Friday, March 4, 2011

கோல நோட்டும் சில சமையல் குறிப்புக்களும்


பள்ளிக் காலத்து பழைய
டைரி ஒன்றை பரணில்
தேடிக் கொண்டிருக்கையில்
அகப்பட்டது அக்காவின்
பழைய மரக்கலர் புத்தகப்பை.
தூசிபடர்ந்து, பரணின் புழுக்கத்தில்
வெளிறி சிதைந்திருந்தது
ஆண்டுக்கு ரெண்டு, மூன்றென
கிழித்து அப்பாவின் திட்டுக்களுடன்
அடிக்கடி புத்தகப் பையை நான்
மாற்றிக் கொண்டிருக்க அக்கா
ஒரே பையை நான்காண்டுகள்
எப்படி பயன்படுத்துவாளோ..
அக்கா எப்போதும் புதிரானவள்
குறைவான மார்க்கு வாங்கிய
அக்காவின் தோழிகளெல்லாம்
கல்லூரிக்கு செல்ல முதல் மார்க்
வாங்கிய அக்கா, அப்பத்தாவின்
அறிவுரையால் வீட்டிலிருந்தாள்
திருமணம் முடிந்து மாமாவுடன்
செல்லும்போது தனது புத்தகங்களை
பரணில் போட்டதுதான் இதுவரை
அவற்றை அக்கா எடுக்கவில்லை..
தூசுகளை உதறிவிட்டு மெல்ல
பையிலிருப்பவற்றை கொட்டினேன்
பண்டிகைக்கு வந்த வாழ்த்தட்டைகள்,
சில கவிதை புத்தகங்கள்,
தோழிகளின் புகைப்படங்கள்,
ஆண்டுவிழா மலர்களில் வந்த
அக்காவின் கவிதைகள்,
பாராட்டுச் சான்றிதழ்கள்
என பல ஆச்சரியப் புதிர்கள்
கவிதை, இலக்கியம், பரிசுகள்
என்றிருந்த அக்கா இப்போதெல்லாம்
கோலப் புத்தகங்களிலும், சில
சமையல் குறிப்புக்களிலும்
வாழ்வை கடத்துவது புதிர்தான்
ஓடாத தேரின் அழகை ரசிக்க
அக்காவால் தான் முடியும்
நினைவுகள் பின்னோக்கியிழுக்க
விக்கித்திருந்த என்னை
மனைவியின் குரல் உசுப்பியது
'இங்க என்ன பன்றீங்க?என்றவளிடம்
ஆமா..நீ புக்கெல்லாம் படிப்பியா
என்றதும் ஆச்சர்யத்துடன் எனைப்பார்த்து
ம்..ஒரு லைப்ரெரியே வைக்கலாம்
அதெல்லாம் விட்டு ரொம்ப நாளாச்சு,
இப்போ என்ன அதுக்கு, என்று சட்டென
குனிந்துகொண்டாள்..கண்களில் நீர்துளிக்க
நின்றவளை நோக்கி , சரி கிளம்பு
உங்க வீட்டுக்கு போய்
உன்னோட புக்கையெல்லாம்
இங்க எடுத்துட்டு வரலாம் என்று
எழுந்தேன்.

அன்பின் "ஜோதிஜி"க்குShare/Bookmark

11 comments:

குட்டிப்பையா|Kutipaiya said...

:) nice !

முரளிகுமார் பத்மநாபன் said...

அழகா வந்திருக்கு திரு. :-)
இந்தவாரம் ஆனந்த விகடன் படிச்சிங்களா? முத்துகுமாரும் அக்காவைப்பற்றிய கட்டுரை ஒண்ணு எழுதியிருக்கார். போன வாரம் அப்பா கட்டுரை, எனக்கு என்னோட பதிவு ஒண்ணு நியாபகம் வந்தது. இன்னைக்கு உங்களை படித்ததும் அவரும், அக்காவும் நினைவிற்கு வருகிறார்கள்..


:-)

Vel Kannan said...

அருமை என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டு நகர முடியவில்லை நண்பா, இப்படியான அக்காக்கள் நம் ஊரில் அதிகம் அதுக்கான பதிவும் இருக்கிறது தான்.
இருப்பினும் 'தொலைந்தவர்களின்' எண்ணிக்கை அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. உங்களின் இந்த கவிதை படித்தது கி.ரா வின் வரிகளை/அண்ணன் பா.ரா வின் கவிதை படிப்பது போல் இருந்தது. அவ்வளவு எளிமை அவ்வளவு இயல்பு இதன் உங்களின் (வேறு) நடையில் சிறுகதை அல்லது வேறு வடிவத்தில் எழுதி பாருங்கள். வாழ்த்துகள் தி.ப

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி சீதா

நன்றி முரளி..விகடன் பார்க்கிறேன்

@வேல்கண்ணன் -அன்புக்கு நன்றி அண்ணா

ஜோதிஜி said...

வேல் கண்ணன் எழுதிய முதல் வரியைத்தான் நானும் எழுத வேண்டும் என்று பிரயாசைப்பட்டு உள்ளே வந்தேன். முதலில் இந்த இடுகையின் பின்புல அந்த நிறத்தை நீக்க முடியுமா என்று பாருங்கள்.

உங்கள் மேல் நான் வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றி விட்டீங்க. கவிதை என்பதை படித்தவுடன் மனம் தவிக்க வேண்டும். என் அக்காக்கள் முதல் நான் பார்த்து வந்த அக்கா வரைக்கும் அத்தனை பேர்களையும் நினைக்க வச்சுட்டீங்க. இதே போல தொடருங்க.

முடிந்தால் மின் அஞ்சல் வசதி இருந்தால் அவசியம் உருவாக்குங்க. இந்த கவிதையை கூகுள் பஸ்ஸில் இணைத்துள்ளேன்.

எல் கே said...

ஜோதிஜி பஸ்ஸை பார்த்துவிட்டு வந்தேன். நல்ல கருப்பொருள் நல்ல வரிகள்

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி ஜோதிஜி
நன்றி எல்.கே

India Free Traffic said...

Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.

Start to post Here ------ > www.classiindia.com

மிருணா said...

மிக நல்ல கருப்பொருள். கவிதையின் இறுதி வரிகளை இன்னும் தீட்டியிருக்கலாம் எனத் தோன்றியது.

திருப்பூர் மணி Tirupur mani said...

அக்கா எப்போதும் புதிரானவள்
குறைவான மார்க்கு வாங்கிய
அக்காவின் தோழிகளெல்லாம்
கல்லூரிக்கு செல்ல முதல் மார்க்
வாங்கிய அக்கா, அப்பத்தாவின்
அறிவுரையால் வீட்டிலிருந்தாள்///


:-)

sathish434 said...

ஓடாத தேரின் அழகை ரசிக்க
அக்காவால் தான் முடியும்

Post a Comment