Wednesday, January 26, 2011

பொன்னியின் செல்வன்- வரலாற்று புதினத்தின் உச்சம்


எழுதுவதை விட படிப்பது அதிகமாக இருக்கவேண்டும் என்ற பழக்கமுடைய எனக்கு, படிப்பின் மேல் நாட்டத்தை ஏற்படுத்திய புத்தகங்கள் பற்றி எழுத நினைத்து ஒரு பதிவு எழுதியதுடன் நின்றுவிட்டது. எட்டாம்வகுப்பு வரை சிறுவர்மலர்,ராணிமுத்து காமிக்ஸ் மற்றும் சில வார பத்திரிக்கைகளையும் மட்டுமே படித்து வந்த எனக்கு விடுமுறை நாளொன்றில் அறிமுகமான நண்பர் ஒருவரின் (அப்போது அவருக்கு என் வயதைக்காட்டிலும் மூன்று மடங்கு வயது அதிகம்) வழிகாட்டுதலில் தமிழின் முக்கியமான புத்தகங்களும்,எழுத்தாளர்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது துவங்கிய படிப்பதின் மீதான காதல்/வெறி இன்றுவரை தொடர்கிறது. அந்த விடுமுறையில் அவரிடமிருந்த பல புத்தகங்களை படித்த போதும், விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு(விடுதி தங்கி படித்துகொண்டிருந்தேன்) திரும்பி செல்லும்போது அவர் எனக்கு பரிசளித்த "பொன்னியின் செல்வன்"புத்தகம் இன்றுவரை என் விருப்பபட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. தமிழில் புத்தகங்கள் படிக்கும் பழக்கமுடைய எவரும் கட்டாயம் படித்திருக்க கூடிய புத்தகமான திரு.கல்கியின் "பொன்னியின் செல்வன்" பற்றி எழுதுவதென்பது கொல்லன் தெருவில் ஊசி விற்பதற்கு சமமானது ஆயினும் புதிதாக படிக்க துவங்கும் எவருக்கும் நான் பரிந்துரைக்கும் முதல் புத்தகமான இவ்வரலாற்று புதினத்துடன் படித்த/பிடித்த புத்தகங்கள் பற்றி பகிர்ந்து கொள்வது சரியானது என்பதால் பொன்னியின் செல்வன் புத்தகத்தை பற்றியும், அப்புத்தகத்துடனான என் நினைவுகளையும் எழுதுகிறேன்.

பண்டைய தமிழகத்தின் பெருமைமிக்க பேரரசுகளில் மிக முக்கியமானதான "சோழ பேரரசி"ன் பின்னணியை களமாகக்கொண்ட இந்நாவல் திருவாலங்காட்டு செப்பேடுகளையும், கல்வெட்டுகளில் கிடைத்த ஆதாரங்களையும், கற்பனையையும் கலந்து எழுதப்பட்டது. உலகப்புகழ் பெற்ற வரலாற்று நாயகர்களை கதை மாந்தர்களாக கொண்டிருப்பதால் வரலாற்றையும், கற்பனையையும் பிரித்தறிய முடியாதபடி அதே நேரத்தில் நாவலுக்கான சுவாரசியமும் குறையாமல் எழுதப்பட்டுள்ளது. ஐந்து பாகங்களாகவும், அவற்றுள் ஏறத்தாழ முன்னூறு அத்தியாயங்களாகவும் எழுதப்பட்டிருந்தாலும் துவக்கம் முதல் இறுதிவரை கதையின் போக்கும், கதை மாந்தர்களின் குணநலன்களும் சற்றும் பிறழாமல் சீராக அமைக்கபட்டிருப்பது இந்நாவலின் நிலைப்புதன்மைக்கு முக்கிய காரணங்கள்.

ராஜ,ராஜசோழன் எனப் பிற்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய 'அருண்மொழிவர்மனை'மையமாக கொண்டிருந்தாலும் நாவலின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை கதையின் போக்கை முன்னெடுத்து செல்வதாக வரும் 'வந்தியத்தேவன்' கதையின் நாயகனாக சித்தரிக்கப்பட்டிருப்பார். அருண்மொழியின் மூத்த சகோதரனான ஆதித்தகரிகாலன்,அவர்களது சகோதரி குந்தவை, கொடும்பளூர் இளவரசி வானதி, சோழப்பேரரசில் முக்கிய பொறுப்பிலிருந்து கொண்டு சதிவேலையில் ஈடுபடும் பழுவேட்டரையர்கள், அவர்களை ஆட்டுவிக்கும் நந்தினி, முதன்மை மந்திரி அநிருத்த பிரம்மராயர் மற்றும் அவரது சீடன் ஆழ்வார்க்கடியான்,பூங்குழழி என பல்வேறு பாத்திரங்கள் கதையில் இடம்பெற்றிருக்கும்போதும் அனைத்து பாத்திரங்களுக்கும் தனித்தனியான குணநலன்களை படைத்தது அவற்றை கதையின் போக்கிற்கு சாதகமாக பயன்படுத்திருப்பது "கல்கி" அவர்களது தனித்துவமான ஆற்றல். கதை மாந்தர்களை அடுத்து இந்நாவலில் முக்கியத்துவம் பெறுவது கதைக்களமாக சித்தரிக்கப்படும் நிலப்பகுதிகள். பண்டைய தமிழகத்தின் பரந்து விரிந்திருந்த சோழப்பேரரசின் நிலப்பகுதிகளில் கதை நடைபெற்றாலும் அதையும் தவிர்த்து காஞ்சி,ராமேஸ்வரம் மற்றும் ஈழத்திலும் கதை நிகழ்கிறது. திரு.கல்கி அவர்களின் வர்ணனைகளில் கதை மாந்தர்களுடன் நாமும் இந்நிலப்பகுதிகளில் பயணம் செய்வதைப்போன்ற அனுபவத்தை கதை நெடுகிலும் காணமுடியும். சோழ நிலப்பகுதியின் வளமையையும்,ஈழத்தின் இயற்கை செழுமையையும் பல தருணங்களில் கண்முன் படம்பிடித்து காட்டுவார்.

பள்ளி வயதில் துவங்கி பலமுறை இப்புத்தகத்தை படித்திருந்தாலும் கல்லூரி படிப்பு முடிந்து வேலைக்கு செல்ல துவங்கியபோது அறிமுகமான நண்பன் ஒருவனுடன், இக்கதையில் வரும் இடங்களை நேரில் காண வேண்டும் என முடிவுசெய்து இப்போதைய தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலான ஊர்களுக்கு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் அளவிற்கு இந்நாவல் என்னை ஈர்த்திருந்தது, வந்தியத்தேவனும், அருண்மொழிவர்மனும் தங்களின் காலடிகளை பதித்து வாழ்ந்த பகுதிகளில் நாமும் நமது காலடிகளை பதிக்கிறோம் என்று பெருமை கொள்வதே பண்டைய சோழப் பேரரசிற்கும், பிரம்மாண்டமான இந்நாவலுக்கும் கிடைத்த வெற்றி.

நவீன தமிழ் உரைநடையின் துவக்க காலமான ஐம்பதுகளின் ஆரம்ப ஆண்டுகளில் 'கல்கி' வார இதழில் தொடர்கதையாக வெளிவந்து வாசகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்று பின்னர் தனி புத்தகமாக வெளிவந்து பல பதிப்புகளை கண்ட "பொன்னியின் செல்வன்" புதினம் வெளிவந்து அறுபது ஆண்டுகள் கடந்துவிட்ட இன்றும் புத்தக சந்தைகளிலும், கண்காட்சிகளிலும் அதிக விற்பனை பட்டியலில் தொடர்ந்து இடம்பிடித்து வருவது இந்நூலின் சிறப்புகளுக்கு சான்றாகும். கல்கி இதழில் தொடர்கதையாக பலமுறை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள இந்நாவல் தனிப்புத்தகமாகவும் பல்வேறு பதிப்பகங்கள் வாயிலாக மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழ் வரலாற்று நாவல்களுக்கு முன்னோடியாக விளங்கும் "பொன்னியின் செல்வன்" இதுவரை வெளிவந்துள்ள வரலாற்று நாவல்களில் வெல்ல முடியாததாகவும் திகழ்கிறது.
Share/Bookmark

11 comments:

sakthistudycentre-கருன் said...

Nice..

sakthistudycentre-கருன் said...

குடியரசு தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்பவர்கள் இதையும் கொஞ்சம் படிங்க..

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_25.html

சிவகுமாரன் said...

என் சிறு வயதில் படித்தது. கல்கியில் வந்ததை சேகரித்து பைண்ட் செய்து வைத்திருந்தார்கள்.எத்தனை முறை படித்தாலும் சலிக்காத படைப்புகள். இந்த முறை மதுரை புத்தகச் சந்தையில் பொன்னியில் செல்வன் வாங்கி என் மனைவிக்கு பரிசளித்தேன்.

சைக்கிள் said...

நல்ல பதிவு தோழர். personal ஆகச் சொன்னால் எனக்கு சிவகாமியின் சபதம் தான் பிடிக்கும். என்றாலும் நிறைய பேருக்குப் பிடித்த ஒரு புனைவு பற்றிய நிலம் குறித்த கவனப்படுத்துதலை உங்கள் பதிவு கொண்டுள்ளது. தவிர அந்த இடங்களுக்கு நீங்கள் பயணம் சென்றதாக எழுதியிருப்பது ஒரு பெண்ணாக எனக்கு பயணம் குறித்த ஒரு ஏக்கத்தையும் எழுப்புகிறது.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி சக்தி
நன்றி சிவக்குமாரன்..சரியான பரிசு
@ சைக்கிள் - கல்கியின் படைப்புகளில் சிவகாமியின் சபதம் சிறந்த படைப்புதான் இன்றும் "வஜ்ரபாஹு" வை அடிக்கடி நினைத்துக்கொள்வேன். தமிழகத்தின் எல்லா நிலப்பகுதிகளையும் பார்க்க வேண்டும் என்பதுதான் என் பயணங்களின் நோக்கம்

ஆதவா said...

என்ன திடீர்ன்னு பொன்னியின் செல்வன்???

எனக்குத் தெரிந்து எனது புத்தகம் (கல்கி வார இதழிலிருந்து சேகரிக்கப்பட்டது) எத்தனை முறை புரட்டப்பட்டது என்றே தெரியவில்லை. எத்தனை முறை படித்தாலும் சலிப்பில்லாதது!!

மணிரத்னம் இதனைப் படமாக்குகிறாராம்... படித்தவர்கள் போகவேண்டாம் என்பது என் கருத்து!!

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நீண்ட நாட்களாக எழுத நினைத்ததுதான்..பொன்னியின் செல்வனை திரைப்படமாக்குவது கடினமுயற்சி பார்ப்போம்

Anonymous said...

you may be interested :)
http://issuu.com/humble/docs/chola-dynasty-brief?mode=embed&documentId=080315165735-4297a10e7b9e48199dc5fec612f38209&layout=grey

திருநாவுக்கரசு பழனிசாமி said...

thanks Anonymous

Anonymous said...

கல்கி ஐயாவின் அருமையான தொடர் பொன்னியின் செல்வன் எத்தனை முறை படித்தாலும் சலிப்பே வராது சரித்திர நாவல் ஐயா மாதிரி எழுத யாராலும் முடியாது என்பது என் தாழ்மையான கருத்த.

sis said...

இப்புத்தகத்தை படிக்கும் போதெல்லாம் வந்திய தேவன் மேல் மீண்டும் மீண்டும் காதல் கொள்ள நேர்கிறது. இந்த காரணத்துக்காகவே இதை பல முறை படிக்கிறேன். அது மட்டும் இல்ல சோழ நாட்டில் இருந்தாலும், அன்றைய காவிரியின் அழகையும் சுற்றியுள்ள இடங்களை பற்றி கல்கி அவர்களின் வர்ணனை போல் வராது :-)

Post a Comment