Thursday, May 5, 2011

சன்னல் வழி உலகம்


சற்றே நீள்சதுரமான உலகமொன்றை
இன்று தரிசிக்க நேர்ந்தது
முடிவற்றுச் சுழலும் பூமிப்பந்திலிருந்து
வேறுபட்டு இயங்கும் அவ்வுலகம்
தேர்ந்த வேலைப்பாடுகளையுடைய
மரச்சட்டங்களால் சூழப்பட்ட
பெரும் தீவாய் இருந்தது
மனிதர்களின் பாதைகளும்,
பறவைகளின் வானமும்
ஓர் முனையில் துவங்கி
மற்றொரு முனையில் திடீரென
முடிவதாய் இருந்தது .
இந் நீள்சதுர உலகம், சூரியன்
உள்நுழைய இயலாக் கோணத்தில்
அமைந்திருந்ததால் காலங்களற்று
இயங்கிக்கொண்டிருந்தது..ஆயினும்
பகல்களும், இரவுகளும்
வசந்தங்களும், கோடைகளும்
கடந்து கொண்டுதானிருந்தன.
காலங்களற்ற பெருவெளியில்
இயங்கிக்கொண்டிருக்கும் இவ்வுலகம்
சிறு திரையொன்றின் அசைவில்
எப்போது வேண்டுமானாலும்
மறைய நேரிடலாம்..அப்போது
நீள்சதுர வானமும், வானில்
பறக்கும் பறவைகளும்
முடிவற்றதாய் தங்கள் அகலங்களை
மாற்றிக்கொள்ளும், அப்போதும்
மனிதர்கள் ஓரிடத்தில்
நின்றுதான் ஆக வேண்டும்
காலமும், சன்னல்களும்தான்
மனிதர்களை கட்டுக்குள் நிறுத்துகின்றன

Share/Bookmark

12 comments:

ஜோதிஜி said...

சொல்லி பெருமை படும் அளவுக்கு உங்கள் கவிதைகள் வர ஆரம்பித்து விட்டது. வாழ்த்துகள்.

சுந்தர்ஜி said...

உங்களின் க்ளாஸிக் கவிதை இது திருநா.

மிக நீண்ட நாட்களாக எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர்களுக்கே திகைப்பையும் பயத்தையும் சந்தோஷத்தையும் ஒன்றாய்த் தரவல்ல பாடுபொருளும் சிந்தனையும்.

சபாஷ்.

மிருணா said...

//காலமும், சன்னல்களும்தான்
மனிதர்களை கட்டுக்குள் நிறுத்துகின்றன//
செறிவான வார்த்தைகளில் வந்து நிற்கிறது கவிதையின் சிறகடிப்பு.அழகான வாசிப்பு அனுபவம் தந்த கவிதை இது.வாழ்த்துக்கள்.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

@ஜோதிஜி- தொடர்ந்த ஊக்கத்திற்கும், அன்பிற்கும் நன்றி ஜோதிஜி

@சுந்தர்ஜி- உங்களின் எழுத்துக்களில் திகைத்து போகும் எனக்கு உங்களின் பாராட்டுக்கள் கிடைப்பதில் மிக்க மகிழ்ச்சி

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி மிருணா

Vel Kannan said...

நானிருந்தது (குறுகிய) வட்டம் என
அறிந்தேன்
விடுபட்டேன்
பிறிதொரு வட்டத்திற்கு.
அதிலிருந்து விலகினேன்
அதை விட பெரிய வட்டத்திற்கு ...
இப்படியாக சதுர முக்கோனத்திலிருதும் மற்றும் இத்யாதிலிருந்தும்
//
காலமும், சன்னல்களும்தான்
மனிதர்களை கட்டுக்குள் நிறுத்துகின்றன//
(கவிதைக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள் )

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி வேல்கண்ணன்

Ramani said...

காலமும் ஜன்னல்களும்
மிக அருமையான
மலைக்க வைக்கும் ஒப்பீடு
நல்ல கவிதையை படித்த பெருமிதம்
தங்கள் படைப்பில் உணர்கிறேன்
தொடர வாழ்த்துக்கள்

creasen said...

ட்விட்டர் -ல வாய பொளந்து படிச்சிட்டு இருந்தேன்.... ப்ளாக் மனச தொறக்குது....

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி ரமணி அண்ணா
நன்றி creasen

கோமாளி செல்வா said...

வாய்ப்பே இல்லைங்க :-) சும்மா ட்விட்டர்ல சில ட்விட்ஸ் படிச்சேன்! ரொம்ப நல்லா இருக்கேன்னு உங்க ப்ளாக் பக்கம் வந்தா உங்க ப்ளாக் அத விட அருமையா இருக்கு! இனிமேல் இதையும் படிக்கப் போறேன் :-)

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி செல்வா :-)

Post a Comment