Sunday, January 30, 2011

ஹைக்கூ 1 - பூக்களின் ரகசியங்கள்பனித்துளியில் உறையும்
சூரியன், உருகி வழிகிறது
காலமாய்

சுழிந்தோடும் நதியின் வேகம்
கலைத்து விடுகிறது
கூழாங்கல்லின் தவத்தை

தூரிகையில் சிறைப்பட்ட
யானை உலவுகிறது
கற்பனைக் காடுகளில்

வண்ணத்துப்பூச்சிகள்
எப்படியும் அறிந்துகொள்கின்றன
பூக்களின் ரகசியங்களை

கனவுகளில் ஒளிரும்
நட்சத்திரங்கள் எரிந்து
விழுகின்றன விடியலில்

தனிமையின் பாதையில்
பயணிக்க விடுவதேயில்லை
கூடவே வரும் நிலா


Share/Bookmark

Wednesday, January 26, 2011

பொன்னியின் செல்வன்- வரலாற்று புதினத்தின் உச்சம்


எழுதுவதை விட படிப்பது அதிகமாக இருக்கவேண்டும் என்ற பழக்கமுடைய எனக்கு, படிப்பின் மேல் நாட்டத்தை ஏற்படுத்திய புத்தகங்கள் பற்றி எழுத நினைத்து ஒரு பதிவு எழுதியதுடன் நின்றுவிட்டது. எட்டாம்வகுப்பு வரை சிறுவர்மலர்,ராணிமுத்து காமிக்ஸ் மற்றும் சில வார பத்திரிக்கைகளையும் மட்டுமே படித்து வந்த எனக்கு விடுமுறை நாளொன்றில் அறிமுகமான நண்பர் ஒருவரின் (அப்போது அவருக்கு என் வயதைக்காட்டிலும் மூன்று மடங்கு வயது அதிகம்) வழிகாட்டுதலில் தமிழின் முக்கியமான புத்தகங்களும்,எழுத்தாளர்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது துவங்கிய படிப்பதின் மீதான காதல்/வெறி இன்றுவரை தொடர்கிறது. அந்த விடுமுறையில் அவரிடமிருந்த பல புத்தகங்களை படித்த போதும், விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு(விடுதி தங்கி படித்துகொண்டிருந்தேன்) திரும்பி செல்லும்போது அவர் எனக்கு பரிசளித்த "பொன்னியின் செல்வன்"புத்தகம் இன்றுவரை என் விருப்பபட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. தமிழில் புத்தகங்கள் படிக்கும் பழக்கமுடைய எவரும் கட்டாயம் படித்திருக்க கூடிய புத்தகமான திரு.கல்கியின் "பொன்னியின் செல்வன்" பற்றி எழுதுவதென்பது கொல்லன் தெருவில் ஊசி விற்பதற்கு சமமானது ஆயினும் புதிதாக படிக்க துவங்கும் எவருக்கும் நான் பரிந்துரைக்கும் முதல் புத்தகமான இவ்வரலாற்று புதினத்துடன் படித்த/பிடித்த புத்தகங்கள் பற்றி பகிர்ந்து கொள்வது சரியானது என்பதால் பொன்னியின் செல்வன் புத்தகத்தை பற்றியும், அப்புத்தகத்துடனான என் நினைவுகளையும் எழுதுகிறேன்.

பண்டைய தமிழகத்தின் பெருமைமிக்க பேரரசுகளில் மிக முக்கியமானதான "சோழ பேரரசி"ன் பின்னணியை களமாகக்கொண்ட இந்நாவல் திருவாலங்காட்டு செப்பேடுகளையும், கல்வெட்டுகளில் கிடைத்த ஆதாரங்களையும், கற்பனையையும் கலந்து எழுதப்பட்டது. உலகப்புகழ் பெற்ற வரலாற்று நாயகர்களை கதை மாந்தர்களாக கொண்டிருப்பதால் வரலாற்றையும், கற்பனையையும் பிரித்தறிய முடியாதபடி அதே நேரத்தில் நாவலுக்கான சுவாரசியமும் குறையாமல் எழுதப்பட்டுள்ளது. ஐந்து பாகங்களாகவும், அவற்றுள் ஏறத்தாழ முன்னூறு அத்தியாயங்களாகவும் எழுதப்பட்டிருந்தாலும் துவக்கம் முதல் இறுதிவரை கதையின் போக்கும், கதை மாந்தர்களின் குணநலன்களும் சற்றும் பிறழாமல் சீராக அமைக்கபட்டிருப்பது இந்நாவலின் நிலைப்புதன்மைக்கு முக்கிய காரணங்கள்.

ராஜ,ராஜசோழன் எனப் பிற்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய 'அருண்மொழிவர்மனை'மையமாக கொண்டிருந்தாலும் நாவலின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை கதையின் போக்கை முன்னெடுத்து செல்வதாக வரும் 'வந்தியத்தேவன்' கதையின் நாயகனாக சித்தரிக்கப்பட்டிருப்பார். அருண்மொழியின் மூத்த சகோதரனான ஆதித்தகரிகாலன்,அவர்களது சகோதரி குந்தவை, கொடும்பளூர் இளவரசி வானதி, சோழப்பேரரசில் முக்கிய பொறுப்பிலிருந்து கொண்டு சதிவேலையில் ஈடுபடும் பழுவேட்டரையர்கள், அவர்களை ஆட்டுவிக்கும் நந்தினி, முதன்மை மந்திரி அநிருத்த பிரம்மராயர் மற்றும் அவரது சீடன் ஆழ்வார்க்கடியான்,பூங்குழழி என பல்வேறு பாத்திரங்கள் கதையில் இடம்பெற்றிருக்கும்போதும் அனைத்து பாத்திரங்களுக்கும் தனித்தனியான குணநலன்களை படைத்தது அவற்றை கதையின் போக்கிற்கு சாதகமாக பயன்படுத்திருப்பது "கல்கி" அவர்களது தனித்துவமான ஆற்றல். கதை மாந்தர்களை அடுத்து இந்நாவலில் முக்கியத்துவம் பெறுவது கதைக்களமாக சித்தரிக்கப்படும் நிலப்பகுதிகள். பண்டைய தமிழகத்தின் பரந்து விரிந்திருந்த சோழப்பேரரசின் நிலப்பகுதிகளில் கதை நடைபெற்றாலும் அதையும் தவிர்த்து காஞ்சி,ராமேஸ்வரம் மற்றும் ஈழத்திலும் கதை நிகழ்கிறது. திரு.கல்கி அவர்களின் வர்ணனைகளில் கதை மாந்தர்களுடன் நாமும் இந்நிலப்பகுதிகளில் பயணம் செய்வதைப்போன்ற அனுபவத்தை கதை நெடுகிலும் காணமுடியும். சோழ நிலப்பகுதியின் வளமையையும்,ஈழத்தின் இயற்கை செழுமையையும் பல தருணங்களில் கண்முன் படம்பிடித்து காட்டுவார்.

பள்ளி வயதில் துவங்கி பலமுறை இப்புத்தகத்தை படித்திருந்தாலும் கல்லூரி படிப்பு முடிந்து வேலைக்கு செல்ல துவங்கியபோது அறிமுகமான நண்பன் ஒருவனுடன், இக்கதையில் வரும் இடங்களை நேரில் காண வேண்டும் என முடிவுசெய்து இப்போதைய தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலான ஊர்களுக்கு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் அளவிற்கு இந்நாவல் என்னை ஈர்த்திருந்தது, வந்தியத்தேவனும், அருண்மொழிவர்மனும் தங்களின் காலடிகளை பதித்து வாழ்ந்த பகுதிகளில் நாமும் நமது காலடிகளை பதிக்கிறோம் என்று பெருமை கொள்வதே பண்டைய சோழப் பேரரசிற்கும், பிரம்மாண்டமான இந்நாவலுக்கும் கிடைத்த வெற்றி.

நவீன தமிழ் உரைநடையின் துவக்க காலமான ஐம்பதுகளின் ஆரம்ப ஆண்டுகளில் 'கல்கி' வார இதழில் தொடர்கதையாக வெளிவந்து வாசகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்று பின்னர் தனி புத்தகமாக வெளிவந்து பல பதிப்புகளை கண்ட "பொன்னியின் செல்வன்" புதினம் வெளிவந்து அறுபது ஆண்டுகள் கடந்துவிட்ட இன்றும் புத்தக சந்தைகளிலும், கண்காட்சிகளிலும் அதிக விற்பனை பட்டியலில் தொடர்ந்து இடம்பிடித்து வருவது இந்நூலின் சிறப்புகளுக்கு சான்றாகும். கல்கி இதழில் தொடர்கதையாக பலமுறை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள இந்நாவல் தனிப்புத்தகமாகவும் பல்வேறு பதிப்பகங்கள் வாயிலாக மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழ் வரலாற்று நாவல்களுக்கு முன்னோடியாக விளங்கும் "பொன்னியின் செல்வன்" இதுவரை வெளிவந்துள்ள வரலாற்று நாவல்களில் வெல்ல முடியாததாகவும் திகழ்கிறது.
Share/Bookmark

Friday, January 21, 2011

உருக்கொளல்


இரவுகளின் வெப்பம்
மெல்ல வடிகிறது

வெப்பமற்ற பெருவெளியில்
நின்றுருகும் பனிக்கட்டியாய்
மனம் மெல்ல,மெல்ல
உருகி,உருக்கொள்கிறது
விடியலின் மென்பனியாய்,
மலரும் பூக்களின் சுகந்தமாய்,
பறவைகளின் கானங்களாய்,
சோம்பல்முறிக்கும் மரங்களாய்.

உருக்கொள்வதின் உவகை
துருவங்களின் பனியாய் உறைய
மெல்ல,மெல்ல வடிகிறது
இரவுகளின் வெப்பம்


Share/Bookmark

Monday, January 10, 2011

முத்தக்கதை 4மௌனமான உன் முத்தங்கள்
அதிர்ந்து கொண்டேயிருக்கிறது
என் உயிர் முழுவதும்

சீக்கிரம் பெற்றுக்கொள், கடனென
நெஞ்சை அழுத்துகிறது
நீ தந்த முத்தங்கள்

குழந்தைகளைக் கூட முத்தமிடாமல்
தவமிருக்கின்றன என் உதடுகள்
உன் முத்த வரங்களைப் பெற

பித்தேறி அலைகின்றது மனம்
முத்தங்களினால் பிடித்த பித்தை
முத்தங்கள் கொண்டே தணி

முதல் மழையின் தீவிரத்தை
கொண்டிருந்தது முதல் முத்தம்
பொழிந்து தீர்த்தது காதல்

உன் இதழ்களிடம் சொல்வதற்கென்றே
சில ரகசியங்கள் காத்திருக்கின்றன
என் இதழ்களிடம்..


Share/Bookmark

Wednesday, January 5, 2011

துளிர்க்கும் நற்றவைகள்ஊழிப் பெருங்காற்றில்
சுழன்றெரியும் நெருப்பு
ஆழிப் பேரலையெதிர்
நீந்தும் சிறுவள்ளம்
சூறைக் காற்றிற் சாயா
புழுதிகாட்டு ஒற்றைப்பனை
யுகங்கள் கிடந்திறுகிய மண்
முட்டும் சிறுவிதை
வானுயர் மரங்கள் மேவிய
வனம்வாழ் சிறு நெருஞ்சி
கற்பாறை பிளந்து நீர்
உறிஞ்சும் சிறு வேர்
அற்றவைகள் ஆளும் அயனியில்
நாற்றாய் துளிர்க்கும் நற்றவைகள்
Share/Bookmark