Saturday, August 4, 2012

மதுபானக்கடை - டாஸ்மாக் குறிப்புகள்


பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் வெளியாகும் எல்லா படங்களையும் பார்த்துவிடும் ''பேட்ச்லர்'' ஜாதி நான். மொக்கை, உலகப்படம் என்றெல்லாம் வேறுபடுத்தி கொள்வதில்லை ஆனாலும் பார்த்த படங்கள் குறித்து பேசுவதில் சில கட்டுப்பாடுகள் இயல்பாகவே எனக்குள் உண்டு..மசாலா படங்களுக்கு ஓரிரு வரிகளில் விமர்சனமும் , மொக்கை மசாலாப்படங்களுக்கு ஓரிரு வரிகளில் எச்சரிக்கையும் செய்துவிட்டு (நண்பர்களுக்காக) நகர்ந்துவிடுவதுண்டு. மிகச்சில படங்களே பதிவு எழுதவேண்டுமென்ற சிந்தனையை தூண்டும் அப்படி ஒரு படத்தை நேற்று பார்க்க நேர்ந்தது,  ''மதுபானக்கடை'' படத்தின் பாடல்களை ஏற்கனவே கேட்டிருந்ததால் படம் எதை பேசுகிறது என்பதை ஓரளவு யூகித்திருந்தேன்.

   படம் துவங்கியதும் போடப்பட்ட இரு ''ஸ்லைடு''கள் மிக முக்கியமானவை ஒன்று சமர்ப்பணம், ஜான் ஆபிரகாமுக்கு படத்தை சமர்ப்பணம் செய்திருந்தார்கள். (ஜான் ஆபிரஹாம் இயக்கிய அக்ரஹாரத்தில் கழுதை திரைப்படத்தை அறிந்தவர்களும், பார்த்தவர்களும் மிகக்குறைவு. ஒரு திரைப்படத்தை எதிர்த்து முடங்கச் செய்வதற்காக தமிழகத்தில் ஆரிய-திராவிடம் என்ற இரு அரசியல் சார்பினரையும் ஒன்றுபடுத்திய வரலாற்றை உடையது இப்படம்) இரண்டாவது ஸ்லைடு ''இப்படத்தில் கதை என்ற ஒன்று காணக்கிடைத்தால் அதன் பொறுப்பு உங்களை சார்ந்தது'' என்று பார்வையாளர்களுக்கு போடப்பட்டது, இது படத்தின் மொழியை ஓரளவு பார்வையாளர்களுக்கு உணர்த்த. ஒரு திரைப்படும் சொல்லும் செய்தியை உணர்த்துவதில் இயக்குனருக்கு உள்ள பொறுப்பை பார்வையாளனுக்கு பிரித்து கொடுத்துள்ளார் இயக்குனர். பார்வையாளனை புத்திசாலியாக ஒரு திரைப்பட இயக்குனர் பார்த்த அறிய தருணம் இது. இறுதியாக படத்தின் முடிவில் காட்டப்படும் ஸ்லைடு ''நாஞ்சில் நாடானின் ''உண்ணற்க கள்ளை'' என்ற கட்டுரையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது'' என்பது அது .தற்கால தமிழ் சினிமா இயக்குனர் ஒருவர் ஜான் ஆபிராகாமை தெரிந்துவைத்திருக்கிறார் என்பதும், நாஞ்சில்நாடனை படிக்கிறார் என்பதும் மனதிற்கு உவப்பான ஒன்று.

இப்படத்திற்கு விமர்சனம் என்றபெயரில் கதையமைப்பையோ, காட்சியமைப்புகளையோ குறிப்பிட்டு குதற வேண்டியதில்லை (அவற்றில் பெரிதாக குறைகள் இல்லை என்பது வேறு விஷயம்) ஏனெனில் யாரும் பேசத்தயங்கும் ஒரு விஷயத்தை பேச திரைப்படம் என்ற மொழியை ஒரு காரணியாக இயக்குனர் பயன்படுத்திக்கொண்டுள்ளார். ஒரு சிறு நகர மதுபானக்கடை பாரின் ஒரு நாளை அப்பட்டமாக பதிவு செய்திருக்கிறார்கள் சிறு நகரங்களால் ஆன தமிழகத்தை இப்பதிவு அப்படியே பிரதிபலிக்கிறது .பார் நடத்து முதலாளி, வேலை செய்யும் பையன்கள், கடையை ஒட்டி பெட்டிக்கடை வைத்திருப்பவர் ஒரு நாளில் மதுபானக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் என அன்றாட வாழ்வில் அனைவரும் சந்திக்கும் பாத்திரங்களை வைத்துக்கொண்டு அசலான வசனங்களின் மூலம் படத்தை நகர்த்தியிருக்கிறார்கள்.

   ஒரு நாளில் நிகழும் கதை எனினும் காட்சிகளும், வசனங்களும் முந்தைய மற்றும் அடுத்த நாளையும் பிணைத்துக்கொள்ள பார்வையாளர்களுக்கு உதவுகிறது . படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவருமே கிட்டத்தட்ட புதியவர்கள் எனினும் அனைவரும் பெரிய குறையில்லாத அளவு நடித்துள்ளனர். பெட்டிசன் மணி, பாட்டுப்பாடி கட்டிங் தேத்துபவர், ஆங்கிலம் பேசி கட்டிங் தேத்துபவர், தனது நிலத்தை பார் நடத்த விற்றுவிட்டு அந்தப் பணத்தை குடித்தே அழித்து பின் அங்கேயே மனநிலை தவறியவனாக அலையும் நபர், பிழைப்பிற்காக ராமன், அனுமான் வேடமிட்டு பிச்சையெடுத்து அக்காசில் குடிக்கவரும் நபர்கள், பாரில் வேலை செய்யும் பையன்கள் இவர்கள்தான் படத்தின் முக்கிய பாத்திரங்கள் இதுபோக பிறந்தநாளுக்கு குடிக்க வரும் கல்லூரி மாணவர்கள், பள்ளி நேரத்தில் குடிக்கவரும் ஆசிரியர், அவரைக்கண்டு பயந்து மறையும் அவரது மாணவர்கள் . காதல் தோல்வியில் முதன்முதலாய் குடிக்கவரும் இளைஞன் , குடிக்கவந்த இடத்தில் சாதிவெறியை காட்டும் உள்ளூர் ஆதிக்க சாதியை சேர்ந்த நபர், கடை திறக்கும் முன்னரே வந்து காத்திருக்கும் துப்புரவு பணியாளர்கள், பாரம் சுமக்கும் தொழிலாளிகள் என அனைத்து பாத்திரங்களும் இயல்பாக அமைந்துள்ளது. படத்திற்கு பெரிய பலம் வசனங்கள். பல வசனங்கள் குறிப்பிடும் படியாக இருந்தாலும் ''குடிக்கிறவன் தள்ளாடினா நாடு ஸ்டெடியா இருக்கும், குடிகாரன் ஸ்டெடி ஆயிட்டா நாடு தள்ளாடிடும்'' என்று பெட்டிசன் மணி பேசும் வசனம் இன்றைய தமிழகத்தை ஒரு வரியில் சொல்லிவிடுகிறது.

    இயக்குனர் மார்க்சிய பற்றுடையவராகவும், அதே சமயம் தற்கால மார்க்சிஸ்ட்கள் மீது விமர்சனம் உடையவராகவும் இருக்கவேண்டும் என்று யூகிக்கிறேன். மதுக்கடை ஊழியர்கள் செய்யும் ஏய்ப்புகள், போலி மது தயாரிக்கும் அரசியல்வாதிகள், தன்னிடம் வேலை செய்யும் இளைஞன் தன் பெண்ணை காதலிப்பதை தடுக்க முனையும் பார் முதலாளி, விளிம்புநிலை தொழிலாளிகள் குடிப்பதற்கான தேவைகள் என படம் முழுக்க குடிக்கு பின்னிருக்கும் கருப்பு பக்கத்தை எவ்வித பிரச்சார தொனியுமின்றியும், தமிழகத்தில் மதுபான விற்பனையை அரசே எடுத்துக்கொண்டதற்கு பிறகான சூழலையும், அரசியலையும் சொல்ல முனைந்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றே நினைக்கிறேன் . இயக்குனருக்கும், படக்குழுவினருக்கும் பாராட்டுகள்

டிஸ்கி:- இது படத்தைப்பற்றிய என் எண்ணங்களே..விமர்சனம் அல்ல.

  நாஞ்சிலின் உண்ணற்க கள்ளை கட்டுரை 

Share/Bookmark

Wednesday, July 25, 2012

பரிகார பயணம்--பாகம் -1


       தஞ்சாவூரை அடைந்த போது நள்ளிரவு மணி மூன்றை நெருங்கியிருந்தது இதற்கு முன் நான் தஞ்சாவூர் வந்ததும் இதேபோன்றதொரு நள்ளிரவில்தான் சில ஊர்களை இரவில் மட்டுமே காண நேர்கிறது (ஒவ்வொரு ஊரும் இரவுகளில்தான் தன் உண்மையான முகத்தை அணிந்திருக்கும் என்பது என் பயண நம்பிக்கைகளுள் ஒன்று ) இம்முறை தஞ்சாவூர் பகலையும் தரிசிக்க வாய்ப்பிருக்கிறது.
 
      தஞ்சாவூர், கும்பகோணம், கங்கைகொண்ட சோழபுரம் என ஒவ்வொரு ஊருக்கும் ஒருநாள் வீதம் மூன்று நாட்கள் பயணத்திட்டத்துடன் இன்று கிளம்பிவர இரு காரணங்கள், முதலாவது பிரபஞ்சப்பந்தான கோள்கள் சார்ந்தது, அம்மாவின் நீண்டநாள் கோரிக்கையான பரிகாரத்தை பூர்த்திசெய்தல் . மகனின் திருமணம் தடைபடுவது கோள்களின் தவறான சேர்க்கை என்பது அம்மாவின் துணிபு. இத்துணிபு எனது ''R.C புக்''கை கணித்த பல ஜோசியக்காரர்கள் அம்மாவின் அறிவில் திணித்தது. நான் தஞ்சாவூர் வர எனக்கு சம்பந்தமில்லாத பல நபர்கள் காரணியாயிருப்பதை சிந்திக்கையில் கோள்களின் விளையாட்டை நம்பத்தான் வேண்டியிருக்கிறது. இரண்டாவது என் லௌகீக வாழ்வில் கையில் காசிருக்கும் செழிப்பான தருணங்கள் என்பது மாதங்கள் சார்ந்ததில்லை நாட்கள் சார்ந்தது எனவே உபரி காசிருக்கும் போதே ஊர் சுற்றிக்கொள்ளவேண்டும்.
 
     எப்போதாவது மட்டுமே மகிழ்ந்திருக்கும்படியான வாழ்வை பெற்றவர்கள் அம்மாக்கள் (இதில் பன்மை அம்மாக்களில் பெரும்பான்மையானோர் என்ற அர்த்தத்தில்) ஓரளவு நினைவு தெரிந்ததிலிருந்து தெய்வங்களை பற்றி எதிர்மறையான கருத்துக்களையும், கோள்கள்,ஜாதக கட்டங்களை பற்றி கருத்துக்களேதுமின்றியும் வாழ்ந்தாலும் அம்மா மகிழும்படியான ஒரு தருணத்தை தரமுடியும் என்பதால் பரிகார பயணத்திற்கு சம்மதித்தேன், உடனே ''யாரையாவது உடன் அழைத்து செல்லவேண்டு''மென்ற உப கோரிக்கையை அப்பா முன்மொழிந்தார்..சில நேரங்களில் அம்மாக்களின் கோரிக்கைகளைவிடவும் ஆபத்தானவை அப்பாக்களின் உப கோரிக்கைகள். முந்தைய பயணங்களில் உடன்வந்த நபர்கள் தந்த கசப்புகள் நினைவில் இன்னும் இருந்தது ஆயினும் அப்பா சொல்லை தட்டாத தனையனாக (அரிதான தருணம்) யாரை சேர்ப்பது என சிந்திக்க துவங்கி ''கைப்புள்ள''யை துணையாக முடிவுசெய்தேன்.

     நான் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் பொடியனாக/உதவியாளனாக வந்து சேர்ந்து, பின்பு நான் தனியாக தொழில் செய்தபோது பணியாளாக மாறி இன்று தனியாக சிறுதொழில் செய்பவனாக வளர்ந்தவன் கைபுள்ளை/தம்பி . ஒரே நேரத்தில் எனக்கு துணையையும், தனிமையையும் தரும் சுபாவம் உடையவன். பரிகாரம் செய்வது தொடர்பான விவரங்களை என்னிடத்தில் விட அவனிடத்தில் அதிகமுறை அம்மா விளக்கிகூறி என் திருமண பொறுப்பை அவனுக்கும் பிரித்து தந்து எங்களை வழியனுப்பி வைத்தார்கள் ஒருவழியாக கிளம்பி தஞ்சாவூரில் வந்திறங்கியாயிற்று.
 
      முதல்நாள் தஞ்சையில் சுற்ற வேண்டுமென்ற திட்டத்தில் வந்துள்ளதால் தங்குவதற்கான இடத்தை முதலில் ஏற்பாடு செய்துகொள்ள முடிவுசெய்து சாலையின் இருபக்கங்களையும் நோட்டமிட்டபடியே நடக்க துவங்கினோம் . பொதுவாக சுற்றுலா சிறப்புமிக்க ஊர்களில் வெளியூரிலிருந்து வரும் மனிதர்கள் பேருந்து நிலையத்தில் இறங்கியவுடனே முதலில் எதிர்கொள்ளவது தங்குமிடம், வாகனங்கள் இன்னபிற வசதிகளை செய்து தருவதாக சூழ்ந்து கொள்ளும் நபர்களையும் அவர்களது இம்சைகளையும்தான்..ஆனால் பேருந்து நிலையத்தையடுத்த பிரதான சாலையே வெறிச்சோடியிருந்தது. இரவு முழுவதும் செயல்படும் தேநீர் கடைகளில் மட்டும் சில மனிதர்களை காணமுடிந்தது. ஆளுக்கொரு தேநீரை குடித்தபடியே கடைக்காரரை விசாரித்ததில் நாளை திருமண முகூர்த்த நாளென்பதால் பெரும்பாலான லாட்ஜ்'கள் நிரம்பியிருப்பதால் எல்லோரும் ஒய்ந்திருப்பார்கள் நேரடியாக விசாரித்து பாருங்கள் என்று யோசனை கூறினார். தேநீரைவிட அது சிறந்ததாக தோன்றியது .தேநீருக்கான காசையும், யோசனைக்கான நன்றியையும் கடைக்காரருக்கு தந்துவிட்டு அறை தேடி கிளம்பினோம் .

   தங்கள் நிறுவனத்திற்கு பெயர் வைப்பதில் தமிழக மதுக்கடைக்காரர்களுக்கும் (முன்னாள்) , தியேட்டர் உரிமையாளர்களுக்கும் சற்றும் சளைத்தவர்களில்லை வாடகைவிடுதி நடத்துபவர்கள் . காண்டினெண்டல், இம்பீரியல், விக்டோரியா என சர்வதேச தரத்தில் பெயரை மட்டுமாவது வைத்து விடுகிறார்கள் ஆனால் தியேட்டர்காரர்களிடம் இல்லாத கருணை, விடுதி உரிமையாளர்களிடம் ஒன்றுண்டு ''ஹவுஸ்-புல்'' பலகைகளை வைப்பதில்லை,வரவேற்பறை வரை அனுமதித்துவிடுகிறார்கள் . நாங்களும் ஒன்றிரண்டு விடுதி வரவேற்பறைகளில் சிறு, குறு யுத்தங்கள் நடத்தி புறமுதுகுடன் வெளியேற வேண்டியிருந்தது ..ஒரே நிம்மதி சொப்பன லோகத்தில் சஞ்சரித்திருந்த விடுதி ஊழியர்களை பூலோகதிற்கிழுத்து வந்து இம்சித்ததுதான். குரூரங்களில் மகிழும்படியான மனம் அவ்வப்போது விழித்துக்கொள்கிறது 'தேவை' இருக்கும்வரை அற்ப காரணங்களில் சமாதானம் அடைந்துகொள்ளவேண்டியதுதான். நிற்க. அடுத்து ஒரு விடுதியில் நடந்தது விளைவுகளுக்கான எதிர் விளைவுகள் சார்ந்தது. முறையே அரை தூக்கம் மற்றும் முக்கால் போதையிலிருந்த ஒரு விடுதி ஊழியரை எழுப்பி அறை வேண்டுமென கேட்டான் தம்பி, அதன்பிறகான உரையாடல்..

சார்..திருப்பூர்லருந்து வர்றோம்..ரூம் வேணும் 

(போதை/தூக்க கலக்கத்தில்) திருப்பூர்ல இருந்தா..நம்ம பயலுக அங்க கொள்ள பேர் இருக்கானுகளே 

ரூம் காலி இருக்குங்களா..

இருக்கு, இருக்கு எத்தன பேரு, எவ்ளோ நாளு

ரெண்டு பேர்தாங்க..நாளைக்கு சாயங்காலம் கிளம்பிடுவோம் 

இருக்குப்பா கொஞ்சம் வாடகை அதிகமாருக்கும்..காலைல வாங்க (மீண்டும் படுத்துக்கொண்டார்)

(தம்பி, விடாப்பிடியாய் தட்டி எழுப்பி) ரூம் நல்லாருந்தா சரிங்க..வாடகை எவ்ளோங்க

அது..அது நாப்பத்தஞ்சாயிரம் ஆகுமப்பா (குழறியபடி மீண்டும் சாய்ந்துவிட்டார்)

மேற்படி உரையாடைலை அருகிலிருந்து கேட்டு கொண்டிருந்த எனக்கு மும்பை தாஜ் ஹோட்டலின் அறை வாடகையும், தீவிரவாதிகளின் தாக்குதலும் சட்டென நினைவில் வந்துபோனது..போர்வையைக்கட்டி ஜன்னலில் இறங்கும் ஆகிருதியும், தைரியமும் இல்லை என்பதை உணர்ந்து உடனடியாக போதையாளைரை அடுத்த உளறலுக்கு தயாராக்கும் முனைப்பிலிருந்த தம்பியை இழுத்துக்கொண்டு வெளியேறினேன்..பெரும் கண்டதிலிருந்து தப்பித்த மகிழ்வுடன் அடுத்த தேடுதலுக்கு கிளம்பினோம்..பாதையின் வடகோடியில் பெரியகோவிலின் கோபுரம் வானுயர்ந்து நின்றுகொண்டிருந்தது..அதன் உச்சியில் ஒரு உருவம் நின்று எங்களையே பார்த்துகொண்டிருப்பதாக தோன்றியது, யார்கண்டது அது இராஜராஜனாகவும் இருக்கக்கூடும்.
Share/Bookmark

Wednesday, July 11, 2012

இந்த இரவு
சில நாட்களாகவே
முடிவற்றவைகளில் சிக்கி
உழன்று கொண்டிருக்கிறது மனம்
சிறு கல்லும் பெரும் மலையென
உருவுகொண்டு அச்சுறுத்துகிறது
பெரும் நதியென சுழிந்தோடும்
கண்ணீரின் ஊற்றுத்துளையாகி
சலித்து ஓய்ந்துவிட்டது கண்கள்
பறக்க, பறக்க தீராத வானமாய்
பரந்து கிடக்கிறது
வெக்கையுமிழும் மேற்கூரை
வரப்போகும் எல்லா பகலிரவுகளையும்
விழுங்கிவிட்டதைப் போல்
அடர் மௌனத்துடன்
ஊர்ந்துகொண்டிருக்கிறது இந்த இரவு


Share/Bookmark

Thursday, February 16, 2012

உருள் பெருந்தேர் - நினைவுத்தேர்


தேர் ஊரழகு.. தேர் என்றாலே ஊர் தனது அழகை இரட்டிப்பாக்கி கொள்கிறது.அதிலும் நெல்லையப்பர் ஆலயத்தேர் சற்று விசேஷமானது. தாமிரபரணி நதிக்கரை எழுத்தாளர்கள் அனைவரும் நெல்லையப்பர் தேரைத் தங்கள் தமிழில் கட்டி இழுத்திருக்கின்றனர். கலாப்பிரியாவும் தன் பங்கிற்குத் தன் நினைவுகளையும், தமிழையும் கயிறாக்கி நெல்லையப்பரைத் திருவுலா இழுத்து தேரடி சேர்த்திருக்கிறார். தமிழின் முக்கிய கவியாளுமைகளுள் ஒருவரான கலாப்பிரியா உரைநடையில் தனது பால்யத்தை ''நினைவின் தாழ்வாரங்கள்'' எனும் தொகுப்பாக வெளியிட்டிருந்தார்.. உருள் பெருந்தேர் அதன் தொடர்ச்சி எனக் கொள்ளலாம். பால்யத்தை தாண்டி பதின்ம வயதினராகவும், காதலும், குடும்பச்சூழலும் அலைக்கழிக்கும் வாலிபராகவும், விதிச் சுழலிலிருந்து மீண்டு சற்று ஆசுவாசப்பட்டு நடுத்தரக் குடும்பத்தலைவராகவும், எழுத்தை நேசிக்கும் கவிஞராகவும் தனது நினைவுக்கண்ணிகளை ஒவ்வொன்றாகக் கோர்த்து வடக்கயிறாக்கியிருக்கிறார். தேரும் நினைவுகளினூடே ஊர்ந்தும், மிதந்தும், நெகிழ்ந்தும் நிலை சேர்க்கிறது

நினைவுகள் எப்போதும் கொடியவைதான், அதிலும் பால்யத்தை சிறிது,சிறிதாய் இழந்து பதின்ம வயதிற்குள் நுழையும் போது நினைவுகள் இன்னும் கூர்மையாகிவிடுகின்றன. கலாப்பிரியாவிற்கும் அது நேர்கிறது, அதுவும் கவிஞர்களுக்கேயான சகலவிதமான அலைக்கழிப்புகளுடன் சற்று மூர்க்கமாய். நன்றாய் வாழ்ந்த குடும்பம் சிறிது, சிறிதாய் நலிவடையத் துவங்குகிறது. குடும்பத்தின் அன்றாடச் செலவுகளுக்கே வீட்டுப்பொருட்களை விற்கும் சூழல் இதில், தான் விரும்பிய உயர்கல்வியை பிடிவாதமாக தொடர்கிறார். இவற்றினூடே கனவாகவே நிகழ்ந்துகொண்டிருக்கும் காதல் ''சசி'', உடன் படித்த/பழகிய நண்பர்கள், நெல்லையப்பர் தேரோட்டம், அது சார்ந்த விழாக்கள், பிடித்த சினிமாக்கள், அபிமான தலைவர், எப்போதும் நெருக்கடியாகவேயிருக்கும் பணிச்சூழல் மற்றும் சுவாசத்துடன் கலந்துவிட்ட வாசிப்பு/எழுத்து என, நினைவுகளாய் வியாபித்திருக்கிறார் இந்த ''உருள் பெருந்தேர்'' உருளும் பாதை முழுவதும்.


காலம் பார்த்துக் கொண்டேயிருக்கிறது..மனிதர்கள் வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள். மனித நினைவுகளை கொடியதாக்குவதிலும், நீடித்திருக்கச் செய்வதிலும் உண்மை பெரும்பங்காற்றுகிறது. கலாப்பிரியாவின் இந்த தேரோட்டம் முழுவதும் மனிதர்களும், உண்மையும் தங்களின் உண்மை முகத்துடனேயே உலவுகிறார்கள். கவிஞரின் முகமும், தமிழும் உண்மையின் சுடராக ஒளிர்ந்துகொண்டேயிருக்கிறது. பள்ளியில் தன்னுடன், தன்னைவிட நன்றாய் படித்த விஜயரெங்கனை பின்னாளில் பேருந்து நிலையத்தில் எல்லோரையும் ஏமாற்றிப் பிழைப்பவனாக பார்க்கும்போது அவனை எதிர்கொள்ள இயலாமல் ஒரு ரூபாயை வீசிவிட்டு முகத்தை திருப்பிக்கொள்கிறார். ஆயினும் அவன் நினைவுகள் துரத்தி கொண்டேயிருக்கிறது. தான் ஒவ்வொரு கட்டத்திலும் நெருங்கிப்பழகிய நண்பர்களை குடும்ப, பணிச்சூழல் காரணமாக திடீர், திடீரென பிரிந்து போகநேர்வது கவிஞரின் வாழ்வில் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

கல்லூரியில் முதுகலை படிக்கும் போது உடன் படித்த நண்பன் அதே வகுப்பில் படித்த, தான் ஒரு தலையாய் நேசித்த வசுமதியை திருமணம் செய்துகொண்டு வாழ்வதை கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து அறிந்துகொள்ளுவது, தன்னுடன் அறைத்தோழனாக இருந்த சத்தியவாசகனை பல ஆண்டுகளுக்கு பிறகு அகமதாபாத்தில் ''சத்தியவாசகன்'' என்ற அவனது பெயரை கொண்டு அடையாளம் கண்டுகொள்வது என ஒவ்வொரு நினைவுகளும் தேர்ந்த சிறுகதைக்குரிய சுவாரசியத்துடன் நகர்கிறது. முக்கியமாக ''சினிமா'' இந்த நினைவுக் கண்ணிகளை சரியான காலவரிசையில் கோர்க்கும் நூலாக இருக்கிறது..பால்யத்திலும், நடுவயதிலும் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் கவிஞர் அன்றைய திரைப்படங்களையும், அவற்றின் பின்புலத்திலிருந்த பல தகவல்களையும் தனது எழுத்தில் வெளிப்படுத்துகிறார்.


மனிதர்கள் வாழ்ந்துகொண்டேயிருக்கிறார்கள்..தேர் உருண்டு கொண்டேயிருக்கிறது. நினைவுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. கலாப்பிரியாவின் இந்த நினைவுத்தேரும் தன் பின்னால் நிகழ்ந்த பல தலைமுறைகளின் வாழ்வையும், நினைவுகளையும் சுமந்தபடியே உருள்கிறது 'உருள் பெருந்தேராய்'.

உருள் பெருந்தேர்
ஆசிரியர்- கலாப்பிரியா
பதிப்பகம்-சந்தியா பதிப்பகம்
விலை - 150 /-

Share/Bookmark

Tuesday, January 3, 2012

கண்ணாடியின் துயரம்
அப்பாவின் அறையிலிருக்கும்
நிலைக் கண்ணாடிக்கு
என் வீட்டின் வயதிருக்கும்.
உருவேறிய தேக்குமரச் சட்டங்கள்
சூழப்பொருத்திய கல்கண்ணாடி
அப்பா இருந்தவரை ஒவ்வொரு
பண்டிகைக்கும் தவறாது நடக்கும்
எனக்கு எண்ணைக்குளியலும்,
கண்ணாடிக்கு திருநீர்க்குளியலும்
வீட்டின் அனைத்து விழாக்களிலும்
கண்ணாடியும் ஓர் உற்சவமூர்த்தி
வெளியூர் சென்றிருக்கும் காலங்களில்
வீட்டைவிட கண்ணாடியை பிரிந்திருப்பது
பெரிய துக்கம் அப்பாவிற்கு
அப்பா,அம்மா மரணத்திற்கு பிறகு
அவர்களின் நினைவாகிவிட்ட
இந்தக்கண்ணாடி அப்பா,அம்மாவின்
இளமை,முதுமையையும்
எனது பால்யத்தையும்
தனக்குள் புதைத்துக்கொண்டு
பிரதிபலிப்பதற்கு முகங்கள் ஏதுமற்று
அடர்தியானத்தில் ஆழ்ந்திருக்கிறது

பிரதிபலிப்பதற்கு முகங்களற்று
போகும்போதுதான் புரிகிறது
கண்ணாடியின் துயரம்Share/Bookmark