Monday, February 18, 2013

இசை உதிர்க்கும் சொற்கள்


எழுதி வெகு நாட்களாயிற்று, இந்த இடைவெளியில் நிறைய வாசிப்பு, நிறைய படங்கள் , நிறைய நண்பர்கள், நிறைய ஊர்சுற்றல், நிறைய பிரச்னைகள் என வாழ்க்கை ஓரளவு நிறைவாய் தான் கழிந்துள்ளது . நல்லவேளையாக நிறைவில் மகிழ்ந்து சாந்தியடையும்படியாக மனிதமனம் படைக்கப்படவில்லை அதனாலேயே இன்னும் நிறைவுகள் எதிர்ப்படும் என்று மனதை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறேன் . நிற்க, இதே இடைவெளியில் இதுவரை இலவச தளமாக இருந்த thiruchol.blogspot.in இப்போது www.thiruchol.com என்பதாக மாறியிருக்கிறது . வருட கட்டணத்திற்காகவேணும் எதையாவது எழுதுவான் என்பதற்காக நண்பர் ஒருவரின் ஏற்பாடு இது . அவர் முந்தைய தலைமுறையில் பிறந்தவர். கொடுக்கல்/ வாங்கலில் பணத்தின் முழு மதிப்பை பெறவோ / தரவோ பழக்கப்படாத இந்த தலைமுறையினன் நான், எனினும் இனி அவ்வப்போது எழுத உத்தேசித்துள்ளேன் . படிப்பவற்றையும், பார்ப்பவற்றையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுவது வசதியாய் இருப்பதாலும் பகிர்தலின் நிறைவு ஓரளவேனும் மனச்சாந்தி தரும் என்ற நம்பிக்கையிலும்...

நியூயார்க் நகரத்து குளிர் குறித்து தோழி ஒருவர் நியூயார்க்'கில் வருந்திக்கொண்டிருக்கிறார் , அதையொட்டி, மனம் சிலநாட்களாக குளிரையே நினைத்துக்கொண்டிருந்தது . எனக்கு குளிரென்றால் முதலில் நினைவில் வருவது கொடைக்கானல் அடுத்து தனிமை . கிளம்பிவிட்டேன் , ஒருநாள் பயணமானாலும் நான் தனியாக பயணப்பட்டால் அம்மாவின் முகத்தில் சொல்லவியலா கவலை தொற்றிக்கொள்ளும், என்ன செய்வது யார்,யாரோ நினைவுகளாய் உருமாறி உடன்வருவதை சொல்லமுடியுமா இல்லை உணர்த்தத்தான் முடியுமா ?  கொடைக்கானல் சென்றால் வழக்கமாக தங்கும் விடுதியில் அறை முன்பதிவு செய்துவிட்டு சூரியன் மறைந்ததும் இருசக்கர பயணமாக கிளம்பினேன் , இரவு உணவை முடித்துக்கொண்டு பழனியிலிருந்து கிளம்பும்போதே குளிர் துவங்கிவிட்டது மேலே செல்ல செல்ல 
காற்று முழு உக்கிரத்துடன் குளிரை உமிழ்ந்து கொண்டிருந்தது . வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்த இருளை ஊடுருவி ஓடிக்கொண்டிருந்தது யமாகா . குளிர் ! குளிர் ! குளிர் ! கொடைக்கானலை அடையும்போது நள்ளிரவு நெருங்கியிருந்தது . நேரே அறைக்குச் செல்லாமல் அருகிலிருக்கும் ஏரிக்கு சென்றேன் . ஆவி பறக்கும் குளிரிலும் இரு காவலர்கள் மப்ளர் சுற்றிய தலைகளுடன் ரோந்தில் இருந்தனர் (வாழ்க தமிழக காவல்துறை.. காவல்துறையை பாராட்ட கிடைக்கும் அரிய தருணங்களை வீணாக்ககூடாது ) சிறு விசாரணைக்கு பின் நட்பாகிவிட்டனர் . சந்தேகக் களையில்லாத ( ! ) முகம் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் உதவுகிறது . சிறிதுநேரம் அவர்களுடன் பேசியபடியே நடந்துவிட்டு அறைக்கு சென்றேன் . அறையிலும் குளிர் உறைந்திருந்தது , உடல் முழுக்க நிறைந்து கண்களின் வழியே அனலாய் தகித்து வெளியேற எத்தனித்துக் கொண்டிருந்த குளிரை உடலினுள்லேயே தேக்கும் பொருட்டு கண்களை 
இறுக மூடிக்கொண்டு கட்டிலில் விழுந்தேன் . அண்ணன் க .சீ .சிவக்குமாரின் குளிர் வரிகள் நினைவில் ஓடின , ' நடுங்கும் குளிருக்கு வேண்டும் ஒரு போர்வை , உடல் வெப்பம் , பருகச் சூடாய் ஒரு பானம் அல்லது இடையில் அறுபடாத நல்நினைவுக் கண்ணி ' சர்வம் ஏகாந்தம் .
#நல்நினைவுகள் துணை கொள் தோழி ! 


நிறைய படங்கள் பார்த்தாலும் ஒரு சில படங்களே எழுதத்தூண்டும். இரண்டு நாட்களுக்கு முன் பார்த்த 'வாரியர்ஸ் ஆஃப் ரெயின்போ ' , ஜப்பான் ஆதிக்கத்தின் கீழ் தைவான் இருந்த காலகட்டத்தில் தைவான் காடுகளில் வசித்த பழங்குடியினர் ஜப்பானியரை எதிர்த்து நடத்திய விடுதலைப்போரின் உணமைக்கதை . உலகெங்கும் அடக்குமுறையை எதிர்த்து போரிடும் சிறுபான்மையினர் அழித்தொழிக்க படுவார்கள் என்ற உண்மையின் திரைச்சான்றாக இத்திரைப்படம் இருக்கிறது . படம் பார்த்து முடித்ததும் நம் காலத்து / நம் இனத்து விடுதலைப் போராட்டங்கள் நினைவில் நிழலாடின . மனிதம் சீரழிந்து , ஆயுதங்களின் கொடூரம்கூடிய காலத்தில் நிகழ்ந்த போராட்டத்தின் கொடுமைகள் இப்படத்தில் நிகழும் கொடூரங்களை காட்டிலும் பன்மடங்கிருந்திருக்கும், மனம் கனப்பது இப்போதெல்லாம் பழகிவிட்டது . கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஓடும் (இரண்டு பாகங்களாக) இத்திரைப்படம் நான் இதுவரை பார்த்த திரைப்படங்களில் மிக முக்கியமானது . குறிப்பாக படத்தின் முதன்மை கதாபாத்திரமான 'மோனோ ரூடோ' வாக நடித்த 'லிங் சிங் சாய்'யின் நடிப்பு மிகச்சிறந்த கதாநாயக நடிப்புகளில் ஒன்று . இப்படம் குறித்து நண்பர் முரளி மிக விரிவாக / அருமையாக எழுதிய Warriors of the Rainbow 

மொழியைக் காட்டிலும் இசை வசீகரமானது என்பதை சமீபத்தில்தான் நம்பத் துவங்கியுள்ளேன், இந் நம்பிக்கைக்கு ''In the mood for love'' என்ற ஹாங்காங் திரைப்படத்தின் பின்னணி இசைக் குறிப்புகளை சமீபத்தில் கேட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம் . மனித துயரங்களில் மகத்தானது தனிமை , தனிமையின் துயரை இதைவிட சிறப்பாக எந்த மொழியிலும் சொல்லிவிட முடியாது என்றே தோன்றுகிறது . இவ்விசை உதிர்க்கும் சொற்களை புரிந்து கொண்டால் மொழியின் ஆகச்சிறந்த தனிமைக் கவிதையை எழுதிவிடலாமென்று நினைக்கிறேன் Share/Bookmark