Thursday, February 16, 2012

உருள் பெருந்தேர் - நினைவுத்தேர்


தேர் ஊரழகு.. தேர் என்றாலே ஊர் தனது அழகை இரட்டிப்பாக்கி கொள்கிறது.அதிலும் நெல்லையப்பர் ஆலயத்தேர் சற்று விசேஷமானது. தாமிரபரணி நதிக்கரை எழுத்தாளர்கள் அனைவரும் நெல்லையப்பர் தேரைத் தங்கள் தமிழில் கட்டி இழுத்திருக்கின்றனர். கலாப்பிரியாவும் தன் பங்கிற்குத் தன் நினைவுகளையும், தமிழையும் கயிறாக்கி நெல்லையப்பரைத் திருவுலா இழுத்து தேரடி சேர்த்திருக்கிறார். தமிழின் முக்கிய கவியாளுமைகளுள் ஒருவரான கலாப்பிரியா உரைநடையில் தனது பால்யத்தை ''நினைவின் தாழ்வாரங்கள்'' எனும் தொகுப்பாக வெளியிட்டிருந்தார்.. உருள் பெருந்தேர் அதன் தொடர்ச்சி எனக் கொள்ளலாம். பால்யத்தை தாண்டி பதின்ம வயதினராகவும், காதலும், குடும்பச்சூழலும் அலைக்கழிக்கும் வாலிபராகவும், விதிச் சுழலிலிருந்து மீண்டு சற்று ஆசுவாசப்பட்டு நடுத்தரக் குடும்பத்தலைவராகவும், எழுத்தை நேசிக்கும் கவிஞராகவும் தனது நினைவுக்கண்ணிகளை ஒவ்வொன்றாகக் கோர்த்து வடக்கயிறாக்கியிருக்கிறார். தேரும் நினைவுகளினூடே ஊர்ந்தும், மிதந்தும், நெகிழ்ந்தும் நிலை சேர்க்கிறது

நினைவுகள் எப்போதும் கொடியவைதான், அதிலும் பால்யத்தை சிறிது,சிறிதாய் இழந்து பதின்ம வயதிற்குள் நுழையும் போது நினைவுகள் இன்னும் கூர்மையாகிவிடுகின்றன. கலாப்பிரியாவிற்கும் அது நேர்கிறது, அதுவும் கவிஞர்களுக்கேயான சகலவிதமான அலைக்கழிப்புகளுடன் சற்று மூர்க்கமாய். நன்றாய் வாழ்ந்த குடும்பம் சிறிது, சிறிதாய் நலிவடையத் துவங்குகிறது. குடும்பத்தின் அன்றாடச் செலவுகளுக்கே வீட்டுப்பொருட்களை விற்கும் சூழல் இதில், தான் விரும்பிய உயர்கல்வியை பிடிவாதமாக தொடர்கிறார். இவற்றினூடே கனவாகவே நிகழ்ந்துகொண்டிருக்கும் காதல் ''சசி'', உடன் படித்த/பழகிய நண்பர்கள், நெல்லையப்பர் தேரோட்டம், அது சார்ந்த விழாக்கள், பிடித்த சினிமாக்கள், அபிமான தலைவர், எப்போதும் நெருக்கடியாகவேயிருக்கும் பணிச்சூழல் மற்றும் சுவாசத்துடன் கலந்துவிட்ட வாசிப்பு/எழுத்து என, நினைவுகளாய் வியாபித்திருக்கிறார் இந்த ''உருள் பெருந்தேர்'' உருளும் பாதை முழுவதும்.


காலம் பார்த்துக் கொண்டேயிருக்கிறது..மனிதர்கள் வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள். மனித நினைவுகளை கொடியதாக்குவதிலும், நீடித்திருக்கச் செய்வதிலும் உண்மை பெரும்பங்காற்றுகிறது. கலாப்பிரியாவின் இந்த தேரோட்டம் முழுவதும் மனிதர்களும், உண்மையும் தங்களின் உண்மை முகத்துடனேயே உலவுகிறார்கள். கவிஞரின் முகமும், தமிழும் உண்மையின் சுடராக ஒளிர்ந்துகொண்டேயிருக்கிறது. பள்ளியில் தன்னுடன், தன்னைவிட நன்றாய் படித்த விஜயரெங்கனை பின்னாளில் பேருந்து நிலையத்தில் எல்லோரையும் ஏமாற்றிப் பிழைப்பவனாக பார்க்கும்போது அவனை எதிர்கொள்ள இயலாமல் ஒரு ரூபாயை வீசிவிட்டு முகத்தை திருப்பிக்கொள்கிறார். ஆயினும் அவன் நினைவுகள் துரத்தி கொண்டேயிருக்கிறது. தான் ஒவ்வொரு கட்டத்திலும் நெருங்கிப்பழகிய நண்பர்களை குடும்ப, பணிச்சூழல் காரணமாக திடீர், திடீரென பிரிந்து போகநேர்வது கவிஞரின் வாழ்வில் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

கல்லூரியில் முதுகலை படிக்கும் போது உடன் படித்த நண்பன் அதே வகுப்பில் படித்த, தான் ஒரு தலையாய் நேசித்த வசுமதியை திருமணம் செய்துகொண்டு வாழ்வதை கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து அறிந்துகொள்ளுவது, தன்னுடன் அறைத்தோழனாக இருந்த சத்தியவாசகனை பல ஆண்டுகளுக்கு பிறகு அகமதாபாத்தில் ''சத்தியவாசகன்'' என்ற அவனது பெயரை கொண்டு அடையாளம் கண்டுகொள்வது என ஒவ்வொரு நினைவுகளும் தேர்ந்த சிறுகதைக்குரிய சுவாரசியத்துடன் நகர்கிறது. முக்கியமாக ''சினிமா'' இந்த நினைவுக் கண்ணிகளை சரியான காலவரிசையில் கோர்க்கும் நூலாக இருக்கிறது..பால்யத்திலும், நடுவயதிலும் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் கவிஞர் அன்றைய திரைப்படங்களையும், அவற்றின் பின்புலத்திலிருந்த பல தகவல்களையும் தனது எழுத்தில் வெளிப்படுத்துகிறார்.


மனிதர்கள் வாழ்ந்துகொண்டேயிருக்கிறார்கள்..தேர் உருண்டு கொண்டேயிருக்கிறது. நினைவுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. கலாப்பிரியாவின் இந்த நினைவுத்தேரும் தன் பின்னால் நிகழ்ந்த பல தலைமுறைகளின் வாழ்வையும், நினைவுகளையும் சுமந்தபடியே உருள்கிறது 'உருள் பெருந்தேராய்'.

உருள் பெருந்தேர்
ஆசிரியர்- கலாப்பிரியா
பதிப்பகம்-சந்தியா பதிப்பகம்
விலை - 150 /-

Share/Bookmark

9 comments:

Vel Kannan said...

'நினைவின் தாழ்வாரங்கள்' இந்த புத்தகம் படித்த போது மிகவும் வியந்து தான் போனேன். எவ்வளவு துன்பத்தையும் மனிதர் எப்படி எடுத்து கொண்டார். எவ்வளவு நினைவுகள் மறக்காமல் போட்டு இருந்த சட்டை கூட நினைவில் நிறுத்தி எழுதியிருப்பார். சில பாடல்கள் சில கவிதைகள் நமக்குள் நம்பிக்கை ஏற்படுத்திய போல இந்த புத்தகம் எனக்கு
நம்பிக்கை ஏற்படுத்தியது. நீங்கள் சொன்னது போல் அந்த புத்தகத்தின் தொடர்சியாக அல்லது அந்த நினைவு ஓட்டத்தின் தொடர் நதியாக-த்தான் இந்த புத்தகமும். கவிதையில் வியந்து போன கலாப்ரியாவை கட்டுரைகளிலும் வியப்பு ஏற்படுத்து புத்தகம் இது. மிக சிறப்பான பார்வையுடன் எழுதியிருக்கும் உங்களுக்கு வாழ்த்துகள் நண்பரே !

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி அண்ணா..கட்டாயம் படியுங்கள்

வெண் புரவி said...

நல்ல மதிப்புரை. ஒவ்வொருவரிடமும் உருக்கமான ஓர் கதை இருக்கிறது. நல்ல பதிவு திரு. புக்குக்கு இப்பவே ரிசர்வ் பண்ணி வைக்கிறேன்.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி..அடுத்து நீங்கதான் :-)

சுந்தர்ஜி said...

ஆழ்ந்த ரசனையும் அனுபவித்ததைப் பகிர்வதும் இயல்பாய் இருக்கிறது திருநாவுக்கரசு- உந்துதலின் காரணமான கலாப்ரியாவின் எழுத்தின் வசீகரத்துக்கு ஒரு சலாம்.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி சுந்தர்ஜி

InternetOnlineJobHelp said...

Nice Info - follow my Classified Website


classiindia Top India Classified website, SEO . Post One Time & get Life time Traffic.

New Classified Website Launch in India - Tamil nadu

No Need Registration . One time post your Articles Get Life time
Traffic. i.e No expired your ads life long it will in our website.
Don't Miss the opportunity.
Visit Here -------> www.classiindia.in

ராம்குமார் - அமுதன் said...

நல்லதொரு விமர்சனம் அரசு... தொகுப்பை படிக்கத் தூண்டும் விமர்சனம்...

/*காலம் பார்த்துக் கொண்டேயிருக்கிறது..மனிதர்கள் வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள்.*/

எத்துனை நிதர்சனமான வார்த்தைகள்... நாம் பொதுவாய்ச் சொல்வது காலம் உருண்டோடுகிறது என்பது... காலம் அப்படியே தான் இருக்கிறது... நாம்தான் உருண்டோடிக் கொண்டிருக்கிறோம் என்பது ஒரு நுண்மையான பார்வை...

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி ராம்குமார் !

Post a Comment