Friday, June 24, 2011

ரக்சுக்குட்டியின் ''அணி''க்குட்டி

வழக்கமாய் ஆனந்தக் கூச்சலிடும்
''அணி'' இன்று ஏமாற்றமாய்
கிளைகளில் மாறி,மாறி துழாவுகிறது
முதலில் உங்களுக்கு ''அணி''யை
அறிமுகப்படுத்திவிடுகிறேன், எங்கள்
வீட்டு நெல்லிமரத்தில் வசிக்கும்
அணில்தான் ''அணி''..பன்நெடுங்கால
அணில் என்ற வழங்கு பெயரை
தன் ஒன்றரை வயது மழலையால்
அணி என மாற்றியது ரக்சுக்குட்டி .
ரக்சுக்குட்டிக்கு இந்த அணில் அறிமுகமானது
சில நாட்களுக்கு முந்தைய காலையொன்றில்
எல்லா அணில்களைப் போலவே இதுவும்
எங்கிருந்து வந்தது என்று தெரியாமல்
திடீரென நெல்லிமரத்தில் குடியேறிவிட்டது
மனித நடமாட்டம் முதலில் அணிலை
மிரளச்செய்தாலும் கிளைகளுக்கும்,
தரைக்குமான இடைவெளி அணிலின்
மிரட்சியை போக்கி சிநேகமாக்கியது
தன் ஒன்றரை வயதில் ரக்சு பார்க்கும்
முதல் அணில் இதுவாகத்தானிருக்கும்,
சில நாட்களிலேயே அணிலுடன் பேசுமளவு
நெருக்கமாகிவிட்டாள். அணிலின் சத்தத்திலும்
உற்சாகம் தெறிக்கும், தரைக்கும், கிளைகளுக்கும்
மாறி,மாறி தாவி விளையாட்டு காட்டும்
வேறு மனித நடமாட்டம் இல்லாத போது
தரையிலிறங்கி ரக்சுவின் குட்டிசைக்கிள்
மீதேறியும் விளையாடிகொண்டிருக்கும்
அணில் மாயமாய் மறைந்துவிடும்
பகல்வேளைகளில் ரக்சுக்குட்டி
நெல்லிமரத்தை சுற்றி,சுற்றி அண்ணாந்து
பார்த்து தன் ''அணி''யை தேடுவாள்
வீட்டிலிருக்கும் எல்லா பொம்மைகளுக்கும்
பெயர் ''அணி''யாக மாறிவிட்டது.
நேற்று ரக்சுகுட்டி தன் பாட்டி வீட்டிற்க்கு
சென்றுவிட்டாள், இன்று காலை,
வழக்கமாய் ஆனந்தக் கூச்சலிடும்
''அணி'' ஏமாற்றமாய் கிளைகளில்
மாறி,மாறி துழாவுகிறது. மரத்தடியில்
தனியாய் நிற்கும் குட்டிசைக்கிளை
ஏமாற்றத்துடன் சுற்றிவருகிறது
ரக்சு ஊருக்கு போயிருக்கும் செய்தியை
அதனிடம் சொல்வதற்கு
ஒன்று அணிலாய் மாறவேண்டும் அல்லது
ரக்சுவாய் மாறவேண்டும்.

Share/Bookmark

Thursday, June 16, 2011

வெக்கை


கரும்புகையேறிய விதானத்தின்
கீழ் பரப்பிலிருக்கும் புலனாகா
துளைகளில் கொதிநீர்த்துளிகளென
கசிகிறது வெப்பம்
அடர்ந்திருக்கும் இருளை
உறிஞ்சி பருப்பொருள் சிதைத்து
எடையற்ற வெக்கையாக
உமிழ்கின்றன நாட்புறத்து சுவர்கள்
வெப்பத்தை சுவாசித்து
வெப்பத்தை வெளியேற்றி
வெதும்புகின்றன அறையுட்சுழலும்
சுவர் பல்லிகள்
நினைவுகளில் எரிந்து,
கனவுகளில் உதிர்ந்து
சாம்பலென வெக்கையில் கரைகிறது
உயிருமிழும் பெருமூச்சு


Share/Bookmark

Thursday, June 9, 2011

அதனதன்


வெண் பளிங்கு உருகி, வழிந்து
ஓடிக்கொண்டிருக்கிறது நதியாய்.
கரையோரத்து நாணற்புற்கள்
காற்றிலும் , நதியிலும் மாறி,மாறி
நீந்திக் கொண்டிருக்கின்றன களிப்புடன்.
நாணலின் களியாட்டத்தை காணாத
உள்மறைந்த நாணலின் வேர்,
மண்ணை இறுக பற்றிக்கொண்டே
முன்னேறுகிறது நீர்த் தடங்களை
நோக்கி..
காற்றை துணைகொண்ட மோகத்தில்
வெள்ளத்தில் அமிழ்ந்தாலும்
நாணலின் உயிர், வேர் உறிஞ்சும்
சிறு துளி நீரில்தான்.
வேர்களின் நம்பிக்கையில் நாணலும்
நீரின் நம்பிக்கையில் வேர்களும்
நீந்துகின்றன..அதனதன் போக்கில்

Share/Bookmark

Thursday, May 5, 2011

சன்னல் வழி உலகம்


சற்றே நீள்சதுரமான உலகமொன்றை
இன்று தரிசிக்க நேர்ந்தது
முடிவற்றுச் சுழலும் பூமிப்பந்திலிருந்து
வேறுபட்டு இயங்கும் அவ்வுலகம்
தேர்ந்த வேலைப்பாடுகளையுடைய
மரச்சட்டங்களால் சூழப்பட்ட
பெரும் தீவாய் இருந்தது
மனிதர்களின் பாதைகளும்,
பறவைகளின் வானமும்
ஓர் முனையில் துவங்கி
மற்றொரு முனையில் திடீரென
முடிவதாய் இருந்தது .
இந் நீள்சதுர உலகம், சூரியன்
உள்நுழைய இயலாக் கோணத்தில்
அமைந்திருந்ததால் காலங்களற்று
இயங்கிக்கொண்டிருந்தது..ஆயினும்
பகல்களும், இரவுகளும்
வசந்தங்களும், கோடைகளும்
கடந்து கொண்டுதானிருந்தன.
காலங்களற்ற பெருவெளியில்
இயங்கிக்கொண்டிருக்கும் இவ்வுலகம்
சிறு திரையொன்றின் அசைவில்
எப்போது வேண்டுமானாலும்
மறைய நேரிடலாம்..அப்போது
நீள்சதுர வானமும், வானில்
பறக்கும் பறவைகளும்
முடிவற்றதாய் தங்கள் அகலங்களை
மாற்றிக்கொள்ளும், அப்போதும்
மனிதர்கள் ஓரிடத்தில்
நின்றுதான் ஆக வேண்டும்
காலமும், சன்னல்களும்தான்
மனிதர்களை கட்டுக்குள் நிறுத்துகின்றன

Share/Bookmark

Tuesday, April 19, 2011

எழுதுவதற்கொன்றுமில்லை


எழுதுவதற்கு எதுவும் இல்லாத
இரவுகள் கொடூரமானவை

காதலை எழுதி, எழுதி சலித்து
நேசங்களை தொலைத்தாயிற்று
கான்கிரீட் அறைகளில்
அமர்ந்து கொண்டு இயற்கையை
எழுதுவதென்பது கல்லறைக்குள்
படுத்துக்கொண்டு காற்றை
தேடுவது போலானது.
சிட்டுக்குருவிகள் அரிதாகிவிட்ட
காலத்தில் சுதந்திரம்,சமூகம்
பற்றியும் எழுதுதல் முறையன்று.
போகம், ரோகம் என எதுவும்
சுகிக்காமல் வாழ்க்கையை
எழுதி என்ன பயன்?
கண்ணிவெடிகள் புதைந்திருக்கும்
பூமியில் வாழ்வைக் கழித்து
கொண்டிருக்கும் மனிதர்களை
பற்றி என்ன எழுதுவது.

எழுதுவதற்கு எதுவும் இல்லாத
இரவுகள் கொடூரமானவை

Share/Bookmark

Tuesday, March 29, 2011

மின்னொளிர் முத்தங்கள்


ஒவ்வொருமுறை சந்திக்கும் போதும்
ஒரு சண்டை துவங்கி, முடியும்
நம்முள், இன்று வழக்கம் தவறிய
மாலை நேரத்துச் சந்திப்பு
இருள் பெரும் விருட்சமெனப் பரவி
வியாபிக்கத் துவங்கியிருந்தது
செவ்வடர் கீழ்வானில் தெறித்த
தீக்குழம்பின் சிறு தீற்றல்களாய்
மினுக்கத் துவங்கின நட்சத்திரங்கள்.
ரகசிய முத்தங்களளவு பிணையா நம்
நேசத்தை எண்ணி உனக்கான ரகசிய
புன்னகையுடன் காத்திருந்தேன்.
வானம் வெட்கமிகுந்து கறுப்பாடை
பூணத்துவங்கையில் நீ வந்தாய்
ஒரு கேள்வியுடன்,
மொத்த நட்சத்திரங்கள் எத்தனை?
நட்சத்திரங்களை பூக்களாய் சூடியிருக்கும்
தேவதையிடமிருந்து நட்சத்திரக் கேள்வி.
''ஒவ்வொரு காதலனும் தன் காதலியை
முத்தமிடுகையில் முத்ததிற்கொன்றாய்
நட்சத்திரம் பிறக்குமாம்'' , என்று
புதிய நட்சத்திரங்களுக்கான விதைகளை
தூவினேன், கார் இருண்டால் மழை
பொழியும் என்ற நன்னம்பிக்கையில்
விழி நட்சத்திரங்களில் செல்லக்கோபம்
தெறிக்க எதிர்க்கேள்வி விதைத்தாய் நீ
எரிகல்லாய் விழும் நட்சத்திரங்கள்
எதில் சேர்த்தி?
அது,''காதலி ஒவ்வொருமுறை காதலனுடன்
சண்டையிடும் போதும் ஒவ்வொன்றாய்
பூமியில் விழுந்து மரிக்கிறது'' என்று
சோகம் கூட்டினேன் , ' நீ எத்தனை
முறை என்னுடன் சண்டையிட்டு
நட்சத்திரப்பலி கொடுத்திருக்கிறாய் தெரியுமா',
என்று நட்சத்திரங்களுக்கு இரங்கல் வாசித்தேன்
''ரொம்ப கவலைப்படாதீங்க,கணக்கு சரியாகாம
போயிடுமா, இல்ல போகத்தான் விட்டுடுவீங்களா''
என்று உனக்கு மட்டுமே கேட்குமளவில்
சொல்லிவிட்டு புன்னகைத்தாய்.
இருவரது கடிகாரங்களிலும் நொடி முள்
சிறகிழந்து தவித்துக்கொண்டிருந்தது
வழக்கமாக விடைபெற ஆயத்தமாகும் முன்
என் உள்ளங்கைகளில் சில கோலங்களை
தீட்டுவாய்..புள்ளிகளற்ற நெளிக்கோலம்
கோலமிடத் துவங்கிய உன் கைகளை
இறுகப் பற்றிக்கொண்டு, சட்டென
உன் கன்னக்கதுப்புகளில் என் இதழ்களை
சில நொடிகள் நிறுவினேன்..நம்
சார்பில் முதல் முத்த நட்சத்திரம்.
விடுக்கென்று கைகைளை
உதறியெழுந்து பொய்க்கோபத்துடன்
என் தோள்களில் குத்தினாய், அடுத்த
சண்டை துவங்கியது நம்முள்..
மையிருள் வான் கிழித்த நட்சத்திரமொன்று
நம்மருகே ஒளிர்ந்து விழுந்து மறித்தது
எரிகல்லாய்..இருவரும் ஒருசேர
புன்னகைத்து அமைதியானோம்
கணக்குகள் சரியாவது காலத்தின் நியதி.


Share/Bookmark

Friday, March 4, 2011

கோல நோட்டும் சில சமையல் குறிப்புக்களும்


பள்ளிக் காலத்து பழைய
டைரி ஒன்றை பரணில்
தேடிக் கொண்டிருக்கையில்
அகப்பட்டது அக்காவின்
பழைய மரக்கலர் புத்தகப்பை.
தூசிபடர்ந்து, பரணின் புழுக்கத்தில்
வெளிறி சிதைந்திருந்தது
ஆண்டுக்கு ரெண்டு, மூன்றென
கிழித்து அப்பாவின் திட்டுக்களுடன்
அடிக்கடி புத்தகப் பையை நான்
மாற்றிக் கொண்டிருக்க அக்கா
ஒரே பையை நான்காண்டுகள்
எப்படி பயன்படுத்துவாளோ..
அக்கா எப்போதும் புதிரானவள்
குறைவான மார்க்கு வாங்கிய
அக்காவின் தோழிகளெல்லாம்
கல்லூரிக்கு செல்ல முதல் மார்க்
வாங்கிய அக்கா, அப்பத்தாவின்
அறிவுரையால் வீட்டிலிருந்தாள்
திருமணம் முடிந்து மாமாவுடன்
செல்லும்போது தனது புத்தகங்களை
பரணில் போட்டதுதான் இதுவரை
அவற்றை அக்கா எடுக்கவில்லை..
தூசுகளை உதறிவிட்டு மெல்ல
பையிலிருப்பவற்றை கொட்டினேன்
பண்டிகைக்கு வந்த வாழ்த்தட்டைகள்,
சில கவிதை புத்தகங்கள்,
தோழிகளின் புகைப்படங்கள்,
ஆண்டுவிழா மலர்களில் வந்த
அக்காவின் கவிதைகள்,
பாராட்டுச் சான்றிதழ்கள்
என பல ஆச்சரியப் புதிர்கள்
கவிதை, இலக்கியம், பரிசுகள்
என்றிருந்த அக்கா இப்போதெல்லாம்
கோலப் புத்தகங்களிலும், சில
சமையல் குறிப்புக்களிலும்
வாழ்வை கடத்துவது புதிர்தான்
ஓடாத தேரின் அழகை ரசிக்க
அக்காவால் தான் முடியும்
நினைவுகள் பின்னோக்கியிழுக்க
விக்கித்திருந்த என்னை
மனைவியின் குரல் உசுப்பியது
'இங்க என்ன பன்றீங்க?என்றவளிடம்
ஆமா..நீ புக்கெல்லாம் படிப்பியா
என்றதும் ஆச்சர்யத்துடன் எனைப்பார்த்து
ம்..ஒரு லைப்ரெரியே வைக்கலாம்
அதெல்லாம் விட்டு ரொம்ப நாளாச்சு,
இப்போ என்ன அதுக்கு, என்று சட்டென
குனிந்துகொண்டாள்..கண்களில் நீர்துளிக்க
நின்றவளை நோக்கி , சரி கிளம்பு
உங்க வீட்டுக்கு போய்
உன்னோட புக்கையெல்லாம்
இங்க எடுத்துட்டு வரலாம் என்று
எழுந்தேன்.

அன்பின் "ஜோதிஜி"க்குShare/Bookmark

Wednesday, March 2, 2011

தகிப்பு


கோடை இருளாய்க் கவிந்திருந்த
தனிமை, அறையெங்கும்
வெந்து தகிக்கிறது
அமிலந்தெறிக்க உழலும் காற்று,
வெளியேற வழிகளின்றி
வெம்மை படர சுவர்களில்
படியத் துவங்குகிறது
சுழலாத கடிகாரத்தின் சிறு
இடுக்கொன்றில் உள்நுழைந்த
சுவர்ப்பல்லி வெளியேறும்
வழிகள் தேடி உழன்று தவிக்கிறது
வெளியேறும் பெரு வழிகள்
இருளில் மறைந்திருக்க
மீண்டும், மீண்டும்
கண்ணாடிச்சுவர்களில் மோதி
உழல்கிறது பல்லிShare/Bookmark

Friday, February 25, 2011

வனப்பிரவேசம்உனக்குள் தொலைந்து கொண்டிருக்கும்
நான், அவ்வப்போது வனங்களிலும்
தொலைவதுண்டு..இம்முறை
எனக்கும் வனம்புக ஆசையென்றாய்
நரகத்தின் பிரதியான நகரமே
உன்னுடன் சேர்ந்திருக்கும்போது
சொர்க்கமாகிறது..
வனம் சொர்க்கத்தின் பிரதி
சொர்க்கத்திற்கு உன்னுடன் செல்வது
கற்கண்டாய் மனதினில் இனிக்க
துவங்கியது நம் வனப்பிரவேசம்.
கருவிழிகளில் பச்சையத்தையும்
கூர் நாசிகளில் புழுதியின் வாசத்தையும்
இதழ்களில் குளுமையையும்
நிரப்பிக்கொண்டு சிறிது,சிறிதாய்
வனத்தினுள் தொலையத்துவங்கினாய்.
இரவுமுழுவதும் காய்ந்து கொண்டிருந்த
நிலவு உருகி பனித்துளிகளென
இலைகளில் தங்கி, நீ கடந்து செல்கையில்
பூக்களுடன் சேர்ந்து உதிர்ந்து
வரவேற்றது உன் வருகையை
வனமெங்கும் மொழியின்றி பாடித்திரிந்த
பறவைகள் உன் உதட்டசைவுகளில்
துள்ளல் மொழி பழகின
இயற்கையில் வசப்பட வனம் புகுந்த நீ,
இயற்கையை வசப்படுத்தியபடி
வெளியுலகின் பிரக்ஞையின்றி
வன தேவதையாய் மாறிக்கொண்டிருந்தாய்
ஒளியை பின்தொடரும்
விட்டில்பூச்சியென உனை
பின்தொடர்ந்திருந்த நான் மற்றுமொருமுறை
தொலைய ஆயத்தமானேன்
வனதேவதை உனக்குள்

Share/Bookmark

Sunday, February 20, 2011

முகமூடிகள்


ஒவ்வொரு இரவும்
பகல்களில் அணிந்து
கழட்டி எறியும் முகமூடிகள்
எனைப் பார்த்து பரிகசிக்கின்றன
பகல்கள் பரவாயில்லை,
அன்பு
கருணை
நட்பு
கோபம்
அப்பாவி
முட்டாள்
கீழ்படிதல்
சாமர்த்தியசாலி
என சமயத்திற்கேற்றார் போல்
முகமூடிகள், நல்லவன் எனும்
முகமூடியை அணிவதற்கான
தேவையும் அவ்வப்போது
வருவதுண்டு
இரவுகள்தான் கொடியவை
தகிக்கும் நிஜத்தை தவிர்க்க
கனவுகளையாவது அணிய
பழக வேண்டும்


Share/Bookmark

Thursday, February 10, 2011

பிப்ரவரி டிவிட்ஸ்


காதல் மாதமான பிப்ரவரி மாதத்தில் என் ட்விட்டர் தளத்தில் எழுதப்பட்ட சில "ட்விட்"களை இங்கு தந்துள்ளேன். நண்பர்கள் இனி அரசு1691 இந்த தளத்தையும் தொடரலாம்.

இருளுக்கு பழகிய கண்களைப் போன்று, என் இதயமும் உன் காதலுக்கு பழகிவிட்டது..உன் காதலற்ற கணங்களிலும் துடித்து, துடித்து

ஒவ்வொரு முறை உன்னிடமிருந்து விடைபெறும் போதும், மனது
சிந்திக்கத்
துவங்கிவிடுகிறது அடுத்த சந்திப்பிற்கான காரணத்தை


என்னை புறக்கணிப்பதற்கான காரணங்கள் உன்னிடம் நிறைய உள்ளது
உன்னை
இழப்பதற்கான காரணங்கள் என்னிடம் ஒன்றுகூட இல்லை.


உன்னிடமிருந்து விலகிச்செல்ல முயலும் போதுதான் "ஈர்ப்பு விசைதத்துவங்கள்" புரிய துவங்குகிறது.

நீயும், உன் நினைவுகளும் இல்லாமலிருந்தால் நிம்மதியாய் வாழ்வது சாத்தியம், என்ன செய்ய அசாத்தியங்களை முயல்வதுதானே காதல்

கனன்று கொண்டிருக்கும் நெருப்பாய் நான்.. காற்றென நீ வர, பற்றியெரியத் துவங்கியது காதல்

உன் எல்லா கேள்விகளுக்கும் பதில் என்"காதல்"தான், கேள்விகளை மட்டுமே பெரிதாக எண்ணும் உன்னிடம் எப்படி புரியவைப்பது என் பதில்களிலுள்ள உண்மையை

ஏதேதோ பொய்யான காரணங்கள் சொல்லி உனை காண வருகிறேன்,எல்லா காரணங்களிலும் பொய்யை கழித்துவிட்டால் என்காதலே மிஞ்சும் என்ற நம்பிக்கையில்

உலகம் கடினங்களாலும், காதலாலும் ஆனது. காதலிப்பதற்கு"உன்னை" தேர்ந்தெடுத்த போது அறிந்து கொண்டது
Share/Bookmark

Sunday, January 30, 2011

ஹைக்கூ 1 - பூக்களின் ரகசியங்கள்பனித்துளியில் உறையும்
சூரியன், உருகி வழிகிறது
காலமாய்

சுழிந்தோடும் நதியின் வேகம்
கலைத்து விடுகிறது
கூழாங்கல்லின் தவத்தை

தூரிகையில் சிறைப்பட்ட
யானை உலவுகிறது
கற்பனைக் காடுகளில்

வண்ணத்துப்பூச்சிகள்
எப்படியும் அறிந்துகொள்கின்றன
பூக்களின் ரகசியங்களை

கனவுகளில் ஒளிரும்
நட்சத்திரங்கள் எரிந்து
விழுகின்றன விடியலில்

தனிமையின் பாதையில்
பயணிக்க விடுவதேயில்லை
கூடவே வரும் நிலா


Share/Bookmark

Wednesday, January 26, 2011

பொன்னியின் செல்வன்- வரலாற்று புதினத்தின் உச்சம்


எழுதுவதை விட படிப்பது அதிகமாக இருக்கவேண்டும் என்ற பழக்கமுடைய எனக்கு, படிப்பின் மேல் நாட்டத்தை ஏற்படுத்திய புத்தகங்கள் பற்றி எழுத நினைத்து ஒரு பதிவு எழுதியதுடன் நின்றுவிட்டது. எட்டாம்வகுப்பு வரை சிறுவர்மலர்,ராணிமுத்து காமிக்ஸ் மற்றும் சில வார பத்திரிக்கைகளையும் மட்டுமே படித்து வந்த எனக்கு விடுமுறை நாளொன்றில் அறிமுகமான நண்பர் ஒருவரின் (அப்போது அவருக்கு என் வயதைக்காட்டிலும் மூன்று மடங்கு வயது அதிகம்) வழிகாட்டுதலில் தமிழின் முக்கியமான புத்தகங்களும்,எழுத்தாளர்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது துவங்கிய படிப்பதின் மீதான காதல்/வெறி இன்றுவரை தொடர்கிறது. அந்த விடுமுறையில் அவரிடமிருந்த பல புத்தகங்களை படித்த போதும், விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு(விடுதி தங்கி படித்துகொண்டிருந்தேன்) திரும்பி செல்லும்போது அவர் எனக்கு பரிசளித்த "பொன்னியின் செல்வன்"புத்தகம் இன்றுவரை என் விருப்பபட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. தமிழில் புத்தகங்கள் படிக்கும் பழக்கமுடைய எவரும் கட்டாயம் படித்திருக்க கூடிய புத்தகமான திரு.கல்கியின் "பொன்னியின் செல்வன்" பற்றி எழுதுவதென்பது கொல்லன் தெருவில் ஊசி விற்பதற்கு சமமானது ஆயினும் புதிதாக படிக்க துவங்கும் எவருக்கும் நான் பரிந்துரைக்கும் முதல் புத்தகமான இவ்வரலாற்று புதினத்துடன் படித்த/பிடித்த புத்தகங்கள் பற்றி பகிர்ந்து கொள்வது சரியானது என்பதால் பொன்னியின் செல்வன் புத்தகத்தை பற்றியும், அப்புத்தகத்துடனான என் நினைவுகளையும் எழுதுகிறேன்.

பண்டைய தமிழகத்தின் பெருமைமிக்க பேரரசுகளில் மிக முக்கியமானதான "சோழ பேரரசி"ன் பின்னணியை களமாகக்கொண்ட இந்நாவல் திருவாலங்காட்டு செப்பேடுகளையும், கல்வெட்டுகளில் கிடைத்த ஆதாரங்களையும், கற்பனையையும் கலந்து எழுதப்பட்டது. உலகப்புகழ் பெற்ற வரலாற்று நாயகர்களை கதை மாந்தர்களாக கொண்டிருப்பதால் வரலாற்றையும், கற்பனையையும் பிரித்தறிய முடியாதபடி அதே நேரத்தில் நாவலுக்கான சுவாரசியமும் குறையாமல் எழுதப்பட்டுள்ளது. ஐந்து பாகங்களாகவும், அவற்றுள் ஏறத்தாழ முன்னூறு அத்தியாயங்களாகவும் எழுதப்பட்டிருந்தாலும் துவக்கம் முதல் இறுதிவரை கதையின் போக்கும், கதை மாந்தர்களின் குணநலன்களும் சற்றும் பிறழாமல் சீராக அமைக்கபட்டிருப்பது இந்நாவலின் நிலைப்புதன்மைக்கு முக்கிய காரணங்கள்.

ராஜ,ராஜசோழன் எனப் பிற்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய 'அருண்மொழிவர்மனை'மையமாக கொண்டிருந்தாலும் நாவலின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை கதையின் போக்கை முன்னெடுத்து செல்வதாக வரும் 'வந்தியத்தேவன்' கதையின் நாயகனாக சித்தரிக்கப்பட்டிருப்பார். அருண்மொழியின் மூத்த சகோதரனான ஆதித்தகரிகாலன்,அவர்களது சகோதரி குந்தவை, கொடும்பளூர் இளவரசி வானதி, சோழப்பேரரசில் முக்கிய பொறுப்பிலிருந்து கொண்டு சதிவேலையில் ஈடுபடும் பழுவேட்டரையர்கள், அவர்களை ஆட்டுவிக்கும் நந்தினி, முதன்மை மந்திரி அநிருத்த பிரம்மராயர் மற்றும் அவரது சீடன் ஆழ்வார்க்கடியான்,பூங்குழழி என பல்வேறு பாத்திரங்கள் கதையில் இடம்பெற்றிருக்கும்போதும் அனைத்து பாத்திரங்களுக்கும் தனித்தனியான குணநலன்களை படைத்தது அவற்றை கதையின் போக்கிற்கு சாதகமாக பயன்படுத்திருப்பது "கல்கி" அவர்களது தனித்துவமான ஆற்றல். கதை மாந்தர்களை அடுத்து இந்நாவலில் முக்கியத்துவம் பெறுவது கதைக்களமாக சித்தரிக்கப்படும் நிலப்பகுதிகள். பண்டைய தமிழகத்தின் பரந்து விரிந்திருந்த சோழப்பேரரசின் நிலப்பகுதிகளில் கதை நடைபெற்றாலும் அதையும் தவிர்த்து காஞ்சி,ராமேஸ்வரம் மற்றும் ஈழத்திலும் கதை நிகழ்கிறது. திரு.கல்கி அவர்களின் வர்ணனைகளில் கதை மாந்தர்களுடன் நாமும் இந்நிலப்பகுதிகளில் பயணம் செய்வதைப்போன்ற அனுபவத்தை கதை நெடுகிலும் காணமுடியும். சோழ நிலப்பகுதியின் வளமையையும்,ஈழத்தின் இயற்கை செழுமையையும் பல தருணங்களில் கண்முன் படம்பிடித்து காட்டுவார்.

பள்ளி வயதில் துவங்கி பலமுறை இப்புத்தகத்தை படித்திருந்தாலும் கல்லூரி படிப்பு முடிந்து வேலைக்கு செல்ல துவங்கியபோது அறிமுகமான நண்பன் ஒருவனுடன், இக்கதையில் வரும் இடங்களை நேரில் காண வேண்டும் என முடிவுசெய்து இப்போதைய தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலான ஊர்களுக்கு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் அளவிற்கு இந்நாவல் என்னை ஈர்த்திருந்தது, வந்தியத்தேவனும், அருண்மொழிவர்மனும் தங்களின் காலடிகளை பதித்து வாழ்ந்த பகுதிகளில் நாமும் நமது காலடிகளை பதிக்கிறோம் என்று பெருமை கொள்வதே பண்டைய சோழப் பேரரசிற்கும், பிரம்மாண்டமான இந்நாவலுக்கும் கிடைத்த வெற்றி.

நவீன தமிழ் உரைநடையின் துவக்க காலமான ஐம்பதுகளின் ஆரம்ப ஆண்டுகளில் 'கல்கி' வார இதழில் தொடர்கதையாக வெளிவந்து வாசகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்று பின்னர் தனி புத்தகமாக வெளிவந்து பல பதிப்புகளை கண்ட "பொன்னியின் செல்வன்" புதினம் வெளிவந்து அறுபது ஆண்டுகள் கடந்துவிட்ட இன்றும் புத்தக சந்தைகளிலும், கண்காட்சிகளிலும் அதிக விற்பனை பட்டியலில் தொடர்ந்து இடம்பிடித்து வருவது இந்நூலின் சிறப்புகளுக்கு சான்றாகும். கல்கி இதழில் தொடர்கதையாக பலமுறை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள இந்நாவல் தனிப்புத்தகமாகவும் பல்வேறு பதிப்பகங்கள் வாயிலாக மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழ் வரலாற்று நாவல்களுக்கு முன்னோடியாக விளங்கும் "பொன்னியின் செல்வன்" இதுவரை வெளிவந்துள்ள வரலாற்று நாவல்களில் வெல்ல முடியாததாகவும் திகழ்கிறது.
Share/Bookmark

Friday, January 21, 2011

உருக்கொளல்


இரவுகளின் வெப்பம்
மெல்ல வடிகிறது

வெப்பமற்ற பெருவெளியில்
நின்றுருகும் பனிக்கட்டியாய்
மனம் மெல்ல,மெல்ல
உருகி,உருக்கொள்கிறது
விடியலின் மென்பனியாய்,
மலரும் பூக்களின் சுகந்தமாய்,
பறவைகளின் கானங்களாய்,
சோம்பல்முறிக்கும் மரங்களாய்.

உருக்கொள்வதின் உவகை
துருவங்களின் பனியாய் உறைய
மெல்ல,மெல்ல வடிகிறது
இரவுகளின் வெப்பம்


Share/Bookmark

Monday, January 10, 2011

முத்தக்கதை 4மௌனமான உன் முத்தங்கள்
அதிர்ந்து கொண்டேயிருக்கிறது
என் உயிர் முழுவதும்

சீக்கிரம் பெற்றுக்கொள், கடனென
நெஞ்சை அழுத்துகிறது
நீ தந்த முத்தங்கள்

குழந்தைகளைக் கூட முத்தமிடாமல்
தவமிருக்கின்றன என் உதடுகள்
உன் முத்த வரங்களைப் பெற

பித்தேறி அலைகின்றது மனம்
முத்தங்களினால் பிடித்த பித்தை
முத்தங்கள் கொண்டே தணி

முதல் மழையின் தீவிரத்தை
கொண்டிருந்தது முதல் முத்தம்
பொழிந்து தீர்த்தது காதல்

உன் இதழ்களிடம் சொல்வதற்கென்றே
சில ரகசியங்கள் காத்திருக்கின்றன
என் இதழ்களிடம்..


Share/Bookmark

Wednesday, January 5, 2011

துளிர்க்கும் நற்றவைகள்ஊழிப் பெருங்காற்றில்
சுழன்றெரியும் நெருப்பு
ஆழிப் பேரலையெதிர்
நீந்தும் சிறுவள்ளம்
சூறைக் காற்றிற் சாயா
புழுதிகாட்டு ஒற்றைப்பனை
யுகங்கள் கிடந்திறுகிய மண்
முட்டும் சிறுவிதை
வானுயர் மரங்கள் மேவிய
வனம்வாழ் சிறு நெருஞ்சி
கற்பாறை பிளந்து நீர்
உறிஞ்சும் சிறு வேர்
அற்றவைகள் ஆளும் அயனியில்
நாற்றாய் துளிர்க்கும் நற்றவைகள்
Share/Bookmark