Tuesday, March 29, 2011

மின்னொளிர் முத்தங்கள்


ஒவ்வொருமுறை சந்திக்கும் போதும்
ஒரு சண்டை துவங்கி, முடியும்
நம்முள், இன்று வழக்கம் தவறிய
மாலை நேரத்துச் சந்திப்பு
இருள் பெரும் விருட்சமெனப் பரவி
வியாபிக்கத் துவங்கியிருந்தது
செவ்வடர் கீழ்வானில் தெறித்த
தீக்குழம்பின் சிறு தீற்றல்களாய்
மினுக்கத் துவங்கின நட்சத்திரங்கள்.
ரகசிய முத்தங்களளவு பிணையா நம்
நேசத்தை எண்ணி உனக்கான ரகசிய
புன்னகையுடன் காத்திருந்தேன்.
வானம் வெட்கமிகுந்து கறுப்பாடை
பூணத்துவங்கையில் நீ வந்தாய்
ஒரு கேள்வியுடன்,
மொத்த நட்சத்திரங்கள் எத்தனை?
நட்சத்திரங்களை பூக்களாய் சூடியிருக்கும்
தேவதையிடமிருந்து நட்சத்திரக் கேள்வி.
''ஒவ்வொரு காதலனும் தன் காதலியை
முத்தமிடுகையில் முத்ததிற்கொன்றாய்
நட்சத்திரம் பிறக்குமாம்'' , என்று
புதிய நட்சத்திரங்களுக்கான விதைகளை
தூவினேன், கார் இருண்டால் மழை
பொழியும் என்ற நன்னம்பிக்கையில்
விழி நட்சத்திரங்களில் செல்லக்கோபம்
தெறிக்க எதிர்க்கேள்வி விதைத்தாய் நீ
எரிகல்லாய் விழும் நட்சத்திரங்கள்
எதில் சேர்த்தி?
அது,''காதலி ஒவ்வொருமுறை காதலனுடன்
சண்டையிடும் போதும் ஒவ்வொன்றாய்
பூமியில் விழுந்து மரிக்கிறது'' என்று
சோகம் கூட்டினேன் , ' நீ எத்தனை
முறை என்னுடன் சண்டையிட்டு
நட்சத்திரப்பலி கொடுத்திருக்கிறாய் தெரியுமா',
என்று நட்சத்திரங்களுக்கு இரங்கல் வாசித்தேன்
''ரொம்ப கவலைப்படாதீங்க,கணக்கு சரியாகாம
போயிடுமா, இல்ல போகத்தான் விட்டுடுவீங்களா''
என்று உனக்கு மட்டுமே கேட்குமளவில்
சொல்லிவிட்டு புன்னகைத்தாய்.
இருவரது கடிகாரங்களிலும் நொடி முள்
சிறகிழந்து தவித்துக்கொண்டிருந்தது
வழக்கமாக விடைபெற ஆயத்தமாகும் முன்
என் உள்ளங்கைகளில் சில கோலங்களை
தீட்டுவாய்..புள்ளிகளற்ற நெளிக்கோலம்
கோலமிடத் துவங்கிய உன் கைகளை
இறுகப் பற்றிக்கொண்டு, சட்டென
உன் கன்னக்கதுப்புகளில் என் இதழ்களை
சில நொடிகள் நிறுவினேன்..நம்
சார்பில் முதல் முத்த நட்சத்திரம்.
விடுக்கென்று கைகைளை
உதறியெழுந்து பொய்க்கோபத்துடன்
என் தோள்களில் குத்தினாய், அடுத்த
சண்டை துவங்கியது நம்முள்..
மையிருள் வான் கிழித்த நட்சத்திரமொன்று
நம்மருகே ஒளிர்ந்து விழுந்து மறித்தது
எரிகல்லாய்..இருவரும் ஒருசேர
புன்னகைத்து அமைதியானோம்
கணக்குகள் சரியாவது காலத்தின் நியதி.


Share/Bookmark

Friday, March 4, 2011

கோல நோட்டும் சில சமையல் குறிப்புக்களும்


பள்ளிக் காலத்து பழைய
டைரி ஒன்றை பரணில்
தேடிக் கொண்டிருக்கையில்
அகப்பட்டது அக்காவின்
பழைய மரக்கலர் புத்தகப்பை.
தூசிபடர்ந்து, பரணின் புழுக்கத்தில்
வெளிறி சிதைந்திருந்தது
ஆண்டுக்கு ரெண்டு, மூன்றென
கிழித்து அப்பாவின் திட்டுக்களுடன்
அடிக்கடி புத்தகப் பையை நான்
மாற்றிக் கொண்டிருக்க அக்கா
ஒரே பையை நான்காண்டுகள்
எப்படி பயன்படுத்துவாளோ..
அக்கா எப்போதும் புதிரானவள்
குறைவான மார்க்கு வாங்கிய
அக்காவின் தோழிகளெல்லாம்
கல்லூரிக்கு செல்ல முதல் மார்க்
வாங்கிய அக்கா, அப்பத்தாவின்
அறிவுரையால் வீட்டிலிருந்தாள்
திருமணம் முடிந்து மாமாவுடன்
செல்லும்போது தனது புத்தகங்களை
பரணில் போட்டதுதான் இதுவரை
அவற்றை அக்கா எடுக்கவில்லை..
தூசுகளை உதறிவிட்டு மெல்ல
பையிலிருப்பவற்றை கொட்டினேன்
பண்டிகைக்கு வந்த வாழ்த்தட்டைகள்,
சில கவிதை புத்தகங்கள்,
தோழிகளின் புகைப்படங்கள்,
ஆண்டுவிழா மலர்களில் வந்த
அக்காவின் கவிதைகள்,
பாராட்டுச் சான்றிதழ்கள்
என பல ஆச்சரியப் புதிர்கள்
கவிதை, இலக்கியம், பரிசுகள்
என்றிருந்த அக்கா இப்போதெல்லாம்
கோலப் புத்தகங்களிலும், சில
சமையல் குறிப்புக்களிலும்
வாழ்வை கடத்துவது புதிர்தான்
ஓடாத தேரின் அழகை ரசிக்க
அக்காவால் தான் முடியும்
நினைவுகள் பின்னோக்கியிழுக்க
விக்கித்திருந்த என்னை
மனைவியின் குரல் உசுப்பியது
'இங்க என்ன பன்றீங்க?என்றவளிடம்
ஆமா..நீ புக்கெல்லாம் படிப்பியா
என்றதும் ஆச்சர்யத்துடன் எனைப்பார்த்து
ம்..ஒரு லைப்ரெரியே வைக்கலாம்
அதெல்லாம் விட்டு ரொம்ப நாளாச்சு,
இப்போ என்ன அதுக்கு, என்று சட்டென
குனிந்துகொண்டாள்..கண்களில் நீர்துளிக்க
நின்றவளை நோக்கி , சரி கிளம்பு
உங்க வீட்டுக்கு போய்
உன்னோட புக்கையெல்லாம்
இங்க எடுத்துட்டு வரலாம் என்று
எழுந்தேன்.

அன்பின் "ஜோதிஜி"க்குShare/Bookmark

Wednesday, March 2, 2011

தகிப்பு


கோடை இருளாய்க் கவிந்திருந்த
தனிமை, அறையெங்கும்
வெந்து தகிக்கிறது
அமிலந்தெறிக்க உழலும் காற்று,
வெளியேற வழிகளின்றி
வெம்மை படர சுவர்களில்
படியத் துவங்குகிறது
சுழலாத கடிகாரத்தின் சிறு
இடுக்கொன்றில் உள்நுழைந்த
சுவர்ப்பல்லி வெளியேறும்
வழிகள் தேடி உழன்று தவிக்கிறது
வெளியேறும் பெரு வழிகள்
இருளில் மறைந்திருக்க
மீண்டும், மீண்டும்
கண்ணாடிச்சுவர்களில் மோதி
உழல்கிறது பல்லிShare/Bookmark