்..!

இப்படிதா., எல்லா காலேஜ் பொண்ணுங்ககிட்டையும் ரோட்ல மறிச்சு பெயர் கேட்பீங்களா?

இல்லைங்க உங்ககிட்ட மட்டும்தான்..

அதுதான் எதுக்கு?

ஆஹா..பேசறது எல்லாமே கேள்விதானா.?சரியான கேள்வியின் நாயகியா இருக்கீங்களே..

கோபமாய் ஒரு சின்ன முறைப்பு

ஒ.கே இப்படி பைக்ல போய்ட்டே பேசறது டேஞ்சர்..உங்க நெம்பர் கேட்ட தரமாட்டீங்க. இந்த நெம்பருக்கு கால் பண்ணுங்க ப்ளீஸ் .

என்றவாறு எனது கைப்பேசி எண்ணை தந்தேன், சிறு தயக்கத்துடன் வாங்கிக்கொண்டு குழப்பமான பார்வை ஒன்றை உதிர்த்து விட்டு கல்லூரிக்குள் (பைக்கில்) பறந்து சென்றாள். அதன் பிறகுதான் கடந்த சில நிமிடங்களாக மிதந்து கொண்டிருந்த நானும், ஏனைய சுற்றுப்புறமும் சகஜ நிலைக்கு திரும்பினோம். இவ்வாறு தரையிலிருந்து மேலெழும்பி மிதப்பது கடந்த எட்டு மாதங்களாக நிகழ்கிறது.

கல்லூரியில் படித்தது கொண்டிருக்கும் போதும், அதன் பிறகு தனியார் நிறுவனம் ஒன்றில் மூன்றாண்டுகள் வேலை செய்த காலங்களிலும் பல பெண்களுடன் பழகியிருந்த போதும் தோழமை எல்லையை தாண்டாத என் மனது இந்த எட்டு மாதங்களாக பெயர் தெரியாத ஒரு பெண்ணின் பார்வைச்சுழலில் சிக்கி தவிப்பது எனக்கே சற்று பயம் கலந்த ஆச்சர்யமாய்தான் உள்ளது.

அடுத்து வந்த காலை நேரங்களில் நேரில் சந்திப்பதற்கு செல்வதை தவிர்த்து தொலைபேசி அழைப்புக்காக காத்திருக்க துவங்கினேன். வழக்கமாக கைப்பேசியில் அழைப்புகள் வருவதும், அவற்றிற்கான பதில்களை அளிப்பதும் நமது "ஒரு நாளில்" கணிசமான நேரத்தை ஆட்கொண்டுவிட்ட நிலையில், எதிர்பாராத சில அழைப்புகள் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் ஒருசேர கொண்டுவரும். அந்த மாதிரியான ஒரு அழைப்பு மூன்றுதினங்களுக்கு பிறகு புதிய எண் (லேன்ட்லைன்) ஒன்றிலிருந்து வந்தது.

ஹலோ..

ஹலோ..யாருங்க..?

உங்க நேம் ரகுதானே?

ஆமா,,நீங்க ?

இப்படிதான் ரோட்ல போற எல்லோர்கிட்டயும் நெம்பர தந்துட்டு,,போன் பண்ணினா யாரு ,யாருன்னு கேட்பீங்களா?

ஆஹா..நீங்களா? தேங்கஸ்ங்க ஆமா, என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்?

அதான், டெய்லி பைக்குங்கர பேர்ல ஒரு கருப்பு குதிரைய ஓட்டிட்டு வருவீங்களே அதுல இருக்குதே 'ரகு'ன்னு..

ஓ...இதெல்ல வாட்ச் பண்றீங்களா? ஆமா உங்க நேம் சொல்ல மாட்டீங்களா?

ஹலோ..அத தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க? நல்ல திட்டனும்னுதா போன் பண்ணினேன். நா யார்கிட்டயும் கோபப்பட மாட்டேன்..ஸோ, ப்ளீஸ் புரிஞ்சிக்கங்க இனிமேல் என்கிட்டே பேச ட்ரை பண்ணாதீங்க. நீங்க இப்படி பண்றதால எனக்கு எவ்ளோ பிரச்சனை தெரியுமா?

சாரிங்க..இப்படி பாலோ பண்றதுனால எனக்கும்தான் பிரச்சனை..

உங்க பிரச்சனை எனக்கு தேவையில்ல..இனி இப்படி பண்ணாதீங்க..நா போனை வைக்கிறேன்

ஹலோ,ஹலோ கட் பண்ணிடாதீங்க, உங்களுக்கு என்ன பிரச்சனை?

கரெக்ட் டைம்க்கு நான் வர்றனோ,இல்லையோ நீங்க வந்துடறீங்க..என் கூட வர்ற பிரெண்ட் ஒருத்தி அத பாத்துட்டு கிளாஸ்ல சொல்லிட்டா,, இந்த ஆறு மாசமா உங்களை வைச்சுதான் என்னை கலாய்க்கிறாங்க..என்னால சமாளிக்க முடியல சாமி..

ஏங்க..யாருங்க அந்த பிரெண்ட்.,அவங்களுக்கு முதல்ல தேங்கஸ் சொல்லானும்.

என்ன விளையாடறீங்களா..முதல்ல நான் போனை கட் பண்றேன் குட் பை..!

உங்க நேம் மட்டும் சொல்லிட்டு, கட் பண்ணுங்க..

ஓ.கே நான் கண்டுபுடிச்ச மாதிரி நீங்களும் கண்டுபிடிச்சுக்கங்க.

ஏங்க இப்படி இருக்கீங்க..?சரி ஏதாவது ஃக்ளுவாவது குடுங்க?

ம்ம்..என்னோட நட்சத்திரமும்,பெயரும் ஒண்ணுதான்..ஆமா கண்டுபுடிச்சுதான் என்ன ஆகப்போகுது. ஸோ விடுங்க...

ஏங்க நட்சத்திரத்தை தெரிஞ்சிகிட்டு அர்ச்சனையா பண்ணப்போறேன்..சொல்றதுன்னா சொல்லுங்க..

அர்ச்சனை பண்ணுவீங்களோ, ஆராதனை பண்ணுவீங்களோ ஆளவிடுங்க..என்றபடி போனை வைத்துவிட்டாள்.


கைப்பேசியை அணைத்துவிட்டு யோசித்த போது ஏதோ ஒரு அழுத்தத்திலிருந்து விடுபட்டது போல் தோன்றியது. விளையாட்டாய் துவங்கிய என் காதல் சில மாத பார்வை தொடரல்களிலும், சில மாத வாகன தொடரல்களிலும் வளர்ந்து, தொலைபேசும் அளவில் வந்துள்ளது. அடுத்த நாள் நேரில் பார்த்துவிடுவது என முடிவுசெய்து வழக்கமான இடத்திற்கு வந்து காத்து கொண்டிருந்தேன், சரியான நேரத்தில் கடந்து சென்ற அவளது வாகனம் என்னை கடந்த பின் சற்று மெதுவாகியது. பேசுவதற்கு முந்தய நாட்களில் தைரியமாக பின்தொடர்ந்த எனக்கு பேசிய பின்பு இன்று சற்று பதட்டமாக இருந்தது. இருந்தாலும் பைக்கை எடுத்துகொண்டு அருகில் சென்றேன்.

ஏங்க....பைக் ஏதாவது ஆயிடுச்சா? என்ற என்னை, கேள்வியோடு பார்த்தாள்..

இல்ல திடீர்னு ஸ்லோ ஆயிடுச்சே..அதா பைக் ஏதாவது ஆயிடுச்சான்னு கேட்டேன்.

நீங்க நின்னுட்டு இருந்தீங்கனுதான் ஸ்லோ பண்ணினேன்..என்று புன்னகைத்தாள்.

திரண்டிருக்கும் மேகக்கூட்டத்தின் மீது திடீரென குளிர் காற்று மோதி மழையை பொழிவிப்பது போன்று அவள் கடைசியாக சொன்ன "நீங்க நின்னுட்டு இருந்தீங்கனுதான் ஸ்லோ பண்ணினேன்" என்ற சொற்கள் என் மீது மோதி கோடைக்கால மழையாய் எனை பொழியச்செய்தது. நானே மழையாய் பொழிந்து, நானே மழையில் நனையும் விந்தையை தனது சொற்களின் மூலம் நிகழ்த்தி குளிர்காற்றேனே பறந்து சென்றவளை பார்த்தபடி பொழிந்து/நனைந்து கொண்டிருந்தேன்.


தொடரும்..
Share/Bookmark

Tuesday, April 13, 2010

மாயவேர்கள்விதையொன்றின் மரிப்பில்
துவங்கிய வேர்களின் தேடல்
அரூப சித்திரங்களை
எழுதியபடி மண்ணுள் நீள்கிறது

வியர்த்து மண்ணுள் புகுவதும்,
மிதந்து நீரினில் அலைவதும்,
வீழ்தல் பயமின்றி கிளர்ந்து
விருட்சம் வளர்வதற்கே

முடிவுறா நெடும்பயணத்தை
துவக்கும் விதையின் மரணம்,
யுகங்கள் கடந்தும்
நிகழ்த்துகிறது உயிர்த்தெழுதலை...
Share/Bookmark

Sunday, April 11, 2010

புரிதல்


எந்த மொழியில் சொல்ல
உனக்கு புரியாத
என் நேசத்தை..

மலர்ந்து உதிர்ந்திருக்கும்
பூக்களை விடுத்து
செடியில் பூத்துக் குலுங்கும்
சில பூக்களை மட்டும்
பறித்து, பூச்சூடும் உனக்கு
புரிந்திருக்க நியாயமில்லை
பூக்கள் உதிர்வதே,
நீ பறிக்காததால் தானென்பது

வருந்தி உதிரும்
பூக்களை போன்று, ஒருநாள்
உதிர்ந்து வருந்தும்
என் நேசம்

ஒரு நாளேனும்
உதிர்ந்திருக்கும் பூக்களையும்
கோர்த்து, பூச்சூடு
அப்போது புரியும்
என் நேசத்தின் வாசம்.

Share/Bookmark

Friday, April 9, 2010

துணை


தேசிய நெடுஞ்சாலை எண் 174ல்
ஒவ்வொரு நெடும் பயணமும்,
பாதை கருப்பராயனை
வணங்கியே துவங்கும்.

சக்கரங்களுக்கு எலுமிச்சை,

திருஷ்டி கழிக்க சூடம், தேங்காய்...

பாதைக் கருப்பனும்,

தங்கய்யா பூசாரியின் திருநீறும்

நெடும் பயணத்திற்கு துணை.

வாகனங்களில் வாழ்வை

எதிர்நோக்கி காத்திருக்கும்

தேங்காய் கடை பாட்டிக்கு

பூசைக்கு நிறுத்தும்
வாகன ஓட்டிகளே துணை.டிஸ்கி : தேசிய நெடுஞ்சாலை எண் 174 - திருப்பூர் to மதுரை தேசிய நெடுஞ்சாலை.
Share/Bookmark