Friday, June 24, 2011

ரக்சுக்குட்டியின் ''அணி''க்குட்டி

வழக்கமாய் ஆனந்தக் கூச்சலிடும்
''அணி'' இன்று ஏமாற்றமாய்
கிளைகளில் மாறி,மாறி துழாவுகிறது
முதலில் உங்களுக்கு ''அணி''யை
அறிமுகப்படுத்திவிடுகிறேன், எங்கள்
வீட்டு நெல்லிமரத்தில் வசிக்கும்
அணில்தான் ''அணி''..பன்நெடுங்கால
அணில் என்ற வழங்கு பெயரை
தன் ஒன்றரை வயது மழலையால்
அணி என மாற்றியது ரக்சுக்குட்டி .
ரக்சுக்குட்டிக்கு இந்த அணில் அறிமுகமானது
சில நாட்களுக்கு முந்தைய காலையொன்றில்
எல்லா அணில்களைப் போலவே இதுவும்
எங்கிருந்து வந்தது என்று தெரியாமல்
திடீரென நெல்லிமரத்தில் குடியேறிவிட்டது
மனித நடமாட்டம் முதலில் அணிலை
மிரளச்செய்தாலும் கிளைகளுக்கும்,
தரைக்குமான இடைவெளி அணிலின்
மிரட்சியை போக்கி சிநேகமாக்கியது
தன் ஒன்றரை வயதில் ரக்சு பார்க்கும்
முதல் அணில் இதுவாகத்தானிருக்கும்,
சில நாட்களிலேயே அணிலுடன் பேசுமளவு
நெருக்கமாகிவிட்டாள். அணிலின் சத்தத்திலும்
உற்சாகம் தெறிக்கும், தரைக்கும், கிளைகளுக்கும்
மாறி,மாறி தாவி விளையாட்டு காட்டும்
வேறு மனித நடமாட்டம் இல்லாத போது
தரையிலிறங்கி ரக்சுவின் குட்டிசைக்கிள்
மீதேறியும் விளையாடிகொண்டிருக்கும்
அணில் மாயமாய் மறைந்துவிடும்
பகல்வேளைகளில் ரக்சுக்குட்டி
நெல்லிமரத்தை சுற்றி,சுற்றி அண்ணாந்து
பார்த்து தன் ''அணி''யை தேடுவாள்
வீட்டிலிருக்கும் எல்லா பொம்மைகளுக்கும்
பெயர் ''அணி''யாக மாறிவிட்டது.
நேற்று ரக்சுகுட்டி தன் பாட்டி வீட்டிற்க்கு
சென்றுவிட்டாள், இன்று காலை,
வழக்கமாய் ஆனந்தக் கூச்சலிடும்
''அணி'' ஏமாற்றமாய் கிளைகளில்
மாறி,மாறி துழாவுகிறது. மரத்தடியில்
தனியாய் நிற்கும் குட்டிசைக்கிளை
ஏமாற்றத்துடன் சுற்றிவருகிறது
ரக்சு ஊருக்கு போயிருக்கும் செய்தியை
அதனிடம் சொல்வதற்கு
ஒன்று அணிலாய் மாறவேண்டும் அல்லது
ரக்சுவாய் மாறவேண்டும்.









Share/Bookmark

6 comments:

Saravana kumar said...

இதை ரசித்த நான் ரக்சுவாய் மாறி விட்டேன்.
அருமை

சுந்தர்ஜி said...

மிக நல்ல கவிதை திருநா.

ஆனால் கொஞ்சம் நீளம் அதிகமானாற் போல ஒரு உணர்வு.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி சரவணன்
நன்றி சுந்தர்ஜி..இன்னும் சற்று செதுக்கியிருக்கலாம்/கவனத்தில் கொள்கிறேன்

Rathnavel said...

நல்ல ரசனை.
வாழ்த்துக்கள்.

சமுத்ரா said...

nalla kavidhai

சிவகுமாரன் said...

இறுதி வரிகளில் தான்
கவிதையின் உயிர் நாடியே இருக்கிறது.
அருமை.

ஏன் பதிவுகளையே காணோம் ?

Post a Comment