Thursday, September 16, 2010

விடாது கருப்பு...

தனியார் தொலைக்காட்சிகளில் வெற்றிகரமாக ஓடிய "விடாது கருப்பு" தொடருக்கும் இக்கதைக்கும் ஒரே தலைப்பு என்பதைத்தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை...ஆனால் அத்தொடர் நாடகத்தில் நடித்த அல்லது மேய்ந்த (குதிரை மன்னிக்க வேண்டுகிறேன்) வெள்ளைக்குதிரைக்கும், இக்கதையின் நாயகருக்கும் ஒரு ஒற்றுமையுண்டு. இருவரை கண்டுமே ஊரில் அனைவரும் பயப்படுவதுதான். "மேய்ந்த" என்ற சொல்லைப் பொறுத்தவரையும் இருவருக்கும் பொருத்தமானதுதான். 'கருப்பு' என்றழைக்கப்படும் கருப்புசாமியும் பல நேரங்களில் தன்னிலை மறந்து மேய்ந்து கொண்டிருப்பதாக ஊரில் பலரும் குறிப்பிடுவதுண்டு.

தனது சினிமா வாழ்வின்(..?) நீண்டகால வைரியான சூப்பர் ஸ்டாரின் தத்துவ கணக்கின்படி, வாழ்வின் ஏழாம் எட்டுகளில் இருக்கும் கருப்பு, தன் வாழ்வின் சில காலங்களை சினிமாவுக்கென அர்பணித்திருந்த வரலாறு அவர் தற்போது வாழ்ந்து வரும் 'மேட்டுக்கடை' தவிர அருகிலிருக்கும் பல்லடம் டவுன் வரையிலும் பரவியிருந்தது. அந்நாட்களில் பல்லடத்திற்கு மேற்கே இருக்கும் சூலூரிலிருந்து சென்று திருமால் பெருமை, கந்தன் கருணை முதலிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற துவங்கியிருந்த நடிகர் சிவக்குமார், ஏதோவொரு தருக்கங்களின் படி நமது கருப்பிற்கு தூரத்து உறவினர்..தைப்பூச காலங்களில் சூலூர், பாப்பம்பட்டி போன்ற ஊர்களிலிருந்து பழனிக்கு செல்லும் பக்தசாரிகள் மேட்டுக்கடை, குண்டடம் மார்க்கமாக செல்வது வழக்கம், அவ்வாறான ஒரு பயணத்தில் மேற்படி நடிகரின் பக்கத்துக்கு வீட்டுக்காரருடன் பழனி வரை பக்தி மார்க்கமாக சென்று வந்ததிலிருந்து துவங்கிய அன்னாரின் சினிமா வாழ்க்கை, அதற்கு இரண்டு வருடங்களுக்கு பிறகு சினிமாவில் சேர "மெட்ராஸ்" செல்ல முடிவு செய்து திருப்பூரிலிருந்து திருட்டு ரயிலேறி, ஊத்துக்குளி ரயில்வே காவல் நிலையத்தில் இரண்டு இரவுகளை கழித்துவிட்டு மேட்டுக்கடைக்கே திரும்பி வந்ததுடன் முடிவுக்குவந்தது. கருப்புசாமி 'முழுக்கால்சட்டை' அணிந்ததும், தலைநகர் நோக்கி பிரயாணப்பட்டதும் அதுவே முதலும்,கடைசியும். அதன் பிறகு ஒரு கோணத்தில் தனது நிறத்தையும்,சாயலையும் கொண்டிருந்த ரஜினிகாந்த் திரையுலகில் புகுந்து புகழ் பெற்றதும், தனது இடத்தையே பிடித்து விட்டதாக எண்ணி விரோதம் பாராட்ட துவங்கியது தனிக்கதை.

காலமும், காவல்துறையும் இணைந்து, தான் சினிமாவுக்கு ஆற்றவிருந்த சேவைகளை தடுத்ததால் கடுப்புற்ற கருப்பு சிறிது காலம் தனது சேவைகளை தோட்டத்திலிருந்த கால்நடைகளுக்கு ஆற்றிக்கொண்டிருந்தார். உச்சியிலிருந்து சூரியன் காய்ந்துகொண்டிருந்த ஒரு மதிய வேளையில் மாடுகளுக்கு "அன்னாங்கால்" போட்டு மேயவிட்டுவிட்டு புளிய மரத்தடியில் படுத்திருந்த கருப்பு, மேட்டுக்கடையின் சமூக மாற்றங்குறித்து சிந்தித்து ஒரு முடிவினை எடுத்ததன் வாயிலாக அரசியலினுள் புகுந்தார். ஐந்தறிவுள்ள ஜீவன்களை அன்னங்காலிட்டு திறமையாய் மேய்த்த கருப்பிற்கு, ஆறறிவுடைய மனிதர்களை மேய்ப்பது அவ்வளவு எளிதாய் பிடிபடவில்லை, அரசியலிற்கு வந்த ஒரே வருடத்தில் கருப்பின் வீட்டுக்கொடியில் நான்கைந்து கட்சிகளின் கரைவேட்டிகள் காய்ந்து கிழிந்தது. மேடைகளில் பேசுபவர்களுக்கு சோடா உடைத்து தருமளவிற்கு வளர்வதற்குள் அந்த கட்சியிலிருந்து வெளியேறிவிடும் கருப்புவிற்கு கட்சி மேடைகளில் முழங்குவதற்கான வாய்ப்பு கடைசி வரை கிடைக்காமலே அரசியலை விட்டு அடுத்த ஒரு வருடத்தில் வெளியேற வேண்டியிருந்தது.

முடிவிலா மாயங்களை நிகழ்த்தவல்ல 'விதி' சிலசமயங்களில் ஒரே நிகழ்விற்கு இரு மாறுபட்ட விளைவுகளை ஏற்படுத்தி அறிவியல் விதிகளுக்கும் தனக்குமுள்ள வேறுபாட்டினை உணர்த்திக் கொண்டேயிருக்கும். கருப்புவின் வாழ்விலும் தனது மாயத்தை நிகழ்த்திய விதி, தமிழகத்தின் இருபெரும் தொழில் துறைகளான சினிமாவிற்கும், அரசியலிற்கும் கிடைக்கவிருந்த ஒரு மாணிக்கத்தை தடுத்து தமிழக கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் ஒன்றைக் குறைத்தது, அதே விதி அறுநூற்றி சொச்சம் வாக்காளர்களையுடைய மேட்டுக்கடையின் அந்தரங்களிலும் தனது மாயங்களை நிகழ்த்தியது. சொற்ப காலமேயாயினும் சினிமாவிலும், அரசியலிலும் தான் பெற்ற ஞானங்களை 'மேட்டுக்கடை' வாழ் மக்களின் அன்றாட வாழ்க்கையினுள் திணிக்க ஆரம்பித்த 'கருப்பு' சில வருடங்களிலேயே அனைவரும் தெறித்து ஓடினாலும் விடாமல் பயமுறுத்தும் "விடாது கருப்பு"வாக மாறினார்.

பங்காளித்தகராறு, வாய்க்கா,வரப்புச்சண்டை மற்றும் காரணங்களின்றியும், அற்ப காரணங்களுக்காகவும் தோன்றும் பிரச்சனைகளை தீர்த்து வைக்க கருப்பு மேற்கொள்ளும் வழிமுறைகள், தகராறுகளை காட்டிலும் சுவாரசியமாக இருக்கும். மேற்படி தகராறுகளை, அவை எங்கு துவங்கியிருந்தாலும் இறுதியாக அது முடிவது மேடுக்கடையை அடுத்த காளியா பாளையத்திலுள்ள "மூலை வெட்டான்" கடையில்தான். (அந்நாட்களில், குடிமக்களின் தாகம் தீர்க்க அறிமுகமாகியிருந்த பாக்கெட் சாராயத்தை விற்க, போட்டியில்லாமல் ஏலமெடுத்த ராசு, சாராயப் பாக்கெட்டின் மூலை நுனியை வெட்டித்தரும் லாவகத்தினால் 'மூலை வெட்டன் ' என அடையாளப்படுத்தபட்டார்) தகராறுகளில் சம்பந்தப்பட்ட இரு தரப்பாரும் தங்களின் சிரம்,கரம் முதலியவற்றிற்கு சேதமில்லாமல் தகராறுகளை தீர்த்துக்கொண்டு மன சாந்தியுடன் "தாக சாந்தி"யும் பெற்றுச்செல்வது வழக்கம். மேற்படி பஞ்சாயத்துக்களில் வாதி,பிரதிவாதிகள் ஏகத்துக்கும் எகிறும்போது நிதானித்து பைசல் பேசும் கருப்பு, தகராறுகள் முடிந்து அனைவரும் சமாதானத்தையும், சாராயத்தையும் நாடிய சில நிமிடங்களிலேயே தனது ரூபங்களை வெளிக்காட்டத் துவங்குவார். அத்தருணங்களில் வெளிப்படும் கருப்புவின் ரகளையான ரூபங்களை கண்ணுற்ற எவரும் சில வருடங்களாவது எவரிடமும் வம்பு வளர்க்க முயலார்களாவர். இறுதியில் இரவு 'மறுதண்ணி'க்கென சில சாராயப் பாக்கெட்டுகளையும், மாமிச பட்சணங்களையும் பார்சல் செய்து கிளம்புவதுடன் அன்றைய தகராறுகளையும் பைசல் செய்வார்.

மூலை வெட்டாங்கடையில் துவங்கிய கருப்புவின் சமூகப்பணி அடுத்தடுத்த அரசாங்களின் போதைக் கொள்கைகளுக்கேற்ப பரிணாம வளர்ச்சியடைந்து இன்றைய "டாஸ்மாக்"வரையிலும் தொடர்கிறது. காளியா பாளையத்தில் 'மூலை வெட்டாங்கடை' தள்ளாடாமல் முழுவீச்சில் ஓடிக்கொண்டிருந்த காலத்தில் துவக்கப்பள்ளிக்கு செல்லத் துவங்கியிருந்த சக்திவேல், தனது மாமாவான 'மூலைவெட்டு ராசு'வைக் காண வரும்போதெல்லாம் அங்கு நீதி பரிபாலித்துக் கொண்டிருக்கும் கருப்புவின் பிரதாபங்களைக் கண்டு சற்று மிரள்வதுண்டு. இன்று திருப்பூரிலும், கேரளாவிலும் கந்துக்கடை லைன் போடுமளவு வளர்ந்துவிட்ட பின்னரும் காளியா பாளையம் அரசு மது அங்காடியின் அருகில் ஏதோவொரு கடை பெஞ்சில் அமர்ந்திருக்கும் கருப்புவை காண நேரும்போதும் அதே மிரட்சியின் உந்துதலால் கண்டும்,காணமல் நழுவுவதுண்டு. 'எல்லோருக்கும் ஒருநாள் விடியும்' என்பதான நன்னம்பிக்கை மொழி விதியின் மாய விளையாட்டால் வேறுவிதமாக விடிவதுமுண்டு. அத்தகைய ஒரு விடியல் சக்திவேலுக்கு அவன் திருமணம் முடிந்த பத்தாம் நாள் வந்தது.

பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளை எழுதி முடித்த கையோடு விடுமுறைக்கு வந்த தனது அத்தைமகள் கனகாவை கடிமணம் புரிந்திருந்த சக்திவேல், பத்து நாட்களுக்கு பிறகு யூரியா வாங்க காளியா பாளயத்திலுள்ள சொசைட்டிக்கு வர, சொசைட்டி திண்ணையில் தன் சகாக்களுடனிருந்த 'கருப்பு'வினால் அன்றைய விடியல் சக்திவேலுக்கு இரண்டாம் முறையாக கீழ்க்கண்டவாறு விடிந்தது..

அட சத்தி, என்ன புது மாப்ளே.. இந்நேரத்துக்கு சொசைட்டி பக்கம்..?

பத்து நாளாயிருச்சுங்க மாமா..இன்னு புது மாப்ளையா இருக்க முடியுமா..யூரியா வாங்கலானு வந்தங்க..!

அதுஞ் சரித்தே..வெள்ளாமைய பாத்தாதானே வெளுத்த துணி கட்டமுடியும்..அது செரி இப்டி சொல்லாம,கொள்ளாம கலியாணம் பண்ணிட்டேயே மாப்ளே, உங்க மாமா ராசு கலியாணத்துக்கு ஒரு மாசம் கூடவே வேலை பாத்தமப்பா..நீ என்னடான்னா ஒரு வா விருந்துகூட போடாம உட்டுட்டியே,,அத்த புள்ளைய கட்டறதுக்கு இவ்ளோ அவசரமா?

இல்லைங்க மாமா..நான் பத்தாவதோட படிக்கறத உட்டுட்டேன், புள்ள காலேஜ் கிலேஜ் போய் படிச்சா அப்பறம் புள்ளைய கட்டி கொடுக்கலேன்ன என்ன பண்றதுன்னு..கூட இருக்கறவனுக உசுப்பேத்தி உட்டுட்டாங்க..செரி உங்களுக்கு விருந்துதான சீக்கிரமா போட்றலாம் உடுங்க.!

சம்சாரம் படிச்சிருந்தா உனக்கும் நல்லதுதான, கந்துக்கணக்கு வழக்கையெல்லா பாத்துக்குமல்ல..ஆனது ஆயிப்போச்சு, மணி நாலாயிடுச்சு..வா இன்னைக்கே ஒரு பார்ட்டிய போட்ருவோம்

இல்லங்க மாமா..இப்போ போனாத்தா..பொழுது இறங்கறதுக்குள்ள பாதி காட்டுக்காவது யூரியா வைக்கமுடியுங்க..இன்னொருணா பார்ட்டிய வச்சுக்கலாங்க மாமா..

அட என்ன மாப்ள..தங்கமாட்ட புள்ளைய கொடுத்துருக்கோம், நீ என்னடானா யூரியா வைக்கோனு, தண்ணி கட்டோனுன்னு சொல்லிடிருக்க..வாப்பா அரைமணி நேரத்தில போய்டலாம்.. என்றபடி தன் சகாக்களுடன், சக்திவேலையும் விடாப்பிடியாக அருகிலிருந்த அரசு மதுபானக் அங்காடியினுள் அழைத்து சென்ற கருப்பு அனைவருக்கும் வேண்டியதை ஆர்டர் செய்துவிட்டு வசதியான ஒரு டேபிளில் அமர்ந்து, சக்தியையும் அருகிலேயே அமர்த்திக்கொண்டார். மிதமான முதலிரண்டு சுற்றுக்களில் சக்தியின் சிறு வயது சமாச்சாரங்களையும்,சமார்த்தியத்தையும் தன் சகாக்களிடம் கூறி பெருமைப்படுத்தி, யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொண்டது புத்திசாலித்தனமான காரியமென்றும் பாராட்டிக் கொண்டிருந்தார். சுற்று அதிகமாக,அதிகமாக கருப்புவின் தொனியும் மாறத்துவங்கியது..

மாப்ளே..நீயும் லைட்டா சாப்டு மாப்பள..

இந்நேரத்துக்கு வேணாங்க மாமா..கனகு சத்தம்போடும்..!

அட இந்த கந்துக்காரனுகளே இப்படிதானப்பா..எல்லாத்துக்கும் கணக்கு பாத்துட்டு..குடியப்பா காசு நாந்தாறேன்..

அதுக்கில்லீங்க மாமா..பொழுதோட கனக கூட்டீடு அத்தையூருக்கு போகனும் அதான்..நீங்க சாப்பிடுங்க

அது சேரி..இப்போ எல்லாரும் ராசியாய்டீங்க..மாமியாரூட்டுக்கு போலாம்..ஆனாலும் நீ பண்ணினது தப்புதானப்பா..!

என்னங்க மாமா..?

இந்த காலத்துல புள்ளைக படிக்கறது முக்கியமப்பா..பன்னண்டாவது படிக்கற புள்ளைய கட்டிகிட்டே அதுக்கு குடும்பம்னா என்ன தெரியும்..அட அதவுடு மாப்ளே..நீ பாட்டுக்கு ஓரம்பரைக்கு வந்த புள்ளைய, கூட்டீடு போய் தாலிய கட்டி கூட்டியாந்துட்டே, உங்கூட்ல இன்னொரு வயசுப்பையன் உந்தம்பி இருக்கான்..நாளைக்கு வயசுப்புள்ளைகள யாரு உங்கூட்டுக்கு அனுப்புவாங்க..கேரளா போய் லைன் போட்டா மட்டும் பத்தாதப்பா..கொஞ்சம் ரோசனை வேணுமப்பா.. எனத்துவங்கிய கருப்புவின் வாதம், பிரதிவாதியின் இடையூறு இல்லாமலே பல சுற்றுக்களையும் தாண்டி தொடர்ந்தது. வீட்ல கூட இப்படி கேள்வி கேக்கலையே என எண்ணிய சத்தி உடனடியாக எப்படியாவது கருப்புவிடமிருந்து தப்பிவிட யோசனை செய்து..

மாமா, மணி அஞ்சரை ஆயிடுச்சுங்க..போலாங்க..!

புது மாப்ளை உனக்கு பல சோலி இருக்குமாப்பா..நீ கெளம்பு, எங்களுக்கென்ன இந்நேரத்துக்கு போய் என்னத்த கட்ட போறோம்..சரி போறதுதான்போற கணக்க குடுத்துட்டு போய்டப்பா.. நாம சாவகாசமா இன்னொருநா பேசிக்கலாம், மாப்ள அப்படியே இன்னொரு 'கால் படி'க்கு சேத்தி கொடுத்துட்டு போய்டு..பொழுதோடைக்கி வேணும்.!

சரிங்க மாமா.. என்று பில்லை கொடுத்துவிட்டு வெளியேறிய சக்திவேல் மனதிற்குள் நினைத்தான்.." இங்க குடிச்சதே பாதி யூரியா மூட்டைய முழுங்கிடுச்சு..இதுல பார்சல் வேறயா..இன்னைக்கு கருப்பு மாமன்பொழுது நம்ம மேல விடுஞ்சிடுச்சு..சரி இந்த மட்லும் விட்டாரே..போதுஞ்சாமி..

சாமி, பூதமெல்லாம் ஒண்ணுமில்ல என அதுநாள் வரை நாத்திகம் பேசிக்கொண்டிருந்த சக்திவேலுக்கு ஒன்று மட்டும் தெளிவாய் புரிந்தது..

காத்து "கருப்பு"களுக்கு அஞ்சாமல் காலந்தள்ளுவதென்பது கொஞ்சம் கஷ்டம்தான்...
Share/Bookmark

8 comments:

முரளிகுமார் பத்மநாபன் said...

திரு, அழகு,
கையக்குடுங்க...
நல்லா இருக்கு க.சீ.சிவக்குமார் கதை சொன்ன மாதிரி இருக்கு. வாழ்த்துகள்.

kutipaiya said...

:) :)

nala iruku thiru!

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி முரளி,
நன்றி சீதா..

Maheswaran said...

Nalla irukku! Nanbane!

Vaazhthukkal!

செந்தழல் ரவி said...

good one. voted...

திருநாவுக்கரசு பழனிசாமி said...

Thanks mahesh..
Thanks ravi sir..

வெண் புரவி said...

பிரமாதம்..... அசத்திட்டீங்க..... அப்படியே முழுக்க முழுக்க பேச்சுவழக்கில் எழுதியிருந்தா கரிசக்காட்டு கதையாகி இருக்கும். வாழ்த்துக்கள்

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி வெண்புரவி அண்ணா..

Post a Comment