Friday, February 25, 2011

வனப்பிரவேசம்உனக்குள் தொலைந்து கொண்டிருக்கும்
நான், அவ்வப்போது வனங்களிலும்
தொலைவதுண்டு..இம்முறை
எனக்கும் வனம்புக ஆசையென்றாய்
நரகத்தின் பிரதியான நகரமே
உன்னுடன் சேர்ந்திருக்கும்போது
சொர்க்கமாகிறது..
வனம் சொர்க்கத்தின் பிரதி
சொர்க்கத்திற்கு உன்னுடன் செல்வது
கற்கண்டாய் மனதினில் இனிக்க
துவங்கியது நம் வனப்பிரவேசம்.
கருவிழிகளில் பச்சையத்தையும்
கூர் நாசிகளில் புழுதியின் வாசத்தையும்
இதழ்களில் குளுமையையும்
நிரப்பிக்கொண்டு சிறிது,சிறிதாய்
வனத்தினுள் தொலையத்துவங்கினாய்.
இரவுமுழுவதும் காய்ந்து கொண்டிருந்த
நிலவு உருகி பனித்துளிகளென
இலைகளில் தங்கி, நீ கடந்து செல்கையில்
பூக்களுடன் சேர்ந்து உதிர்ந்து
வரவேற்றது உன் வருகையை
வனமெங்கும் மொழியின்றி பாடித்திரிந்த
பறவைகள் உன் உதட்டசைவுகளில்
துள்ளல் மொழி பழகின
இயற்கையில் வசப்பட வனம் புகுந்த நீ,
இயற்கையை வசப்படுத்தியபடி
வெளியுலகின் பிரக்ஞையின்றி
வன தேவதையாய் மாறிக்கொண்டிருந்தாய்
ஒளியை பின்தொடரும்
விட்டில்பூச்சியென உனை
பின்தொடர்ந்திருந்த நான் மற்றுமொருமுறை
தொலைய ஆயத்தமானேன்
வனதேவதை உனக்குள்

Share/Bookmark

Sunday, February 20, 2011

முகமூடிகள்


ஒவ்வொரு இரவும்
பகல்களில் அணிந்து
கழட்டி எறியும் முகமூடிகள்
எனைப் பார்த்து பரிகசிக்கின்றன
பகல்கள் பரவாயில்லை,
அன்பு
கருணை
நட்பு
கோபம்
அப்பாவி
முட்டாள்
கீழ்படிதல்
சாமர்த்தியசாலி
என சமயத்திற்கேற்றார் போல்
முகமூடிகள், நல்லவன் எனும்
முகமூடியை அணிவதற்கான
தேவையும் அவ்வப்போது
வருவதுண்டு
இரவுகள்தான் கொடியவை
தகிக்கும் நிஜத்தை தவிர்க்க
கனவுகளையாவது அணிய
பழக வேண்டும்


Share/Bookmark

Thursday, February 10, 2011

பிப்ரவரி டிவிட்ஸ்


காதல் மாதமான பிப்ரவரி மாதத்தில் என் ட்விட்டர் தளத்தில் எழுதப்பட்ட சில "ட்விட்"களை இங்கு தந்துள்ளேன். நண்பர்கள் இனி அரசு1691 இந்த தளத்தையும் தொடரலாம்.

இருளுக்கு பழகிய கண்களைப் போன்று, என் இதயமும் உன் காதலுக்கு பழகிவிட்டது..உன் காதலற்ற கணங்களிலும் துடித்து, துடித்து

ஒவ்வொரு முறை உன்னிடமிருந்து விடைபெறும் போதும், மனது
சிந்திக்கத்
துவங்கிவிடுகிறது அடுத்த சந்திப்பிற்கான காரணத்தை


என்னை புறக்கணிப்பதற்கான காரணங்கள் உன்னிடம் நிறைய உள்ளது
உன்னை
இழப்பதற்கான காரணங்கள் என்னிடம் ஒன்றுகூட இல்லை.


உன்னிடமிருந்து விலகிச்செல்ல முயலும் போதுதான் "ஈர்ப்பு விசைதத்துவங்கள்" புரிய துவங்குகிறது.

நீயும், உன் நினைவுகளும் இல்லாமலிருந்தால் நிம்மதியாய் வாழ்வது சாத்தியம், என்ன செய்ய அசாத்தியங்களை முயல்வதுதானே காதல்

கனன்று கொண்டிருக்கும் நெருப்பாய் நான்.. காற்றென நீ வர, பற்றியெரியத் துவங்கியது காதல்

உன் எல்லா கேள்விகளுக்கும் பதில் என்"காதல்"தான், கேள்விகளை மட்டுமே பெரிதாக எண்ணும் உன்னிடம் எப்படி புரியவைப்பது என் பதில்களிலுள்ள உண்மையை

ஏதேதோ பொய்யான காரணங்கள் சொல்லி உனை காண வருகிறேன்,எல்லா காரணங்களிலும் பொய்யை கழித்துவிட்டால் என்காதலே மிஞ்சும் என்ற நம்பிக்கையில்

உலகம் கடினங்களாலும், காதலாலும் ஆனது. காதலிப்பதற்கு"உன்னை" தேர்ந்தெடுத்த போது அறிந்து கொண்டது
Share/Bookmark