Friday, April 23, 2010

ஆகு பெயர் (பாகம் -2 )

தூவானம் ஓய்ந்து வானம் வெளுத்திருந்த அன்றைய மாலையில் எனது கைப்பேசிக்கு மற்றொரு புதிய கைப்பேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. எனது கைப்பேசியில் பதிவு செய்யப்படாத புதிய எண்ணிலிருந்து வரும் அழைப்புகளை பெரும்பாலும் தவிர்த்து விடும் வழக்கமுடைய நான் என் வாழ்வின் பருவ நிலைகளை மாற்றப்போகும் அழைப்பு அது என்று தெரியாமல் வழக்கத்தை மீறினேன்.

ஹலோ..

ஹலோ..ரகு...நான்தான்..! யார்னு தெரியுதா?

சொல்லுங்க "நான்தான்"..இதுதா உங்க பேரா?

ம்..இதுவும் நல்லாதானே இருக்கு..அப்படியே கூப்பிடுங்க..ஆமா டெய்லி காலேஜ் வரைக்கும் வருவீங்க, இன்னைக்கு பாதியிலேயே நின்னுடீங்க, உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்னுதான் மெதுவா போனேன்..

ஆஹா.,எனக்காகத்தான் மெதுவா போறீங்களா..தேங்க்ஸ்ங்க, அத இப்போ சொல்லுங்க, அப்படியே உங்க பேரையும் சொல்லிட்டீங்கனா நல்லாயிருக்கும்..

என்ன ஆனாலும் என் பேர தெரிஞ்சிக்காம விடமாட்டீங்க போலிருக்கே..!

புதுசா ஒருத்தர்கிட்ட பழகும்போது பெயர்தானே முக்கியம்..உங்க அப்பா உங்களுக்கு ஒரு பெயர்தான் வச்சிருப்பார், ஆனா நான் உங்களை பார்த்ததிலிருந்து எவ்வளவு பெயர யோசிச்சிருப்பேன் தெரியுமா?ஆனா உங்களுக்கு எதுவுமே செட் ஆகல..

ஹா..யாருன்னே தெரியாத பொண்ணுக்கெல்லாம் பெயர் வைக்க எதுக்கு இவ்வளவு கஷ்டப்படறீங்க..ஆமா பழக்கமே இல்லாத என்னோட பேர தெரிஞ்சு என்ன பண்ணுவீங்க..உண்மையான காரணத்த சொல்லுங்க..அப்புறம் நான் சொல்றேன்.

ஒ.கே..ரொம்ப நாளா உங்களை பாத்துட்டுதா இருக்கேன், எனக்கு புடிச்சிருக்கு..போதுமா?

எதிர்முனையில் சிறிது நேரம் எந்த பதிலுமில்லை. முன்பின் அறிமுகமில்லாத, ஓரிரு முறை மட்டுமே பேசிய ஒரு பெண்ணிடம் அவசரப்பட்டு பேசி உளறி விட்டோமோ என்ற பயம் திடீரென தோன்றி என்னையும் மௌனமாக்கியது. மனதிற்குள் என்னை நானே திட்டிக்கொண்டு தொலைப்பேசி இணைப்பையும் துண்டிக்க மனமின்றி, வாழ்வில் இதுவரை கண்டிராத கடினமான நொடிகளை மௌனமாய் கடந்துகொண்டிருந்தேன்.

ஹலோ லைன்ல இருக்கீங்களா? இல்லையா?

ம்ம்..இருக்கேன்.,சாரிங்க !

சரி..முதல்ல உங்களை பத்தி சொல்லுங்க..உங்க பேர் ரகு..வேற?

நொடிகளை நீட்டித்து நிமிடங்களாக்காமல் சில நொடிகளிலேயே அவளே, மௌனத்தின் கூட்டை உடைத்து விட்டதால் புதிதாய் இறக்கை முளைத்த பறவை தடுமாறி, தடுமாறி பறக்க துவங்குவதைப் போன்று எனது மற்ற விபரங்களை சிறு பதட்டத்துடன் சொல்லி முடித்தேன்.

சரி, நீங்க சொன்னதெல்லாம் உண்மைதானா?

ஹலோ..இதுலயெல்லாம் யாராவது பொய் சொல்லுவாங்களா..பொண்ணுங்க சேஃப்டியா இருக்கலாம் அதுக்காக இப்படியா?

ஒ.கே, ஒ.கே...இதுதான் என்னோட மொபைல் நம்பர், ஆனா நீங்களா கூப்பிடக்கூடாது. தேவைப்பட்டா நானே போன் பண்ணுவேன், இனிமேல் மார்னிங் டைம்ல என்ன ஃபாலோ பண்ணக் கூடாது. அப்புறம் என்னோட நேம் ஸ்வாதி போதுமா.?

ஸ்வாதி.

சொல்லுங்க

இல்ல, சும்மா கூப்பிட்டு பார்த்தேன். உங்களை விட உங்க நேம் நல்லாயிருக்கு, ஆனா இந்த பேர மட்டும் நான் யோசிக்கவேயில்ல.

சரி அப்புறம் பார்ப்போம்..மறுபடி சொல்றேன், நீங்களா போன் பண்ண கூடாது. பை..! என்றபடி இணைப்பை துண்டித்துவிட்டாள்.


காலையில் குளிர் காற்றென வீசிய சொற்களுடன்,மாலை நேர முன்பனியும் சேர்ந்து மனதின் புழுக்கத்தை முற்றிலுமாக மறையச் செய்தது. நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்தபோதிலும் இப்போது திடீரென ஏதோவொரு வர்ணிக்கவியலா அன்பு கைப்பேசியின் மேல் தோன்ற, கடைசியாக வந்த அவளது எண்ணை கைப்பேசியில் சேமித்தேன். நமக்கு பிரியமானவர்களின் பெயரை உச்சரிக்கும் போதோ, எழுதும் போதோ ஏற்படும் மகிழ்ச்சியை முதன்முறையாக உணர்ந்தேன். புதிதாக காதல் வயப்படுபவர்களுக்கே உரிய குறு,குறுப்பில்

" Since my childhood, i try to count the stars in the sky,
but i couldn't..After reciving ur call,,now i know how many stars,
The no of stars exactly match with ur number...
thanx for giving ur no.

என்ற குறுந்தகவலை அவளது எண்ணிற்கு அனுப்பி விட்டு பதிலாக குறுந்தகவலோ அல்லது குறுந்தகவல் வழியாக "அர்ச்சனை" ஏதோனும் வருமோ என்று காத்திருக்க துவங்கினேன்.

தொடரும்..ஆகு பெயர் (பாகம் -1 )


Share/Bookmark

1 comments:

முரளிகுமார் பத்மநாபன் said...

ரைட்டு...

அர்ச்சனை வந்துச்சா...?

Post a Comment